ஸ்கிஜோஃப்ரெனியா: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டோருக்குப் பிரிந்த/ பல ஆளுமைகள் இருக்கும். (அல்லது) ஸ்கிஜோஃப்ரெனியா என்பதும் பல ஆளுமைக் குறைபாடு என்பதும் ஒன்றுதான்.

உண்மை: 'பல ஆளுமைக் குறைபாடு' என்ற பிரச்னை கொண்ட ஒருவர் வெவ்வேறு, நன்கு-வரையறுக்கப்பட்ட தாற்காலிக அடையாளங்களைக் கொண்டிருப்பார். பல ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு மனிதர்களைப்போல் நடந்துகொள்ளக்கூடும்.

ஸ்கிஜோஃப்ரெனியா கொண்ட ஒருவர் ஒரே ஓர் ஆளுமையைதான் கொண்டிருக்கிறார். இங்கே 'பிரிதல்' என்ற சொல்லின் பொருள்: அவர்களுடைய சிந்தனை, உணர்வுகள், நடவடிக்கைகள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல்/ ஒத்துப்போகாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு சோகக்கதையை நினைத்து அவர்கள் சிரிக்கக்கூடும்.

தவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் ஆபத்தானவர்கள்; அவர்கள் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டு, தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொண்டு, சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்திவிடக்கூடும்.

உண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் சிலநேரங்களில் வன்முறையாக நடந்துகொள்ளலாம். அதேசமயம், இந்தப் பிரச்னையை முறையாகக் கண்டறிந்து, உரிய மருந்துகளைக் கொடுத்துவந்தால், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் மற்றவர்களைவிட வன்முறையாக நடந்துகொள்ளமாட்டார். “எனக்கு மனநலத்துறையில் 44 ஆண்டுகால அனுபவம் உண்டு, இதுவரை எந்த நோயாளியும் என்னை அடித்ததில்லை. அதேசமயம், யாராவது தேவையில்லாமல் அவர்களைத் தூண்டிவிட்டால், அவர்கள் எதிர்த்துத் தாக்கக்கூடும், இது எல்லாரும் செய்வதுதான். இதைப் புரிந்துகொள்ளாமல், அவர்களுடைய மனநலப் பிரச்னையைக் காரணமாகக் காட்டி, அதைச் சூழ்ந்துள்ள களங்கவுணர்வைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கெட்ட பெயரை வரவழைத்துவிடுகிறார்கள்,” என்கிறார் மனநல நிபுணர் டாக்டர் எஸ் கல்யாணசுந்தரம்.

தவறான நம்பிக்கை: பெற்றோர் ஒரு குழந்தையைச் சரியாக வளர்க்காவிட்டால், அல்லது, சிறுவயதில் அந்தக் குழந்தை துன்புறுத்தலைச் சந்தித்தால், அதற்கு ஸ்கிஜோஃப்ரெனியா வரும்.

உண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா மோசமான வளர்ப்பாலோ துன்புறுத்தலாலோ வருவதில்லை. ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான காரணங்கள் மூளையின் கட்டமைப்புடன் தொடர்புள்ளவை. இதற்குக் காரணமாக அமையக்கூடிய மற்ற ஆபத்துக் காரணிகள்: மரபணு, உடல்சார்ந்த காரணிகள், உள்ளம்சார்ந்த காரணிகள், உணர்வுசார்ந்த காரணிகள், சமூகக் காரணிகள். ஒருவருடைய வளர் இளம் பருவத்தில்தான் மூளையில் சில கட்டமைப்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தக் குறைபாடுபற்றிய சிந்தனைகளில் ஒன்று, பதின்பருவத்தில் உள்ள ஒருவருக்கு வளர் இளம் பருவத்தின்போது ஒரு தவறான இடையூறு நிகழ்ந்து, மற்ற ஆபத்துக்காரணிகளும் அவருக்கு இருந்தால், அவர் ஸ்கிஜோஃப்ரெனியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகலாம்.
 

தவறான நம்பிக்கை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக்கொள்ளவேண்டும்.

உண்மை: ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட எல்லாரையும் மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதில்லை. இந்தக் குறைபாட்டைப்பற்றித் தெரிந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள் அவரை வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எப்படிப்பட்ட ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், மன நல நிபுணர்களின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவேண்டும்.

(இந்தப் பகுதி NIMHANS பெங்களூரின் மனநலப் பேராசிரியர் டாக்டர் ஜகதீஷா தீர்த்தஹள்ளி மற்றும் பூனாவில் உள்ள திருமதி காசிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியின் மனநலப் பிரிவு துணைப் பேராசிரியர் டாக்டர் அவினாஷ் வி வாக்மரே ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.)

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org