க்ளெப்டோமேனியா

Q

க்ளெப்டோமேனியா: ஓர் எடுத்துக்காட்டு

A

மரியாவுக்கு வயது 17. மிகுந்த துயரத்துடன் காணப்பட்ட அவர் ஒரு சிகிச்சையாளருடைய மருத்துவமனைக்குள் நுழைந்தார். 14 வயதிலிருந்து தான் உள்ளூர்க் கடைகளில் பொருட்களைத் திருடிவருவதாக அவர் ஒப்புக்கொண்டார். கடைகளில் பொருட்களைத் திருடுவதற்குமுன்னால், அவர் பள்ளியிலிருந்து சாக்பீஸைத் திருடுவார், சில நேரங்களில், வகுப்புத்தோழர்களிடமிருந்து பேனா, அதுபோன்ற பிற எழுதுபொருட்களைத் திருடுவார். ஆரம்பத்தில், தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அது அவருக்கு ஒருவிதமான பரவசத்தைத் தந்தது, வரை மகிழ்ச்சியாக்கியது. இப்படிப் பல இடங்களிலிருந்து எடுத்துவந்த பொருட்களை அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. சமீபத்தில், சூப்பர்மார்க்கெட்கள், மற்ற கடைகளில் பொருட்களைத் திருடுமுன் அவரால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயன்றுள்ளது. அதன்பிறகு, அவர் மிகவும் குற்றவுணர்ச்சியாக உணர்கிறார்.

Q

க்ளெப்டோமேனியா என்பது என்ன?

A

மரியாவுக்கு வயது 17. மிகுந்த துயரத்துடன் காணப்பட்ட அவர் ஒரு சிகிச்சையாளருடைய மருத்துவமனைக்குள் நுழைந்தார். சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பேசியபிறகு, மரியா அந்த உண்மையை ஒப்புக்கொண்டார்: 14 வயதிலிருந்து உள்ளூர்க் கடைகளில் பொருட்களைத் திருடும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. அவர் இதைச் செய்யத்தொடங்குமுன், பள்ளியிலிருந்து சாக்பீஸ்களைத் திருடுவார், அல்லது, வகுப்புத்தோழர்களிடமிருந்து பேனாக்கள் மற்றும் பிற எழுதுபொருட்களைத் திருடுவார். தொடக்கத்தில், தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை; ஆனால், அது அவருக்கு ஒருவிதமான பரவசத்தைத் தந்தது; அவரை மகிழ்ச்சியாக்கியது. பல இடங்களிலிருந்து தான் எடுத்த பொருட்களை அவர் அபூர்வமாகவே பயன்படுத்தியிருக்கிறார். சமீபத்தில், சூப்பர்மார்க்கெட்கள், மற்ற கடைகளிலிருந்து பொருட்களைத் திருடுமுன், அவரால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயன்றுள்ளது. இது நிகழும்போதெல்லாம், அவர் குற்றவுணர்ச்சியாக உணர்ந்துள்ளார்.

க்ளெப்டோமேனியா என்பது, திருடும் துடிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத நிலை என வரையறுக்கப்படுகிறது. மேற்கு நாடுகளில் இது மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு நிலையாகும்; இந்தியாவில் ஒவ்வோராண்டும் இவ்வகலையில் சுமார் 1 மில்லியன் நிகழ்வுகள் பதிவுசெய்யப்படுகின்றன. இந்த நிலையால் துன்பப்படுகிறவர்களிடம், பொருட்களைத் திருடவேண்டும் என்கிற ஓர் ஆற்றல்மிகுந்த துடிப்பு காணப்படுகிறது. தாங்கள் திருடும் பொருட்களை அவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கோ விற்பதற்கோ பயன்படுத்துவது அபூர்வம்தான். இவர்கள் திருடுகிற பொருட்களும் பலதரப்பட்டவை: சில நேரங்களில் ‘சேஃப்டி பின்’ போன்ற ஒரு சிறிய பொருளாக இருக்கலாம், சில நேரங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் அல்லது அறைக்கலன்கள்போன்ற பெரிய பொருட்களாகவும் இருக்கலாம்.

க்ளெப்டோமேனியா என்பது பொதுவாக வளர் இளம் பருவத்தில், அல்லது, ஒருவருடைய இருபதுகளின் தொடக்கத்தில் தொடங்குகிறது; அது அவருடைய வாழ்நாள்முழுக்கத் தொடரலாம். இது ஒருவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் (குழந்தைப்பருவம் அல்லது பெரியவர்களான நிலை) வெளிப்படுவது சாத்தியமென்றாலும், பெரியவர்களான நிலையின் பிற்பகுதியில் இது தொடங்குவது அபூர்வம்தான். க்ளெப்டோமேனியாவுடன் வாழ்கிறவர்கள் எத்தனைப் பேர் என்கிற துல்லியமான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது; காரணம், க்ளெப்டோமேனியா கொண்டவர்கள் பெரும்பாலும் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேச விரும்புவதில்லை; இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தாங்கள் கைது செய்யப்படுவோம் அல்லது தங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், திருடும் செயலின் முக்கியத்துவத்துக்கும் அந்தப் பொருளின் பண மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அந்தப் பொருளைக் கைப்பற்றியபின் அவர் உணர்கின்ற மன நிறைவுதான் இங்கு முக்கியமாகிறது.

Q

க்ளெப்டோமேனியாவுக்கும் பொதுவான திருட்டுக்கும் என்ன வேறுபாடு?

A

இரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தோன்றினாலும், இவற்றினிடையில் உள்ள வேறுபாட்டை அறிவது முக்கியம்.

(1) க்ளெப்டோமேனியா என்பது, தன்னுடையதாக இல்லாத பொருட்களைத் திருடும் துடிப்பு; இது பொதுவாக அனிச்சையாக நிகழ்கிறது. ஆனால், திருட்டு என்பது அப்படியில்லை, அது தனிப்பட்ட பயன்பாட்டுக்காகப் பொருட்களை எடுக்கும் முயற்சியாகும்; பல நேரங்களில் இதற்காக ஒருவர் முன்கூட்டியே திட்டமிடவேண்டியிருக்கிறது.

(2) க்ளெப்டோமேனியா கொண்ட ஒருவர், திருடவேண்டும் என்பதற்கான ஒரு துடிப்பை உணர்கிறார், அது அவரைக் கட்டாயமாகச் செயல்படச்செய்கிறது; ஆனால், திருடுபவர் பொருட்களை உரிமைகொள்ளவேண்டும் என்கிற மிகுந்த விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். இவை இரண்டும் ஒரேமாதிரியானவையாகவும் தொடர்புடையவையாகவும் தோன்றுகின்றன; ஆனால், இவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.

Q

க்ளெப்டோமேனியாவின் அறிகுறிகள் என்னென்ன?

A

  • தனக்குத் தேவையில்லாத பொருட்களைத் திருடவேண்டும் என்கிற ஆற்றல்மிகுந்த துடிப்பு
  • அந்தப் பொருளைத் திருடுமுன் அதிக மன அழுத்தம் மற்றும் கவலையை உணர்தல்
  • அதைத் திருடும்போது மகிழ்ச்சியுணர்வு
  • திருடியபின் குற்றவுணர்ச்சி மற்றும் நாணத்தை உணர்தல்
  • இந்தத் திருட்டுகள் எந்தவொரு மாயத்தோற்றம் அல்லது கற்பனைக்காட்சிக்கும் எதிர்வினையாக நிகழ்த்தப்படுவதில்லை; ஒருவர்மீது கோபம் கொண்டு அல்லது பழிவாங்குவதற்காக நிகழ்த்தப்படுவதில்லை.
  • சில சூழ்நிலைகளில், குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காக, திருடப்பட்ட பொருட்கள் திருப்பித்தரப்படுகின்றன.

Q

க்ளெப்டோமேனியா எதனால் உண்டாகிறது?

A

க்ளெப்டோமேனியாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை; இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதுபற்றி ஆய்வாளர்கள் சில கருதுகோள்களை உருவாக்கியுள்ளார்கள்.

  • ஃப்ரன்டல் லோப் செயல்பாட்டில் குறைபாடு ஃப்ரன்டல் லோப் என்பது, அனிச்சை செயல்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் கொண்ட மூளையின் பகுதியாகும். இதில் ஒரு வேதியியல் அல்லது நரம்புக்கடத்திச் சமநிலையின்மை உண்டானால், அது க்ளெப்டோமேனியாவின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம்.
  • பிற குறைபாடுகள் இணைந்து தோன்றுதல்: பல நேரங்களில் க்ளெப்டோமேனியாவானது மிதமான மனச்சோர்வு, தீவிர செயல்பாட்டுக் குறைபாடு, போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது ஏற்கெனவே உள்ள மனநிலைக் குறைபாடுகளுடன் இணைந்து காணப்படுகிறது.
  • மரபியல் காரணங்கள்: க்ளெப்டோமேனியாவானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு வரலாம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

Q

க்ளெப்டோமேனியாவுக்குச் சிகிச்சை பெறுதல்

A

க்ளெப்டோமேனியா வாழ்நாள்முழுவதும் தொடரக்கூடிய ஒரு பிரச்னை. க்ளெப்டோமேனியாவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிகிச்சைகள், பாதிக்கப்பட்டவர் இதற்கான அறிகுறிகளைக் கையாள உதவும் நோக்கத்துடன் அமைந்துள்ளன; அவை முழுமையான குணத்தை வழங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசினால் வரக்கூடிய விளைவுகளை எண்ணி மக்கள் அஞ்சுகிறார்கள், பேசத் தயங்குகிறார்கள்; இதனால், அவர்களுக்கு அதிக எரிச்சல் மற்றும் துன்பம் உண்டாகிறது. க்ளெப்டோமேனியாவுக்கு வழங்கப்படும் சில சிகிச்சைகள் இவை.

  • மருந்துகள்: ஆன்ட்டி-டிப்ரெஸென்ட்கள், மனநிலையைச் சமன்படுத்தும் மருந்துகள், வலிப்புக்கு எதிரான மருந்துகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலுக்கு எதிரான மருந்துகள் க்ளெப்டோமேனியாவின் அறிகுறிகளைக் குணப்படுத்துவதில் செயல்திறனோடிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • சிகிச்சைகள்: உளவியல் சிகிச்சைத் தலையீடும் நன்கு பயன்தந்துள்ளது. இவ்வகையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சிகிச்சைகள்:  
  • ரகசிய நுண்ணுணர்வாக்கல்: இந்தச் சிகிச்சையில், க்ளெப்டோமேனியா பிரச்னை கொண்டவர், ஒருவேளை தான் பிடிபட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார். சாத்தியமுள்ள எதிர்மறை விளைவுகளைப்பற்றி அதிகம் அறிந்திருப்பதால், அவர் திருடும் செயலைச் செய்யாமலிருப்பதை நோக்கி நுண்ணுணர்வூட்டப்படுவார்.
  • வெறுப்புச் சிகிச்சை: இந்த முறையில், க்ளெப்டோமேனியா பிரச்னை கொண்டவரிடம், திருடுமுன் தனக்கு அசௌகர்யத்தை உண்டாக்கும் ஒரு செயலைச் செய்யுமாறு கோரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எதையாவது திருடவேண்டும் என்ற துடிப்புணர்வு உண்டாகும்போது, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளவேண்டும், அதனால் மிகவும் சிரமம் உண்டாகும்வரை மூச்சைப் பிடித்துவைத்திருக்கவேண்டும்.

க்ளெப்டோமேனியா என்பது, சமூகத்தில் மிகுந்த களங்கத்தை உண்டாக்கும் ஒரு குறைபாடு; இந்தப் பிரச்னையுடன் வாழ்கிறவர்களுக்கு, இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது மிகவும் சிரமம். இதற்கான சிகிச்சையால் ஒருவருக்கு முழுக் குணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாவிட்டாலும், அவர் தன்னுடைய அறிகுறிகளை இன்னும் கட்டுப்பாடானமுறையில் கையாள்வதற்கு இவை உதவும். 

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org