மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள்

Q

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் என்றால் என்ன?

A

மனநலக் குறைபாடு என்று சொன்னவுடனே நம்மில் பலர் ஏதாவது ஓர் உயிரியல், மரபியல் அல்லது சுற்றுச்சூழல் காரணத்தால் மூளையின் பயன்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால்தான் பல்வேறு விதமான மனநலப் பிரச்னைகள் உண்டாகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறோம்.

உண்மையில் சில உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் அல்லது மூளைக் காயம், நரம்பு அமைப்பில் குறைபாடுகள், அறுவை சிகிச்சை, அதீதமான உடல் அல்லது மனம் சார்ந்த அதிர்ச்சி ஆகியவையும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய் அல்லது இயற்கையான மூளை நோய்க்குறி என்பது உண்மையில் ஒரு நோய் அல்ல; மூளையின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைகின்ற காரணத்தினால் ஏற்படுகிற பிரச்னைகள் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றன.

மூளையின் செல்கள் பல காரணங்களால் சேதமடையலாம். உதாரணமாக உடல் சார்ந்த காயங்கள் (ஒருவருக்குத் தலையில் பெரிதாக அடிபடலாம், பக்கவாதம் வரலாம், வேதியியல் மற்றும் நச்சுப் பொருள்களை அவர்கள் உட்கொள்ள நேரிடலாம், மூளையில் இயற்கையாகவே ஏதேனும் நோய்கள் வரலாம், போதைப் பொருள்களை அவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம், இதுபோல் இன்னும் பல காரணங்கள்) அல்லது உளவியல்-சமூகவியல் சார்ந்த காரணங்களாலும் மூளையின் செல்கள் சேதமடையலாம், உதாரணமாக ஒருவர் தீவிர இடர்ப்பாடுகளைச் சந்தித்தல், உடல் அல்லது மனரீதியில் துன்புறுத்தப்படுதல், உளவியல் ரீதியில் தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தல் போன்றவை. இந்த நிலைகளில்  உள்ளவர்களால் சிந்திக்க, விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, புரிந்துகொள்ள மற்றும் கற்றுக் கொள்ள இயலும், ஆனால் அதே சமயம் அவர்களுடைய தீர்மானம் எடுக்கும் திறன் மிகவும் மோசமாக இருக்கும்,   ஆகவே அவர்களைத் தொடர்ந்து கவனித்து வருதல் அவசியமாகும். ஒருவேளை அவர்களை யாரும் கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த நிலை இன்னும் மோசமாகி அறிகுறிகள் மேலும் தீவிரமாகக்கூடும், புதிய பிரச்னைகளைக் கொண்டுவரக்கூடும்.

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் தாற்காலிகமானவையாகவும் தீவிரமானவையாகவும் இருக்கலாம் (உதாரணம் சித்தபிரமை) அல்லது நிரந்தரமானவையாகவும் தீவிர விளைவுகளைக் கொண்டு வரக்கூடியவையாகவும் இருக்கலாம் (உதாரணமாக டிமென்சியா).

Q

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் எதனால் ஏற்படுகின்றன?

A

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் பல காரணங்களால் ஏற்படக்கூடும்.

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்களை ஏற்படுத்தக்கூடிய உடல் சார்ந்த அல்லது மருத்துவச் சூழல்கள்:

அதிர்ச்சியால் ஏற்படும் மூளைக் காயம்

 • மூளைக்குள் ரத்தக் கசிவு (இன்ட்ராசெரிபரல் ஹெமரேஜ்)
 • மூளையைச் சுற்றியுள்ள பகுதியில் ரத்தக்கசிவு (சப்ஆர்க்னாய்ட் ஹெமரேஜ்)
 • மண்டையோட்டுக்குள் ரத்தக்கட்டி உண்டாகி அது மூளைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துதல் (சப் ட்யூரல் ஹெமட்டோமா)
 • அடிபடுதல்

மூச்சுவிடும் சூழ்நிலைகள்

 • உடலில் குறைந்த ஆக்ஸிஜன்
 • உடலில் கார்பன்டைஆக்ஸைடு அளவு அதிகமாக இருத்தல்

இதயம் சார்ந்த (கார்டியோ வாஸ்குலார்) காரணங்கள்

 • பக்கவாதம்
 • பல பக்கவாதங்களால் ஏற்படும் டிமென்சியா
 • இதய நோய்த் தொற்றுகள்
 • இடைநிலை ரத்த ஓட்டத் தடைதாக்குதல் (TIA)

சிதைவுக் குறைபாடுகள்

 • அல்சைமர்ஸ் குறைபாடு
 • டிமென்சியா
 • ஹன்ட்டிங்டன் குறைபாடு
 • மல்ட்டிபில் க்ளெரோசிஸ்
 • பார்க்கின்சன்ஸ் குறைபாடு

மற்ற சூழ்நிலைகள்

 • இயற்கையான அம்னீசியா குறைபாடு: இந்தக் குறைபாடு சமீபத்திய மற்றும் நீண்ட நாளைக்கு முந்தைய ஞாபகங்களை அதிகம் பாதிக்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கும். இதனால் இவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளூம் திறன் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைகிறது.
 • சித்தபிரமை: இது ஒரு தீவிரமான ஆனால் தாற்காலிகமான பிரச்னை ஆகும். இது இயற்கையான மூளை சார்ந்த குறைபாடு ஆகும், இது ஒருவருடைய உணர்வு நிலை, கவனக்கூர்மை, புரிந்துகொள்ளுதல், சிந்தித்தல், ஞாபக சக்தி, நடந்துகொள்ளுதல் மற்றும் தூங்குதல், விழித்தல் ஆகியவற்றைப் பாதிக்கிறது.
 • மூளை நோய், சேதம் அல்லது செயல்படாத் தன்மையால் ஏற்படும் ஆளுமை மற்றும் நடந்து கொள்ளும் விதம் சார்ந்த குறைபாடுகள்.

Q

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள் என்ன?

A

ஒருவருடைய மூளையின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது, எதனால் இந்தப் பிரச்னை உண்டாகியிருக்கிறது என்பதைப் பொறுத்து மூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள் மாறும். சில பொதுவான அறிகுறிகள்:

 • ஞாபக சக்தி இழப்பு: பாதிக்கப்பட்டவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மறந்துவிடலாம், அவர்களை அடையாளம் காண இயலாமல் சிரமப்படலாம்
 • குழப்பம்: அவர்கள் குழப்பத்துடன் காணப்படலாம், தாங்கள் எங்கே இருக்கிறோம், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர இயலாமல் இருக்கலாம்
 • உரையாடல்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம்
 • பதற்றம் மற்றும் பயம்
 • எதிலும் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுதல்
 • குறுகிய கால ஞாபக இழப்பு (உதாரணமாக தாற்காலிக அம்னீசியா)
 • வழக்கமான வேலைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுதல்
 • தானே இயங்கும் தசை அசைவுகளைச் கட்டுப்படுத்தச் சிரமப்படுதல்
 • காட்சிக் குறைபாடுகள்
 • தீர்மானம் எடுத்தலில் சிரமங்கள்
 • தன்னுடைய உடலின் சமநிலையைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமங்கள் (உதாரணமாக நடக்கும்போது, நிற்கும்போது)
 • இந்தப் பிரச்னை கொண்டவர்கள் அவ்வப்போது அதீதமாகக் கோபப்படலாம், பிறர் மீது சந்தேகப்படலாம்

Q

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் எப்படிக் கண்டறியப்படுகின்றன?

A

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள், மற்ற பல மனநலக் குறைபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஆகவே மன நல நிபுணர் பல பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்து தான் இந்தப் பிரச்னை ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய இயலும்.

இதற்காக நடத்தப்படும் சில பரிசோதனைகள்:

 • மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI), இது மூளைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தைப் பரிசோதிக்கிறது
 • பாசிட்ரான் எமிசன் டோமோகிராபி (PET), இது மூளையில் எந்தப் பகுதிகள் சேதமடைந்துள்ளன என்று கண்டறியப் பயன்படுகிறது
 • செரிப்ரோஸ்பைனல் ஃப்ளூயிட் மார்க்கர்ஸ், இது பாக்டீரியா சார்ந்த மூளை நோய் போன்ற நோய்த் தொற்றுகளுக்கான அறிகுறிகளைக் கண்டறிகிறது

Q

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்க்குச் சிகிச்சை பெறுதல்

A

மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்க்கான சிகிச்சை காயத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து அமையும்  அல்லது எந்த நோயினால் இந்த நிலை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். உதாரணமாக ஒருவருக்குத் தலையில் அடிபட்டிருப்பதால் வரக்கூடிய மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் தாற்காலிகமானவை, அவர் போதுமான அளவு ஓய்வெடுத்து மருந்துகளை உட்கொண்டாலே இது குணமாகிவிடும். வேறு பல மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்களுக்கு அக்கறையான கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படும், இதுவே நல்ல சிகிச்சையாக அமையும். இதன்மூலம் இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள் தங்களுடைய நிலையைச் சமாளித்து வாழ இயலும்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பிறருடைய உதவியின்றித் தாங்களே சுதந்திரமாக வாழ்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, உதாரணமாக நடத்தலுக்கு உதவும் உடல்நலச் சிகிச்சை, தினசரி வேலைகளை மீண்டும் கற்றுக் கொண்டு செய்வதற்கான பணி சார்ந்த சிகிச்சை போன்றவை.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org