கற்பனையும் உண்மையும்

குறுகிய கால உளவியல் குறைபாட்டை மருந்துகள் மற்றும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்

மீனாட்சி, மனோகர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) லட்சியத் தம்பதிகள். இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தினார்கள், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் வளர்ந்து, நல்ல வேலைக்குச் சென்றான்,  அவனுக்குச் சிறந்த பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். மனோகருக்குத் தன்னுடைய மகன் மீது பிரியம் மிகவும் அதிகம். அவனுடைய வேலைக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நிதி விவகாரங்கள், பில்களுக்குப் பணம் செலுத்துதல் போன்ற வேலைகளைக்கூட அவரே தான் செய்வார். ஓய்வு பெற்றபிறகு தன்னுடைய மனைவிக்குச் சமையல் வேலைகளிலும் அவர் உதவத் தொடங்கினார். அவர்கள் தங்களுடைய மருமகளையும் அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சில மாதங்களில் அவர்களுடைய மருமகள் கர்ப்பிணி ஆனார், அவருக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனால் மனோகரும் மீனாட்சியும் மிகவும் மகிழ்வடைந்தார்கள், தங்களுடைய பேத்தியை அன்பாகப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

அவர்களுடைய வாழ்க்கை இனிமையாகச் சென்று கொண்டிருந்த சூழ்நிலையில், ஒரு நாள், மனோகரின் மகன் ஓர் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொன்னான். அவருக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியினைத் தந்திருக்கிறார்கள், அதற்காக அவர் குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயரவேண்டும்.

தன் மகன் வெளிநாடு செல்வதை எண்ணி மனோகர் ஒரு பக்கம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் மகனைப் பிரிந்து வாழவேண்டுமே என்ற அதிர்ச்சி அவரைத் தாக்கியது, குறிப்பாகத் தன்னுடைய பேத்தியைப் பிரிந்து வாழ்கின்ற ஒரு வாழ்க்கையை அவரால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை.

விரைவில் மனோகர், மீனாட்சியின் மகன் தன் குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றான். மனோகரும் அவருடைய மனைவியும் சில நாள்கள் சோகத்தில் இருந்தார்கள். மெல்ல மெல்ல அவருடைய மனைவி அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்து தன்னுடைய வழக்கமான வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால் மனோகரால் தன்னுடைய மகனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அவர் தொடர்ந்து கவலையுடனேயே காணப்பட்டார். ஒரு கட்டத்தில் மீனாட்சி அவரிடம் சில வினோதமான பழக்கங்களைக் கவனித்தார்.

வீட்டுக்கு யார் வந்தாலும் மனோகர் அவர்களிடம் வந்து சரளமாகப் பேசுவதில்லை, ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கத் தொடங்கினார், அவர் சரியாகத் தூங்குவதும் இல்லை.

ஒரு நாள் மனோகர் தன் மனைவியை அழைத்து 'பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் நம்மைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள், அவர்கள் நமக்கு எதிராக ஏதோ சதித் திட்டம் தீட்டுகிறார்கள்' என்று சொன்னார். இது உண்மையாக இருக்க இயலாது என்பது மீனாட்சிக்குத் தெரியும், தன் கணவர் ஏன் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார் என்று அவருக்குப் புரியவேயில்லை.

அடுத்தடுத்த நாள்களில் இந்தப் பிரச்னை இன்னும் பெரிதானது. மனோகர் எதை எதையோ கற்பனை செய்துகொண்டார், அவையெல்லாம் உண்மை என்று நம்பினார். ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சென்று 'எங்களுக்கு எதிராக ஏன் சதி செய்கிறீர்கள்' என்று சண்டை போடவும் தொடங்கினார்.

தன்னுடைய கணவர் ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது கற்பனை செய்து கொண்டு கலாட்டாவில் ஈடுபடுவதை எண்ணி மீனாட்சி மிகவும் வருந்தினார், ஒரு கட்டத்தில் மனோகர் தனது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நேரடிச் சண்டையிலேயே ஈடுபடத் தொடங்கியதும் மீனாட்சிக்கு விஷயம் தீவிரமாகிவிட்டது எனப் புரிந்தது. அவர் மனோகரைத் தங்களுடைய குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், நடந்தவற்றை அவருக்கு விளக்கினார் 'எங்களுடைய மகன் வெளிநாடு சென்றதிலிருந்து என் கணவரின் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன, அதனால் எனக்கு மிகுந்த மன அழுத்தமும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது'.

அவர்களுடைய குடும்ப மருத்துவர் நடந்த விஷயங்களைப் பொறுமையாகக் கேட்டார், பிறகு அவர்கள் ஒரு மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று ஆலோசனை சொன்னார். அந்த மனநல நிபுணர் மனோகரை முழுமையாகப் பரிசோதித்த பிறகு அவருக்குக் குறுகிய கால உளவியல் குறைபாடு வந்திருப்பதைக் கண்டறிந்தார்.

இதையடுத்து மனோகருக்கு முறையான ஆலோசனைகளும் மருந்துகளும் தரப்பட்டன, அவர் படிப்படியாக இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டார், அதன்பிறகு அவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படவே இல்லை, எல்லாரையும் போல் இயல்பாக வாழத்தொடங்கினார்.

இது ஓர் உண்மைக் கதை அல்ல, பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்து இந்தப் பிரச்னை ஒருவரை எப்படிப் பாதிக்கக் கூடும் என்று விளக்குவதற்காக மனநல நிபுணர்களின் உதவியுடன் எழுதப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நபரின் அனுபவம் அல்ல, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட எல்லாரும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று கூற இயலாது.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org