அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)

Q

அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) என்றால் என்ன?

A

அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைப் பார்த்த சிலர் அவ்வப்போது அந்த நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பற்றிப் பதற்றமும் பயமும் கொள்வார்கள். உதாரணமாக ஒருவரை அடித்தல், பாலியல் ரீதியிலான தாக்குதல், தீவிர விபத்துகள், ராணுவத் தாக்குதல் அல்லது தீவிர நிலநடுக்கம் மற்றும் சுனாமிகள் போன்ற இயற்கைப் பேரழிவுகள். இந்த அதிர்ச்சிகளைச் சந்திக்கிறவர்களில் பெரும்பாலானோர் சில நாள்களில் முறையான அக்கறை காரணமாக தேறிவிடுகிறார்கள். பதற்றம் மற்றும் பயம் குறைந்து தினசரி வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இந்த நினைவுகள் மோசமாகிக் கொண்டே செல்கின்றன. இவர்கள் அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வைப் பற்றி தங்களையும் அறியாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள், அந்தச் சிந்தனைகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அதனால் தீவிர பதற்றம், பயம் உண்டாகிறது. இவர்களால் தினசரி நடவடிக்கைகளைக் கூட ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை. அப்படிப்பட்ட மக்கள் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) என்ற பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் சாலை விபத்து ஒன்றைச் சந்தித்து அதில் உயிர் பிழைத்திருக்கிறார் என்றால் அவ்வப்போது அந்த விபத்தின் நினைவுகள் அவர்களுக்கு வந்துக் கொண்டே இருக்கும். இந்த நினைவுகள் மிகவும் நிஜமானவையாக இருக்கும், அந்த விபத்து மீண்டும் ஒரு முறை இப்போது நடைபெறுவதைப் போல அவர்கள் உணர்வார்கள். இந்த நினைவுகள் தீவிர பயத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குகின்றன.

Q

PTSDயின் அறிகுறிகள் என்ன?

A

PTSD பிரச்னைக் கொண்டவர்கள் தீவிர பதற்றம் மற்றும் பயத்தை அனுபவிக்கிறார்கள். PTSDயின் மிக பொதுவான அறிகுறிகள்:

  • அந்த நிகழ்வு மீண்டும் நடைபெறுவது போல் உணர்தல்: அதிர்ச்சியான நிகழ்வைச் சந்தித்தவர்கள் இரவில் கெட்ட கனவுகளைக் காண்கிறார்கள், அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு அவர்களுடைய நினைவில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது, இதனால் அந்த அதிர்ச்சியைத் திரும்பத் திரும்பச் சந்திக்கிறார்கள். இதனால் உடல் ரீதியிலும் தீவிரமான மாற்றங்கள் நிகழக்கூடும், உதாரணமாக வியர்த்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல், குமட்டல் மற்றும் நடுக்கம்.
  • தவிர்த்தல்: பாதிக்கப்பட்ட நபர் அந்தத் துயர நிகழ்வுடன் தொடர்புடைய பேச்சுகள், இடங்கள் மற்றும்  நிகழ்வுகளைத் தவிர்க்க முயற்சி செய்வார், இதன் மூலம் தன்னைத் துன்புறத்தக் கூடிய நினைவுகள் தூண்டப்பட்டு விடுமோ என்று அவர் பயப்படுவார்.
  • எப்போதும் பரபரப்பாக இருத்தல்: பாதிக்கப்பட்டவர் எப்போதும் எச்சரிக்கையுடன் காணப்படுவார், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் கூட ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டே இருப்பார். அவர்களுக்குத் தூக்கம் நன்றாக வராது, எளிதில் அதிர்ச்சியடைவார்கள்.
  • உணர்வு ரீதியில் விலகியிருத்தல்: பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகத் தொடங்குவார், முன்பு அவர் விரும்பிச் செய்த வேலைகளில் கூட இப்போது அவருக்கு ஆர்வம் இருக்காது.

PTSD பிரச்னை கொண்டவர்களுக்கு மனச் சோர்வு, தீவிர பதற்றம், தவறான பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துதல்போன்ற பிற மன நலப் பிரச்னைகளும் வரக் கூடும், சில நேரங்களில் இவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள்கூட வரலாம்.

உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்தால் அவர்களிடம் இந்தக் குறைப்பாட்டைப் பற்றி நீங்கள் பேசலாம், அவர்கள் ஒரு நிபுணரின் உதவியை நாடலாம் என்று ஆலோசனை சொல்லலாம்.

Q

PTSD எதனால் ஏற்படுகிறது?

A

உயிருக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகள், உடல் ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான வன்முறை போன்ற நிகழ்வுகளை அனுபவித்தவர்கள் அல்லது பார்த்தவர்களுக்கு PTSD வரலாம்.

பதற்றம் அல்லது மன அழுத்த ஆபத்து பிறவியிலேயே அதிகமாக உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவர் சந்தித்துள்ள அதிர்ச்சி எந்த அளவு தீவிரமானது, எவ்வளவு நேரம் நீடித்தது என்பதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம். சில நேரங்களில் அழுத்தத்தை ஒருவருடைய மூளை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொருத்தும் இந்தப் பிரச்சனை வரலாம், வராமலும் இருக்கலாம்.

PTSD யை உருவாக்கும் ஒரே ஒரு காரணி என்று எதுவுமில்லை, பொதுவாக பல சிக்கலான காரணங்களின் கூட்டணியாய் இது நிகழ்கிறது.

Q

PTSDக்கு சிகிச்சைப் பெறுதல்

A

ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக PTSDயின் அறிகுறிகள் தென்படுவது இயல்புதான். பெரும்பாலானோர் இந்த அதிர்ச்சியைத் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் கடந்துவந்து விடுகிறார்கள், வாழ்க்கையை இயல்பாக வாழத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இந்த நிகழ்வு நடைபெற்று பல நாட்களுக்கு பிறகும் அதற்கான அறிகுறிகள் தொடர்ந்தால் நீங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்க வேண்டும். PTSDயைக் குணப்படுத்துவதற்கு முதன்மையாகச் சில சிகிச்சைகள் தரப் படுகின்றன, குறிப்பாக அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை (CBT), வெளிப்பாட்டுச் சிகிச்சை ஆகியவை இதற்கு நல்ல பலன் தருகின்றன. இந்தச் சிகிச்சைகளில் சம்பந்தப்பட்ட நபர் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய எண்ணங்களைச் சந்திக்குமாறு செய்யப்படுகிறார்; இந்த எண்ணங்கள் மிகவும் துயரத்தை உண்டாக்குவதால் அந்த நபர் இவற்றைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்திருப்பார். ஆனால் இப்போது அவற்றை அவர் சந்திக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைச் சமாளிப்பதற்காகவும், தூக்கம் வராமல் சிரமப்படுகிறவர்களுக்கும் மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகின்றன.

Q

PTSD கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

PTSD பிரச்னைக் கொண்டவர்களுக்கு நிறைய ஆதரவு தேவை, அவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கு நிறைய பொறுமை தேவை. உணர்வு ரீதியில் விலகியிருப்பது PTSDயின் ஒரு பகுதி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது முக்கியம். இந்த குறைபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் என்ன பிரச்னையை அனுபவிக்கிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள இயலும். அவர்கள் மனநல நிபுணரைச் சந்திக்கச் செல்லும் போது நீங்களும் கூட வருவதாகச் சொல்லுங்கள்; இதன் மூலம் அவர்களுக்கு ஆதரவும் கிடைக்கும், நீங்களும் இந்த குறைபாட்டைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். இத்துடன் அவர்கள் ஒரு நிபுணருடைய உதவியை நாட வேண்டும் என்று நீங்கள் ஊக்கம் தர வேண்டும், அதே சமயம் நீங்கள் மிகவும் வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக உணரச் செய்வது முக்கியம்.

Q

PTSDயைச் சமாளித்தல்

A

PTSD அறிகுறிகள் இருப்போர் ஒரு மனநல நிபுணரை உடனே சந்திக்க வேண்டும். இதற்கான சிகிச்சைகள் மிகவும் செயல்திறன் வாய்ந்தவை, ஒருவர் எவ்வளவு விரைவாகச் சிகிச்சையைத் தொடங்குகிறாரோ அவ்வளவு விரைவாகக் குணமடைவார். இது பற்றி அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசலாம், இதே பிரச்னை கொண்டவர்களுடனும் பேசலாம், இதன் மூலம் அந்த அதிர்ச்சி குறைவதற்கு உதவி கிடைக்கும். ஆரோக்கியமான தினசரி வாழ்க்கையை வாழ்வதும் போதுமான அளவு ஓய்வெடுத்து, உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org