எங்களில் ஒருவருக்கு அதிக அன்பு தேவை!

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒரு குடும்ப உறுப்பினரை அக்கறையோடு கவனித்துக்கொள்ளலாம்!

அப்போது, என் மகளுக்கு வயது 20. திடீரென்று எங்கள் வாழ்க்கையே மாறிப்போனது. அவளுடைய சிறுவயதில் எந்த அசாதாரணமான நிகழ்வும் நடைபெறவில்லை; அவள் பள்ளிக்குச் சென்றாள், நன்றாகப் படித்தாள், நண்பர்களோடு சுற்றினாள். XIIம் வகுப்புத் தேர்வுகளை அவள் நன்றாக எழுதினாள், ஒரு நல்ல கல்லூரியில் அறிவியல் படிக்கச் சேர்ந்தாள்.

அப்போதுதான், பிரச்னைகள் தொடங்கின. ஆரம்பத்தில், அவள் கல்லூரியிலிருந்து வந்ததும் நேராகத் தன்னுடைய அறைக்குச் சென்றுவிடுவாள், கதவை மூடிக்கொள்வாள், இரவு உணவு நேரம்வரை வெளியே வரமாட்டாள். அப்போது, அவள் படித்துக்கொண்டிருக்கிறாள் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆகவே, அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஒருநாள், நான் எதேச்சையாக அவளுடைய அறைக்குள் சென்றேன், அது ஒரே களேபரமாக இருந்தது. துணிகள் அங்குமிங்கும் வீசப்பட்டிருந்தன, அலமாரிகள் காலியாகக் கிடந்தன. நான் அதைப் பார்த்து அதிர்ந்துபோனேன், 'என்ன ஆச்சு?' என்று அவளைக் கேட்டேன். அப்போதுதான், அவள் தன்னுடைய பயத்தை என்னிடம் சொன்னாள்: தன்னுடைய அறையில் சிப்கள் பொருத்தப்பட்டிருப்பதாக அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஓர் அரசாங்க அமைப்பு அவளுடைய ஒவ்வோர் அசைவையும் கண்டறிவதாக அவள் எண்ணினாள், அவர்கள் ஒளித்துவைத்திருக்கும் சிப்களைக் கண்டறிந்து அழிக்க முயன்றாள்.

அவள் சொன்னதைக்கேட்டு நான் மிகவும் பயந்தேன். ஆரம்பத்தில் நான் அவளைத் திட்டினேன், 'இதுபோல் அபத்தமாகப் பேசாதே' என்றேன்.

அடுத்த சில வாரங்களில், அவள் மேலும் மேலும் தனிமையை விரும்பத் தொடங்கினாள். தனக்குள் ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தாள். அவள் தன்னைக் கவனித்துக்கொள்வதை நிறுத்திவிட்டாள், கல்லூரிக்குக்கூட செல்வதில்லை. அவளுடைய தந்தை அவளிடம் பேச முயன்றார். ஆனால், அவள் அவரைக் கவனிக்கவே இல்லை. அவள் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

இரண்டு இரவுகள்முழுக்க, அவள் "ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் சிப்களை"த் தேடிக்கொண்டிருந்தாள். அவள் சரியாகச் சாப்பிடவில்லை, ஓய்வெடுக்கவில்லை. எப்போதும் இதே சிந்தனையாக இருந்தாள். இதைப்பார்த்த நாங்கள், அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லத் தீர்மானித்தோம். மருத்துவமனையில், அவளுக்கு ஸ்கிஜோஃப்ரெனியா வந்திருப்பது கண்டறியப்பட்டது. நாங்கள் அதிர்ந்துபோனோம். 

நானும் என் கணவரும் வீடு திரும்பியதும், இதைப்பற்றிப் படித்தோம். படிக்கப்படிக்க, எங்களுடைய கவலை அதிகரித்தது. எங்கள் மகள் ஒரு மாதம் மருத்துவமனையிலேயே இருந்தாள். அவள் மருத்துவமனையிலிருந்து திரும்பியபோது, முன்பைவிட நன்றாக இருந்தாள், ஆனால் சோர்ந்து காணப்பட்டாள். அவள் சாப்பிடவேண்டிய மருந்துகளை இன்னொருவர்தான் அவளுக்கு நினைவுபடுத்தவேண்டும். முன்புபோல் அவள் யாரிடமும் பேசுவதில்லை. பெரும்பாலான நேரம் சோஃபாவில் அமர்ந்தபடி TV பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த மூன்று ஆண்டுகள், என் மகள் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தாள், குறிப்பாக, அவள் மருந்துகளைச் சரியாகச் சாப்பிடாதபோதெல்லாம் இந்நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, பத்து ஆண்டுகளாகிவிட்டன. இந்த நிகழ்வால், மனநலப் பிரச்னைகளைப்பற்றிய எங்களுடைய சிந்தனையே மாறிவிட்டது. எங்கள் மகள் வாழ்நாள்முழுக்க இந்தப் பிரச்னையோடு வாழவேண்டும் என்பதை நாங்கள் சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டோம். அவளால் கல்லூரிப்படிப்பைப் பூர்த்திசெய்ய இயலாது என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம் (அவள் கல்லூரிக்குத் திரும்பச்செல்ல முயன்றாள், ஆனால், அவளால் அந்த அழுத்தத்தைத் தாங்க இயலவில்லை). [குறிப்பு: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை வந்த எல்லாரும் பள்ளி/ கல்லூரியைவிட்டு நிற்கவேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரச்னை வெவ்வேறுவிதமாக அமையலாம்.]

என் கணவருக்கு மனச்சோர்வு இருப்பது கண்டறியப்பட்டது, அவர் அதற்கான மருந்துகளை உண்டுவருகிறார். ஒருவருடைய மனநலப் பிரச்னை சில நேரங்களில் சட்டென்று 'குணமாகிவிடாது' என்பது இப்போது எங்களுக்குத் தெரிந்துவிட்டது.

இந்த நிலைமையைச் சமாளிக்க, எங்கள் வீட்டருகே உள்ள ஒரு மருத்துவமனையில் நான் தன்னார்வலராகப் பணிபுரிகிறேன். அந்த மருத்துவமனை மனநலப் பிரச்னை கொண்டோருக்குச் சிகிச்சை அளிக்கிறது. இதேபோன்ற பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு நான் உதவுகிறேன். தீவிரமான, நீண்டநாள் நீடிக்கும் மனநலப் பிரச்னைகளைக் கொண்டோரின் குடும்பங்களுக்காக நான் ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். இதுபோன்ற குழுக்களில் இணையும் குடும்பங்கள் நல்ல ஆதரவு பெறுகிறார்கள், தங்கள் பிரச்னையைப் பிறர் காதுகொடுத்துக் கேட்பதாக உணர்கிறார்கள் என்பதை நான் கவனித்துள்ளேன்.

எங்கள் மகள் வீட்டருகே உள்ள ஒரு சிறிய கடையில் வேலை செய்கிறாள், ஒரு சிறிய தொகையைச் சம்பளமாகப் பெறுகிறாள். சில நாள்களில், அவள் மகிழ்ச்சியாக இருப்பாள், சில நாள்களில் சோகமாக இருப்பாள். அவளோடு எப்போது பேசலாம், எப்போது அவளைத் தனியே விட்டுவிடவேண்டும் என்று நாங்கள் தெரிந்துகொண்டுவிட்டோம்.

அவள் தன்னுடைய வேலைகளைச் செய்வதற்கு உதவுகின்ற மருந்துகள் இருக்கின்றனவே என்று நான் மிகவும் மகிழ்கிறேன், ஒருவேளை இந்த மருந்துகள் இல்லாவிட்டால், அவள் என்னென்ன அவஸ்தைகளை அனுபவித்திருப்பாளோ, என்னால் கற்பனைகூடச் செய்ய இயலவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, அவள் மருத்துவமனைக்குச் செல்லும் அவசியம் ஏற்படவில்லை.

சில நேரங்களில், நானும் என்னுடைய மகளும் எங்கேயாவது நடந்துசெல்வோம். காரணம், அவளுக்கு உடற்பயிற்சி தேவை என்பது எனக்குத் தெரியும், அவளே நடக்கமாட்டாள், நான் அழைத்துச்சென்றால் நடப்பாள். அவ்வப்போது, அவளுடைய சகோதரனும் சகோதரியும் எங்களைப் பார்க்க வருவார்கள். அவர்கள் அவளுடன் கலகலப்பாகப் பேசுவார்கள், அவளை ஷாப்பிங்குக்கோ திரைப்படத்துக்கோ அழைத்துச்செல்வார்கள். ஆக, எங்கள் குடும்பம் எல்லாரையும்போன்றதுதான், எங்களில் ஒருவருக்குமட்டும், மற்றவர்களைவிட அதிக அன்பு தேவை!

இது ஒருவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்த சம்பவம், இதனை அவருடைய அனுமதியுடன் பதிவு செய்தவர், டாக்டர் சபீனா ராவ், NIMHANS மனநலத்துறையில் சிறப்பு நிலை மனநல நிபுணர். சம்பந்தப்பட்டோரைப் பாதுகாப்பதற்காக, அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org