ஆளுமைக் குறைபாடுகள்

Q

ஆளுமை என்றால் என்ன?

A

உளவியல் பின்னணியில் பார்க்கும்போது, ஆளுமை என்பது, ஒரு தனிநபர் பிறருடன் எப்படித் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார், பிறருடன் எப்படிப் பழகுகிறார் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அனைத்துப் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை.

சிலரிடம் இயல்பாகவே சில குணங்கள் இருக்கும். அவை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து மரபணுக்கள்மூலம் வந்தவை. அதன்பிறகு, சுற்றுச்சூழலைப் பார்த்தும், அனுபவத்திலிருந்தும் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதனால், அவர்களிடம் ஏற்கெனவே உள்ள குணங்கள் மாறும், புதிய குணங்கள் சேரும். உதாரணமாக, சுற்றியுள்ளவர்களால் ஏற்கப்படாத விஷயங்கள், தங்களுக்கு உதவாத விஷயங்களைச் செய்யாமலிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடும். ஆக, இயற்கையான விஷயங்கள் (மரபணுக்கள்) மற்றும் வளர்ப்பு விஷயங்கள் (அனுபவங்கள் மற்றும் சுற்றுச்சூழல்) ஆகியவற்றின் கூட்டணிதான் ஒருவருடைய ஆளுமைப் பண்புகளைச் செதுக்குகிறது.

பெரும்பாலான ஆளுமைப் பண்புகள் எல்லாரிடமும் உள்ளவைதான். அளவுதான் ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லாரிடமும் உள்ள குணங்களின் அளவுகள் ஒவ்வொருவரிடமும் மாறுவதால், இந்தத் தொகுப்பே ஒருவருடைய ஆளுமை ஆகிறது.

Q

ஆளுமைக் குறைபாடுகள் என்றால் என்ன?

A

வீட்டில், பணியிடத்தில், சமூகத்தில் பிறருடன் பழகும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை ஒருவருக்குச் சொல்லித்தந்து உதவுபவை, அவருடைய ஆளுமைப் பண்புகள்தாம். வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு மாற்றங்களைச் சமாளிப்பதற்கு இந்தப் பண்புகள் உதவுகின்றன. ஆனால், சில நபர்களிடம் குறிப்பிட்ட சில பண்புகள் அதீதமாகிவிடுகின்றன, இதனால், அவர்களால் இயல்பாகச் செயல்பட இயலாமல்போகிறது, அவர்களுக்கோ அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ மிகுந்த பிரச்னைகள் வருகின்றன.

ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் பிறருடன் பழக இயலாமல் சிரமப்படலாம், அல்லது, ஒரு புதிய சூழ்நிலையில் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாமல் திணறலாம்.

ஒருவர் மாற்றங்கள் அல்லது சிரமமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த நிலைமையைச் சமாளிக்க இயலாதபடி அவருடைய சில குறிப்பிட்ட பண்புகள் தடுக்கின்றன. அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், சமூகத்தில் பிறருடன் பழக இயலாமல் சிரமப்படலாம். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் செய்கிற அல்லது சொல்கிற விஷயங்களைச் சமூகம் ஏற்காமலிருக்கலாம். எது சரி, எது தவறு, உலகம் எப்படி இருக்கவேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றி இவர்களுக்குச் சில உறுதியான சிந்தனைகள் இருக்கக்கூடும். இந்தச் சிரமங்கள் காரணமாக, இவர்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ இயலாமல் தடுமாறுகிறார்கள்.

“எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாக, நான் எந்தக் குழுவிலும் சேர்ந்தது கிடையாது. என் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், பள்ளித் தோழர்கள்... யாருடனும் நான் சேர்ந்தது கிடையாது. என்னைச் சுற்றியிருக்கிறவர்களுடன் என்னால் பழக இயலுவதில்லை. என் வாழ்க்கைமுழுவதும், என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை அன்பாகவும் அக்கறையாகவும் நடத்தியதில்லை, எனக்குக் கிடைக்கவேண்டிய அன்பைத் தந்ததில்லை. நான் என்ன சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. நான் சொல்வது சரி, அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்குத் தெரிவதில்லை, அல்லது, அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

என்னை யாரும் நேசிப்பதில்லை. என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள்... எல்லாரும் என்னை நிராகரிக்கிறார்கள், நான் பக்கத்தில் வந்தாலே விலகிச்செல்கிறார்கள்.

சில நேரங்களில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சோதனை என்று நான் உணர்கிறேன். சில நேரங்களில், உயிரோடு இருப்பது அவசியம்தானா என்று நான் சிந்திக்கிறேன்.

சில நேரங்களில், நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூட என் குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்கிறேன். அப்படிச் சொன்னால், அவர்களுக்கு என்னுடைய மதிப்பு புரியுமோ என்று நினைக்கிறேன்... ம்ஹூம், அப்போதும் அவர்கள் என் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை.

நான் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களோ, அதையெல்லாம் நான் செய்தேன், என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டால் அவர்கள் என்னை நேசிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால், அவர்கள் விரும்பியபடி மாறினேன், ஒவ்வொரு வேலையையும் எல்லாருக்கும் பிடித்தபடி செய்யவேண்டும் என்று என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. எனக்கென்று யாரும் இல்லை. நான் தன்னந்தனியாக இருக்கிறேன்."

(இது ஒரு கற்பனை விவரிப்பு. இந்தக் குறைபாடு நிஜவாழ்க்கையில் எப்படித் தோன்றும் என்பதைப் புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டது.)

Q

ஆளுமைப் பண்பு, ஆளுமைக் குறைபாடு: என்ன வித்தியாசம்?

A

ஆளுமைக் குறைபாடுகள் என்பவை, சில குறிப்பிட்ட பண்புகளால் ஏற்படுபவை அல்ல. ஆளுமைப் பண்புகள் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்களில் அந்தப் பண்புகள் வெவ்வேறு அளவுகளில் வெளிப்படும். அதாவது, ஆளுமைப் பண்புகள் எல்லாரிடமும் உண்டு. ஆனால், அவற்றின் அளவு மிகவும் அதிகமாகிவிட்டால், தீவிரமாகிவிட்டால், பிரச்னைகள் தொடங்குகின்றன.

முக்கியமான விஷயம், கலாசாரம், பின்னணியைப்பொறுத்து இது மாறுபடும்: சில கலாசாரங்களில் சில பண்புகள் ஆரோக்கியமானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படலாம், வேறு சில கலாசாரங்களில் அதே பண்புகள் ஆரோக்கியமற்றவையாக, மோசமானவையாகக் கருதப்படலாம்.

உதாரணமாக, ஒருவர் மற்றவர்களை எந்த அளவு நம்புகிறார் என்பது ஒரு பண்பு. அவருடைய சொந்த அனுபவங்கள், அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பண்பு அமைகிறது. இந்த நம்பும் பழக்கம், வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறுவிதமாக இருக்கும். சிலர் சுற்றியிருக்கிற எல்லாரையும் நம்பிவிடுவார்கள், வேறு சிலர் எல்லார்மீதும் சந்தேகப்படுவார்கள். ஆனால், பெரும்பாலானோர் இந்த இரு நிலைகளுக்கும் நடுவில் இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினரை நம்புவார்கள், ஆனால், புதியவர்களைச் சந்திக்கும்போது, கொஞ்சம் சந்தேகத்துடனே அவர்களை அணுகுவார்கள், இது ஆரோக்கியமானதுதான், இந்தப் பாதுகாப்பு உணர்வு அவர்களைக் காப்பாற்றும். இப்படி நடுவில் உள்ள மக்கள் (அதாவது, பிறர்மீது ஆரோக்கியமான அளவு அவநம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள்) வாழ்க்கையை நன்றாகச் சமாளிக்கிறார்கள், தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்கிறார்கள். அப்படியில்லாமல், எல்லாரையும் நம்பிவிடுகிறவர்கள் அடிக்கடி ஏமாற்றப்படுவார்கள், இன்னொருபக்கம்,  எல்லார்மீதும் சந்தேகப்படுகிறவர்களுக்கு நல்ல உறவுகளே அமையாது. இந்தப் பழக்கவழக்கம் தங்களுக்குச் சரிப்படவில்லை என்பது தெரிந்தாலும், இவர்களால் அதை மாற்றிக்கொள்ள இயலாது.
ஒருவருக்கு ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறது என்று தீர்மானிக்கவேண்டுமானால், தொடர்ந்து பலகாலத்துக்கு, வெவ்வேறு சூழல்களில் அவருக்குச் சில குறிப்பிட்ட பண்புகள் ஒரேமாதிரியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.

உதாரணமாக: சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் பிறரை மதிக்கவேமாட்டார்கள், தங்களுடைய வேலை நடக்கவேண்டும் அல்லது தாங்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகப் பிறரைப் பயன்படுத்திக்கொள்வார்கள், தங்களுக்குச் சாதகமாக அவர்களை வளைப்பார்கள். இப்போது, அலுவலகத்தில் மிகவும் தீவிரமாக நடந்துகொள்கிற, பிறரைத் தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய ஒருவரைக் கவனிப்போம். இவருக்குத் தான் முன்னேறவேண்டும் என்கிற துடிப்பு அதிகம். அதற்காகப் பிறரைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார். அவர் எப்போதும் குறுக்குவழியில்தான் செல்வார், மற்றவர்களைப்போல் மனசாட்சிக்குக் கட்டுப்படமாட்டார், அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முதலில், அதன்பிறகுதான் நேர்மை. ஆனால், வீட்டில் அவர் முற்றிலும் வேறுமனிதராக நடந்துகொள்ளக்கூடும்: அவர் குடும்பத்தினருடன் நன்கு பழகக்கூடும், அவர்கள்மீது அன்பு செலுத்தக்கூடும், தன்னுடைய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தக்கூடும்.

இந்தச் சூழ்நிலையில், அவர் பணியிடத்தில் நடந்துகொள்ளும்விதத்தைமட்டும் வைத்துப் பார்த்தால், அவருக்குச் சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு வந்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அப்படிச் சொல்வது துல்லியமற்ற ஒரு மதிப்பீடாகவே இருக்கும். ஒருவருக்குச் சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு வந்திருப்பதாகச் சொல்லவேண்டுமென்றால், பணியிடத்தில், வீட்டில், நண்பர்களுக்குமத்தியில், வேறு எங்கு சென்றாலும் அவர் மற்றவர்களை மதிக்காமல் இருக்கவேண்டும், அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், எதிலும் அக்கறைகாட்டாமலிருக்கவேண்டும்.

Q

ஆளுமைக் குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன?

A

பலவகை ஆளுமைக் குறைபாடுகள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் அறிகுறிகள் மாறுபடும். ஆளுமைக் குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

தொகுதி A: பொருந்தாத/ விநோதமான பழகுமுறை தொகுதி B: நாடகத்தனமான, பிழையான, உணர்ச்சிமயமான பழகுமுறை தொகுதி C: பதற்றமான அல்லது பயமான பழகுமுறை
ஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடு சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு
தவறான சந்தேக ஆளுமைக் குறைபாடு விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு சார்ந்திருக்கும் ஆளுமைக் குறைபாடு
ஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு நார்சிஸிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு (அனன்காஸ்டிக் ஆளுமைக் குறைபாடு)
  ஹிஸ்ட்ரியோனிக் ஆளுமைக் குறைபாடு  

பெரும்பாலான ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களிடம் பொதுவாகக் காணப்படும் சில அறிகுறிகள்:

 • பிறருடன் (நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்கள்) பழகுவதில் சிரமங்கள்
 • வாழ்க்கை மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள இயலாத நிலை
 • உலகம் இப்படிதான் இருக்கவேண்டும், இதை இப்படிதான் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனோபாவம்
 • உறவுகளை நீண்டநாள் ஆரோக்கியமாகக் காப்பாற்ற இயலாமலிருத்தல்
 • தங்களுடைய செயல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்க இயலாமலிருத்தல்
 • எதற்கெடுத்தாலும் மிகவும் உணர்ச்சிவயப்படுதல், அல்லது, எதிலும் பட்டும் படாமலும் இருத்தல் (குறிப்பாக, உணர்ச்சிசார்ந்த விஷயங்களில்)
 • தங்களுடைய சில நடவடிக்கைகளால் தங்களுக்கும் பிறருக்கும் பிரச்னைகள் வருகின்றன என்று தெரிந்தாலும், அவற்றை மாற்றிக்கொள்ள இயலாமலிருத்தல்

Q

ஆளுமைக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

A

ஆளுமைக் குறைபாடுகள் பல காரணங்களால் ஏற்படலாம்: மரபணுக் காரணிகள், குழந்தைப்பருவத்தில் துன்புறுத்தப்பட்ட, வன்முறை அல்லது அதிர்ச்சியைச் சந்தித்த அனுபவங்கள் போன்றவை.

உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகள் பலவும் இணைந்து, ஆளுமைக் குறைபாடுகளை உண்டாக்குகின்றன என்கிறது நவீன உயிர்உளசமூகவியல் அமைப்பு.

 • உயிரியல் காரணிகள்: இவை மூளையின் கட்டமைப்பு தொடர்பானவை, ஒருவருடைய மூளையிலிருந்தும் மூளைக்கும் முக்கியச் செய்திகளைக் கொண்டுசெல்கிற நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் அவரிடம் எந்த அளவு இருக்கின்றன என்பதைப்பொறுத்து இவை அமைகின்றன. இதுபற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளைத் தொகுத்துப்பார்த்தால், ஆளுமைக் குறைபாடு கொண்டவரிடம் ஏதோ ஒரு மரபணு தவறாக இருக்கலாம், அதன்மூலம் அவர்களுக்கு இந்த ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருடன் மரபணுத் தொடர்புகொண்ட உறவினர்களுக்கும் அதே குறைபாடு வருகிற வாய்ப்பு அதிகரிக்கும்.
 • உளவியல் காரணிகள்: குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சி அல்லது துன்புறுத்தலை அனுபவித்த குழந்தைகளுக்கு, பின்னர் ஆளுமைக் குறைபாடுகள் வரக்கூடும்.
 • சமூகக் காரணிகள்: ஒரு குழந்தைக்கு அன்பான சமூகம், ஆதரவான உறவுகள் போன்ற உயிரியல் மற்றும் சமூகவியல் சூழ்நிலைகள் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஆளுமைக் குறைபாடு வருகிற வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். ஒருவருக்கு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணிகளால் ஆளுமைக் குறைபாடுகள் வருகிற ஆபத்து இருந்தாலும், வலுவான, அன்பான உறவுகளால் அதைத் தடுத்துவிடலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Q

ஒருவருக்கு ஆளுமைக் குறைபாடு இருப்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

A

ஆளுமைக் குறைபாடுகள் பொதுவாகக் குழந்தைப்பருவத்தின் பிற்பகுதியில், வளர்இளம்பருவத்தில்தான் வளர்கின்றன. இந்தப் பிரச்னை கொண்டவர்கள் எப்போதும் எதையாவது எதிர்பார்ப்பார்கள், தங்களைப்பற்றித் தாங்களே மிகையாக எண்ணிக்கொள்வார்கள், இவர்களுடன் பழகுவது சிரமம், இவர்கள் பிறரைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் எண்ணக்கூடும். இது பெரும்பாலும் ஒரு மனப்போக்குப் பிரச்னையாகவே காணப்படுகிறது. ஆகவே, உறவினர்கள், நண்பர்கள் இதை ஓர் ஆளுமைக் குறைபாடாகப் பார்க்காமல் விட்டுவிடக்கூடும். பல நேரங்களில், வயதுவந்த பருவத்தின் தொடக்கத்தில் அல்லது நிறைவில்தான் இது அடையாளம் காணப்படுகிறது.

உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது ஆளுமைக் குறைபாடு உள்ளதா என்று கண்டறிய, சில வழிகள் உள்ளன.

 • இவர்களிடம் குறைவாக அல்லது அதிகமாகக் காணப்படும் ஒரு பண்பு, பல சூழ்நிலைகளில் இவர்களையோ, இவர்களைச் சுற்றியுள்ளவர்களையோ சிரமப்படுத்தும். இந்தப் பழக்கவழக்கத்தைத் திரும்பத்திரும்பப் பல சூழ்நிலைகளில் காணலாம்: வீட்டில், பணியிடத்தில், பள்ளியில், பிறருடன் பழகுகிற மற்ற இடங்களில்.
 • ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கையாள இயலாதுபோகலாம், உணர்வுகளைப்பொறுத்தவரை அவர் நிலையற்றுக் காணப்படலாம்.
 • அவருக்குத் தனது நண்பர்கள், உறவினர்களுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களால் பிறருடன் தங்களைத் தொடர்புபடுத்திப்பார்க்கவே இயலாமல்போகலாம், அல்லது, பலருடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்து, அந்த உறவுகளைத் துண்டித்துக்கொண்டு சிரமப்படலாம்.
 • தாங்கள் நினைத்தது நடக்காவிட்டால், இவர்கள் தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொள்ளக்கூட முயற்சி செய்யலாம்.

ஞாபகமிருக்கட்டும், ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரிடம் இருக்கும் பண்புகள் வித்தியாசமானவை அல்ல, அதே பண்புகள்தான் எல்லாரிடமும் உள்ளன. எந்த ஒரு பண்பும் ஆரோக்கியமற்றதாக மாறக்கூடும். ஆனால் அதை வைத்து, சுற்றியிருக்கிற எல்லாருக்கும் ஆளுமைக் குறைபாடு இருப்பதாக எண்ணிவிடக்கூடாது. இங்குள்ள அனைத்தும், இந்தப் பிரச்னைக்கான அடையாளங்களைக் குறிப்பிடும் நோக்கத்துடன்மட்டுமே தரப்பட்டுள்ளன.  ஒருவருக்கு உண்மையில் ஆளுமைக்குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதைப் பயிற்சிபெற்ற ஒரு மன நல நிபுணர்மட்டும்தான் தீர்மானிக்கவேண்டும்.

Q

ஆளுமைக் குறைபாடுகள் எப்படிக் கண்டறியப்படுகின்றன?

A

ஆளுமைக் குறைபாட்டைக் கண்டறிவது சவாலான விஷயம்தான். காரணம், தன்னிடமுள்ள சில ஆளுமைக் குணங்கள் தனக்கும் பிறருக்கும் சிரமங்களைக் கொண்டுவருகின்றன என்று ஆளுமைக் குறைபாடு உள்ள ஒருவர் ஒப்புக்கொள்ளமாட்டார், அல்லது, அவருக்கு அது தெரியாமலேகூட இருக்கலாம்.

மனநல நிபுணர் முதலில் பிரச்னையை உண்டாக்கும் பண்புகளை அடையாளம் காண்பார், அவற்றை ஆராய்வார், எந்த அளவு பிரச்னை தீவிரமாகியிருக்கிறது என்று தீர்மானிப்பார், அதன்பிறகு, பாதிக்கப்பட்டவரிடம் நேருக்கு நேர் இதுகுறித்து உரையாடுவார், அவருடைய நண்பர்கள், குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசுவார், இதன் அடிப்படையில் அவருக்கு ஆளுமைக் குறைபாடு உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பார். ஒருவருடைய பிரச்னையை மிகுதியாகவோ குறைவாகவோ கணித்துவிடக்கூடாது என்பதால், சில குறிப்பிட்ட கேள்விகளைப் பயன்படுத்தியும் உளவியல் நிபுணர் தனது நேர்காணல்களை நடத்தலாம்.

Q

ஓர் ஆளுமைக் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுதல்

A

ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சை வகை, பேச்சுதான்! பாதிக்கப்பட்டவர் பயிற்சிபெற்ற ஓர் ஆலோசகரை அடிக்கடி சந்திக்கவேண்டும், தன்னுடைய உணர்வுகளைப்பற்றிப் பேசவேண்டும், தனது ஆளுமை குணங்களைப் புரிந்துகொள்ளவேண்டும், மற்றவர்களிடம் தான் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதன்மூலம், தங்களுடைய பழக்கவழக்கங்களில் எதை மாற்றவேண்டும் என்று அவர்களுக்குப் புரியத் தொடங்கும். ஒருவேளை, பாதிக்கப்பட்டவர் சிறுவயதில் ஏதாவது சிரமமான அனுபவத்தையோ நிகழ்வையோ (அதிர்ச்சி, உடல் அல்லது மனம்சார்ந்த துன்புறுத்தல் போன்றவை) சந்தித்து, அதனால் அவர்களுக்கு ஆளுமைக் குறைபாடுகள் எவையேனும் ஏற்பட்டிருந்தால், உளவியல் நிபுணர் இதுபற்றி அவரிடம் பேசுவார். தாங்கள் சில குறிப்பிட்ட பழகுமுறைகளைக் கற்றுக்கொண்டிருப்பது ஏன் என்று அவரைச் சிந்திக்கச்செய்வார், இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பதுபற்றி விவாதிப்பார்.

ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்குப் பொதுவாக மருந்துகள் தேவைப்படாது; அத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, சைக்கோசிஸ் அல்லது பதற்றம் போன்ற பிற பிரச்னைகளுக்குச் சில மருந்துகளை மருத்துவர் சிபாரிசு செய்யலாம்.

Q

ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்

A

ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் சிரமமான ஒன்றுதான். இதற்குப் பல காரணங்கள் உண்டு: முதலில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களுடைய பிரச்னை என்ன என்பதே புரிவதில்லை, தாங்கள் 'அசாதாரணமாக' நடந்துகொள்கிறோம், அதனால் தங்களுக்கும் பிறருக்கும் சிரமத்தைக் கொண்டுவருகிறோம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. இரண்டாவதாக, அவர்கள் சில உறுதியான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள்: தன்னைச்சுற்றியுள்ள சூழல் நியாயமற்றது, தான் தனியாக இருக்கிறோம், யாரும் தன்னைப் புரிந்துகொள்வதில்லை, எனக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றெல்லாம் அவர்கள் எண்ணக்கூடும். இந்த நம்பிக்கைகளால் தங்களுக்குள் ஏற்படும் கோபம், சோகம் மற்றும் எரிச்சலை அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள்மீது காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கவனித்துக்கொள்கிறவர்கள் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளலாம்:

ஞாபகமிருக்கட்டும், ஆளுமைக் குறைபாட்டை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை, வேண்டுமென்றே அவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. இந்தக் குறைபாடு கொண்டவர்களால் இனிமேல் நன்றாக வாழவே இயலாது என்று எண்ணிவிடவேண்டாம்: எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்னை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம், சிபாரிசு செய்யப்படும் சிகிச்சைத் திட்டத்தை அவர்கள் கவனமாகப் பின்பற்றினால், குணமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு, ஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடு, தவறான சந்தேக ஆளுமைக் குறைபாடு, அனன்காஸ்டிக் ஆளுமைக் குறைபாடு மற்றும் நார்சிஸிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு போன்ற சில குறிப்பிட்ட ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்டவர்கள், தங்களுடைய நடவடிக்கைகள் பிறருக்குச் சிரமத்தைக் கொண்டுவருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, அவர்களுக்குச் சிகிச்சை தேவை என்பதை எடுத்துச்சொல்லிப் புரியவைப்பதே சிரமம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் நடந்துகொள்வது தவறு என்று சுட்டிக்காட்டவேண்டாம், அதற்குப்பதிலாக, அவர்களுடைய ஆரோக்கியமற்ற பண்புகளால் அவர்களுக்குச் சிரமம் உண்டாகும் ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருக்கவேண்டும். பிறகு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பிரச்னை எப்படி உண்டானது என்று அவர்களிடம் பேசவேண்டும், அப்போதும், அது அவர்களுடைய தவறு என்பதுபோல் பேசவேண்டாம். உங்களுக்கு அவர்கள்மீது அக்கறை இருப்பதைக் குறிப்பிட்டுப் புரியவையுங்கள், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

அவர்களுடைய குறைபாட்டுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்று உணரச்செய்வதுபோல் எதையும் சொல்லவேண்டாம், செய்யவேண்டாம்.

ஒருவேளை, அவர் உளவியல் நிபுணரிடம் வர மறுத்தால், 'பரவாயில்லை, நீங்கள் ஓர் ஆலோசகரையாவது சந்திக்கலாமே, இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அவரிடம் கேட்கலாமே' என்று சொல்லுங்கள். இப்படி ஓர் ஆலோசகரிடம் செல்வதால், இரண்டு நன்மைகள்: அவரால் பிரச்னையை அடையாளம் காண இயலும், இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை தேவை என்று சொல்லி, பாதிக்கப்பட்டவரை அதற்குச் சம்மதிக்கச்செய்ய இயலும். பாதிக்கப்பட்டவர் தன்னையோ பிறரையோ துன்புறுத்தக்கூடும் என்று நீங்கள் நினைத்தால், உடனே ஓர் உளவியல் நிபுணரைச் சந்திப்பது நல்லது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org