கற்றல் குறைபாடு

Q

கற்றல் குறைபாடு என்றால் என்ன?

A

கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை, இது மூளை விவரங்களை அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படக்கூடும். கற்றல் குறைபாடுகள் என்ற வகையின் கீழ் பலவிதமான குறைபாடுகள் உள்ளன, உதாரணமாக டிஸ்லெக்ஸியா, டிஸ்பிராக்ஸியா, டிஸ்கால்குலியா மற்றும் டிஸ்கிராபியா. இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் இணைந்து காணப்படலாம்.

குறிப்பு: கற்றல் குறைபாடுகள் உடல் சார்ந்த நோய்களாலோ மன நோய்களாலோ பொருளாதார நிலை அல்லது கலாச்சாரப் பின்னணியினாலோ உண்டாவதில்லை; கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்று அர்த்தமில்லை.

கற்றல் குறைபாடுகளின் வரையறை

அமெரிக்க அரசாங்கம் தனது 94-142 பொதுச் சட்டத்தில் வழங்கியுள்ள கற்றல் குறைபாடுகளுக்கான வரையறையை இந்தியா ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறது:

“குறிப்பிட்ட கற்றல் குறைபாடு என்பது பேசுகிற அல்லது எழுதுகிற மொழியைப் புரிந்துகொள்ளுதல் அல்லது பயன்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் அடிப்படை உளவியல் செயல்முறைகள் ஒன்றிலோ பலவற்றிலோ ஏற்படும் குறைபாடு ஆகும். இது ஒருவர் கவனித்தல், பேசுதல், வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது கணக்குப் போடுதல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சொல்லினால் குறிப்பிடப்படும் நிலைகள்: புலனுணர்வில் ஊனங்கள், மூளைக் காயம், மூளையின் குறைந்த பட்சச் செயலின்மை, டிஸ்லெக்ஸியா மற்றும் வளர்ச்சியின்போது பேச்சிழத்தல் ஆகியவை.

இந்தச் சொல் பார்வைக் குறைபாடுகள், கேட்டல் குறைபாடுகள் அல்லது இயக்கவியல் குறைபாடுகள் அல்லது மனச் சிதைவு, உணர்வு தொந்தரவுகள் அல்லது சுற்றுச் சூழல் அல்லது கலாச்சார, பொருளாதார ஏழைமை ஆகியவற்றின் காரணமாகக் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளைக் குறிப்பிடுவதல்ல.”

ஆதாரம்: (பெடரல் பதிவேடு, 1977, p. 65083) (காரந்த், 2002)

Q

எவையெல்லாம் கற்றல் குறைபாடுகள் அல்ல?

A

சில குழந்தைகள் மெதுவாகப் படிப்பார்கள், ஆனால் சிறிது காலத்தில் அவர்கள் படிக்கக் கற்றுக்கொண்டுவிடுவார்கள், தங்களுடைய கல்வி மற்றும் பிற நடவடிக்கைகளை எல்லாரையும் போல் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.  சில குழந்தைகளுக்குச் சில குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் (ஒரு புதிய மொழியை, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை அல்லது திறனைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படித்தல்) ஆர்வம் இருக்காது, அல்லது அவர்களுக்கு விளையாட்டு, பிற வெளி நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். இந்தப் பண்புகள் குழந்தையின் ஆர்வங்களைக் குறிப்பிடுகின்றன, அவற்றைக் கற்றல் குறைபாடுகள் என நினைக்கக் கூடாது.

“LDஐப் பற்றிக் களங்கம் உண்டாக்குதல், LD கொண்டவர்கள் குறைவாகவே சாதிப்பார்கள் என்கின்ற எண்ணம்  மற்றும் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவை தான் இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் கடக்க இயலாத பெரிய தடைகளாக இருக்கின்றன. LDஐக் கவனித்துச் சரிசெய்யாவிட்டால் பல லட்சம் நபர்கள் பின்தங்கிவிடக்கூடும் அவர்களுடைய சுய மதிப்புக் குறைந்துபோய் அவர்களுக்குப் பெரிய சுமையாகிவிடக் கூடும், அவர்கள் மேல் குறைந்த எதிர்பார்ப்புகளே வைக்கப்படும், அவர்கள் தங்களுடைய கனவைப் பின்பற்றி வெற்றியடைய இயலாமல் சிரமப்படுவார்கள்.“ - ஜேம்ஸ் ஹெச். வென்டார்ப்,  செயல் இயக்குநர், தேசியக் கற்றல் குறைபாட்டு மையம்

Q

கற்றல் குறைபாடுகள் எதனால் உண்டாகின்றன?

A

கற்றல் குறைபாட்டுக்கு இதுதான் காரணம் என நிபுணர்கள் எதையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. அதே சமயம் கற்றல் குறைபாட்டை உண்டாக்கக் கூடிய சில காரணிகள்:

 • வம்சாவழி: ஒரு குழந்தையின் பெற்றோருக்குக் கற்றல் குறைபாடு இருந்திருந்தால் அந்தக் குழந்தைக்கும் அதே பிரச்னை வர வாய்ப்பு உண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • பிரசவத்தின் போதும் அதன் பிறகும் ஏற்படுகிற நோய்கள்: பிரசவத்தின் போதோ அதன் பிறகோ குழந்தைக்கு ஏற்படுகிற சில நோய்களால் கற்றல் குறைபாடுகள் உண்டாகக்கூடும். மற்ற சாத்தியமுள்ள காரணிகள்: கர்ப்பமாக உள்ள ஒரு பெண் போதை மருந்துகள் அல்லது மது ஆகியவற்றை உட்கொள்ளுதல், உடல் சார்ந்த அதிர்ச்சி, கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சியின்மை, பிறக்கும்போது குழந்தையின் எடை குறைவாக இருத்தல், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே குழந்தை பிறந்துவிடுதல் அல்லது பிரசவ வலி நெடுநேரம் எடுத்தல்.
 • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அழுத்தம்: குழந்தை பிறந்தபிறகு ஏற்படுகிற ஓர் அழுத்தம் தரும் நிகழ்வு. உதாரணமாக அதிக ஜுரம், தலையில் காயம் படுதல் அல்லது போதுமான ஊட்டச்சத்து குழந்தைக்குக் கிடைக்காமல் இருத்தல் போன்றவை.
 • சுற்றுச்சூழல்: ஈயம் போன்ற நச்சுப் பொருள்கள் குழந்தை உடலில் அதிகமாகச் சேர்தல் (உதாரணமாக பெயிண்ட், செராமிக் பொருள்கள், பொம்மைகள் போன்றவற்றில் உள்ள ஈயம்)
 • உடனிருக்கும் நோய்கள்: கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குக் கவனப் பிரச்னைகள் அல்லது பெரும் இடைஞ்சலைத் தரக்கூடிய பழகு முறைக் குறைபாடுகள், செயல்பாட்டுக் குறைபாடுகள் போன்றவை வருவதற்கான ஆபத்து, சராசரியைவிட அதிகம். வாசிப்புக் குறைபாடு உள்ள குழந்தைகளில் 25 சதவிகிதம் பேர் வரை ADHD யினாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல்  ADHD இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளில் 15 முதல் 30 சதவிகிதம் பேருக்குக் கற்றல் குறைபாடும் இருப்பதாகத் தெரிகிறது.

Q

கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

ஒரு குழந்தை வழக்கமாக வளர்ச்சியடையும்போது அது சில அடிப்படையான அறிவாற்றல் மற்றும் இயந்திரவியல் திறன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாமதமோ இடைவெளியோ இருந்தால் அது கற்றல் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதற்காக நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட பல பரிசோதனைகளும் மதிப்பீடுகளும் உள்ளன. இந்தப் பரிசோதனைகளையும் மதிப்பீடுகளையும் நிபுணர்கள் நிகழ்த்தி ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதா இல்லையா என உறுதிப்படுத்துவார்கள்.

குறிப்பு: பொதுவாகப் பள்ளி செல்லும் வயதிலிருக்கும் குழந்தைகளில் 5 சதவிகிதப் பேருக்குக் கற்றல் குறைபாடு இருக்கிறது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ADHDயும் இருக்கலாம்.

குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் சற்றே மாறுபடும்.

பள்ளி செல்வதற்கு முன்: பள்ளி செல்வதற்கு முந்தைய வயதில் குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் இருக்கலாம்:

 • சாதாரணமாக மற்ற குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்கிற வயதில் (15 - 18 மாதங்கள்) பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
 • எளிய சொற்களை உச்சரித்தல்
 • எழுத்துகள் மற்றும் சொற்களை அடையாளம் காணுதல்
 • எண்கள், குழந்தைக் கவிதைகள் அல்லது பாடல்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்
 • செய்யும் வேலைகளில் கவனம் செலுத்துதல்
 • கட்டளைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுதல்
 • வேலைகளைச் செய்வதற்கு நுணுக்கமான/விரிவான இயக்கவியல் திறன்களைப் பயன்படுத்துதல்

தொடக்கப்பள்ளி: இந்த வயதில் உள்ள குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் ஏற்படலாம்:

 • எழுத்துகளையும் ஒலிகளையும் இணைத்தல்
 • ஒரே மாதிரி ஒலிக்கிற அல்லது இயைபுத்தன்மை கொண்ட சொற்களிடையே வித்தியாசம் காணுதல்
 • துல்லியமாக வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது எழுதுதல்
 • எது வலது, எது இடது என வித்தியாசம் காண இயலாமல் சிரமப்படுதல். உதாரணமாக இவர்கள் 25ஐ 52 என நினைக்கலாம், “b” ஐ “d” என நினைக்கலாம், “on” ஐ “no” என நினைக்கலாம் , “s” ஐ “5” என நினைக்கலாம்
 • எழுத்துகளை அடையாளம் காணுதல்
 • கணக்குகளைப் போடும் போது சரியான கணிதச் சின்னங்களைப் பயன்படுத்துதல்
 • எண்கள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ளுதல்
 • புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல்; அதே வயதில் உள்ள மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் குழந்தை மெதுவாகக் கற்றுக்கொள்ளக்கூடும்
 • பாடல்கள் அல்லது பதில்களை மனப்பாடம் செய்தல்
 • நேரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்
 • கை - கண் ஒருங்கிணைப்பு, தொலைவு அல்லது வேகம் ஆகியவற்றைக் கணிக்க இயலாமல் இருத்தல், அதனால் விபத்துகளைச் சந்தித்தல்
 • நுணுக்கமான இயக்கவியல் திறன்கள் தேவைப்படும் வேலைகளைச் செய்தல், உதாரணமாகப் பென்சிலைப் பிடித்தல், ஷூ லேஸ் கட்டுதல், சட்டைக்குப் பட்டன் போடுதல் போன்றவை
 • தங்களுடைய சொந்தப் பொருள்களான எழுதுபொருள்கள்  போன்றவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுதல்

நடுநிலைப்பள்ளி: இந்தக் குழந்தைக்குப் பின்வருவனவற்றில் சிரமம் ஏற்படலாம்:

 • ஒரே மாதிரியான சொற்களுக்கு ஸ்பெல்லிங் சொல்லுதல் (sea/see, week/weak), முன் ஒட்டுகள், பின் ஒட்டுகளைப் பயன்படுத்துதல்
 • சப்தமாகப் படித்தல், எழுத்துப் பணிகள், கணிதத்தில் சொற்களால் அமைந்த கணக்குகளைப் போடுதல் (இந்தப் பிரச்னை உள்ள ஒரு குழந்தை இந்தத் திறன்கள் தேவைப்படும் வேலைகளைத் தவிர்க்கக் கூடும்)
 • கையெழுத்து (இந்தப் பிரச்னை கொண்ட குழந்தை பென்சிலை மிகவும் இறுக்கமாகப் பிடிக்கக்கூடும்)
 • தகவல்களை மனப்பாடம் செய்தல் அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருதல்
 • உடல்மொழி மற்றும் முகக்குறிப்புகளைப் புரிந்துகொள்ளுதல்
 • ஒரு கற்கும் சூழலில் உரிய உணர்வுகளைக் காட்டி எதிர்வினை ஆற்றுதல் (இந்தப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தை மிகவும் ஆவேசமாகவோ பிறரை எதிர்க்கும் விதமாகவோ நடந்துகொள்ளலாம், உணர்ச்சிகளை அதீதமாக வெளிப்படுத்தி எதிர்வினை ஆற்றலாம்)

உயர்நிலைப் பள்ளி: இந்த வயதில் உள்ள குழந்தைக்குப் பின்வரும் சிரமங்கள் ஏற்படலாம்:

 • சொற்களுக்குத் துல்லியமாக ஸ்பெல்லிங் சொல்லுதல் (இந்தப் பிரச்னை கொண்ட ஒரு குழந்தை எழுத்துப் பணியின்போது ஒரே சொல்லுக்கு வெவ்வேறு ஸ்பெல்லிங் இட்டு எழுதக் கூடும்)
 • வாசித்தல் மற்றும் எழுதுதல் பணிகள்
 • ஒரு விஷயத்தைத் தொகுத்துச் சொல்லுதல், தன்னுடைய சொந்தச் சொற்களில் திரும்பச் சொல்லுதல், புத்தியைச் செயல்படுத்திச் செய்ய வேண்டிய கணக்குகளுக்குப் பதில் அளித்தல் அல்லது தேர்வுகளின் போது அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தல்
 • மோசமான நினைவாற்றல்
 • புதிய சூழல்களுக்கு இணங்குதல்
 • அருவமான கொள்கைகளைப் புரிந்துகொள்ளுதல்
 • தொடர்ந்து ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல்: இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகள் சில வேலைகளில் கவனமே செலுத்தாமல் இருக்கலாம், சில வேலைகளில் அதீதமாகக் கவனம் செலுத்தலாம்

குறிப்பு: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் சில குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் பின்தங்கி இருக்கலாம், அதே சமயம் அவர்களுக்கு ஆர்வமுள்ள பிற துறைகளில் அவர்கள் மிகுந்த திறமையுடன் காணப்படுவார்கள். பல நேரங்களில் நாம் அந்தக் குழந்தையின் குறைபாட்டைத் தான் கவனிக்கிறோம், அதன் திறன்களைக் கண்டுகொள்வதில்லை. பெற்றோரும் ஆசிரியர்களும் ஒரு குழந்தையின் தனித்துவமான திறன்களைக் கண்டறிந்து, அதைத் தொடந்து செய்யுமாறு அந்தக் குழந்தையை ஊக்குவிப்பது அவசியம்.

Q

கற்றல் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

கற்றல் குறைபாடுகளைக் கண்டறிவது ஒரு சிக்கலான செயல்முறை ஆகும். இதில் முதற்படி அந்தக் குழந்தையின் கற்றல் குறைபாட்டை மறைக்கக் கூடிய பார்வைக் குறைபாடுகள், கேட்டல் குறைபாடுகள், பிற வளர்ச்சிக் குறைபாடுகள் அந்தக் குழந்தைக்கு உள்ளனவா என்று பரிசோதித்தல். இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் உளவியல் கல்வி மதிப்பீடு ஒன்றின் மூலம் அந்தக் குழந்தையின் கற்றல் குறைபாடு கண்டறியப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் அந்தக் குழந்தையின் கல்விச் சாதனைகள் பரிசோதிக்கப்படும், அதன் புத்திசாலித்தனமும் மதிப்பிடப்படும்.

Q

கற்றல் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்

A

கற்றல் குறைபாடுகளைச் சிகிச்சை தந்து குணப்படுத்தலாம். ஒரு குழந்தை வாசிக்க, எழுத அல்லது கற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறது என்பதை முதலில் கவனிப்பவர்கள் அதன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தான். ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு இருக்கலாம் என்று நினைத்தால், அதன் பெற்றோர் ஒரு மனநல நிபுணர் அல்லது இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை தருகிற நிபுணர் ஒருவரைச் சந்தித்து உதவி பெறலாம்.

குறிப்பு: ஒரு குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. அதன் மூலம் குழந்தைக்கு உரிய சிகிச்சை தந்து குணப்படுத்தலாம். இந்த நிலையைக் கவனிக்காமலே விட்டுவிட்டால் அந்தக் குழந்தை தன்னுடைய பிரச்னைகளைச் சமாளிக்க இயலாமல் மிகவும் சிரமப்படக்கூடும்.

அத்தகைய குழந்தைகளுக்கு மருத்துவர் அல்லது பள்ளி பின்வரும் விஷயங்களைச் சிபாரிசு செய்யக்கூடும்:

 • கூடுதல் உதவி: குழந்தை தன்னுடைய கல்வித்திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு வாசிப்பு நிபுணர் அல்லது பயிற்சி பெற்ற இன்னொரு நிபுணர் அதற்குச் சில உத்திகளைச் சொல்லித் தரலாம். இவர்கள் குழந்தைக்குப் பொருள்களை ஒழுங்காக அமைத்தல் மற்றும் வாசித்தல் ஆகிய திறன்களையும் கற்றுத் தரலாம்.
 • தனித்துவமான கல்வித் திட்டம் (IEP): குழந்தையின் பள்ளி அல்லது ஒரு விசேஷக் கல்வியாளர் குழந்தைக்கென ஒரு IEP ஐ உருவாக்கலாம். இது குழந்தைக்குப் பள்ளியில் எப்படிச் சிறப்பாகப் பாடம் கற்பிப்பது என்பதை விவரிக்கும்.
 • சிகிச்சை: கற்றல் குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து சில குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவைப்படலாம். உதாரணமாக மொழிக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்குப் பேச்சுச் சிகிச்சை உதவலாம். எழுதுவதில் பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய இயந்திரவியல் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில் சார்ந்த சிகிச்சை உதவலாம்.
 • இணை/மாற்றுச் சிகிச்சை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இசை, கலை, நடனம் போன்ற மாற்றுச் சிகிச்சைகள் பலன்தரக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையின் போது பெற்றோரும் நிபுணர்களும் குழந்தைக்குச் சில இலக்குகளை நிர்ணயிக்கவேண்டும், அந்தக் குறிப்பிட்ட சிகிச்சையின் மூலம் அந்தக் குழந்தை முன்னேறி வருகிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பிடவேண்டும். ஒருவேளை முன்னேற்றம் காணப்படாவிட்டால் அந்தக் குழந்தைக்கு உதவுவதற்கு மாற்று முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

Q

கற்றல் குறைபாடுகளைக் குணப்படுத்தும் நிபுணர்கள்

A

கற்றல் குறைபாட்டைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு ஒன்று பலவிதமான பரிசோதனைகளை நடத்துகிறது. ஒரு குழந்தைக்கு LD உள்ளது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை தருவதற்குப் பின்வரும் நிபுணர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.

குழந்தை நரம்பியல் நிபுணர்: இவர் குழந்தையின் மருத்துவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறார், குழந்தையை முழுமையாகப் பரிசோதிக்கிறார், அந்தக் குழந்தைக்கு மருத்துவப் பிரச்னைகளான ஹைப்போ தைராய்டிஸம், அதீத ஈய நச்சுத் தன்மை உடலில் சேர்ந்திருத்தல், செரிபரல் பால்சி, வில்சன் நோய், ADHD போன்றவை இல்லை என்பதை உறுதி செய்கிறார். பள்ளியிலோ வீட்டிலோ குழந்தை நடந்து கொள்ளும் விதத்தில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையும் இவர் பரிசோதிக்கிறார்.

உளவியலாளர்: இவர் குழந்தைக்குச் சில குறிப்பிட்ட புத்திசாலித்தனப் பரிசோதனைகளை நடத்துகிறார், உதாரணமாக வெக்ஸ்லரின் குழந்தைகளுக்கான புத்திசாலித்தன அளவுகோல் பரிசோதனை போன்றவை. இந்தப் பரிசோதனைகளின் மூலம் இவர் குழந்தையின் புத்திசாலித்தனச் செயல்பாடு இயல்பாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்கிறார். இதன் மூலம் குழந்தையின் கல்விச் செயல் திறனைப் பாதிக்கக் கூடிய எல்லை நிலைப் புத்திசாலித்தனச் செயல்பாடு மற்றும் மிதமான மனநிலைச் சிதைவு போன்றவை அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை இவர் உறுதி செய்கிறார்.

ஆலோசகர்: குழந்தையின் பழகுமுறையைப் புரிந்து கொள்கிறார், அதில் இருக்கக் கூடிய பிரச்னைகளைக் கண்டறிகிறார், குழந்தை பள்ளியில் சரியாகப் படிக்காமல் இருப்பதற்கு மோசமான வீட்டுச் சூழல் அல்லது பள்ளிச் சூழல் அல்லது ஏதேனும் உணவுப் பிரச்னைகள் காரணமாக இருக்குமா எனக் காண்கிறார்.

சிறப்புக் கல்வியாளர்: வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல், எழுதுதல் மற்றும் கணக்குப் போடுதல் போன்ற விஷயங்களில் குழந்தையின் செயல்திறனை மதிப்பிடுவதற்குச் சில தரமான கல்வித் தேர்வுகளை நடத்தி அந்தக் குழந்தையின் கல்விச் சாதனைகளை மதிப்பிடுகிறார். உதாரணமாக பரவலான வீச்சுச் சாதனைப் பரிசோதனை, பீபாடி தனித்துவமான சாதனைப் பரிசோதனை, உட்காக்-ஜான்சன் சாதனைப் பரிசோதனைகள், ஸ்கான்னல் எட்டுதல் பரிசோதனை, கல்வித்திட்டம் அடிப்படையிலான பரிசோதனை போன்றவை. ஒரு குழந்தையின் வயது அல்லது பள்ளியில் அது படிக்கும் வகுப்பைப் பொறுத்து, அதற்கு எந்த அளவு கல்வித் திறன் இருக்கவேண்டும் என்பதை ஊகிக்கலாம், ஒரு குழந்தை அந்த நிலையிலிருந்து இரண்டு ஆண்டுகள் கீழே இருந்தால், அதற்குக் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு இருப்பதாகச் சொல்லப்படும்.

குழந்தை மருத்துவர்: குழந்தைக்குக் கற்றல் குறைபாடு உள்ளதை மிக இளம் வயதிலேயே கண்டறிய உதவுகிறார். குழந்தை மருத்துவர் பள்ளியில் குழந்தை எப்படிப் படிக்கிறது என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும், குழந்தைக்குக் கற்றல் குறைபாடு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டால் அந்தக் குழந்தைக்கு உளவியல்-கல்விப் பரிசோதனையைச் செய்யுமாறு பெற்றோருக்கு வழிகாட்டவேண்டும். குழந்தை மருத்துவர் மாற்றுக் கல்வியின் பயனைக் குறித்து பெற்றோர் மற்றும் குழந்தையின் வகுப்பு ஆசிரியருக்கு ஆலோசனைகளையும் வழங்கக்கூடும்.

குழந்தை மனநல நிபுணர்: குழந்தைக்கு ADHD அறிகுறிகள் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்கிறார். காரணம் எல்லாவகைக் கற்றல் குறைபாடுகளுடனும் ADHD இருக்கக்கூடும். குழந்தை சரியாகப் படிக்காமல் இருப்பதற்குக் காரணமாக அமையக் கூடிய மற்ற குறைபாடுகளையும் இவர் பரிசோதிப்பார்.

தொழில் சார்ந்த சிகிச்சையாளர்: குழந்தையின் உட்காரும், நிற்கும் நிலை, அசைவுகள், பார்வை, இயந்திரவியல் ஒருங்கிணைப்பு மற்றும் கையெழுத்து ஆகியவற்றில் காணப்படும் சிரமங்களுக்குச் சிகிச்சை அளிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org