இடைவிட்ட வெடிப்புக் குறைபாடு

இடைவிட்ட வெடிப்புக் குறைபாடு

காஜலுக்கு வயது 26, அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.   காஜல் குழந்தைகளிடம் வன்முறையாக நடந்துகொள்வதாகப் பல புகார்கள் வந்தன, ஆகவே, பள்ளி நிர்வாகம் அவரை வேலையை விட்டுச் சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டது.    வீட்டில் காஜல் சோர்வாக, குற்ற உணர்ச்சியாக, தளர்வாக உணர்வதாகப் புகார் சொல்வார்.   அவருக்குத் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணங்களும் அடிக்கடி வரும், சில நேரங்களில் அந்த எண்ணங்களில் சிலவற்றை அவர் உண்மையாக்கியதும் உண்டு, எடுத்துக்காட்டாக அவர் தன்னுடைய மணிக்கட்டுகளை வெட்டிக்கொள்வார், சுவரில் தன்னுடைய தலையை மோதிக்கொள்வார்.  இந்த நிகழ்வுகள் வாரத்துக்கு ஒருமுறையாவது நிகழ்ந்தன.  சில நேரங்களில் அவர் மிகவும் கோபமடைந்து பொருட்களை உடைப்பார் அல்லது தன்னைச் சுற்றியுள்ள பிறரை அடிப்பதும் உண்டு.   அவர் தன்னுடைய கோபத்தை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று யாராவது சுட்டிக்காட்டினால் அவருடைய கோபம் மேலும் அதிகரிக்கும். காஜலின் குடும்பத்தினர் அவரை ஒரு பொது மருத்துவரிடம் அழைத்துச்சென்றார்கள், அவர் காஜலை உடனடியாக ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பினார்.  காஜலுக்கு இடைவிட்ட வெடிப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.   சில மாதச் சிகிச்சைக்குப்பிறகு காஜலால் தன்னுடைய கோபத்தை இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்திக்கொள்ள இயன்றது, அவருடைய கோப நிகழ்வுகள் குறைந்தன. 

இடைவிட்ட வெடிப்புக் குறைபாடு (IED) என்றால் என்ன ?

IED என்பது ஓர் உணர்ச்சி வேகக் கட்டுப்பாட்டுக் குறைபாடாகும், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறவர் எந்தக் காரணமோ தூண்டுதலோ இல்லாமல் திடீரென்று கோபத்தில் வெடிப்பார்.   அவரால் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது, சூழ்நிலையின் தீவிரத்துக்கு ஏற்ப அவருடைய கோபம் அமையாது. பொதுவான கோபக் குறைபாடுகளும் IEDம் ஒரேமாதிரி தோன்றினாலும் அவை பலவிதங்களில் மாறுபடுகின்றன.  கோபம் என்பது படிப்படியாக அதிகரிக்கிறது, ஆனால் IED பிரச்னை உள்ள ஒருவருக்குக் கோபம் திடீரென்று அதிகரிக்கிறது, அவர் மிகவும் வன்முறையான நிலைக்குச்  சென்றுவிடுகிறார்.   IED கொண்டவர்களால் தங்களுடைய வெடிப்பைப் புரிந்துகொள்வதும், அதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை விளக்குவதும் பொதுவாக இயலுவதில்லை.   

IED பொதுவாக வளர் இளம் பருவத்தின்போது தொடங்குகிறது, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்குப் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற வேறு பல உளவியல் குறைபாடுகள் ஏற்படுகிற ஆபத்தும் உள்ளது.   IED கொண்டவர்கள் கோப வெடிப்புக்குப்பிறகு அமைதியாக உணர்கிறார்கள், ஆனால் தாங்கள் இப்படி நடந்து கொண்டுவிட்டோமே என்று வருந்துகிறார்கள், சோகப்படுகிறார்கள், கழிவிரக்கம் கொள்கிறார்கள், அவமானமாக உணர்கிறார்கள்.   

IEDக்கான அறிகுறிகள் உடல்சார்ந்தவைமட்டுமில்லை, அவை அறிவாற்றல் மற்றும் நடத்தை வடிவங்களிலும் காணப்படுகின்றன.  இந்தக் குறைபாடு இயல்பில் நெடுநாள் நீடிக்கக்கூடியது என்றாலும், சிகிச்சை மற்றும் மருந்துகளின்மூலம் இந்த அறிகுறிகளைச் சமாளிப்பதற்கு உதவலாம்.  பொதுவாக ஒருவருக்கு வயதாக ஆகக் கோப வெடிப்புகள் குறைகின்றன.   மொத்த மக்கள் தொகையில் சுமார் 3.9 சதவிகிதப் பேரிடம் இந்தக் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

இடைவிட்ட வெடிப்புக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் என்ன?

IED பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் சொல் சார்ந்த மற்றும் சொல் சாராத வகைகளில் அறிகுறிகள் தென்படலாம். ஒருவரிடம் குறைந்தது மூன்று முறை தேவையற்ற கோப வெடிப்புகள் நிகழ்ந்தாலன்றி அவருக்கு IED வந்திருப்பதாகக் கண்டறியப்படுவதில்லை.  இந்த நிகழ்வுகள் பொதுவாகச் சுமார் அரை மணிநேரத்துக்கோ அதைவிடக் குறைவாகவோ நிகழ்கின்றன, மற்றும் இவை திடீரென்று நிகழ்கின்றன.  

இடைவிட்ட வெடிப்புக் குறைபாடு எதனால் நிகழ்கிறது?

IEDக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, அதேசமயம் உயிரியல் மற்றும் சூழலியல் சார்ந்த காரணிகளின் தொகுப்பால் இது நிகழலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.  இந்தக் குறைபாடு உள்ளவர்களில் பெரும்பாலானோர் சொல் சார்ந்த, உடல் சார்ந்த தாக்குதல்கள் பொதுவாக இருந்த குடும்பங்களில் வளர்ந்தவர்கள் என ஒரு சான்று தெரிவிக்கிறது.    பெரியவர்கள் வன்முறையாக நடந்துகொள்வதைப் பார்க்கும் குழந்தைகள் அதே பழக்கத்தைக் கற்றுக்கொள்ளக்கூடும், அதுதான் இயல்பு என நினைத்துப் பின்பற்றக்கூடும்.     மரபணுக்களுக்கும் இதில் ஒரு பங்கிருக்கலாம்.   நரம்புக் கடத்திகள், குறிப்பாக செரொட்டோனின் இதில் ஒரு பங்கை ஆற்றக்கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளன.

இடைபட்ட வெடிப்புக் குறைபாட்டுக்கு எப்படிச் சிகிச்சையளிக்கப்படுகிறது?

IEDக்கான சிகிச்சை ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது, உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் தொகுப்பாக இது அமைகிறது. 

  • மருந்துகள்: IED பிரச்னை கொண்டோருக்குப் பொதுவாக ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள், ஆன்ட்டி-ஆங்ஸியோலிடிக்கள் மற்றும் மனநிலையைச் சமநிலைப்படுத்தும் மருந்துகள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.  
  • சிகிச்சை: நடத்தையை மாற்றும் உத்திகள், குழு ஆலோசனைகள் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் போன்றவை இந்தப் பிரச்னை கொண்டோருக்கு நல்ல பலன்களைத் தந்துள்ளன.   கோபத்தைச் சமநிலைப்படுத்த மனத்தை தளர்வாக்கும் உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. 

பார்வை:

கெஸ்லர், R.C., கொக்கரோ, E..,F ஃபாவா, M., ஜேகர், S.,ஜின், R., & வால்ட்டர்ஸ், E.   (2006) தேசிய உடன் நோய்க் கணக்கெடுப்புப் பிரதிசெய்கையில் DSM-IV இடைவிட்ட வெடிப்புக் குறைபாட்டின் இருத்தல் மற்றும் ஒத்திசைவுகள்.  பொது மனநல ஆவணங்கள், 63(6), 669-678.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org