சூதாட்டப் பழக்கம் நோயாகலாம்

Q

சூதாட்டப் பழக்கமும் நோயும்

A

சூதாட்டம் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் ஒரு பழமையான மற்றும் பொதுவான பொழுதுபோக்காகும்.    அதேசமயம், சில சூதாடிகள் தங்களுடைய சூதாடும் பழக்கத்தின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும், அந்தப் பழக்க வழக்கம் அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கட்டுப்படுத்தத் தொடங்கக்கூடும்.  அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் பிற முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டுச் சூதாடுவதற்கான வாய்ப்புகளை நாடுகிறார்கள், தொடர்ந்து சூதாடுகிறார்கள்.  அவர்கள் நிறையப் பணத்தை இழந்தாலும், வெல்லுவதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே சென்றாலும் தொடர்ந்து சூதாடுகிறார்கள். அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலுவதில்லை, சூதாட்டத்தை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று பலமுறை முயன்று பார்க்கிறார்கள், ஆனால் விரைவில் மீண்டும் அதற்கே திரும்பிவிடுகிறார்கள்.    இது கிட்டத்தட்ட போதை மருந்துப் பழக்கம் கொண்டவர்கள் போதை மருந்துகளை நாடுவது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு அடிமையாகிவிடுவதைப்போல்தான்.  சூதாடும் நோய் என்பது தொடக்கத்தில் உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் ஒரு குறைபாடாக எண்ணப்பட்டது.   அதேசமயம் சூதாட்டத்துக்கும், போதைப் பொருட்களை பயன்படுத்தும் குறைபாட்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன, DSM-5 (மனநலக் குறைபாடுகளின் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு) மற்றும் ICD-10 (நோய்களின் சர்வேதேச வகைப்படுத்தல்) போன்ற முதன்மையான மனநலக் குறைபாடுகளின் வகைப்பாட்டு முறைகள் இப்போது சூதாடும் குறைபாடுகளை அடிமையாதலாக வகைப்படுத்துகின்றன.

மகிழ்ச்சிக்காகச் சூதாட செல்கிற மக்களில் சுமார் 2-3% பேர் சூதாடும் நோய்க்கு ஆளாகக்கூடிய ஆபத்தில் இருக்கிறார்கள். 

Q

சூதாடும் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

A

அதீதமாகச் சூதாடுவதில் மூன்று பாணிகள் இருக்கின்றன.   ’சூதாடும் ஆபத்தில் இருக்கிறவர்கள்’: இவர்கள் இதுவரை எந்தப் பாதகமான தாக்கத்தையும் சந்திக்கவில்லை, ஆனால் அவர்களுக்குச் சூதாடும் பிரச்னை வருவதற்கான ஆபத்துகள் அதிகரித்துள்ளன.   ’சூதாடும் பிரச்னை கொண்டோர்’: இவர்களுடைய தனிப்பட்ட, குடும்ப மற்றும் பொழுதுபோக்கு நாட்டங்களைச் சூதாடும் பழக்கம் பாதிக்கத்தொடங்குகிறது.     ’சூதாடும் நோய் கொண்டோர்': இவர்கள் சூதாடும் துடிப்பைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிக்கிறார்கள், இவர்களில் சிலர் தங்களுடைய இழப்புகளை நேர் செய்வதற்காகத் தொடர்ந்து சூதாடுகிறார்கள், அல்லது, சூதாடுதல் அவர்களுக்கு ஒரு தூண்டுதலைத் தருகிறது.    அவர்கள் அதை அதீதமாகச் செய்யும்போது அது அழிக்கின்ற ஒரு பாணியாக ஆகிவிடுகிறது.

சூதாடும் நோய் என்பது தொடர்ந்து வருவது, திரும்பத் திரும்ப வருவது.  ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டார், அல்லது சூதாடும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான சில அறிகுறிகள்:  

  • அவர்கள் எப்போதும் சூதாட்டத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் (பழைய அனுபவங்களை மீண்டும் வாழ்ந்து பார்க்கிறார்கள், அடுத்து எப்போது சூதாடலாம் என்று திட்டமிடுகிறார்கள், அதற்கான நிதிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்).
  • சூதாடும் பழக்கம் அவர்களுடைய தனிப்பட்ட உறவுகளை, நிதி நிலைமையை மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்குகிறது. 
  • அவர்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக அல்லது நிறைவில்லாத மனநிலைகளிலிருந்து (பதற்றம், குற்ற உணர்ச்சி, யாரும் தனக்கு உதவவில்லை என்கிற எண்ணம், மனச்சோர்வுபோன்ற உணர்வுகள்) விடுபடுவதற்காகச் சூதாடுகிறார்கள்
  • அவர்கள் சூதாடும் பழக்கத்தைக் குறைப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு முயல்கிறார்கள், ஆனால் அவர்களால் அதில் அதிகம் வெற்றியடைய இயலுவதில்லை.
  • தாங்கள் சூதாட்டத்துக்கு அடிமையாகியிருக்கிறோம் என்பதைப் பிறரிடமிருந்து மறைக்க முயலுகிறார்கள்.
  • அவர்கள் சூதாட்டத்தில் நிறைய நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்கிறார்கள், அதனால் பிற முதன்மையான பொறுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.   
  • சூதாட்டத்துக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிப்பதற்காகச் சட்டத்துக்கு எதிரான வழிகளை அவர்கள் தேடத்தொடங்குகிறார்கள்.  தங்களுடைய சூதாட்டப் பழக்கத்துக்கான நிதியை வழங்குவதற்காக இவர்கள் பிறரைச் சார்ந்திருக்கத் தொடங்கிறார்கள், அடிக்கடி கடனில் விழுந்துவிடுகிறார்கள்.

Q

சூதாடும் நோய் எதனால் உண்டாகிறது?

A

மற்ற அடிமையாதல் குறைபாடுகளைப்போலவே, சூதாடும் நோயும் மரபியல், சூழலியல் மற்றும் உயிரியல் காரணிகளின் ஒரு கூட்டணியால் ஏற்படுத்தப்படுகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.    மனிதர்களுடைய மூளையில் இருக்கும் விருது பெறும் வழியின் செயல்பாட்டாலும் இது உண்டாகலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.   மனிதர்கள் எப்போதெல்லாம் தங்களை நன்றாக உணரச்செய்யும் ஒரு செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களோ, அப்போதெல்லாம் விருது பெறும் வழியானது செயலுக்கு வருகிறது, இதனால் டோபோமைன் என்ற நரம்பியல் கடத்தி வெளிவிடப்படுகிறது, அது அவர்களுக்கு மனநிறைவு உணர்வை வழங்குகிறது.    அடிமையாதல் சூழ்நிலைகளில், ஒரு போதைப்பொருளோ, சூதாடுதல் போன்ற பழக்கமோ, ஃப்ரீப்ரன்டல் கார்டெக்ஸ் என்கிற மூளையின் பகுதியை வலுவிழக்கச் செய்கிறது, இந்தப் பகுதிதான் உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.         சூதாடும் பிரச்னை கொண்ட தனி நபர்களுடைய மூளையிலிருக்கும் விருதுச் சுற்றானது அதிகம் செயலில் இருப்பதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் அவர்கள் சூதாடுதல்போன்ற பழக்கங்களை நாடுகிறார்கள், அதன்மூலம் தங்களுடைய விருது பெறும் வழிகளைத் தூண்ட எண்ணுகிறார்கள். 

Q

ஒருவருக்குச் சூதாடும் நோய் வருவதற்கான ஆபத்துக் காரணிகள் என்னென்ன?

A

சூதாடும் நோய்க்கான ஆபத்துக் காரணிகள்: குடும்ப வரலாறு, வளர்ச்சி அழுத்தம், போதைப் பொருளுக்கு அடிமையாக இருத்தல் மற்றும் வயது.   இளைஞர்களுக்கு, குறிப்பாக ‘மனோநிலையை வெளிப்படுத்துகிறவர்களுக்கு’ப் போதைப்பொருட்களுக்கோ, அடிமையாக்கும் பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகிற தொடக்க நிலைப் பிரச்னைகள் வருகிற ஆபத்து அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக இவர்களால் எதிலும் ஆர்வத்தை நீண்டநேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள இயலாது, இவர்களுடைய எண்ணங்கள் அதிக உணர்ச்சிவேகத்துடன் இருக்கும், மனோநிலையும் உணர்ச்சிவேகத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும், இவர்களுடைய இயக்கச் செயல்பாடுகள் அதீதமாக இருக்கும்.     கவனத்தில்கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம், அனைத்து அடிமையாதல் குறைபாடுகளைப்போலவே சூதாடுதலுக்கு அடிமையாகியிருக்கிறவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். 

Q

சூதாடும் நோய் எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

ஒருவருக்குச் சூதாடும் நோய் கண்டறியப்படவேண்டுமென்றால் அவரிடம் அதற்கான அறிகுறிகள் நீண்டகாலமாக இருக்கவேண்டும், ஒரு மருத்துவ நிபுணரைச் சந்திப்பதற்கு ஓராண்டு முந்தைய காலகட்டத்துக்குள் இவை நிகழவேண்டும்.  இந்தப் பிரச்னையைக் கண்டறிவதற்கு மனநல நிபுணர்கள் வடிகட்டும் கருவிகள், உளவியல் மதிப்பீடுகள் மற்றும் அந்த நபருடைய வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள்.  

Q

சூதாடும் நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள் என்னென்ன?

A

சூதாடும் நோய் என்பது நீண்டநாளைக்குத் தொடரக்கூடிய ஒரு குறைபாடாகும், இதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் வேறு பல சிக்கல்கள் உண்டாகக்கூடும். எடுத்துக்காட்டாக:  

  • மது மற்றும் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துதல்
  • தனிப்பட்ட, தொழில் சார்ந்த மற்றும் சட்டப்பிரச்னைகள் (எடுத்துக்காட்டாக, நொடித்துப்போதல்)
  • இதய அதிர்ச்சி (சூதாடுதலின் மகிழ்ச்சியால்)
  • பதற்றக் குறைபாடுகள்
  • தற்கொலைக்கு முயலுதல்

Q

சூதாடும் நோய்க்குச் சிகிச்சை பெறுதல்

A

சூதாடும் நோய்க்குச் சிகிச்சை பெறுவதுபற்றி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம், சூதாடும் பிரச்னை கொண்டவர் சிகிச்சைச் செயல்முறையுடன் இணைந்து செயல்படும்போதுதான் சிகிச்சைகள் மிகச் செயல்திறனுடன் பலன் தருகின்றன.   பொதுவாக, சூதாடும் நோய்க்கு அறிவாற்றல் பழக்க வழக்கச் சிகிச்சை (CBT), போதைப்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் குறைபாடு கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிற நீண்டகாலச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதுபோன்ற மருந்துகள் மற்றும் சுய உதவிக் குழுக்களில் பங்கேற்றல் போன்ற உளவியல் சிகிச்சைகளின் கூட்டணியால் சிகிச்சை அளிக்கப்படுகிறது.    இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதற்குச் சிகிச்சை பெறும் மக்களில் 70 சதவிகிதத்துக்குமேல் ஒரு மனநலப் பிரச்னை வரலாற்றையும் கொண்டிருக்கிறார்கள். 

Q

சூதாடும் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

தன்னுடைய அன்புக்குரிய ஒருவர் அதீதமாகச் சூதாடுகிறார் என்று யாருக்காவது கவலை ஏற்பட்டால், முதலில் அவர்கள் பிரச்னையைப் புரிந்துகொள்வது முக்கியம், அதன்பிறகுதான் அவர்களை அணுகவேண்டும், அவர்கள் உதவியை நாடவேண்டும் என்று ஊக்கப்படுத்தவேண்டும்.  அப்படி அவரிடம் சென்று தன்னுடைய கவலையைச் சொல்லும்போது, நேரம் பார்த்துப் பேசவேண்டும், ஏற்கனவே நடந்துவிட்டதைப்பற்றிப் பேசக்கூடாது, அதற்குப் பதிலாக இப்போதைய பிரச்னையைப்பற்றி மட்டுமே பேசவேண்டும், அவர்களுடைய சூதாடும் பழக்கம் அவர்களைச் சுற்றியிருக்கிறவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை விளக்கவேண்டும்.   ’நீ இதைச் செய்துதான் ஆகவேண்டும்’ அல்லது ‘நீ இதைச் செய்தே ஆகவேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளைப் பயன்படுத்தவேண்டாம்.  அவர்கள் ஒரு நிபுணரைச் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டு, அவர்களிடம் இப்படி ஒரு பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கு அவர்கள் சிகிச்சை பெறத்தொடங்கியபிறகு, உடனடியாகப் பலன்கள் இருக்கவேண்டும் என்று அவசரப்படவேண்டாம், அவர்களுடைய முயற்சிகள் வெற்றிகரமாக அமைவதற்கு நிறைய நேரம் தரவேண்டும்.      தன்னுடைய அன்புக்குரியவருடைய வலுக்கட்டாயமான சூதாடுதல் பழக்கத்துடன் தொடர்புடைய தூண்டிகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளவேண்டும்.  தூண்டி என்பது, அவர்களைச் சூதாடுவதற்கு தூண்டும் ஒரு விஷயமாகும், இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.   எடுத்துக்காட்டாக, சிலர் சூதாட்ட மையத்தின் விளம்பரத்தைப் பார்த்தவுடன் சூதாட விரும்பக்கூடும், அல்லது கையில் நிறையப் பணம் இருக்கிறது, ஆனால் அதைச் செலவழிப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் எந்த வேலையும் இல்லை என்கிற சூழலில் அவர்கள் சூதாட எண்ணக்கூடும்.    இந்தத் தூண்டிகளை அடையாளம் காணவேண்டும், தன்னுடைய அன்புக்குரியவர் இந்தத் தூண்டிகளை அடிக்கடி சந்திக்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.

Q

அன்புக்குரிய ஒருவருடைய சூதாட்டப் பிரச்னையின்போது ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்வது எப்படி?

A

  • தன்னுடைய அன்புக்குரிய ஒருவருடைய நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றத்துக்குத் தன்னை காரணமாக எண்ணிக் குற்றம் சாட்டிக்கொள்ளக்கூடாது.    இதற்கு இவர் எந்தவிதத்திலும் பொறுப்பாகமாட்டார்.
  • தன்னுடைய கவலையை நம்பகமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.   ஆலோசகர் ஒருவருடன் அல்லது சூதாட்டத்துக்கு அடிமையானவர்களைக் குணப்படுத்தும் மையத்திலிருக்கும் பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவருடன் பேசவும் அவர்கள் விரும்பலாம். 
  • தன்னுடைய அன்புக்குரிய ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகியிருப்பதால் இவருக்கு நிதி சார்ந்த அழுத்தம் உண்டாகிறது என்றால், அதுபற்றி அவர்கள் அமர்ந்து பேசவேண்டும், கலந்து பேசித் தீர்மானிக்கவேண்டும், பணத்தைக் கையாள்வதற்கான தெளிவான வரம்புகளை அமைக்கவேண்டும்.     அவருடைய அன்புக்குரியவர் தொடர்ந்து  நிதி விஷயங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், மற்ற ஏற்பாடுகளை அவர் கருத்தில் கொள்வது முக்கியமாகும், எடுத்துக்காட்டாக ஒரு தனி வங்கிக் கணக்கைத் தொடங்குவது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org