OCD என்பது விளையாட்டில்லை

OCD என்பது விளையாட்டில்லை

2013ல், நார்த் 24 காதம் என்ற திரைப்படத்தின்மூலம் மலையாளத் திரையுலகில் ஒரு புதிய காற்று பரவியது.. இந்தத் திரைப்படத்தின் நாயகர் ஹரி தீவிரச் செயல்பாட்டுப் பண்புகளைக் கொண்ட ஒரு மென்பொருள் நிரலாளர், அந்தப் பாத்திரத்தில் அருமையாக நடித்தவர் ஃபாஹித் ஃபாசில். இந்தப் படத்தில் OCD என்ற குறைபாட்டின் பெயர் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை, அதேசமயம், OCDயின் அறிகுறியாகப் பெருமளவு நம்பப்படும் ஒரு விஷயத்தை இந்தப் படம் காட்சிப்படுத்த முயன்றது: அதிகச் சுத்தமாக அல்லது நேர்த்தியாக இருப்பது. ஹரி எங்கு சென்றாலும் காகிதக் கைக்குட்டைகளைக் கையோடு கொண்டுசெல்கிறார், எந்தவோர் இருக்கையிலும் அமர்வதற்குமுன்னால் அதைத் துடைத்துத் தூய்மையாக்குகிறார். அவர் எந்தவொரு கழிப்பறைக்குள் நுழையவேண்டுமென்றாலும், அல்லது, அங்கிருந்து வெளியேறவேண்டுமென்றாலும், இன்னொருவர்தான் கதவைத் திறக்கவேண்டும், ஏனெனில், கைப்பிடிகள் அழுக்காக இருக்கலாம். அவருடைய காலை நேரப் பழக்கவழக்கங்களில் பலவிதமான தூய்மைப்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன. OCD கொண்டவர்களுக்குப் பிற மனநலக் குறைபாடுகளுடைய அறிகுறிப் பண்புகளும் இருக்கலாம் என்பதையும் இயக்குநர் ஏற்றுக்கொள்ள முயன்றுள்ளார், எடுத்துக்காட்டாக, ஹரி காரணமில்லாமல் விமானப் பயணங்களை எண்ணி அஞ்சுகிறார், இது அச்சக் குறைபாடு கொண்டவர்களிடம் பொதுவாகக் காணப்படுவதாகும்.  திரைப்படத்தின் நிறைவில், ஹரி ஒரு ரயில் பயணத்தின்போது ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக ஊழியரைச் சந்திக்கிறார், அதன்பிறகு, அவர் ஒரு நேர்விதமான மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாகக் காட்டப்படுகிறது.

முக்கியத்துவமற்ற காதல் அல்லது அதிரடிக் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள்தான் பொதுவாகப் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை அடைகிற இந்தக் காலத்தில், நார்த் 24 காதம் போன்ற திரைப்படங்கள் வெற்றிக்கான வழக்கமற்ற பாதையில் செல்வதைக் காண்பது ஆர்வமூட்டுகிற விஷயம். ஆனால், நார்த் 24 காதம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிற இன்னொரு விஷயம், மன நலத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக, OCDபோன்ற குறைபாடுகளைப் பொறுத்தவரை இந்தச் சமூகம் எந்த அளவு மதிப்பற்ற ஒரு மனநிலையைக் கொண்டிருக்கிறது என்பதுதான். OCDபற்றிய சமூகத்தின் புரிந்துகொள்ளலில் தவறான புரிந்துகொள்ளல்கள் நிறைந்திருக்கின்றன, பெரும்பாலும் தாங்கள் பார்க்கிற மற்றும் கேட்கிறவற்றின் அடிப்படையிலேயே மக்கள் இதைப்பற்றிய கருத்தை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.

முதலில், புகழ்பெற்ற ஊடகங்களில் காட்டப்படுவதுபோல் OCD என்பது வெறுமனே தூய்மை அல்லது ஒழுங்கைப்பற்றியது இல்லை. ஒருவர் தன்னுடைய அலமாரியில் ஆடைகளை வண்ணம் அடிப்படையில் அடுக்கிவைக்கிறார் என்றால், அவருக்கு OCD வந்துவிட்டதாகப் பொருள் இல்லை; எதை அணியலாம் என்று தேர்ந்தெடுப்பதில் அவர் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புகிறார் என்றுதான் பொருள். NIMHANSல் உள்ள இந்தியாவின் முதல் OCD மருத்துவமனையில் ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் YC ஜனார்தன் ரெட்டி இதுபற்றிக் கூறியது, "ஒழுங்குடன் இருப்பதற்கும் OCDயைக் கொண்டிருப்பதற்கும் இடையிலான நுணுக்கமான கோடு எப்போது தோன்றுகிறதென்றால், ஓர் எண்ணம் அல்லது ஓர் ஒழுங்கு துயரம் தருவதாக மாறும்போதுதான். எல்லாருக்கும் கெட்ட எண்ணங்கள் வருகின்றன, ஆனால், இந்த எண்ணங்கள் சிறிது நேரம்தான் இருக்கும், அவற்றை விரட்டுவது எளிது. OCD நோயாளிகளால் இந்த எண்ணங்களை அப்படி விரட்ட இயலுவதில்லை; அந்த எண்ணம் அவர்களுக்குள் ஊடுருவிவிடுகிறது." அதாவது, OCD நாள்தோறும் ஒருவருடைய தனிப்பட்ட மற்றும் அலுவல் வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்குகிறது.

வற்புறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற தீவிர எண்ணங்கள்தான் OCD குறைபாட்டின் பண்பு. வற்புறுத்தப்பட்ட செயல்பாடுகள் என்பவை, ஒருவர் திரும்பத்திரும்பச் செய்யுமாறு தூண்டப்படுகிற செயல்பாடுகளாகும், இவை பொருளற்றவை, தேவைப்படாதவை மற்றும் அதீதமானவை என்று அவருக்குத் தெரிந்திருந்தாலும், அவர் அவற்றைத் தொடர்ந்து செய்ய விரும்புவார். OCDயானது மிதமான நிலையில் தொடங்கித் தீவிரமாகப் பலவீனப்படுத்தும் நிலைவரை இருக்கலாம். OCDயின் அறிகுறிகள் சிக்கலானவை, பல வேறுபட்ட வழிகளில் அவை வெளிப்படலாம். மாசுபற்றிய தொடர் அச்சங்கள், துவைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தல் போன்றவை OCDயின் பொதுவான வெளிப்பாடுகளாக இருக்கின்றன, OCDயின் பிற பொதுவான அறிகுறிகள்: அன்றாடச் செயல்பாடுகளைப்பற்றி ஐயப்படுதல், அதீதமாகச் சரிபார்த்தல் அல்லது திரும்பச்செய்தல், சேதப்படுத்துதல் மற்றும் தீவிரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுதல், நிந்தித்தல், பாலியல் எண்ணங்கள், மூட நம்பிக்கைப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமச்சீர்தன்மை, ஒழுங்கின்மீது அதீத அக்கறை. சில OCD சூழல்களில் வற்புறுத்தப்பட்ட எண்ணுதலைக்கூடக் காண இயலுகிறது. எடுத்துக்காட்டாக, 30 வயது சதீஷ் ஒரு வங்கிக் காசாளர், ரூபாய் நோட்டுகளை எண்ணி வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்குமுன்னால், தான் அவற்றைச் சரியாக எண்ணவில்லையோ என்ற ஐயம் அவருக்கு வரும், இந்த ஐயத்தால் அவர் துன்பப்பட்டார். ஆகவே, சதீஷ் திரும்பத்திரும்ப நோட்டுகளை எண்ணிக்கொண்டே இருப்பார், இதைப்பார்த்துக் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் அவருடைய மெதுவான வேலையைச் சுட்டிக்காட்டிக் கத்தினார்கள், செயல்திறனில்லாமல் பணியாற்றியதற்காக வங்கி மேலாளர் அவருக்கு ஒரு புகார்க்குறிப்பை அனுப்பத் தீர்மானித்தார். OCDயின் இன்னொரு பண்பு, ஊடுருவும் எண்ணங்கள், ஒரு குறிப்பிட்ட நோய் தனக்கு வந்துவிடுமோ என்கிற காரணமற்ற அச்சத்தில் தொடங்கி, மரணத்துக்குப்பிறகு என்ன நடக்கிறது என்பதைப்பற்றித் தொடர்ந்து சிந்திப்பதுவரை இந்த எண்ணங்கள் பலவிதமாக இருக்கலாம். இதனால் அவதிப்படுகிறவர் இந்த எண்ணங்களிலிருந்து ஓர் ஆசுவாசத்தைத் தொடர்ந்து தேடுகிறார், இந்த எண்ணங்கள் தானாக உண்டாக்கப்படுவதில்லை என்பது அவருக்கு இன்னும் அதிக அழுத்தத்தைத் தருகிறது.

OCD என்பது ஸ்கிஜோஃப்ரெனியாவைவிட அல்லது இருதுருவக் குறைபாட்டைவிட அதிகம் காணப்படுகிறது, மக்கள்தொகையில் சுமார் 1-3% பேரை இது துன்புறுத்துகிறது1. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான OCD வடிவங்கள் உள்ளன, இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள், ஆகவே, இது கண்டறியப்படுவதே இல்லை. அதேசமயம், அவர்களில் 1% பேருக்குத் தீவிர OCD வடிவம் உள்ளது, அது அவர்களை ஆற்றலிழந்தவர்களாக உணரச்செய்யலாம். அத்துடன், பொதுவாக நம்பப்படுவதைப்போலின்றி, OCDயானது குழந்தைகளிடமும் பொதுவாகக் காணப்படுகிறது, நான்கு வயதுக் குழந்தைகளைக்கூட இது பாதிக்கலாம் என்கிறார் டாக்டர் ரெட்டி. இளைஞர்கள் OCDயைப்பற்றி NIMHANSஐச் சேர்ந்த டாக்டர் ஜெய்சூர்யா TS நடத்திய ஓர் ஆய்வில்2  100 குழந்தைகளில் ஒருவருக்கு OCD அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை குறிப்பிடத்தக்க அளவு சிரமங்களைத் தரக்கூடும், ஏனெனில், ஓர் எண்ணம் எதார்த்தமற்றது என்பதை உணராமல் அவர்கள் அதையே தொடர்ந்து சிந்திக்கக்கூடும், அதனால் அதைப்பற்றிப் பேசாமலிருக்கக்கூடும். இதில் நல்ல செய்தி, OCDயைக் குணப்படுத்தலாம் என்பதுதான்; NIMHANSல் சிகிச்சை பெற்றவர்களில் 70% பேர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்கள், அவர்களில் சுமார் பாதிப் பேருக்குச் சிகிச்சைக்குப்பிறகு குறைந்தபட்ச அறிகுறிகளே உள்ளன, அல்லது, அறிகுறிகளே இல்லை, இப்போது அவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் ரெட்டி. இந்தச் சிகிச்சையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) தீவிர எண்ணங்கள் காணப்படும் முறையை மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, அவ்வாறு செய்வதன்மூலம் பழகுமுறையில் மாற்றத்துக்கு வழிவகுக்கிறது. தீவிரச் சூழல்களில் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த மருந்துகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டால், பிரச்னை திரும்ப வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது, பாதிக்கப்பட்டவர் பல ஆண்டுகளுக்குச் சிகிச்சையைத் தொடரவேண்டியிருக்கலாம்.

அதேசமயம், மிகவும் அதிர்ச்சியளிக்கிற விஷயம், சமூகத்தினர் அன்றாட உரையாடல்களில் OCDயைப்பற்றி மிகவும் மதிப்பற்ற ஒரு பேச்சைக் கொண்டுள்ளார்கள், இதனால் இந்த நோய் தன்னுடைய உண்மையான பொருளையே இழக்கும் நிலையில் உள்ளது. ஒருவர் தன்னுடைய மேசை ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை விரும்பினால், 'எனக்குக் கொஞ்சம் OCD உண்டு' என்கிறார். உண்மையில், அவர் தன்னுடைய மேசை ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை விரும்பக் காரணம், அவருக்கு அது பிடித்திருக்கிறது என்பதுதான். மேசையை ஒழுங்குபடுத்தும்போது, மக்களுக்கு மனநிறைவான உணர்வு கிடைக்கிறது. அது அவர்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் முடக்குவதில்லை. அதேசமயம், OCD பாதிப்பு கொண்ட ஒருவருடைய வாழ்க்கையில் தீவிர எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன, அந்த எண்ணங்கள் சொல்லும்படி நடக்கவேண்டும் என்கிற ஒரு வற்புறுத்தும் துடிப்பு அவருக்கு இருக்கிறது. ஆகவே, OCD கொண்டவர்கள் பூட்டுகளை அடிக்கடி பரிசோதிக்கலாம், அல்லது, பொருட்களை ஒரு குறிப்பிட்டவகையில் ஒழுங்குபடுத்தலாம், இப்படி அவர்கள் ஒரு வேலையைத் திரும்பத்திரும்பச் செய்யலாம், ஆனால், அப்படிச் செய்வதால் அவர்கள் எந்த மகிழ்ச்சியையோ மன நிறைவையோ பெறுவதில்லை.

OCD மிகத் தீவிரமான ஒரு பிரச்னை என்பதால்தான், இழந்த வருவாய் மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் 'உலகை மிகவும் முடக்கிப்போடுகிற பத்து நோய்கள்'3 பட்டியலில் அதனைச் சேர்த்திருக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. உண்மையில், OCDயுடன் வாழ்தல் மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கலாம், இதனால் அவதிப்படுகின்ற சிலர் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்ததாக, அல்லது தற்கொலைக்கு முயன்றதாகக்கூடத் தெரியவந்துள்ளது.

ஆகவே, OCD என்பது வெறும் ஆளுமைப் பிரச்னை என்று நினைப்பதை மக்கள் நிறுத்தவேண்டும். OCD ஒரு மனநலக் குறைபாடு, அது தீவிரமாக ஒருவரைப் பலவீனமாக்கக்கூடும்; அதைப் புரிந்துகொண்டு பச்சாத்தாபம் காட்ட இயலாவிட்டாலும், அதனால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்களைக் கேலிக்கூத்தாக்குவதையாவது மக்கள் நிறுத்தலாம்.

OCDக்கான சுய உதவிப் புத்தகங்கள்:

  • ஜெஃப்ரெ எம். ஸ்க்வார்ட்ஜ் எழுதிய பிரெயின் லாக்
  • OCD பயிற்சிப்புத்தகம்: தீவிரச் செயல்பாட்டுக் குறைபாட்டிலிருந்து விடுபடுவதற்கான கையேடு, 3ம் பதிப்பு பேப்பர்பேக், எழுதியவர்:புரூஸ் எம். ஹைமன்
  • பார்வைகள்:

    1 http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3243905/

    2 http://www.ncbi.nlm.nih.gov/pubmed/14689261

    3 http://www.bmj.com/content/348/bmj.g2183

    *பெயர் மாற்றப்பட்டுள்ளது

    இந்தக் கட்டுரை, NIMHANSல் உள்ள OCD மருத்துவமனை பதிப்பித்த OCD நோயாளித் தகவல் சிற்றேட்டிலிருந்து தகவல்களைப் பயன்படுத்தியுள்ளது.

    Related Stories

    No stories found.
    logo
    வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
    tamil.whiteswanfoundation.org