மனிதர்களால் ஒரு பழக்கத்தை விடமுடியுமா?

மனிதர்களால் ஒரு பழக்கத்தை விடமுடியுமா?
Published on

இந்தக் கட்டுரையில்நாம் பேசியதுபோல், மூளையில் ஏற்படும் இணைப்புகளால், பழக்கங்களை விடுவது மிகவும் கடினமாக இருக்கலாம். மூளையில் இருக்கும் நரம்புச் சுற்றுகளால், இந்தப் பழக்கங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தூண்டுதல்/பின்னணி நிகழ்ந்தவுடன், எதிர்வினைக்குப் பொறுப்பாளியான பகுதிகள் தானே ஒளிர்கின்றன, அவர் அந்தப் பழக்கத்தில் மீண்டும் ஈடுபடும் சாத்தியம் அதிகரிக்கிறது.

பழக்கங்களை விடுவது சிரமம்தான், ஆனால், அது அசாத்தியமானதில்லை. இதற்குத் தேவையான சில குறிப்புகள்:

·       மனம் முழுவதும் இங்கு இருக்கட்டும். ஒருவர் ஒரு பழைய பழக்கத்தில் ஈடுபடும் சாத்தியம் அதிகமாக உள்ள நேரங்களில், தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவேண்டும், அது தன்னை எப்படி உணரச்செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். பழக்கங்களின்மூலம் தனக்கு என்ன கிடைக்கிறது என்பதை ஒருவர் காணும்போது, அதனை இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ளலாம்.

·       அந்தப் பழக்கத்துக்குப்பதிலாக வேறொன்றைப் பின்பற்றலாம்.அந்தப் பழக்கத்துக்குப் பதிலாக, அதைவிடக் குறைவான தீமையைக் கொண்டுவரக்கூடிய இன்னொன்றைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஒருவர் விடுவதற்கு முயற்சிசெய்கிறார் என்றால், பக்கத்தில் ஒரு பபுள்கம் பாக்கெட்டை வைத்துக்கொள்ளலாம், எதையாவது சாப்பிடவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் சட்டென்று அதை எடுத்து மெல்லலாம். கொழுப்பு அதிகமுள்ள, அதிகக் கலோரிகளைக் கொண்ட உணவைச் சாப்பிடுவதற்குப்பதிலாக, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடலாம்: ஆப்பிளா, பேரிக்காயா என்று யோசிக்கிறவர் ஓர் ஆரோக்கியமான தெரிவைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம், ஆப்பிளா சாக்லெட் ஐஸ்க்ரீமா என்று யோசிக்கிறவர் ஆரோக்கியமாக உண்ணும் வாய்ப்பு குறைவு. வீட்டில் சிகரெட்கள் வேண்டாம்.

·       ஒரு குறிப்பிட்ட பழக்கத்தைத் தூண்டும் விஷயங்களைவிட்டு விலகுவது நல்லது.ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது ஒருவர் அதிகம் சாப்பிடுகிறார் அல்லது புகைக்கிறார் என்றால், தூண்டுதலாக அமையும் அந்த நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை அவர் மாற்றி அமைக்கலாம், எடுத்துக்காட்டாக, இரவு நேரத்தில் தனியே திரைப்படம் பார்க்கும்போது அதிகம் சாப்பிடுகிற ஒருவர் அந்தப் படத்தைப் பகல் நேரத்தில் பார்க்கலாம்.

·       பழக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்.ஒரு பழக்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல், அதைப் புரிந்துகொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக, புகைக்கும் பழக்கம் உள்ள ஒருவர், ஒவ்வொருமுறை சிகரெட்டைத் தன் வாய்க்குக் கொண்டுசென்று பற்றவைக்கும்போதும் அதைப்பற்றிச் சிந்திக்கலாம். பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் மிரட்டல்களைப் பட்டியலிட்டு ஒரு SWOT ஆய்வை நிகழ்த்தலாம், இதன்மூலம், அவர் தன்னையும் அறியாமல் அந்தப் பழக்கத்தில் ஈடுபடுவதை விடுத்து, அதைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ளத் தொடங்குவார்.

·       பழக்கத்தைப்பற்றி எழுதலாம்ஒரு பழக்கத்தை விடவேண்டும் என்று மனத்தில் எண்ணுவதைவிட, அதை எழுத்தில் எழுதிவைக்கும்போது, அவர் அந்தப் பழக்கத்தை விடுவது எளிதாகிறது, அதற்கான ஊக்கம் அவருக்குக் கிடைக்கிறது. மக்கள் தாங்கள் உண்ணும் உணவுகள், கலோரிகளைப் பதிவுசெய்கிற, தாங்கள் புகைக்கும் சிகரெட்கள்/பிற பொருட்களைப் பதிவுசெய்கிற மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தினால், அந்தப் பழக்கத்துடன் தொடர்புடைய ஆபத்துகள் தானாக நினைவுபடுத்தப்படும்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இதுபோல் பழக்கங்களில் சிக்கியிருந்தால், இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊக்கத்துடன் அவற்றிலிருந்து வெளியேவரச்சொல்லுங்கள். ஒருவேளை, இவற்றை முயன்றுபார்த்தபிறகும் சரியான வெற்றி கிடைக்காவிட்டால், அவர்கள் மருத்துவ உதவியை நாடலாம். பழக்கங்களை ஒருவர் தனியே கையாள்வது எளிதில்லை. பல நேரங்களில், பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியே வருவதற்கும், அவை மீண்டும் வராதபடி தடுப்பதற்கும் நிபுணர்களுடைய உதவி தேவைப்படுகிறது.

இந்தக் கட்டுரை, சுதந்தர உளவியலாளர் மற்றும் ஆலோசகர் மருத்துவர். பூர்வா ரானடே அவர்களுடைய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

பார்வைகள்

டாக்டர் ஜட்ஸன் ப்ரூவர், "ஒரு தவறான பழக்கத்தை உடைக்கும் ஓர் எளிய வழி."
உளவியல் அறிவியல் அமைப்பு, "ஒரு பழக்கம் எப்படி அடிமைத்தனமாகிறது."
ஆசிரியர்கள், பெஞ்சமின் ஜெ. சடோக், வெர்ஜினியா ஏ. சடோக். கேப்ளன் & சடோக்கின் முழுமையான மன நலப் பாடப்புத்தகம். ஃபிலடெல்ஃபியா :லிப்பின்காத் வில்லியம்ஸ் & வில்கின்ஸ், 2000.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org