புத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு)

Q

புத்திசாலித்தனக் குறைபாடு என்றால் என்ன?

A

அனிருதுக்கு நான்கு வயதாகிறது. ஆனால் அவனால் தானே நடக்க இயலவில்லை. அவன் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் சிலரை அடையாளம் கண்டுகொள்கிறான், ஆனால் அவனால் தன்னுடைய முகத்தில் உள்ள பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை, பொருளுள்ள எந்தச் சொற்களையும் அவனால் பேச இயலுவதில்லை. அவனுக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, அவன் ஒரு வயதான ஒரு குழந்தையின் மனத் திறன்களைத் தான் பெற்றுள்ளான் என்று சொல்லப்படுகிறது.

இது ஒரு கற்பனை விவரிப்பு. இந்தப் பிரச்னையை நிஜ வாழ்க்கையில் பொருத்திப் புரிந்துகொள்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புத்திசாலித்தனக் குறைபாடு (முன்பு இதனை மனநிலைச் சிதைவு என்று அழைத்துவந்தார்கள்) என்பது ஒரு குழந்தையின் வளர்ச்சி சார்ந்த அனைத்து அம்சங்களும் தாமதமாக நடைபெறுகின்ற நிலையைக் குறிக்கிறது. இந்தத் தாமதம் நான்கு வளர்ச்சிப் பகுதிகளில் காணப்படுகிறது: இயந்திரவியல் திறன்கள் (உடல் அசைவுகளைக் கட்டுபடுத்துதல்), அறிவாற்றல் திறன் (சிந்தித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுதல்), சமூகத் திறன்கள் (பிறருடன் உரையாடுதல், மற்றவர்களிடம் எப்படிச் சரியாக நடந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொள்ளுதல்), மற்றும் மொழித் திறன்கள் (பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது, பேசக் கற்றுக் கொள்வது). புத்திசாலித்தனக் குறைபாடு என்பது மனநிலைக் குறைபாடு, மனநிலை இயல்பின்மை மற்றும் புத்திசாலித்தன முழுமையின்மை எனவும் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பு: மனநிலைச் சிதைவு என்கிற சொல் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தச் சொல் கண்ணியக் குறைவானதாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தக் கட்டுரையில் நாம் இந்தப் பிரச்னையைக் குறிப்பதற்கு புத்திசாலித்தனக் குறைபாடு என்ற சொல்லையே பயன்படுத்துவோம்.

புத்திசாலித்தனக் குறைபாடு என்பது மனநோய் அல்ல. இது மனநிலை வளர்ச்சியில் ஏற்படும் தாமதம் ஆகும், இது குழந்தைப் பருவத்திலிருந்தே காணப்படுகிறது.

ஒரு குழந்தை பிறந்தபிறகு அதற்குப் பதினெட்டு வயதாகும் வரை அது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் அந்தக் குழந்தையின் வளர்ச்சிப் பருவம் என்று குறிப்பிடுவார்கள். அந்தக் குழந்தையின் மன நிலை வளர்ச்சி என்பது ஒரு வரிசையான மற்றும் ஒழுங்கான முறையில் நடைபெறுகிறது. உதாரணமாக பெரும்பாலான குழந்தைகள் பிறந்து பதினைந்து மாதம் ஆகும்போது அவர்கள் சில சொற்களைப் பேசத் தொடங்குகிறார்கள். இதுபோன்ற வளர்ச்சி நிலைகளைக் குழந்தைகள் எட்டாவிட்டால், அல்லது ஒரு குழந்தையின் வளர்ச்சி அல்லது மனநிலைத் திறன்களில் குறிப்பிடத்தக்க குறைகள் காணப்பட்டால், அல்லது தரநிலைப்படுத்தப்பட்ட புத்திசாலித்தன அளவுகோல் (IQ) தேர்வில் ஒரு குழந்தை 85க்குக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றால், அந்தக் குழந்தைக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Q

புத்திசாலித்தனக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

புத்திசாலித்தனக் குறைபாட்டுடன் தொடர்புடைய சில மருத்துவநிலைகளைக் குழந்தை பிறக்கும்போதே கண்டறிய இயலும். உரிய நேரத்திற்கு முன்பாகவே பிறக்கும் குழந்தைகள், பிறக்கும்போது குறைவான எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பிறக்கும்போது அஸ்ஃபிக்ஸியா(asphyxia)வால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு வரும் வாய்ப்பு அதிகம். தீவிரப் புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு 6 – 12 மாதங்கள் வயதாகும்போது அதனைக் கண்டறியலாம். மிதமான குறைபாடு கொண்ட குழந்தைகளுடைய பிரச்னைகளை அந்தக் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் போது கண்டறியலாம். புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்னை பிறப்பிலிருந்தே இருக்கிறது. அதே சமயம் குழந்தை பிறந்தபிறகு அதன் மூளைக்கு ஏற்படக் கூடிய சேதம்கூட புத்திசாலித்தனக் குறைபாட்டை உண்டாக்கலாம்.

மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகள் உட்காருவது, தவழ்வது, நடப்பது, பேசுவது போன்றவற்றைத் தாமதமாகக் கற்றுக்கொள்ளக் கூடும். புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரியவர்களும் குழந்தைகளும் பின்வரும் பண்புகளில் சிலவற்றை வெளிப்படுத்தக் கூடும்:

 • வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் தாமதம்
 • மொழியைக் கற்றுக் கொள்வதில் தாமதம்
 • ஞாபகசக்திக் குறைபாடு
 • சமூகத்தின் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ளச் சிரமப்படுதல்
 • பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்கள் இன்மை
 • தானே உள்வாங்கிக்கொள்ளக்கூடிய பழக்கவழக்கங்களான தனக்குத் தானே உதவிக் கொள்ளுதல் அல்லது தன்னைத் தானே கவனித்துகொள்ளுதல் ஆகிய வளர்ச்சி நிலைகளில் தாமதம்
 • சமூகத் தடுப்பான்கள் இன்மை

Q

நீங்கள் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

A

 • குழந்தை உரிய காலத்திற்கு முன்பே பிறந்து அதன் எடை இரண்டு கிலோவை விடக் குறைவாக இருந்தால்
 • சிசுப் பருவத்தில் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வந்தால்
 • குழந்தை சுறுசுறுப்பின்றி அல்லது மிகவும் சோம்பலுடன் காணப்பட்டால்
 • குழந்தைக்கு 4 - 5 வயதானபிறகும், தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும் செயல்பாடுகளான சாப்பிடுதல், உடை உடுத்துதல் மற்றும் கழிப்பறைச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பிறரைச் சார்ந்து இருந்தால்
 • குழந்தையால் தன்னுடைய வளர்ச்சி இலக்குகளை உரிய காலத்தில் எட்ட இயலாமல் தாமதம் ஏற்பட்டால்

Q

புத்திசாலித்தனக் குறைபாட்டுடன் தொடர்புடைய பொதுவான ஆரோக்கியப் பிரச்னைகள்

A

புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். ஆனால் மற்றவர்களை விட அவர்களுடைய புத்திசாலித்தனம் குறைவாகக் காணப்படும். அதே சமயம், இந்தக் குறைபாட்டுடன் தொடர்புடைய சில ஆரோக்கியப் பிரச்னைகள் இவை:

பழகுமுறைப் பிரச்னைகள்: புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட ஒருவர் எப்போதும் அமைதியற்றுக் காணப்படலாம், நினைத்ததை யோசிக்காமல் சட்டென்று செய்துவிடலாம், எப்போதும் எரிச்சலாக, கோபத்துடன், பிடிவாதம் பிடிப்பவராக இருக்கலாம். இந்தப் பண்புகள் சில நேரங்களில் மிகவும் தீவிரமாக வெளிப்பட்டு அவர்கள் தங்களைத் தாங்களே காயம் செய்துகொள்கிற அளவுக்குச் சென்றுவிடலாம். இப்படித் தீவிரமாகச் செயல்படும் ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இப்படித் தீவிரமாக நடந்துகொள்ளும் ஒரு குழந்தையை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு குழந்தையின் பெற்றோர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

வலிப்புகள்: பொதுவாகப் புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களுக்கு வலிப்பு நோயும் வருவதுண்டு. இவர்களுடைய ஒட்டுமொத்த உடலிலும் வலிப்பு வரலாம் அல்லது சில உடல் பகுதிகளில் வலிப்பு ஏற்படலாம் அல்லது ஒரே ஒரு முறை உடல் உதறி அவர் சமநிலையை இழந்து கீழே விழ நேரிடலாம். வலிப்புப் பிரச்னைகளை மருந்துகளைக் கொண்டு எளிதில் கட்டுப்படுத்தலாம்.

புலன் பலவீனம்: புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களில் 10 சதவிகிதம் பேருக்குப் பார்வை மற்றும் கேட்டலில் பிரச்னைகள் உள்ளன. இவர்களுடைய பிரச்னைகளைக் குணப்படுத்த காது கேட்பதில் உதவும் கருவிகள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கண் பார்வையைச் சரிசெய்யும் அறுவைச் சிகிச்சை போன்றவை உதவும்.

குறிப்பு: புத்திசாலித்தனக் குறைபாடு உள்ளவர்களுக்கு மற்ற வளர்ச்சிக் குறைபாடுகளான செரிபரல் பால்சி, பேச்சுக் குறைபாடு மற்றும் ஆட்டிசம் போன்றவையும் இருக்கலாம்.

Q

புத்திசாலித்தனக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

A

புத்திசாலித்தனக் குறைபாட்டுக்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் முழுமையானது அல்ல.

குழந்தை பிறப்பதற்கு முந்தைய காரணங்கள்

 • டவுன் குறைபாடு, நொறுங்கக் கூடிய X குறைபாடு, பிராடர் விலி குறைபாடு, கிளைன்பெல்டர்ஸ் குறைபாடு போன்ற குரோமோசோம் சார்ந்த குறைபாடுகள்
 • ஒற்றை ஜீன் குறைபாடுகள்
 • ருபிஸ்டெய்ன்டாபி குறைபாடு, டி லாங்கே குறைபாடு போன்ற மரபணுமூலம் கொண்ட நிலைகள்
 • தாயினால் அல்லது சுற்றுச்சூழலினால் வருகிற பாதிப்புகள்
 • அயோடின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துகள் போதாமல் இருத்தல்
 • ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மிகவும் குறைவாகக் கிடைத்தல்
 • ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது மது, நிக்கோடின் மற்றும் கொக்கெய்ன் போன்ற பொருள்களைப் பயன்படுத்துதல்
 • ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது ஆபத்தான ரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் மருந்துகளை உட்கொள்ளுதல்
 • ருபெல்லா, சிபிலிஸ் மற்றும் ஹெச் ஐ வி போல் தாய்க்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்கள்

குழந்தை பிறக்கும்போது அல்லது கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமெஸ்டரின்போது ஏற்படக்கூடிய காரணங்கள்

 • நஞ்சுக்கொடி பிறழ்ச்சி
 • தாய்க்கு ஏற்படக்கூடிய இதய அல்லது சிறுநீரகப் பிரச்னைகள்

பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய காரணங்கள்

 • குழந்தை உரிய நேரத்திற்கு முன்பே பிறத்தல்
 • பிறந்த குழந்தையின் எடை மிகக் குறைவாக இருத்தல்
 • பிறந்த குழந்தைக்கு அஸ்பிக்ஸியா பிரச்னை ஏற்படுதல்
 • பிரசவ அதிர்ச்சி

குழந்தை பிறந்து நான்கு வாரங்களுக்குள் ஏற்படக்கூடிய காரணங்கள்

 • மஞ்சள் காமாலை
 • ஹைப்போகிளைசெமியா
 • செப்டிசெமியா

சிசுப் பருவம் மற்றும் குழந்தைப் பருவத்தில்

 • காசநோய் அல்லது பாக்டீரியல் மெனின்கிட்டிஸ் போன்ற மூளைத் தொற்றுகள்
 • ஈயத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுதல்
 • பல காலத்துக்குப் போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்காமல் இருத்தல்
 • தலையில் காயம் படுதல்

Q

புத்திசாலித்தனக் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுதல்

A

புத்திசாலித்தனக் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது, ஆனால் இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்குச் சரியான ஆதரவையும் சேவைகளையும் வழங்கினால் அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக, இயன்ற அளவு பிறரைச் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழ இயலும். புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட நபர்கள் ஆரோக்கியமாக இல்லை, அவர்களுடைய பழகுமுறையில் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றால், அவர்களுக்குச் சரியான அரவணைப்பு கிடைக்காததுதான் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள், ஆகவே இதனைக் கவனித்துச் சரிசெய்வது சாத்தியமே.

Q

புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளூதல்

A

புத்திசாலித்தனக் குறைபாடு என்பது வாழ்நாள்முழுவதும் தொடரக்கூடிய ஒரு நிலை. புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவருக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படக்கூடும், ஆகவே அவருக்கு நிறைய பொறுமை தேவை. ஆனால் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, இந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவுவதற்கென்று பல தகவல்களும் ஆதரவுக் குழுக்களும் உள்ளன. இதன்மூலம், தங்களுடைய அன்புக்குரியவர்கள் இந்தப் பிரச்னையைச் சமாளித்து ஆரோக்கியமான, ஓரளவு பிறரைச் சார்ந்திராமல் வாழ்கிற ஒரு வாழ்க்கையைப் பெறுவதற்கு அவர்கள் உதவ இயலும்.

இயல்பாக்கல் என்பது ஸ்கேன்டிநேவிய நாடுகளில் உருவான ஒரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, மற்ற நபர்களுக்கு என்ன மாதிரியான சுற்றுச்சூழல் கிடைக்கிறதோ அதே மாதிரியான சுற்றுச்சூழல் புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களுக்கும் அமைத்துத் தரப்படுகிறது. புத்திசாலித்தனக் குறைபாடு உள்ளவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வது அவர்களுடைய உரிமை. அவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும், பாரபட்சம் காட்டிப் பிரித்து வைக்கக் கூடாது.

புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களுடைய குடும்பத்தினர், அவர்களைக் கவனித்துக் கொள்ளும்போது மிகுந்த அழுத்தத்தைச் சந்திக்கக் கூடும். இந்த அழுத்தத்திற்குக் காரணம் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள், சமூகத்தில் உள்ள மற்றவர்கள் இவர்களை ஏற்காத நிலை, தினமும் அவர்களைக் கவனித்துக் கொள்ளுவதால் ஏற்படுகிற அழுத்தம், அவர்களால் தங்களுக்காக நேரம் ஒதுக்க இயலாமல் போவது, இதனால் உண்டாகக் கூடிய பொருளாதரப் பிரச்னைகள் போன்றவை. புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும், அவர்கள் தங்களுடைய பிள்ளைக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும், இதே போன்ற பிரச்னையைச் சந்தித்து வரும் மற்றவர்களுடன் உரையாடி, அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் சுற்றுச்சூழலை இயல்பாக்க என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும், அதன்படி செயல்படவேண்டும்.

கவனித்துக் கொள்பவர்களுக்கான குறிப்புகள்

 • நிபுணர்களிடம் பேசி இந்தப் பிரச்னை பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய சந்தேகங்களை எழுப்பித் தெளிவு பெறுங்கள்
 • இதேபோன்ற பிரச்னை உள்ள குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் மற்றவர்களுடன் பேசுங்கள்
 • உங்கள் குழந்தையின் குறைபாடுகளில் அதிகக் கவனம் செலுத்தாதீர்கள், அதன் திறன்களைக் கவனியுங்கள்
 • விசேஷக் கல்வியாளர்களிடமிருந்து பயிற்சி உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்துங்கள்
 • உங்களுடைய பிள்ளையை எண்ணி வெட்கப்படாதீர்கள், உங்கள் பிள்ளையின் நிலையைப் புரிந்துகொள்ளாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய குழப்பங்களைத் தெளிவித்து அவர்கள் மீது மரியாதை உண்டாகச் செய்யுங்கள்
 • புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்கள் எதையும் மெதுவாகவே கற்றுக் கொள்ளக்கூடும், ஆனால் பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக் கொடுத்தால் அவர்கள் பல திறன்களைக் கற்றுக் கொள்வார்கள், ஓரளவிற்குத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள்
 • உங்கள் குழந்தையை அதீதமாகப் பாதுகாக்காதீர்கள்
 • புத்திசாலித்தனக் குறைபாட்டிற்கு அறிவியல் அடிப்படையில் அமையாத தீர்வுகளைத் தேடாதீர்கள், அப்படிப்பட்ட தீர்வுகள் எவையும் உண்மையில் இல்லை

நலப் பராமரிப்பு: சில மருந்துகள் மற்றும் மூலிகைகள் புத்தசாலித்தனத்தை மேம்படுத்தும் என்று பலர் சொல்கிறார்கள். இப்படிச் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் முழுப் பொய்கள். புத்திசாலித்தனக் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது. அதே சமயம் உங்கள் குழந்தையின் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடவும் உங்கள் குழந்தையின் பலங்கள் மற்றும் பலவீனங்களை உளவியல் ரீதியில் மதிப்பிடவும் நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம். இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் உங்கள் குழந்தைக்கான வருங்காலக் கல்வி, வாழ்க்கைத் திறன் மற்றும் பணி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

தொடக்கநிலைச் சிகிச்சை

ஒரு குழந்தைக்குப் புத்திசாலித்தனக் குறைபாடு இருப்பதை மிக இளம் வயதிலேயே கண்டறிந்து அந்தக் குழந்தைக்கு ஊக்கம் தரக்கூடிய, பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலைத் தொடர்ந்து தந்து வந்தால் அந்தக் குழந்தை நன்கு முன்னேறிவிடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. புத்திசாலித்தனக் குறைபாடு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ள அல்லது வளர்ச்சியில் ஏற்கனவே தாமதம் இருப்பது கண்டறியப்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ந்து புலன்-இயக்கவியல் தூண்டல்கள் வழங்கப்படவேண்டும்.உதாரணமாக பெற்றோர் குழந்தையின் புலன் உணர்வுகளை(கேட்டல், தொடுதல்)த் தூண்டுகிற, இயக்கவியலை (கையால் பற்றுதல், எட்டிப்பிடித்தல், பயன்படுத்துதல், இடம் மாற்றுதல்) மேம்படுத்துகிற பணிகளைச் செய்யச்சொல்லித் தூண்டலாம்.

கல்வி

புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட குழந்தைகள் அவர்களுடைய தினசரிப் பணிகளைச் செய்வதற்குக் கற்றுக் கொள்கிற அதே நேரத்தில் அவர்கள் கல்வித் திறன்கள், ஒழுக்கம் மற்றும் சமூகத்திறன்களையும் கற்றுக் கொள்வது முக்கியம். மிதமான புத்திசாலித்தனக் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை விசேஷப் பள்ளிகளுக்குச் செல்லாமல் வழக்கமான பள்ளிகளுக்கே செல்வது நல்லது. அதே சமயம் தீவிரக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு விசேஷப் பள்ளிகள் பயன்படும். இந்தப் பள்ளிகளின் பாடத்திட்டம் அவர்களுக்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தாலும் சரி குழந்தைக்குக் கல்வி அனுபவம் கிடைப்பது மிகவும் முக்கியம்.

பணி சார்ந்த பயிற்சி

புத்திசாலித்தனக் குறைபாடு கொண்டவர்களுக்குப் பணிப்பயிற்சி தந்து அவர்களை வேலையில் அமர்த்தலாம். மக்கள் பொதுவாக அவர்களுடைய திறனைக் குறைத்து மதிப்பிடுவது வழக்கம். ஆனால் அது தவறு. அவர்களால் பல வேலைகளைக் கற்றுக் கொண்டு சிறப்பாகச் செய்ய இயலும்.

Q

புத்திசாலித்தனக் குறைபாட்டைத் தடுக்க இயலுமா?

A

புத்திசாலித்தனக் குறைபாட்டைத் தடுப்பதற்கு குழந்தைக்கு வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களில் பெரும்பாலானவை தாய் மற்றும் சேய் நலம் சார்ந்தவை. சில வழிகாட்டுதல்கள்:

 • சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல், அதன்மூலம் குழந்தை குறைந்த எடையில் பிறப்பதற்கான காரணங்களைக் குறைத்தல்
 • அயோடின் குறைபாட்டைத் தவிர்ப்பதற்கு உப்பில் அயோடின் சேர்த்தல்
 • நரம்புக் குழாய் குறைபாடுகளைக் குறைப்பதற்கு ஃபோலிக் அமில மாத்திரைகளை வழங்குதல்
 • இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகளுக்கான துணையளிப்புகளை வழங்குதல், போதுமான கலோரிகளில் உணவு உட்கொள்ளச் செய்தல்
 • மூளையைப் பாதிக்கக்கூடிய குறைபாடுகளைத் தடுப்பதற்காகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல்
 • 21 வயதுக்கு முன் ஒருவர் கர்ப்பமாவதைத் தவிர்த்தல், அப்படி ஒருவர் கர்ப்பமானால் பிரசவத்தின்போது சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்
 • இதேபோல் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பமாவதையும் தவிர்க்க வேண்டும், காரணம் அவர்களுக்குப் பிறக்கக் கூடிய குழந்தைகளுக்கு டவுன் குறைபாடு போன்ற குரோமோசோம் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
 • ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே போதுமான இடைவெளி தந்து தாய் தன்னுடைய ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு அடுத்த குழந்தைக்குத் தயாராவதை உறுதி செய்வது
 • கர்ப்பமாக உள்ள ஒருவர் ஆபத்தான ரசாயனங்கள், மது, நிக்கோடின் மற்றும் கொக்கெய்ன் போன்ற பொருள்களை உட்கொள்ளாமல் இருத்தல்
 • கர்ப்பமான பெண்களுக்கு சிபிலிஸ் போன்ற தொற்றுகள் இருப்பதைப் பரிசோதித்துக் கண்டறிதல்
 • தாய்க்கு Rhஎதிர்மறை வகையைச் சேர்ந்த ரத்தம் இருக்கும்போது Rh ஐசோ-இம்யூனைசேசன் என்ற பிரச்னை ஏற்படக்கூடும், இதனைத் தடுக்க வேண்டும்
 • கருவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்பதற்கு முதல் குழந்தை பிறந்தபிறகு ஆன்ட்டி-D இம்யூனோகுலோபின் மருந்தை வழங்கவேண்டும்
 • குழந்தைப்பருவத்தின் போது குழந்தைக்கு ஏற்படக்கூடிய தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் மூளைத் தொற்றுக்குச் சிகிச்சை அளித்தல்


உலக சுகாதார அமைப்பு (WHO) மனநிலைச் சிதைவு பற்றி உருவாக்கிய ஆவணத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மூல ஆவணத்தை எழுதியவர்கள்: டாக்டர் சதீஷ் கிரிமாஜி, NIMHANS, பெங்களூர், டாக்டர் சுல்தானா S ஜமான், பங்களாதேஷ் புரோட்டோபோன்டி அறக்கட்டளை, P M விஜேதுங்கா, சுசித சுவேசேத பெற்றோர் கழகம்,  சர்வோதயா, இலங்கை மற்றும் டாக்டர் உடோம் பேஜரசங்கர்ண், ராஜானுகல் மருத்துவமனை, பாங்காக்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org