ஸ்கிஜோஃப்ரெனியாவுடன் வாழ்தல்

ஸ்கிஜோஃப்ரெனியா வந்தால், அதோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பொருளில்லை!

எழுதியவர்: டாக்டர் சபீனா ராவ்

ஸ்கிஜோஃப்ரெனியா என்பது எல்லாருக்கும் வருகிற பொதுவான ஒரு பிரச்னை அல்ல. ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருக்கிறது என்றால், அவரும் அவருடைய குடும்பத்தினரும் அதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் சிரமப்படக்கூடும். பெரும்பாலான நேரங்களில், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர் மருந்து சாப்பிடத் தொடங்கியவுடன், இது கட்டுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், சிலர் எவ்வளவுதான் மருந்து சாப்பிட்டாலும், இந்தப் பிரச்னை முழுவதுமாக குணமாவதில்லை. இது ஒருவருடைய தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது. இதனைப் பார்க்கும் குடும்பத்தினர் வருந்துகிறார்கள், 'இவர் முன்பைப்போல் இல்லையே' என்று வருந்துகிறார்கள்.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வந்த தனிநபர்களும் சரி, குடும்பங்களும் சரி, பெரும் சவால்களைச் சந்திக்கிறார்கள். இவர்களைச் சமூகமும் புரிந்துகொள்வதில்லை என்பதால், பிரச்னை மேலும் பெரிதாகிவிடுகிறது. ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்துள்ளது என்றால், தன்னுடைய அடையாளம் போய்விட்டது என்று அவர் கருதக்கூடும்.

ஸ்கிஜோஃப்ரெனியா வந்தவருடைய மனம், முன்புபோல் வேகமாக வேலை செய்வதில்லை. அவருடைய உடலும், முன்புபோல் அனிச்சையாக இயங்குவதில்லை, குறிப்பாக, அவர் சாப்பிடும் மருந்துகள் அவரை மிகவும் மெதுவாகச் செயல்படச்செய்கின்றன. இந்தக் காரணங்களால், பாதிக்கப்பட்டவர் தன்னூக்கம் இல்லாமல் சிரமப்படக்கூடும்.

இந்தக் குறைபாடு கொண்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கவலைகொள்ளவேண்டியதில்லை, அவர்களுக்கொரு நல்லசெய்தி: இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை உண்டு, கடந்த பத்தாண்டுகளில் இந்தச் சிகிச்சைகள் வெகுவாக மேம்பட்டுள்ளன. இவற்றால் பெரும்பாலானோர் நன்கு பலன் பெறுகிறார்கள். அதேசமயம், தினமும் மருந்து சாப்பிடவேண்டியிருக்கிறது என்பதாலேயே, தன்னிடம் ஏதோ பிரச்னை என்பதை ஒருவர் உணரக்கூடும், அதை எண்ணி வருந்தக்கூடும். பாதிக்கப்பட்ட யாரையும் 'ஸ்கிஜோஃப்ரெனியா வந்தவர்' அல்லது 'மனநோய் கொண்டவர்' என்று அடையாளப்படுத்தக்கூடாது. ஸ்கிஜோஃப்ரெனியா என்பது அவர்களுடைய ஆளுமையின் ஒரு பகுதிதான். அதுவே அவர்களை ஆளக்கூடாது, அதற்கு அவர்கள் அனுமதிக்கக்கூடாது.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், அது கண்டறியப்படுவதற்குமுன் என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தார்களோ அதையெல்லாம் இப்போதும் இயன்றவரை செய்யவேண்டும். ஒருவேளை, இந்தக் குறைபாட்டால் அவர்களுடைய சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தால், மருந்துகள் வேலைசெய்யும்வரை காத்திருக்கவேண்டும். இந்தக் குறைபாட்டுடன் தொடர்புடைய சில குழப்பங்களை, மருந்துகள் தீர்த்துவைக்கலாம். பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதுதான் அவர்களுடைய இலக்காக இருக்கவேண்டும்.

இந்தக் குறைபாட்டுக்கு வழங்கப்படும் சில மருந்துகளால், பாதிக்கப்பட்டவருடைய எடை அதிகரிக்கலாம், வேறு சில பிரச்னைகள் வரலாம், ஆகவே, அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். ஒருவேளை அவர்கள் இதற்குமுன் உடற்பயிற்சியே செய்ததில்லை என்றாலும், இப்போது தொடங்கவேண்டும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவேண்டும். ஒருவர் ஆரோக்கியமாகத் தோன்றுகிறார், ஆரோக்கியமாக உணர்கிறார் என்றால், அவர் தன்னைப்பற்றிச் சிறப்பாக உணரக்கூடும். இவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன், 'இந்தப் பிரச்னையால் என்னைக் கட்டுப்படுத்த இயலாது' என்று தங்களுக்குத்தாங்களே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும், இதனால், அவர்களுடைய மனம் இந்தப் பிரச்னையைப்பற்றி எண்ணாமல், வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்.

ஓர் ஒழுங்கை உருவாக்குவது நல்லது. பிரச்னையின் ஆரம்பக்கட்டத்தில், சரியான நேரத்தில் எழுதல், சரியான இடைவெளிகளில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிபாரிசு செய்யப்பட்ட நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், வீட்டுவேலைகளில் உதவுதல், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தல், அதிகநேரம் தனியே இல்லாமலிருத்தல் போன்ற ஒழுங்குகளை உருவாக்கிக்கொள்ளலாம். சிலநேரங்களில், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். ஆகவே, அவர்களுடைய தினசரி ஒழுங்கில் ஒவ்வொருநாளும் குளித்தல், தன்னை நன்கு ஒழுங்குபடுத்திக்கொள்ளுதல் ஆகியவை இடம்பெறவேண்டும். இதன்மூலம் அவர்கள் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் தோன்றுவார்கள்.

அவர்களுடைய நிலை ஓரளவு குணமானபிறகு, அவர்கள் வேலைக்குத் திரும்பலாம் என்று மனநல நிபுணர் தெரிவித்தபிறகு, அவர்கள் வேலைக்குச் செல்லத்தொடங்கலாம், அப்போது, அவர்கள் தங்களுடைய வேலைகளைக் கவனித்தபடி, மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் செய்கிற ஓர் ஒழுங்கை உண்டாக்கவேண்டும். இந்தக் குறைபாடு கொண்டவர்களுடைய தினசரி வேலைகள் மற்றவர்களுடைய தினசரி வேலைகளைப்போலவேதான் இருக்கும், ஒரே வித்தியாசம், இவர்கள் கூடுதலாக மருந்துகளைச் சாப்பிடவேண்டும்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எது நிஜம், எது பொய் என்கிற குழப்பம் வரும்போது, அவர்களுக்கு உதவக்கூடிய சில குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் தினமும் சரியான நேரத்தில் மருந்து சாப்பிட நினைவுபடுத்தும்படி தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கேட்கலாம். அதன்பிறகு, அது அவர்களுக்குப் பழகிய ஒன்றாகிவிடும்.

பாதிக்கப்பட்டவருக்கு இந்தப் பிரச்னை வருவதற்குமுன்னால் அவர் பார்த்தவேலை, இப்போது மிகவும் அழுத்தம் தருவதாக இருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்கள் அழுத்தம் குறைவான ஒரு வேலைக்கு மாறுவது நல்லது. அதை எண்ணி அவர்கள் மனம் வருந்தவேண்டியதில்லை. ஏனெனில், இது அநேகமாக ஒரு தாற்காலிகமான மாற்றம்தான். அவரால் அதிக அழுத்தத்தைக் கையாள இயலும் என்ற நிலை ஏற்படும்போது, அவர் தனது பழைய வேலைக்குத் திரும்பலாம். இப்போதெல்லாம் பல வேலைகளில் இரவு நேர ஷிஃப்ட்கள் உள்ளன. அதுபோன்ற வேலைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்குப் பொருந்தாது. இந்தப் பிரச்னையிலிருந்து குணமாவதற்கும், சரியான மனநிலையில் தொடர்ந்து இருப்பதற்கும் நல்ல தூக்கம் அவசியம்.

ஸ்கிஜோஃப்ரெனியாவுடன் வாழுகிற ஒருவர், முன்பைவிட மிகவும் ஒழுங்கைக் கடைப்பிடிக்கவேண்டியிருக்கும். இதற்குமுன் எப்போதும் அவர்கள் தாங்களே செய்துகொண்டிருந்த சில வேலைகளைச்செய்வதற்கு, இப்போது பிறருடைய உதவியை நாடவேண்டியிருக்கலாம். பாதிக்கப்பட்டவர் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால்தான், அதைக்கடந்து முன்னேற இயலும். அதேசமயம், இந்த உண்மையை ஒப்புக்கொள்வதால், அவர் இந்தக் குறைபாட்டால் வெல்லப்பட்டுவிட்டார் என்று பொருள் இல்லை, இந்தக் குறைபாடுதான் அவர் என்று ஆகிவிடாது, அது அவரைக் கட்டுப்படுத்தாது.

அவரைச் சுற்றியுள்ளவர்கள், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கவனிக்கலாம், சிறிதுகாலத்துக்கு அவர் அவராக இல்லை என்பதைக் கவனிக்கலாம். உண்மையில் அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர் அதை எண்ணிக் கவலைகொள்ளவேண்டியதில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை யாரிடம் சொல்வது, யாரிடம் சொல்லக்கூடாது என்பதை அவர்தான் தீர்மானிக்கவேண்டும். சிலர் உண்மையிலேயே அவர்மீது அக்கறை காட்டுவார்கள், உதவ முன்வருவார்கள், அவர்களிடம் நடந்ததைச் சொல்லலாம். அல்லது, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத்தவிர வேறு யாருக்கும் இதைச் சொல்வதில்லை என்று தீர்மானிக்கலாம். இது முழுக்கமுழுக்க பாதிக்கப்பட்டவருடைய இஷ்டம்தான்.

தான் எப்படி உணர்கிறோம் என்பதைப்பற்றி அவர் தொடர்ந்து தன்னுடைய மனநல நிபுணரிடம் பேசிவரவேண்டும். நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தப்பிரச்னை கொண்ட ஒருவரும், இதையேதான் செய்வார்: தொடர்ந்து மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசிவருவார். மற்ற பிரச்னைகளைப்போலவே, இந்தப்பிரச்னை கொண்டவர்களும் சில நேரங்களில் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார்கள், ஆனால், அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. அதை அவர்கள் தங்களுடைய மனநல நிபுணரிடம் தெரிவிக்கவேண்டும்.

ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பதைக் கண்டறிந்தால், அதை அவரால் எளிதில் ஏற்றுக்கொள்ளவும் இயலாது, புறக்கணிக்கவும் இயலாது. ஆனால், மெதுவாக ஏற்றுக்கொள்ளதான் வேண்டும், ஒவ்வொரு நாளும் சின்னச்சின்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், அவர்களுடைய தைரியமும், அவர்களது அன்புக்குரியவர்களின் தைரியமும் இந்தவிஷயத்தில் அவர்களுக்கு உதவும், அதன்மூலம் அவர்கள் முன்னேறலாம், தங்களால் இவ்வளவுதான் இயலும் என்ற தடைகளை மீறிச்செல்லலாம்.

டாக்டர் சபீனா ராவ் NIMHANS மனநலத்துறையில் சிறப்பு நிலை மனநல நிபுணர்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org