குறைபாடுகள்

பார்க்கின்சன் குறைபாடு

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

பார்க்கின்சன் குறைபாடு என்றால் என்ன?

A

பார்க்கின்சன் குறைபாடு (PD) என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு சார்ந்த சிதைவுக் குறைபாடு. இந்தக் குறைபாடு மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொருள் குறைவதால் ஏற்படுகிறது. டோபமைன் தான் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே டோபமைன் இல்லாத போது பார்க்கின்சன் குறைபாட்டின் தாக்கம் தொடங்குகிறது. பார்க்கின்சன் என்பது ஒரு தீவிரமான (நீண்ட நாள் தொடரக்கூடிய) மற்றும் படிப்படியாகச் சிதைவு நிலை அதிகரிக்கக் கூடிய ஒரு குறைபாடு. அதாவது மூளையின் செல்கள் படிப்படியாகச் சிதைந்து கொண்டே வரும், காலப்போக்கில் அறிகுறிகள் மோசமாகிக் கொண்டே செல்லும். பார்க்கின்சன் குறைபாடு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றாது, அதனைக் குணப்படுத்த இயலாது.

Q

பார்க்கின்சன் குறைபாட்டுக்கான காரணங்கள் என்ன?

A

பார்க்கின்சன் குறைபாட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இந்தக் குறைபாடு சில குறிப்பிட்ட மரபு அல்லது சூழல் காரணங்களால் ஏற்படலாம் என்கிறார்கள். அதே சமயம் பார்க்கின்சன் குறைபாட்டுக்கான அறிகுறிகளும் தீவிரத்தன்மையும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

மரபுக் காரணிகள்: சில மரபணு மாற்றங்களால் பார்க்கின்சன் குறைபாடு வருகிற ஆபத்து அதிகரிக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் காரணிகள்: சில அறிவியலாளர்கள் நச்சுப் பொருள்களை உட்கொள்வதால் டோபமைனை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் பாதிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கிறார்கள்.

கூடுதல் ஆபத்துக் காரணிகள்:

  • வயது: வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை வருகிற ஆபத்து மிக அதிகம். குறிப்பாக அறுபது வயதுக்கு மேலானவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஆனால் அறுபது வயதுக்கு முன்பாகவும் இந்தக் குறைபாடு வருகிற வாய்ப்பு உண்டு.

  • பாலினம்: பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களுக்கு இந்தக் குறைபாடு வருவதற்கான  சாத்தியங்கள் சற்றே அதிகம்.

  • குடும்ப வரலாறு: ஒருவருடைய முதல் நிலை உறவினர் (தாய், தந்தை, உடன் பிறந்தோர்) பார்க்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கும் பார்க்கின்சன் குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • தலையில் காயம் படுதல்: மூளையில் தீவிரமான அதிர்ச்சியும் காயமும் ஏற்படும்போது பார்க்கின்சன் குறைபாடு உண்டாகலாம்.

Q

பார்க்கின்சன் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

ஆரம்பத்தில் பார்க்கின்சன் குறைபாட்டின் அறிகுறிகள் மிகவும் மிதமான அளவில்தான் காணப்படும், சம்பந்தப்பட்ட நபரோ அவருடைய குடும்ப உறுப்பினர்களோ இதைக் கவனிக்காமலேயே இருந்துவிடலாம். இந்த அறிகுறிகளின் எண்ணிக்கையும் அவற்றின் தீவிரத்தன்மையும் ஒருவருக்கொருவர் மாறுபடும். பார்க்கின்சன் குறைபாட்டிற்கான முக்கியமான அறிகுறிகள் இவை:

  • நடுக்கம் (நடுங்குதல் அல்லது குலுங்குதல்). இந்தக் குறைபாட்டின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்ட நபருடைய உடலில் நடுக்கமும் அதிகரிக்கும், அவருடைய தினசரிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

  • தசைகள் இறுகிக் கொள்ளும், அவற்றால் அசைய முடியாமல் போகும், இதனால் வலி ஏற்படும்.

  • இவர்களுடைய அசைவுகள் மெதுவாகும், ஒரு குறிப்பிட்ட நிலையில் நிற்பது அல்லது உட்காருவது அல்லது உடலைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்குச் சிரமப்படுவார்கள்

  • பேசுவதிலும் விழுங்குவதிலும் சிரமங்கள் ஏற்படும்

  • தசைப்பிடிப்பு அல்லது தசைகள் இழுத்துப் பிடிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், அதனால் வலி உண்டாகும்

  • எழுதுவதில் சிரமங்கள் ஏற்படும்

தூக்கம், வாசனையை முகர்தல், சிறுநீர்/மலம் கழித்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பல நரம்பியல் அமைப்புகளும் பார்க்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதை நிபுணர்கள் கவனித்துள்ளனர்.

Q

எது பார்க்கின்சன் குறைபாடு அல்ல?

A

ஒருவருக்கு வயதாக வயதாக அவருடைய ஆரோக்கியத்திலும் நலனிலும் பல மாற்றங்கள் ஏற்படும். வயதான ஒருவர் நடக்கும்போது திடீரென்று சமநிலையாக நடக்க இயலாமல் சிரமப்படலாம், அவருக்கு ஜலதோஷம் அல்லது காய்ச்சல் வந்தால் அவர் வாசனைகளை முகர இயலாமல் சிரமப்படலாம், உடலில் காயம்பட்டுக் கொண்டவர்கள் அல்லது மூட்டுவலி போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் உடலை அசைக்கச் சிரமப்படலாம். இவையெல்லாம் பார்க்கின்சன் குறைபாட்டின் அறிகுறிகள் அல்ல.

Q

பார்க்கின்சன் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

பார்க்கின்சன் குறைபாட்டைக் கண்டறிய ஒரு தனிப்பட்ட பரிசோதனை என எதுவும் இல்லை. ஆகவே இந்தக் குறைபாட்டைக் கண்டறிவது மிகவும் சிரமமாகிவிடுகிறது. மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாறைக் கவனிக்கிறார்கள், அவர்களுடைய நரம்பியல் அமைப்பைப் பரிசோதிக்கிறார்கள், அதன் அடிப்படையில் அவருக்கு பார்க்கின்சன் குறைபாடு இருக்கக்கூடும் எனத் தீர்மானிக்கிறார்கள். ஒருவருக்கு பார்க்கின்சன் குறைபாடு வந்திருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு முன்னால் மருத்துவர்கள் அவருடைய மூளையை ஸ்கேன் செய்து பார்க்கலாம் அல்லது வேறு பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்க்கலாம், இதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளை உண்டாக்கக் கூடிய வேறு எந்தப் பிரச்னையும் அவர்களுக்கு இல்லை என்பதை மருத்துவர்கள் முதலில் உறுதி செய்வார்கள், அதன்பிறகு தான் அவருக்கு பார்க்கின்சன் குறைபாடு இருக்கக்கூடும் எனத் தெரிவிப்பார்கள்.

Q

பார்க்கின்சன் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுதல்

A

பார்க்கின்சன் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட சிகிச்சைத் திட்டம் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுடைய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்கள் அந்த நிலைமையைச் சமாளிப்பதற்குத் தங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். உதாரணமாக: தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஊட்டச்சத்தான, சமநிலையான உணவை உண்ணுதல், தினமும் சரியான நேரத்திற்குத் தூங்கி, சரியான நேரத்தில் எழுதல், ஏதேனும் வேலைகளை ஏற்றுக் கொண்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டே இருத்தல் போன்றவை. சிலருக்கு சமநிலையை மேம்படுத்துதல் மற்றும் தசைகளை இழுத்தல் போன்ற பிசியோதெரபி பயிற்சியும் பயன்தரலாம். பார்க்கின்சன் குறைபாட்டால் ஒருவருடைய பேச்சு பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்குப் பேச்சுச் சிகிச்சையும் உதவும்.

Q

பார்க்கின்சன் குறைபாட்டைச் சமாளித்தல் மற்றும் பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்ளுதல்

A

ஒருவரை பார்க்கின்சன் குறைபாடு போன்ற தீவிர நோய் தாக்கும்போது அவர்கள் அதைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படுவது சகஜம். ஆகவே அவர்கள் அடிக்கடி கோபப்படலாம், எரிச்சலடையலாம், மனச்சோர்வு அடையலாம், நம்பிக்கை இழக்கலாம். அதுபோன்ற நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு அளித்து அக்கறையோடு கவனித்துக் கொண்டால் அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக அமையும். இதே போன்ற பிரச்னையைக் கொண்ட பிறரைச் சந்திப்பது, இந்தப் பிரச்னைக்கான  ஆதரவுக் குழு ஒன்றில் இணைவது போன்றவற்றின் மூலம் பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறலாம்.

Q

பார்க்கின்சன் குறைபாட்டுடன் மனச் சோர்வு

A

ஒருவர் தனக்கு பார்க்கின்சன் குறைபாடு வந்திருக்கிறது என்கிற உண்மையை ஏற்றுக் கொண்டு, அதன் அறிகுறிகளைச் சமாளிக்கப் பழகும்போது அவருக்கு மனச் சோர்வுப் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு இருக்கிறது. பார்க்கின்சன் உடன் பதற்றம் மற்றும் மனச் சோர்வு ஆகிய பிரச்னைகளும் பலரைப் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பார்க்கின்சன் குறைபாடு கொண்ட பலருக்கும் மனச் சோர்வு வருவதை நிபுணர்கள் தொடர்ந்து கவனித்துள்ளார்கள். இதற்குக் காரணம், மூளையில் எந்தப் பகுதிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றனவோ அதே பகுதிகள் தான் மன நிலை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களுக்கு மனச் சோர்வும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். பார்க்கின்சன் குறைபாடு கொண்ட ஒருவருக்கு மனச்சோர்வின் பெரும்பாலான அறிகுறிகள் ஏற்படலாம், அவர் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க இயலாமல் சிரமப்படலாம், அதனால் அவருடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படலாம். அதுபோன்ற நேரங்களில் மனச் சோர்வுக்குச் சிகிச்சை தருவது முக்கியம். காரணம், அது பாதிக்கப்பட்டவருடைய சிரமங்களைக் கட்டுப்படுத்துகிறது, அதனால் மற்ற எல்லா அறிகுறிகளையும் சமாளிப்பது எளிதாகிறது.

Q

பார்க்கின்சன் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

உங்களுடைய அன்புக்குரிய ஒருவருக்கு பார்க்கின்சன் குறைபாடு வந்திருக்கிறது என்றால் அது அவருக்கும், உங்களுக்கும், உங்களுடைய ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் வாழ்க்கையே மாற்றக்கூடிய ஓர் அனுபவம் ஆகிவிடலாம். பார்க்கின்சன் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவர் என்ற முறையில் உங்களுடைய பங்கு மிகவும் முக்கியமாகிறது, காரணம் பார்க்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்குத் தொடர்ச்சியான கவனமும் அக்கறையும் தேவை.

பார்க்கின்சன் குறைபாடு மெதுவாக வளர்ந்து கொண்டே போகும் என்பதால் இதனால் பாதிக்கப்பட்டவரை நீங்கள் பல வருடங்கள் கவனித்துக் கொள்ளவேண்டியிருக்கலாம், அதனால் உங்களுக்குச் சலிப்பும் களைப்பும் ஏற்படலாம்.

இதனால் பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுடைய உடல் மற்றும் உணர்வு நலன் பெருமளவு பாதிக்கப்படலாம். பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம், அவர்களுக்குத் தூக்கம் வராமல் போகலாம், அதனால் அவர்கள் எப்போதும் எரிச்சலுடன் காணப்படலாம். இத்துடன் பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கு மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்னைகள் வருகிற ஆபத்து அதிகம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்கள் தங்களுடைய உடல் மற்றும் உணர்வு நலனைப் பாதுகாக்க வேண்டும்.

ஒருவருக்கு பார்க்கின்சன் குறைபாடு வந்தால், அவருடைய குடும்பத்தினரும் மனநல நிபுணர் ஒருவருடன் பேசுவது நல்லது. இதன்மூலம் அவர்கள் இந்தப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளலாம், தங்களுடைய குடும்ப உறுப்பினர் அனுபவிக்கும் சிரமங்களை நன்கு புரிந்து கொள்ளலாம், அவர்களுக்குத் தேவையான ஆதரவு மற்றும் அக்கறையை வழங்கலாம்.

Q

பார்க்கின்சன் குறைபாடு பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

A

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு அசைவுகளை மட்டுமே பாதிக்கிறது.

உண்மை: பார்க்கின்சன் குறைபாடு மூளையின் பல பகுதிகளைப் பாதிக்கிறது. இதனால் இயக்கவியல் சாராத அறிகுறிகளும் காணப்படலாம். உதாரணமாக வாசனைகளை முகர இயலாமல் போதல், தூக்கக் குறைபாடுகள், அறிவாற்றல் சிரமங்கள், மலச்சிக்கல்/சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள், பாலியல் குறைபாடுகள், களைப்பு, வலி, பதற்றம் மற்றும் மனச் சோர்வு.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஐம்பதுகள் அல்லது அறுபதுகளின் முற்பகுதியில் உள்ளவர்கள். ஆனால் சுமார் 10% பேருக்கு நாற்பது வயதுக்கு முன்பாகவே பார்க்கின்சன் குறைபாடு வருகிறது.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு கொண்ட அனைவருக்கும் உடலில் நடுக்கங்கள் ஏற்படும்.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று உடல் நடுங்குதல். அதே சமயம் பார்க்கின்சன் குறைபாடு கொண்ட சிலருக்கு உடலில் எந்த நடுக்கங்களும் ஏற்படாமலே போகலாம்.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு திடீரென்று மிகத் தீவிரமாகி விடலாம்.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டின் அறிகுறிகள் நாள் முழுக்க மாறிக்கொண்டே இருக்கலாம், ஆனால் இந்தப் பிரச்னை மிக மெதுவாகத்தான் வளர்கிறது. ஒரு வேளை பார்க்கின்சன் குறைபாட்டின் அறிகுறிகள் சில நாள்கள் அல்லது சில வாரங்களில்  மிகவும் மோசமானால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். உதாரணமாக:  நோய்த் தொற்று, மருந்துகளின் பக்கவிளைவுகள், மன அழுத்தம் அல்லது வேறு உடல் நலப்பிரச்னை போன்றவை.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாட்டை மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த இயலும்.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டின் சில அறிகுறிகளை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். அதே சமயம் தொடர்ச்சியான உடற்பயிற்சி, தசைகளை வலுப்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் ஓர் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் அறிகுறிகளின் தீவிரத் தன்மையைக் குறைக்கலாம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பார்க்கின்சன் குறைபாடு கொண்டவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தென்பட்டன என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு மரபு வழியாக வருகிறது.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. சுமார் 5 – 10% சூழ்நிலைகளில் மட்டுமே இது மரபு வழியாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளும் இதற்கு முக்கிய பங்காற்றுகின்றன என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

தவறான நம்பிக்கை: பார்க்கின்சன் குறைபாடு உயிருக்கே ஆபத்தானது.

உண்மை: பார்க்கின்சன் குறைபாட்டினால் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. இந்தக் குறைபாடு கொண்டவர்களுக்கு விழுங்குவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் வருவதால் நிமோனியா போன்ற சுவாசத் தொற்றுகள் ஏற்படலாம். ஆனால் பலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதில்லை, தங்களுக்கு பார்க்கின்சன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட பிறகும் அவர்கள் பல பத்தாண்டுகள் வாழலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org