குறைபாடுகள்

இன்சோம்னியா

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

இன்சோம்னியா என்றால் என்ன?

A

இன்சோம்னியா என்பதுதான் மக்களிடையே பொதுவாகக் காணப்படும் தூக்கக் குறைபாடு. இந்தக் குறைபாடு கொண்டவர்களால் எளிதில் தூங்க இயலுவதில்லை, அப்படியே தூங்கினாலும் விரைவில் விழித்தெழுந்துவிடுகிறார்கள்.

சிலர் ஏதாவது வேலை காரணமாகத் தாமதமாகத் தூங்கச் செல்வார்கள், அல்லது அதிகாலையிலேயே எழுந்துவிடுவார்கள், அவர்களுக்குத் தூக்கம் போதாமல் இருப்பது ஒரு சாதாரணமான விஷயம். இன்சோம்னியா கொன்டவர்களுடைய பிரச்னை அதுவல்ல, இவர்களுக்கு தூங்குவதற்குப் போதுமான அளவு நேரம் இருந்தாலும் இவர்களால் தூங்க இயலாது.

இன்சோம்னியா என்பது தூக்கத்தின் தரம், அளவு இரண்டையும் பாதிக்கிறது, ஆகவே இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பகல் நேரத்தில் மிகவும் களைப்புடனும் சோம்பலுடனும் காணப்படுகிறார்கள்.

சாதாரணமாக எல்லாருமே என்றைக்காவது ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுவதுண்டு. அவர்களுக்கெல்லாம் இன்சோம்னியா வந்திருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. இன்சோம்னியா என்பது நீண்ட நாள்களுக்குத் தொடர்கிற ஒரு பிரச்னை, இது ஒருவருடைய பணிச்செயல்திறன், உறவுகள், தீர்மானம் எடுத்தல், அவருடைய வாழ்க்கைத் தரம் என அனைத்தையும் பாதிக்ககூடியது.

அதே சமயம் இன்சோம்னியாவைக் குணப்படுத்த இயலும், இந்தப் பிரச்னை கொண்ட ஒருவர் எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெறத் தொடங்குகிறாரோ அவ்வளவு சீக்கிரமாக அவர் குணமாகிவிடுவார்.

Q

இன்சோம்னியாவின் அறிகுறிகள் என்ன?

A

இன்சோம்னியாவின் சில அறிகுறிகள்:

  • இந்தப் பிரச்னை கொண்டவர்கள் இரவு நேரத்தில் தூங்கச் சிரமப்படுவார்கள்.
  • இவர்கள் பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தோடு காணப்படுவார்கள், அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ந்து பகல் நேரத்தில் இவர்கள் தூக்கக் கலக்கத்துடனே இருப்பார்கள், பகல் முழுவதும் களைப்பாகவும் சோம்பலாகவும் காணப்படுவார்கள்.
  • இவர்கள் வேலையில் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுவார்கள், சில நேரங்களில் இவர்களுக்கு ஞாபகமறதியும் வந்துவிடும், ஆகவே இவர்களுடைய வேலையில் நிறையப் பிழைகள் தென்படும்.
  • இவர்கள் எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவார்கள், சின்னச் சின்ன விஷயங்கள்கூட இவர்களைக் கோபப்படுத்தத் தொடங்கும்.
  • இவர்களுக்குத் தொடர்ச்சியாகத் தலைவலி அல்லது வயிற்றுவலி காணப்படும்.
  • இவர்கள் தூக்கத்தைப்பற்றி அதிகம் கவலைப்படுவார்கள்.

உங்களுக்குத் தெரிந்த யாராவது, நீண்ட நாள்களாக இந்த அறிகுறிகளுடன் சிரமப்பட்டால் அவர்களுடன் பேசுங்கள், அவர்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்கவேண்டுமென்று ஆலோசனை சொல்லுங்கள்.

Q

இன்சோம்னியா எதனால் ஏற்படுகிறது?

A

பொதுவாக இன்சோம்னியாவை உண்டாக்கக்கூடிய காரணங்கள்:

அழுத்தம்: பெரும்பாலானவர்களிடம் அழுத்தம்தான் இன்சோம்னியாவை உண்டாக்குகிறது. இங்கே அழுத்தம் என்று குறிப்பிடுவது ஒருவர் தினசரி சந்திக்கக்கூடிய பிரச்னைகளைதான், உதாரணமாக வேலையில் அழுத்தம், பணப் பிரச்னைகள் அல்லது ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றால் ஏற்படும் அழுத்தம் ஒருவருக்கு இன்சோம்னியாவைத் தூண்டக்கூடும். வேறு ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சியின் காரணமாகவும் இந்த அழுத்தம் ஏற்படலாம், உதாரணமாக அன்புக்குரிய ஒருவருடைய மரணம், விவாகரத்து அல்லது பணியிலிருந்து நீக்கப்படுதல் போன்றவையும் இன்சோம்னியாவிற்குக் காரணமாகலாம்.

மற்ற மனநலப் பிரச்னைகள்: மனச்சோர்வு மற்றும் பதற்றக் குறைபாடுகளைக் கொண்டவர்கள், பிற மனநலப் பிரச்னைகளால் அவதிப்படுகிறவர்கள் போன்றோரும் சரியாகத் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள், இவர்களுக்கும் இன்சோம்னியா வரக்கூடும்.

ஒருவருடைய மருத்துவநிலை: ஏதாவது ஒரு நோய் அல்லது உடல்பிரச்னை காரணமாக வலியிலோ அசௌகரியத்திலோ இருப்பவர்களுக்கு, ஆஸ்த்மா போன்ற மூச்சுவிடுவது தொடர்பான பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கு இன்சோம்னியா வரக்கூடும். புற்றுநோய், இதயநோய் போன்ற தீவிர நோய்களில் ஆரம்பித்து ஒவ்வாமை, அமில ரிஃப்ளக்ஸ் போன்ற சாதாரணமான நோய்கள் வரை பலவும் இன்சோம்னியாவைத் தூண்டக்கூடும்.

மருந்துகள்: பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கிற மருந்துகள், வலி நீக்கிகள் மற்றும் ஜலதோஷம், மூச்சடைப்பு போன்றவற்றுக்கு மருந்துக் கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கிற மருந்துகள் போன்ற பலவற்றில் கஃபைன் கலந்துள்ளது, இது ஒருவருடைய தூக்கத்தைப் பாதிக்கக்கூடும். மனச்சோர்வுக்கு எதிரான ஆன்ட்டிடிப்ரசன்ட்கள், இரத்த அழுத்தப் பிரச்னைகள் மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகள்கூட இன்சோம்னியாவை உண்டாக்கக்கூடும்.

ஆல்கஹால் மற்றும் பிற பொருள்கள்: ஆல்கஹால், கஃபைன், நிக்கோட்டின் மற்றும் பிற போதை மருந்துகள் இன்சோம்னியாவைத் தூண்டக்கூடும். கஃபைன் அதிகம் உட்கொள்வதன்மூலம் தூக்கம் வருவதே பாதிக்கப்படும், ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகளை அதிகம் எடுத்துக் கொண்டால் தூங்கிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி விழிப்பு ஏற்படும்.

முறையற்ற தூக்கப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல்: தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவதும் நல்லது. இதில் ஒழுங்கின்றி மாறிமாறிக் கண்டநேரத்தில் தூங்கி கண்டநேரத்தில் எழுந்துவந்தால் அது இன்சோம்னியாவிற்கு வழிவகுக்கக்கூடும். அதேபோல் நிறைய வெளிச்சம் அடிக்கிற, நிறையச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிற அசௌகரியமான சூழ்நிலைகளில் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால் அதுவும் ஒருவருடைய தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும்.

வாழ்க்கை நிகழ்வுகள்: ஒருவர் தொழிற்சாலை அல்லது அலுவலகத்தில் இரவு நேர ஷிஃப்ட்டில் வேலை செய்யவேண்டியிருந்தால் அல்லது தான் வாழும் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வேறொரு நேர மண்டலத்தில் வாழத் தொடங்கினால் அந்த மாற்றத்தை அவருடைய உடல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், அதன்மூலம் அவருடைய தூக்கம் பாதிக்கப்படலாம்.

முதுமை: வயதாக ஆக ஒருவருக்கு இன்சோம்னியா வருகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது. காரணம் அவர்களுடைய தூங்கும் பாணிகள் மாறத் தொடங்குகின்றன, அவர்கள் வழக்கமாக எந்த நேரத்தில் களைப்படைவார்களோ அதற்கு முன்பாகவே களைப்படையத் தொடங்குகிறார்கள். அவர்களுடைய உடல் உழைப்புக் குறைந்துவிடுவதாலும் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. வயதானவர்களுக்கு வருகிற உடல் சார்ந்த பிரச்னைகளும் அவர்களுடைய தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

Q

இன்சோம்னியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

A

இன்சோம்னியா என்பது ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கக்கூடிய தீவிரமான பிரச்னைதான். அதே சமயம் இதனைக் குணப்படுத்த இயலும்.

யாருக்காவது நீண்டநாளாகத் தூக்கம் வருவதில் பிரச்னைகள் இருந்து, அதனால் அவர்களுடைய தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவேண்டும், தங்களூடைய பிரச்னைக்குச் சிகிச்சை பெறவேண்டும்.

இன்சோம்னியாவிற்கான சிகிச்சை என்பது இன்சோம்னியாவைத் தூண்டக்கூடிய பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குச் சிகிச்சை தருவதே ஆகும். சில மருந்துகள், அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை போன்ற செயல்பாட்டுச் சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் மருத்துவர்கள் இன்சோம்னியாவைக் குணப்படுத்துகிறார்கள்.

Q

இன்சோம்னியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

இன்சோம்னியா என்பது ஒருவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒரு பிரச்னை. ஆகவே இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் எரிச்சலடையலாம், சலிப்படையலாம், பிறரிடம் முரட்டுத்தனமாகப் பேசலாம்.

அது போன்ற நேரங்களில் அவர்களைக் கவனித்துக் கொள்கிற நீங்களும் அவர்கள்மீது கோபப்படாமல் பொறுமையோடு இருக்கவேண்டும், அவர்களுடைய பிரச்னை தீர்வதற்கு உதவி செய்யவேண்டும்.

அவர்கள் மனத்தில் என்ன கவலை இருக்கிறது என்று விசாரியுங்கள், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். சில நேரங்களில் தங்களுடைய மனத்தை உறுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தைப்பற்றிப் பேசியவுடனே அவர்களுக்குத் தூக்கம் வந்துவிடக்கூடும். அந்தவிதத்தில் நீங்கள் பொறுமையாகக் கேட்பதே அவர்களுக்கு ஒரு நல்ல தூக்கத்தைத் தரும்.

ஒருவர் நிறையக் குறட்டைவிடுகிறார் அல்லது கண்டநேரத்தில் தூங்கி கண்டநேரத்தில் எழுகிறார் என்றால் அவரோடு அதே அறையில் தூங்குகிறவர்களுடைய தூக்கமும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அதுபோன்ற நேரங்களில் பிரச்னை தீரும் வரை அவர்களைத் தனியாக உறங்கச் செய்யுங்கள், அதே சமயம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருங்கள்.

இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமாகிவிட்டால் அவர்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள், தேவைப்பட்டால் அவர்களை நீங்களே மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் குணமடைய உதவுங்கள்.

Q

இன்சோம்னியாவைச் சமாளித்தல்

A

இன்சோம்னியா என்பது ஒருவருடைய தினசரி வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னைதான். அதே சமயம் சில மாற்றங்களின்மூலம் இதனை ஓரளவு சமாளிக்கலாம், பாதிக்கப்பட்டவர் சரியானமுறையில் தூங்கப் பழகலாம்.

இன்சோம்னியா பிரச்னை கொண்டவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஏதாவது வேலைகளைச் செய்துகொண்டிருக்கவேண்டும், முடிந்தவரை உடற்பயிற்சி செய்யவேண்டும், இதனால் நாளின் நிறைவில் அவர்களுடைய உடல் களைப்படையும், தூக்கத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கஃபைன் கலந்த பொருள்களை அதிகம் உட்கொள்ளாமல் இருக்கவேண்டும், மது மற்றும் நிக்கோட்டின் கலந்த பொருள்களைத் தவிர்த்துவிடவேண்டும். இந்தப் பொருள்கள் அனைத்தும் ஒருவருடைய தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள்.

தூங்கச் செல்வதற்கு முன்னால் மனத்தை, உடலைத் தளர்வடையச் செய்வதற்கான சில ’ரிலாக்ஸேஷன்’ உத்திகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைக் கற்றுக்கொண்டு, தினமும் செய்துபார்த்தால் தூக்கத்தின் தரம் மேம்படலாம்.

இவற்றையெல்லாம் செய்தபிறகும் இன்சோம்னியா கட்டுக்குள் வரவில்லை, பகல் நேர வேலைகளை அது பாதிக்கிறது என்றால், உடனடியாக ஒரு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org