குறைபாடுகள்

நார்க்கோலெப்சி

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

நார்க்கோலெப்சி என்றால் என்ன?

A

நார்க்கோலெப்சி என்பது, ஒருவர் தூங்குதல், விழித்து எழுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற மூளைப்பகுதியைப் பாதிக்கும் ஒரு நரம்பியல் குறைபாடு ஆகும். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பகல் நேரத்தில் மிகவும் தூக்கக் கலக்கமாக உணர்வார்கள், தங்களையும் அறியாமல் இவர்கள் தூங்கிவிடக்கூடும்.

இதில் முக்கியமான விஷயம் இப்படித் தூக்கம் வரும்போது இவர்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும்சரி, அதையும் மீறி இவர்கள் தூங்கிவிடுவார்கள். உதாரணமாக ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அல்லது சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அல்லது வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதேகூட தூங்கத் தொடங்கிவிடலாம், அது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

இந்தக் குறைபாடு ஒரு தீவிரமான பிரச்னை ஆகும், அதே சமயம் இதனால் பாதிக்கப்பட்டுள்ள பலர், தங்களுக்கு இப்படி ஒரு பிரச்னை உள்ளது என்பதையே அறிவதில்லை.

அதே சமயம் இந்தப் பிரச்னை ஒருவருக்கு வந்திருப்பதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளைக் கொடுத்து வாழ்க்கைமுறை மாற்றங்களை வலியுறுத்தினால் அவர்கள் நிலைமையைச் சமாளித்து ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ இயலும்.

சிலர் நாள் முழுக்கச் சோர்வாகவோ, தூக்கம் வருவது போலவோ உணர்வார்கள். அவர்களுக்கெல்லாம் நார்க்கோலெப்சி பிரச்னை இருக்கிறது என்று பொருள் இல்லை. அவர்களுடைய பிரச்னைக்கு வேறு தூக்கக் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம், அவர்களுக்கு வேறு மனநலப் பிரச்னைகள் இருக்கலாம், அல்லது அவர்கள் சரியாகத் தூங்காமல் இருக்கலாம்.

ஆகவே இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டாலே அவர்களுக்கு நார்க்கோலெப்சி வந்திருக்கிறது என்று  தீர்மானித்துவிடாமல் உரிய மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது. குறிப்பாகச் சொல்வதென்றால் பல நாள்களுக்குத் தூக்கக் கலக்கமாகவே உணர்கிறவர்கள் உடனடியாக இதற்கான நிபுணரைச் சந்திக்கவேண்டும்.

Q

நார்க்கோலெப்சியின் அறிகுறிகள் என்ன?

A

நார்க்கோலெப்சியின் முக்கிய அறிகுறிகள்:

அதீத பகல்நேரத் தூக்கம்: நார்க்கோலெப்சியின் முக்கியமான அறிகுறி பகல் நேரத்தில் தூக்கக் கலக்கமாக உணர்வதுதான். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் முந்தையநாள் நன்றாகத் தூங்கியிருப்பார்கள், ஆனாலும் மறுநாள் களைப்பாக உணர்வார்கள். இதனால் அவர்கள் தூங்கி எழுந்தவுடனே மீண்டும் தூங்கச் செல்லவேண்டும்போல் உணரலாம், அப்படியே மறுபடி தூங்கினாலும் சிறிதுநேரம் கழித்து எழுந்தபிறகு மீண்டும் களைப்பாக உணரலாம், இவ்வாறு எவ்வளவுதான் தூங்கினாலும் களைப்புக் குறையவில்லை, தூக்கக் கலக்கம் குறையவில்லை என்கிற நிலைதான் நார்க்கோலெப்சியின் ஒரு முக்கியமான அறிகுறி.

கேட்டப்ளக்ஸி: இந்தப் பாதிப்புக் கொண்டவர்களால் அவர்களுடைய உடலின் ஏதாவது ஒரு தசையைக்  கட்டுப்படுத்த இயலாமல் போகிறது. உதாரணமாக அவர்களுடைய பேச்சுக் குழம்பலாம், அவர்களுடைய மூட்டுகள் தளர்ந்து அவர்கள் கீழே விழ நேரலாம். நார்க்கோலெப்சி பிரச்னை கொண்ட எல்லாருக்கும் கேட்டப்ளக்ஸி அறிகுறிகள் வரும் எனக்கூற இயலாது, சிலருக்கு மட்டும்  இப்படி நேர்கிறது.

மாயத்தோற்றங்கள்: சில நேரங்களில் நார்க்கோலெப்சி பிரச்னை கொண்டவர்கள் மாயத் தோற்றங்களைக் காண்கிறார்கள், குறிப்பாக அவர்கள் தூங்கப்போவதற்குச் சற்றுமுன்பாக இந்த மாயத்தோற்றஙகள் தெரிகின்றன, ஆகவே அவர்கள் அந்த மாயத்தோற்றங்கள் நிஜம்தானோ என்று கலங்குகிறார்கள், மிகவும் பயப்படுகிறார்கள்.

ஞாபகமறதி: நார்க்கோலெப்சி பிரச்னை கொண்டவர்கள் அவ்வப்போது தூங்கிவிடுகிறார்கள், அல்லது அரைத் தூக்க நிலையிலிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பார்த்த, கேட்ட விஷயங்களை அவர்களால் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ள இயலுவதில்லை.

தூக்கத்தில் உணர்வின்மை: சில நேரங்களில் நார்க்கோலெப்சி பிரச்னை கொண்டவர்கள் தூங்கப்போகும்போது அல்லது விழித்து எழும்போது ஓரிரு நிமிடங்களுக்கு அவர்களால் உடலை அசைக்க இயலுவதில்லை அல்லது பேச இயலுவதில்லை. சிறிது நேரத்திற்குள் இந்தப் பிரச்னை சரியாகிவிடுகிறது, அந்த நேரத்தில் அவர்களுடைய சுவாசம் பாதிக்கப்படுவதில்லை, என்றாலும் அந்தச் சில நிமிடங்கள் அவர்கள் மிகுந்த பயத்தில் ஆழ்ந்துவிடக்கூடும்.

உங்களுக்குத் தெரிந்த யாராவது இந்த அறிகுறிகளால் சிரமப்படுவதை நீங்கள் பார்த்தால் அவர்களுக்கு நார்க்கோலெப்சி பிரச்னை இருக்கலாம் என்று புரியவையுங்கள், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள்.

Q

நார்க்கோலெப்சி எதனால் ஏற்படுகிறது?

A

நார்க்கோலெப்சி இந்தக் காரணத்தால்தான் ஏற்படுகிறது என்று இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. அதே சமயம் சில மரபணுக் காரணங்களால் மூளையில் உள்ள ஹைப்போகிரட்டின் என்ற வேதிப்பொருள் உற்பத்தியாவது  குறையும்போது இந்தப் பிரச்னை வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹைப்போகிரட்டின்தான் ஒருவர் தூங்குவது, விழித்தெழுவது போன்ற செயல்களை ஒழுங்குபடுத்துகிறது. ஆகவே இந்த வேதிப்பொருள் ஒருவரிடம்  குறைவாகச் சுரக்கும்போது அவர்கள் தீடீரென்று விழித்திருக்கும் நிலையிலிருந்து தூங்கும் நிலைக்குச் சென்றுவிடலாம், அல்லது தூங்கும் நிலையிலிருந்து சட்டென்று விழித்தெழலாம்.

நினைவிருக்கட்டும், நார்க்கோலெப்சிக்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று, இதுமட்டுமே நார்க்கோலெப்சிக்கான காரணம் என்று சொல்லிவிட இயலாது.

Q

நார்க்கோலெப்சிக்குச் சிகிச்சை பெறுதல்

A

நார்க்கோலெப்சி பிரச்னையை முழுமையாகக் குணப்படுத்தும் தீர்வு இதுவரை கண்டறியப்படவில்லை. அதே சமயம் மருந்துகள், சில வாழ்க்கைமுறை மாற்றங்களால் இந்தப் பிரச்னை கொண்ட ஒருவர் நிலைமையைச் சமாளிக்கலாம். உதாரணமாக அவர்கள் பகல் முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காகச் சில மருந்துகள் அவர்களுக்குத் தரப்படலாம், மனச் சோர்வைப் போக்கும் ஆன்ட்டிடிப்ரசன்ட் மருந்துகள்மூலம் அவரது கேட்டப்ளக்ஸி, மாயத்தோற்றங்கள் மற்றும் தூக்கத்தில் உணர்வின்மை ஆகியவை கட்டுக்குள் வரலாம்.

மருந்துகளோடு வாழ்க்கைமுறை மாற்றங்களும் நார்க்கோலெப்சியின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. உதாரணமாக தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கச் செல்வது, குறிப்பிட்ட மணி நேரங்கள் தூங்குவது என ஓர் ஒழுங்கை அமைத்துக் கொள்ளுதல், பகல் நேரத்தில் அவ்வப்போது சிறிதுநேரம் தூங்கி எழுவது ஆகியவற்றின்மூலம் ஒருவர் பகல் நேரத்தில் எப்போதும் தூக்கக் கலக்கத்தில் இல்லாமல் விழிப்போடு செயல்படலாம்.

பகல் நேரத்தில் ஒருவர் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதற்காக அவர் தன் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளைத் தினமும் செய்யவேண்டும், மது, புகையிலை, கஃபைன் உள்ள பானங்களை அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.

Q

நார்க்கோலெப்சி பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

பெரும்பாலான பொதுமக்களுக்கு நார்க்கோலெப்சியைப்பற்றி எதுவும் தெரிந்திருக்காது, ஆகவே யாராவது பகல் நேரத்தில் தூக்கக் கலக்க்த்தோடு காணப்பட்டால் அவர்களைக் கேலி செய்வார்கள் அல்லது இழிவாகப் பேசுவார்கள்.

உதாரணமாக ஓர் அலுவலகத்தில் ஒருவர் பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் காணப்படுகிறார் அல்லது திடீரென்று தன்னையும் அறியாமல் தூங்கிவிடுகிறார் என்றால் அதை அவர் தெரிந்தே செய்யும் தவறு என்று பிறர் நினைத்துவிடக்கூடும், அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதோ, அதனால்தான் அவர் அப்படித் தூக்கக் கலக்கத்தோடு இருக்கிறார் அல்லது தூங்கிவிடுகிறார் என்பதோ அவர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆகவே சக ஊழியர்கள் இவரைப்பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பேசக்கூடும்.

நார்க்கோலெப்சி பிரச்னை கொண்ட ஒருவரை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள் என்றால் அவர்களிடம் மிகவும் ஆதரவாக நீங்கள் பேசவேண்டும், இந்த நிலையைப்பற்றி அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும், 'நீங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்தால் இதனைச் சரிசெய்துவிடலாம்' எனச் சொல்லி ஊக்கம் தரவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு மது, புகையிலைப் பழக்கம் இருந்தால் அல்லது அவர்கள் கஃபைன் உள்ள பானங்களை அடிக்கடி அருந்தினால், இதையெல்லாம் நிறுத்திவிடும்படி அவர்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள். அவர்களுடைய நிலையை நீங்கள் புரிந்துகொள்வதாகவும், அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைச் சொன்னால் அதைக் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் அடிக்கடி சொல்லிப் புரியவையுங்கள், மருந்துகளோடு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் காட்டும் ஆதரவுதான் ஒருவரை விரைவில் குணமாக்கும்.

Q

நார்க்கோலெப்சியைச் சமாளித்தல்

A

நார்க்கோலெப்சி பிரச்னையைச் சமாளிப்பது ஒரு பெரிய சவால்தான். அதே சமயம் சில மாற்றங்களின்மூலம் இந்தக் குறைபாடு கொண்டவர்கள் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ இயலும்.

முதலில் அவர்கள் தங்களுடைய பிரச்னையைப்பற்றித் தங்களுடைய அலுவலகம் அல்லது பள்ளி அல்லது கல்லூரியில் உள்ள மற்றவர்களுடன் பேசவேண்டும். அப்போதுதான் அவர்கள் பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தோடு காணப்பட்டாலோ அல்லது திடீரென்று தூங்கிவிட்டாலோ மற்றவர்கள் அவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொள்வார்கள், அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பதுபற்றிய ஒரு தெளிவான திட்டத்தை அவர்கள் இணைந்து உருவாக்க இயலும்.

இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்குச் சிறிதளவு தூக்கம் வந்தால்கூட அவர்கள் வண்டி ஓட்டுவது போன்ற ஆபத்தான வேலைகளைச் செய்யக்கூடாது. ஒருவேளை வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தூக்கம் வருவது போல் தோன்றினால் சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டுச் சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு அதன்பிறகு வண்டியைத் தொடர்ந்து ஓட்டுவது நல்லது.

இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம், அப்போதுதான் அவர்களுடைய சுறுசுறுப்பு அதிகரிக்கும், தூக்கக் கலக்கம் குறையும்.

இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு மது அருந்துதல், புகையிலை போன்ற பழக்கங்கள் இருந்தால், அவர்கள் அதை உடனே நிறுத்திவிடவேண்டும், நிக்கோட்டின் கலந்த எந்தப்பொருளையும் அவர்கள் உட்கொள்ளக்கூடாது.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு மருத்துவர்கள் ஏதாவது ஒரு சிகிச்சைத் திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தால் அதனைக் கவனமாகப் பின்பற்றவேண்டும், ஒரு வேளை அறிகுறிகளில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அல்லது பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org