தீவிரச் செயல்பாட்டுக் குறைபாடு (OCD)

Q

தீவிரச் செயல்பாட்டுக் குறைபாடு (OCD) என்றால் என்ன?

A

ஒருவர் நாள்முழுக்கப் பணியாற்றிவிட்டு இல்லத்துக்குத் திரும்புகிறார், தூங்கச் செல்கிறார், அப்போதுதான் அவருக்குள் திடீரென்று ஓர் ஐயம் எழுகிறது, அவர் தன்னுடைய வீட்டின் முன் கதவைச் சாத்த மறந்துவிட்டாரோ.    அவர் பதற்றமடைகிறார், அந்தக் கதவு சாத்தப்பட்டிருக்கிறதா இல்லையா எனச் சென்று பார்க்கிறார்.  அது சாத்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதிசெய்தவுடன் அவர் நிதானமாகிறார், படுக்கைக்குத் திரும்புகிறார்.   இந்த வழக்கமான பதற்றம் எல்லாருக்கும் நல்லதுதான்; காரணம் ஒவ்வொருவரும் தங்களுடைய சூழலைப்பற்றிக் கவனமாக இருப்பதை இது உறுதிசெய்கிறது.

அதேசமயம், சில நேரங்களில் இந்த எண்ணங்கள் அடிக்கடி வரலாம், தொந்தரவு தரலாம்.   இந்தப் பிரச்னை கொண்டவர்கள் கதவுக்குச் சென்று அது பூட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதிசெய்துகொண்டு படுக்கைக்குத் திரும்புகிறார்கள், ஆனால் அப்போது மீண்டும் அவர்களுக்கு அதே கவலை வரத்தொடங்குகிறது.   அவர்கள் மீண்டும் கதவருகில் சென்று அது சாத்தப்பட்டிருப்பதைச் சரிபார்க்கிறார்கள், படுக்கைக்குத் திரும்புகிறார்கள், ஆனால் அந்த கவலை இன்னும் இருக்கிறது.    இப்படித் திரும்பத் திரும்ப வருகிற எண்ணங்கள் ஒருவரை எந்நேரமும் பதற்றமாக உணரச்செய்கிறது, அதன்மூலம் அவருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது, இவற்றை மிகை எண்ணங்கள் என்பார்கள்.    மிகை எண்ணங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்; சிலர் தூய்மையைப்பற்றிய மிகை எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள், ஒரு நிமிடத்துக்குமுன்புதான் தங்களுடைய கைகளைக் கழுவியிருந்தாலும் அதில் கிருமிகள் தாக்கத்தொடங்கிவிட்டனவோ என்று இவர்கள் கவலைப்படக்கூடும். 

OCD பிரச்னை கொண்டோர் தீவிரப் பதற்றம் மற்றும் துன்பத்தை உணர்கிறார்கள்.  இந்தப் பதற்றத்தை குறைத்துக்கொள்வதற்காக அவர்கள் சில குறிப்பிட்ட வேலைகளைத் திரும்பத் திரும்ப செய்கிறார்கள், இவை வற்புறுத்தலான பணிகள் என்று கூறப்படுகின்றன. 

வற்புறுத்தலான பணிகள் OCD பிரச்னை கொண்டோருக்குத் தாற்காலிகமான நிம்மதியை அளிக்கின்றன.  தீவிரப் பிரச்னை கொண்டோரைப் பொறுத்தவரை, இந்தச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யவேண்டும் என்கிற துடிப்பானது அவர்களுடைய அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும்.  அடிக்கடி நிகழ்கிற இந்த மிகை எண்ணங்கள், அதன்பிறகு வருகிற வற்புறுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவை, ஒருவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கும் திறனைப் பாதிக்கத்தொடங்குகின்றன என்றால், அவருக்கு OCD பிரச்னை இருக்கலாம்.

Q

OCDயின் அறிகுறிகள் என்னென்ன?

A

ஒருவருடைய வற்புறுத்தலான பழக்க வழக்கங்களைக் கவனிப்பதன்மூலம் OCDஐக் கண்டறியலாம். இதற்கான அறிகுறிகளின் மிகப்பொதுவான வகைகள்: 

  • தூய்மை:  இந்த அறிகுறியைக் கொண்டவர்கள் மாசடைதலை எண்ணித் தொடர்ச்சியாக அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள், அடிக்கடி தன்னுடைய கைகளைக் கழுவுகிறார்கள், வீட்டை சுத்தப்படுத்துகிறார்கள்.  
  • ஒழுங்கு: சிலர் சமச்சீர்த்தன்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றைப்பற்றி மிகை எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பதற்றத்தைத் தணித்துக்கொள்வதற்காக அவர்கள் தங்களுடைய புத்தகங்களை, பாத்திரங்களைக் கலைத்துவிட்டு மீண்டும் அடுக்கி வைக்கக்கூடும், அல்லது கம்பளங்கள், தலையணைகள் மற்றும் குஷன்களைத் திரும்பத் திரும்ப ஒழுங்குப்படுத்தக்கூடும்.   
  • பதுக்கிவைத்தல்: இவர்கள் எதையும் தூக்கி எறிய இயலாதவர்கள்.   பழைய செய்தித்தாள்கள், துணிகள், கடிதங்கள் மற்றும் பிற பொருட்களையெல்லாம் எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் இவர்கள் சேகரித்துவைப்பார்கள்.
  • எண்ணுதல்: சிலர் தங்களுக்குச் சொந்தமான பொருட்களை, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிற பிற பொருட்களைத் திரும்பத் திரும்ப எண்ணுகிறார்கள், எடுத்துக்காட்டாக, ஒரு படிக்கட்டில் இருக்கும் படிகளின் எண்ணிக்கையை அல்லது நடந்துசெல்லும் வழியில் இருக்கும் விளக்குகளின் எண்ணிக்கையை இவர்கள் திரும்பத் திரும்ப எண்ணக்கூடும்.   இவர்கள் இந்த எண்ணிக்கையை நடுவில் விட்டுவிட்டால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து எண்ணத் தொடங்குகிறார்கள்.
  • பாதுகாப்பு: சிலர் பாதுகாப்பைப்பற்றிய காரணமற்ற அச்சங்களைக் கொண்டிருக்கிறார்கள்; கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கின்றனவா, அடுப்பு அணைக்கப்படிருக்கிறதா போன்றவற்றைத் தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

யாரிடமாவது இது போன்ற பழக்க வழக்கங்கள் காணப்பட்டால் அவர்களிடம் சென்று பேச முயலலாம், அவர்கள் உதவிக்காக ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கலாம் என்று ஊக்கப்படுத்தலாம்.     

Q

OCD எதனால் வருகிறது?

A

 OCD யை எது உருவாக்குகிறது என்பது தெளிவாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே தெரிந்துள்ள சில காரணிகள்:

  • மரபுக்காரணிகள்: சிலநேரங்களில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு OCD வரக்கூடும்.
  • உயிரியல்/நரம்பியல் காரணிகள்: சமீபத்தில் நிகழ்ந்த சில ஆராய்ச்சிகள், OCD வருதலை மூளையில் செரட்டோனின் வேதியியல் சமநிலையின்மையுடன் இணைக்கின்றன. 
  • வாழ்க்கை மாற்றங்கள்: சில நேரங்களில், ஒரு புதிய பணியில் சேர்வது அல்லது குழந்தை பிறப்பதுபோன்ற பெரிய வாழ்க்கை மாற்றங்கள் ஒருவர்மீது அதிகப் பொறுப்புகளைச் சுமத்திவிடுகின்றன.   இது OCDயைத் தூண்டலாம்.
  • பழக்க வழக்கக் காரணிகள்: சில நேரங்களில், எதையும் ஒழுங்காக, நேர்த்தியாக, கவனமாகச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறவர்களுக்கும், சிறு வயதிலிருந்தே தாங்கள்தான் எதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கும் OCD வருகிற ஆபத்து உண்டு.  
  • தனிப்பட்ட அனுபவம்: தீவிர அதிர்ச்சியைச் சந்தித்துள்ள ஒருவர் OCDயால் பாதிக்கப்படுகிற வாய்ப்பு இருக்கிறது.   எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள எலி மருந்தைத் தொடுகிறார், அதன்மூலம் அவருக்குத் தீவிரமான தோல் அரிப்பு வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இது அவரிடம் திரும்பத் திரும்பக் கையைக் கழுவவேண்டும் என்கிற வற்புறுத்தலை உண்டாக்கக்கூடும்.   

Q

OCDக்குச் சிகிச்சை பெறுதல்

A

OCDக்கான சிகிச்சை மிகவும் செயல்திறன் மிக்கதாகக் காணப்படுகிறது, இதற்குச் சிகிச்சை பெறுகிறவர்களில் பெரும்பாலானோர் முற்றிலும் குணமடைந்துவிடுகிறார்கள்.   OCDயின் தீவிரத்தன்மையைப்பொறுத்து, பலவிதமான மருந்துகளில் தொடங்கிப் பேச்சுச் சிகிச்சைகள்வரை சிகிச்சைகள் அமைகின்றன.  மிதமான பிரச்னை கொண்டவர்களுக்கு அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) போன்ற பேச்சுச் சிகிச்சைகளே போதுமானதாக இருப்பது காணப்பட்டுள்ளது.    இன்னும் தீவிரமான பிரச்சினை கொண்டவர்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன; இவர்களுடைய பதற்றத்தைத் தணிக்க உதவுவதற்காகப் பொதுவாக ஆன்ட்டி-டிப்ரஸன்ட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.  

Q

OCD பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

OCD பிரச்னை கொண்ட ஒருவருடன் வாழ்வது சில நேரங்களில் எரிச்சலைத் தரலாம்.  பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறவர் சுமையாக இருக்க முயலுவதில்லை, அவர் தன்னுடைய பதற்றத்தைத் தன்னால் இயன்றவரை சிறப்பாகச் சமாளிக்கமட்டுமே முயல்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம்.  இதுபோன்ற நேரங்களில் அவர்களிடம் உதவியைப் பெறுவதுபற்றிப் பேசுவது நல்லது; இது சவாலானதாக இருக்கலாம், இதற்குப் பொறுமை தேவை, காரணம், பெரும்பாலானோர் தங்களுக்கு உதவி தேவை என்று நம்புவதில்லை, சில நேரங்களில், OCD பிரச்னை கொண்டோர் தங்களுடைய மிகை எண்ணங்களை எண்ணி ஒருவிதமான நாண உணர்வை உணரக்கூடும்.  இதுபோன்ற நேரங்களில் அவர்கள் தங்களுடைய பிரச்னையிலிருந்து மீள்வதற்குப் பிறர் நன்கு உதவலாம்; எடுத்துக்காட்டாக அவ்வப்போது அவர்கள் தங்களுடைய அச்சங்களை சந்திக்கவேண்டும் என்று இவர்கள் ஊக்கப்படுத்தலாம்.  அதேசமயம், சிகிச்சை பெறுவதற்கான முதல் படிநிலை ஒரு தொழில் நிபுணரைச் சென்று சந்திப்பதாகத்தான் இருக்கவேண்டும்.  

Q

தன்னைத்தானே கவனித்துக்கொள்ளுதல்

A

OCDயைச் சமாளிக்க உதவுகிற ஒரு மிகச் சிறந்த வழி, தனக்கு நம்பிக்கையுள்ள ஒருவருடன் பேசுதல்.   மிகை எண்ணச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய அச்சத்தைக் குறைப்பதற்கு இது குறிப்பிடத்தக்க அளவு உதவும்.    எடுத்துக்காட்டாக, உடல் சார்ந்த நடவடிக்கைகள் ஒருவருடைய உள்ள நலனை மேம்படுத்தலாம், அவர்களுக்குத் தொந்தரவான எண்ணங்கள் வராமல் இருப்பதற்கு உதவலாம், எடுத்துக்காட்டாக, அவர்கள் ஒரு விளையாட்டில் ஈடுபடலாம்.     இந்தப் பிரச்னை உள்ளோர் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்வதற்குச் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், ஒரு மனநல நிபுணரைச் சந்தித்துப் பேசுவதுதான்.   வழக்கமான சிகிச்சையுடன், அவர் OCDயைச் சமாளிப்பதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதில் அவர்கள் மிகவும் உதவுவார்கள்.  

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org