இத்தனை வலி, துன்பம் எதற்கு?

மனச் சோர்வால் சிரமப்படும் ஒருவர் உரிய சிகிச்சையின்மூலம் முழு குணம் பெறலாம்

நிதினுக்கு வயது 16, கடினமாக உழைக்கிற புத்திசாலிப் பையன். பெங்களூரில் தன் பெற்றோருடன் வசிக்கிறான். நிதினுக்குக் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். பள்ளிகளுக்கு இடையிலான பல கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய பள்ளியின் சார்பாக விளையாடியிருக்கிறான். அவன் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவனுக்கு மனச் சோர்வுக் குறைபாடு ஏற்பட்டது. நிதினின் கதை இதோ:

நான் வளர் இளம் பருவத்தில் இருந்தபோது, அந்தப் பிரச்னை தொடங்கியது. என்னுடைய குடும்பத்தினரோ பள்ளியில் உள்ளவர்களோ என் மீது எந்த அழுத்தத்தையும் செலுத்தாதபோதும், படிப்பில் எனக்கு ஆர்வம் குறையத் தொடங்கியது. படிப்பில் கவனம் செலுத்துவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது, காரணம், எனக்கு அதில் ஆர்வமே இல்லை, பெரும்பாலான நாள்கள் நான் மிகவும் களைப்பாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். விரைவில் இந்த நிலை மிகத் தீவிரமாகிவிட்டது, கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு நான் பள்ளிக்கே செல்லவில்லை, ஒரு வருடமே வீணாகிவிட்டது. அதேசமயம் நான் என்னால் இயன்றவரை சிரமப்பட்டுப் படித்தேன், கடின உழைப்பாலும் உறுதியாலும் நான் கல்வியில் சிறந்து விளங்கினேன்.

அப்போது எனக்கு வந்த பிரச்னை, திரும்பத் திரும்ப வருகிற மனச் சோர்வுக் குறைபாடு. எனக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும், நான் செய்த தவறு, ஒவ்வொருமுறையும் பிரச்னை குணமாகிவிட்டது என்று நினைத்து மருந்து சாப்பிடுவதை நிறுத்தியதுதான். நிறைவாக, நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன்,: மனச் சோர்வுக்கு எதிரான மருந்துகள் இல்லாமல் என்னால் ஒரு சாதரணமான வாழ்க்கையை வாழ இயலாது என்பதை நான் புரிந்துகொண்டேன், அதைப்பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்தேன், அது என் வாழ்க்கையை மாற்றியது.

என்னுடைய மனச் சோர்வு நிகழ்வுகள் மிக வேகமாக, 7-10 நாள்களுக்குள் நடந்தன. இந்தக் காலகட்டத்தில் எல்லாமே இருட்டாகத் தோன்றியது. நான் சிரிக்கமாட்டேன், மகிழ்ச்சியாக உணரமாட்டேன், என்னைச் சுற்றி நடந்த எதுவுமே என்னுடைய மனநிலையைச் சிறிதும் மேம்படுத்தவில்லை. எனக்குச் சாப்பிட தோன்றவில்லை, நான் இரவு முழுக்கத் தூங்காமல் விழித்திருந்தேன், 15 நாள்களில் நிறைய எடை (4-6 கிலோ) குறைந்துவிட்டேன். என்னுடைய நடவடிக்கைகள் மெதுவாகின, வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றியது. எனக்கு எதிலும் ஆர்வம் வரவில்லை, முன்பு நான் ஆர்வமாகச் செய்துகொண்டிருந்த எந்த வேலையையும் இப்போது நான் செய்ய விரும்பவில்லை. எதிர்காலத்தின்மீது எனக்கு நம்பிக்கையே போய்விட்டது, நான் தொடர்ந்து வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நினைத்தேன்.

ஒரு மன நல நிபுணரை சந்தித்து, இதுபற்றிப் பேசி ஆலோசனை பெற்றபிறகு, நான் மின் அதிர்வுச் சிகிச்சை (ECT) எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு முறை மனச் சோர்வுப் பிரச்சினை வரும்போதும் ECT சிகிச்சை எடுத்துக்கொள்வேன், அதன்பிறகு எனக்கு ஒரு சிறிய நினைவுப் பிரச்னை வரும். அதேசமயம் விரைவில் என் ஞாபகம் திரும்பி வந்துவிடும், மற்றவர்களைவிடச் சிறப்பான ஞாபகசக்தியுடனும் புத்திசாலித்தனத்துடனும் நான் சிறந்து விளங்கினேன்.

நான் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம், மருந்துகளைச் சாப்பிடாமல் இவ்வளவு வலியையும் துயரத்தையும் அனுபவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதில் சில பக்கவிளைவுகள் இருக்கலாம், ஆனால் அதைச் சமாளிப்பது எப்படி என்று நான் புரிந்துகொண்டுவிட்டேன். மனச் சோர்வால் துன்பப்படுவதைவிட, சிறிது வலியைப் பொறுத்துக்கொள்வது நல்லது. நான் மனச் சோர்விலிருந்து முழுவதுமாகக் குணமாகும்வரை நான் என்னுடைய மருந்துகளை நிறுத்தமாட்டேன்.     

இந்தப் பிரச்னை கொண்ட பல நபர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள், அவர்களுடைய அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, மனநல நிபுணர்களின் உதவியுடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் உண்மை அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருடைய நிலையைப் புரியவைக்கும் நோக்கத்துடன் இந்த விவரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org