ஆர்த்தோரெக்ஸியா உண்ணல் குறைபாடு

ஆரோக்கியமாக உண்ணவேண்டும் என்கிற எண்ணமே ஒருவருக்கு ஆரோக்கியமற்ற குறைபாட்டை உருவாக்கிவிடக்கூடும், அதுதான் ஆர்த்தோரெக்ஸியா

ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன?

நம்மைச் சுற்றியிருக்கும் பலர், தாங்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையே கவனிப்பதில்லை, என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுகிறார்கள்.

வேறு சிலர் ஆரோக்கியமாகமட்டுமே சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்துடன் நல்ல, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளைத் தேடி உண்கிறார்கள்.

ஆனால், சில சமயங்களில், ஆரோக்கியமானவற்றை மட்டுமே உண்ணவேண்டும் என்கிற இந்த எண்ணமே அவர்களை ஓர் ஆரோக்கியமற்ற பிரச்னைக்குள் தள்ளிவிடுகிறது.

ஆர்த்தோரெக்ஸியா பிரச்னை கொண்டவர்கள் தாங்கள் சாப்பிடுகிற உணவின் தரமும் அளவும் மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இருப்பதிலேயே மிகவும் தூய்மையான உட்பொருள்களைக்கொண்டு சமைக்கவேண்டும் என்று எண்ணுவார்கள், எந்த அளவு சாப்பிடவேண்டும், எந்த நேரத்தில் சாப்பிடவேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கவனம் காட்டுவார்கள். இப்படிச் செய்வதன்மூலம் தாங்கள் மிகவும் சரியாக நடந்துகொள்கிறோம் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்,  மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவார்கள், அதற்குக் காரணம் தங்களுடைய 'சரியாக'ச் சாப்பிடும் பழக்கம்தான் என்று கருதத் தொடங்குவார்கள்.

சில நாள்களில், இந்த எண்ணம் அவர்களுடைய மனத்தில் மேலும் ஆழமாக வேரூன்றும், ஒருகட்டத்தில் அவர்கள் மற்ற எல்லா விஷயங்களிலும் கவனமிழக்கத் தொடங்குவார்கள், இது அவர்களுடைய வழக்கமான வேலைகளையும் சமூக உறவுகளையும் பாதிக்கத் தொடங்கும்.

சில சமயங்களில், இவர்கள் தங்களுடைய கண்டிப்பான உணவுப் பழக்கத்திலிருந்து மாறுபட்டு வேறு எதையாவது சாப்பிட்டுவிட்டால், தங்களைத் தாங்களே கடுமையாகத் தண்டித்துக்கொள்வார்கள்.

மனம் சார்ந்த நோய்களைப் பட்டியலிடுகிற மனக்குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான புள்ளிவிவரங்களை வழங்குதல் கையேடு (DSM) அல்லது நோய்களின் சர்வதேச வகைபாடு (ICD) ஆகியவற்றில் ஆர்த்தோரெக்ஸியா ஓர் அதிகாரப்பூர்வமான நோயாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், சமீப காலமாகப் பலரிடம் இந்த பிரச்னைக்கான அறிகுறிகளைக் காண இயலுகிறது.

இவர்கள் ஆரோக்கியமாக மட்டுமே உண்ணவேண்டும் என்றுதான் இந்தப் பழக்கத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் கொஞ்சங்கொஞ்சமாக இந்த ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த தீவிரத்தன்மை காட்டத் தொடங்குகிறார்கள்.

இதனால், இவர்களால் சாப்பிட முடிகிற உணவுப் பொருள்களின் எண்ணிக்கையே குறைந்துவிடும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் முழுமையாகக் கிடைக்காமல், சரியாகவும் சாப்பிடாமல் இவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துபோகிறது, எலும்புகள் பலவீனமாகின்றன, ஒட்டுமொத்த உடல் இயக்கமும் சரியத் தொடங்குகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஆரோக்கியமாக உண்ணவேண்டும் என்கிற எண்ணத்துடன் தொடங்கிய ஒரு பழக்கம், அவர்களுடைய உடலில் ஓர் ஆரோக்கியமற்ற நிலையை உண்டாக்கிவிடும்.

ஆர்த்தோரெக்ஸியாவின் அறிகுறிகள் என்ன?

ஆர்த்தோரெக்ஸியாவின் மிகப் பொதுவான அறிகுறிகள்:

  • ஆர்த்தோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் சமைத்த உணவை மட்டும்தான் உண்ணுவார்கள், மற்றவர்கள் சமைத்த உணவுகளை உண்ணாமல் தவிர்க்க முயற்சி செய்வார்கள், ஒருவேளை சாப்பிட்டாலும், அந்த உணவு அவர்களுடைய உணவுத் திட்டத்திற்குள் கச்சிதமாகப் பொருந்தவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். உதாரணமாக, இவர்கள் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றால் அங்கே தரப்படும் ஒரு துண்டு கேக்கைக் கூட வாங்கிச் சாப்பிட மறுப்பார்கள்.
  • எந்த விழாவிலாவது உணவு பரிமாறப்படும் என்று தெரிந்தால் இவர்கள் அந்த விழாவைத் தவிர்க்கத் தொடங்குவார்கள். உதாரணமாக நண்பர்களுடன் மாலை நேர உரையாடலுக்குச் செல்லுதல், உறவினர்களின் வீட்டில் ஏதாவது விழாவிற்குச் செல்லுதல் போன்றவை.
  • இவர்களைப் பொறுத்தவரை 'ஆரோக்கியமற்ற உணவை' உண்ணுகிற மற்ற எல்லாரும் மோசமானவர்கள் என்று கருதத் தொடங்குவார்கள், அவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவார்கள்.
  • இவர்கள் எந்நேரமும் தங்களுடைய உணவுப் பழக்கத்தைப்பற்றியேதான் எண்ணிக்கொண்டிருப்பார்கள், தாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைப்பற்றித் திட்டமிடுவதில் மிகுந்த நேரத்தைச் செலவிடுவார்கள்.
  • கொஞ்சங்கொஞ்சமாக, இவர்கள் அநேகமாக எல்லா உணவுகளையும் ஆரோக்கியமற்றவை என நினைக்கத் தொடங்கிவிடுவார்கள், இதனால் இவர்கள் சாப்பிட ஏற்றுக்கொள்ளக் கூடிய உணவுகளின் எண்ணிக்கை குறைந்துபோகும். ஒருகட்டத்தில், இவர்கள் தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொண்ட உணவுக் கட்டுப்பாடுகளுக்குப் பொருந்துகிற உணவுகளைக்கூட இவர்களால் ரசித்து உண்ண இயலாது.
  • எப்போதாவது, தாங்கள் ஆரோக்கியமற்றது என்று நினைக்கும் உணவைச் சாப்பிட நேர்ந்துவிட்டால், இவர்களுடைய சுயமதிப்பு வெகுவாகப் பாதிக்கப்படும், காரணம், இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் சாப்பிடும் உணவுதான் இவர்களுக்கு மதிப்பளிக்கிறது, அதில் ஏதாவது குறை நேர்ந்துவிட்டால் தங்களுடைய மதிப்பு கெட்டுப்போய்விட்டதாக எண்ணி மிகவும் பதறுவார்கள்.

குறிப்பு: இதுபோல் மிகத்தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டில் இறங்குகிறவர்களுடைய உடலில் போதுமான ஊட்டச்சத்துகள் சேர்வதில்லை, அதனால் அவர்களுடைய உடல் எடை குறைந்தாலும், வேறு பல இழப்புகளும் நேர்கின்றன, இது அவர்களுக்கு ஆரோக்கியமற்றதாகிவிடும்.

ஆர்த்தோரெக்ஸியா எதனால் ஏற்படுகிறது?

ஆர்த்தோரெக்ஸியாவிற்குக் காரணமாகப் பல சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் அம்சங்கள் அமைகின்றன.

தான் சாப்பிடும் உணவைப்பற்றியும் அதன் தரம் மற்றும் ஊட்டச்சத்தைப்பற்றியும் ஒருவர் தெரிந்துகொள்வது அவசியம். ஆனால் இன்றைய ஊடகங்களில் உணவைப்பற்றிப் பலவிதமாக வெளியாகும் விபரங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, எந்த உணவு உண்மையில் ஆரோக்கியமானது என்பதை நம்மால் சரியாக உணர இயலுவதில்லை.

இதனால், உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை உணவை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிற சூழ்நிலை ஏற்படுகிறது, இது அவர்களுடைய உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

ஒருவர் ஆர்த்தோரெக்ஸியா பிரச்னையால் பாதிக்கப்பட்டு மிகச்சில உணவுகளை மட்டுமே உண்ணத் தொடங்குகிறார் என்றால் அவர்களுடைய குழந்தைகளும் இந்தப் பழக்கத்தை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. எதிலும் தீவிரமாகச் செயல்படுகிறவர்கள், எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் போன்றோர் ஆரோக்கியமாக உண்ணவேண்டும் என்கிற ஆர்வத்துடன் தங்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முற்படும்போது அவர்களுக்கு ஆர்த்தோரெக்ஸியா பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஆர்த்தோரெக்ஸியாவிற்குச் சிகிச்சை பெறுதல்

ஆர்த்தோரெக்ஸியா பிரச்னை கொண்ட ஒருவர் தான் ஆரோக்கியமாக உண்ணுவதாக நினைக்கிறார், ஆனால் உண்மையில் அவர் தன்னுடைய உடலைப் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, அவருக்கு இதைப் புரியவைப்பது மிகவும் சிரமம், நீங்கள் அவரிடம் பேசமுயன்றால் 'நான் ஆரோக்கியமாகதான் உண்ணுகிறேன், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை' என்றுதான் அவர் சொல்வார்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் அவரிடம் பொறுமையுடன் பேசி இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை அவசியம் என்று அவருக்கு முதலில் புரிய வைக்கவேண்டும். அதன்பிறகு, அவரை ஒரு மனநல நிபுணரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை அளிக்கும் மனநல நிபுணர், முதலில் அவருக்கு ஊட்டச்சத்துகளைப்பற்றி விளக்குவார், அவருடைய இப்போதைய உணவுப் பழக்கம் எப்படி அவரது உடலைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வார், ஒரு குறிப்பிட்ட உணவு வகையை முற்றிலும் தவிர்ப்பதன்மூலம் மனித உடல் எப்படிப் பாதிக்கப்படக்கூடும் என்று விவரிப்பார்.

இதன்மூலம், ஆரோக்கியமான உணவு என்பது உண்மையில் என்ன என்பதை பாதிக்கப்பட்டவர் புரிந்துகொள்வார், அதற்கேற்பத் தன்னுடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வார்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும்போது, அவர்களுக்கு மன அழுத்தமும் பதற்றமும் உண்டாவது இயல்பு. அதுபோன்ற நேரங்களில் அவர்களை ஆலோசகர்களிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறச் செய்யலாம், அதன்மூலம் படிப்படியாக அந்த அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கலாம்.

சிகிச்சை கொஞ்சம்கொஞ்சமாக முன்னேற, இவர்கள் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்று எண்ணுவதும், எதுவும் எப்போதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று விரும்புவதும் குறையத் தொடங்கும், மெதுவாக அவர்கள் இயல்பான உணவுப் பழக்கத்திற்குத் திரும்புவார்கள்.

ஆர்த்தோரெக்ஸியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

உங்களுடைய அன்புக்குரிய ஒருவர் உணவுப் பழக்கக் குறைபாட்டினால் அவதிப்படும்போது அதைப் பார்ப்பது மிகவும் துயரமான ஓர் அனுபவம்தான். அதே சமயம் அவர்கள் அதிலிருந்து வெளிவருவதற்கு நீங்கள்தான் உதவி செய்யவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆர்த்தோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலளவிலும் மனத்தளவிலும் பிரச்னையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு விரைவில் சிகிச்சை கிடைக்கச் செய்வது அவசியம்.

அதேசமயம், நீங்கள் அவர்களிடம் சென்று இதுபற்றிப் பேசும்போது, அவர்கள் அவ்வளவு சுலபத்தில் சிகிச்சைக்குச் சம்மதித்துவிடமாட்டார்கள். காரணம், அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆரோக்கியமாகதான் உண்கிறார்கள், சொல்லப்போனால் உங்களைவிடத் தாங்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதாகதான் அவர்கள் எண்ணுவார்கள்.

அதுபோன்ற நேரங்களில் நீங்கள் பொறுமையிழக்கக்கூடாது, அவர்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் அக்கறையை விளக்கிச் சொல்லி, இந்தப் பிரச்னைக்கு அவர்கள் ஒரு நிபுணரிடம் சிசிச்சை பெறவேண்டியது அவசியம் என்று மென்மையாக வலியுறுத்துங்கள்.

சிகிச்சை தொடங்கியபிறகும், உங்களுடைய ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவை, இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், சிகிச்சை பெறுபவரைச் சுற்றியிருக்கிற எல்லாரும் நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது, எடை இழப்பு, உணவின் தரம் போன்றவற்றைப்பற்றிப் பேசாமல் இருப்பது அவசியம். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் தங்களுடைய ஆர்த்தோரெக்ஸியா பிரச்னையிலிருந்து மீள இயலும்.

ஆர்த்தோரெக்ஸியாவைச் சமாளித்தல்

ஒருவர் தனக்கு ஆரோக்கியம் என்று நினைக்கிற உணவுப் பொருள்களை உண்ணத் தொடங்கி, படிப்படியாக அவற்றைமட்டும்தான் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்திற்குள் விழும்போது, அது அவருடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுபோன்ற நேரங்களில், பாதிக்கப்பட்டவர் மிகுந்த மன மற்றும் உடல் அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்.

கவலை வேண்டாம், அவர்களுடைய பிரச்னையை முழுமையாகக் குணப்படுத்துவது சாத்தியமே.

இந்தச் சிகிச்சையின் தொடக்கத்தில், மனநல நிபுணர் அவருக்கு ஊட்டச்சத்துபற்றியும் வெவ்வேறு உணவு வகைகளில் இருக்கிற ஊட்டச்சத்துகளைப்பற்றியும் விளக்கிச் சொல்வார். அதன்பிறகு அவர் படிப்படியாக ஆர்த்தோரெக்ஸியா பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான திட்டம் ஒன்றை வகுத்துத் தருவார்.

சிகிச்சை பெறுகிறவர் இந்தத் திட்டத்தை மிகவும் கவனமாகப் பின்பற்றவேண்டியது அவசியம். அவ்வப்போது இந்தத் திட்டத்தை மீறிப் பழையபடி கடுமையான உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்கிற துடிப்பு ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர் வேறு மாற்றுச் செயல்பாடுகளில் இறங்கவேண்டும். உதாரணமாக, அவர் தன்னுடைய மனத்துக்குப் பிடித்த ஒருவருடன் சிறிது தூரம் நடந்து திரும்பலாம், ஏதாவது அரட்டை அடிக்கலாம், இதுபோன்ற பழக்கங்கள் ஆர்த்தோரெக்ஸியாவிற்குத் திரும்பும் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவும்.

சிகிச்சை பெறுகிற ஒருவருக்கு ஆர்த்தோரெக்ஸியா பழக்கத்திற்குத் திரும்பவேண்டும் என்கிற துடிப்பு ஏற்படும்போதெல்லாம், அதைச் சம்பந்தப்பட்ட மனநல நிபுணரிடம் தெரிவிப்பது அவசியம். எக்காரணங்கொண்டும் பழைய பழக்கத்திற்குத் திரும்பிவிடக்கூடாது. இதில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், நிச்சயம் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது சாத்தியமே.

பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சையளிக்கும் மனநலநிபுணர், அந்தச் சிகிச்சையின் தொடக்கத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பல விஷயங்களைக் குறிப்பிடுவார். சிகிச்சை பெறுகிறவர்கள் அதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும், அவ்வப்போது அதனை நினைவுபடுத்திக்கொண்டு, அதற்கேற்பத் தங்களது உணவுப் பழக்கங்களை அமைத்துக்கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org