தொடக்க நல மையங்களில், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களைக் கண்டறிதல் அவசியம்.

சமீபத்தில் NIMHANS நடத்திய மனநலக் கணக்கெடுப்பில், இந்தியாவில் தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்பற்றிய சில திடுக்கிடவைக்கும் புள்ளிவிவரங்கள் வெளிவந்தன.     இந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட சில விஷயங்கள்:

  • குறைந்தது ஐந்தில் ஒருவராவது தீயபொருட்களைப் பயன்படுத்தும் குறைபாட்டை கொண்டிருக்கிறார் (22.4%)*
    (மது, புகையிலை அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல்)
  • குறைந்தது ஐந்தில் ஒருவர் புகையிலை மற்றும் சிகரெட்களைச் சார்ந்திருக்கிறார் (20%) 
  • இருபதில் கிட்டத்தட்ட ஒருவர் மதுப் பயன்பாட்டை கொண்டிருக்கிறார் (4.6%)
  • மதுப் பயன்பாட்டுக் குறைபாட்டைக் கொண்ட 100 பேரில் மூன்று பேர்தான் உதவியை நாடுகிறார்கள்.  இதன் பொருள், அவர்களில் 97 சதவிகிதப் பேர் எந்தவிதமான உதவியையும் பெறுவதில்லை. 

மிகச் சிலர்மட்டுமே இந்த விஷயத்தில் உதவியை நாடுவது ஏன்?

முதல் தடை: பெரும்பாலானோர் மதுப் பயன்பாட்டுக் குறைபாட்டை மருத்துவத் தலையீடு தேவைப்படுகிற ஒரு பிரச்னையாகவே அடையாளம் காண்பதில்லை.    பெரும்பாலானோர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதை ஓர் அறநெறிப் பிரச்னையாக (குடிப்பது ஒரு கெட்ட பழக்கம்), அல்லது ஒரு மோசமான தெரிவாக (நீ குடிக்காமல் இருக்கவேண்டும் என்று விரும்பினால் போதும்) நினைக்கிறார்கள்.  
உண்மையில் என்ன நடக்கிறதென்றால்:   ஒருவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு மரபணுக்கள், ஆளுமைக் குணங்கள் மற்றும் சமூகத் தாக்கம் போன்றவற்றின் தொகுப்பு காரணமாக அமைகிறது.   மன உறுதிக்கு இதற்கும் பெரிய சம்பந்தம் இருப்பதில்லை.

இரண்டாவது தடை: பெரும்பாலானோர் தங்களுடைய நலப் பிரச்னைகளைத் தங்களுடைய புகை பிடித்தல்/குடித்தல்/ போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகிய பழக்கங்களுடன் இணைத்துப் பார்ப்பதில்லை.  அவர்கள் ஒரு பொது மருத்துவரிடம் செல்கிறார்கள், பெரும்பாலான நேரங்களில் இந்த மருத்துவர் அவர்களுடைய பகுதியிலிருக்கும் தொடக்க நலப் பராமரிப்பு மையத்தில் உள்ள மருத்துவராக இருக்கிறார், அவரிடம் இவர்கள் சென்று தங்களுக்குத் தூக்கம் வருவதில்லை, கை, கால்கள் பலவீனமாக உள்ளன, சரியாகப் பசிப்பதில்லை, தலை வலிக்கிறது என்பது போன்ற புகார்களைச் சொல்கிறார்கள்.    வேறு சிலர், உயர் அல்லது தாழ் BP அல்லது வயிற்றுப் பிரச்னைகளுக்காக ஒரு நிபுணரிடம் சென்று புகார் சொல்லலாம்.
உண்மையில் என்ன நடக்கிறது:  பெரும்பாலான நேரங்களில், பொது மருத்துவர்களும் செவிலியர்களும் அவரிடம் அவருடைய வாழ்க்கைப் பழக்கங்களைப்பற்றிக் கேட்பதில்லை.  மருத்துவர் அறிகுறிகளில் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கவனிக்காமல் விட்டுவிடலாம், அதாவது மது அல்லது சிகரெட் பயன்பாட்டால்தான் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை அவர் கண்டறியாமல் விட்டுவிடலாம்.    இந்த நிலையில், அவர் ஏதாவது தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருக்கிறாரா என்று சுட்டிக்காட்டும் எந்த வடிகட்டுதல்களும் நடப்பதில்லை.   CAGE அல்லது MASTபோன்ற வடிகட்டுதல் பரிசோதனைகள் ஒருவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருப்பதைக் கண்டறிய உதவலாம்.  
ஒருவர் மது, சிகரெட்கள் அல்லது புகையிலைக்கு அடிமையாகியிருப்பதாகக் கருதினால், அவர் தன்னுடைய பழக்கத்தைக் குறைக்கவேண்டியிருக்கும்.   இதை அவரால் தானாகச் செய்ய இயலவில்லையென்றால், அவர் உதவியை நாடவேண்டியிருக்கலாம்.

மூன்றாவது தடை:  ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் சென்று, தான் தீய பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதிலிருந்து விடுபடுவதற்கு உதவியை நாடினால், அவர்களுக்கு அறிவியல்ரீதியிலான தலையீடு கிடைப்பதில்லை.    பெரும்பாலான நேரங்களில், மருத்துவர்களுக்கு இந்தப் பிரச்னையைக் கண்டறிகிற அல்லது சரியான தலையீட்டை வழங்குகிற வசதிகள் இருப்பதில்லை.  அவர்கள் நோயாளிகளிடம் "மது அருந்துவதை நிறுத்திவிடுங்கள்” அல்லது "இனிமேல் புகை பிடிக்காதீர்கள்” என்பது போன்ற அறிவுரைகளைச் சொல்லலாம், ஆனால், அவற்றைப் பின்பற்றுவதில் அவர்களுக்கு இவர்கள் உதவுவதில்லை.
செயல்திறன் மிக்க சிகிச்சை என்பது எப்படி இருக்கவேண்டும்: செயல்திறன் மிக்க சிகிச்சையில் இவை இடம்பெற்றிருக்கும்: குறைபாட்டை அடையாளம் காணுதல், அந்தப் பழக்கத்தை விடுவதற்கு ஆதரவளித்தல் (நோயாளி ஏன் அந்தப் பழக்கத்தை விடவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதும் இதில் சேரும்) மற்றும் அதை விடுவதில் இருக்கும் சவால்களைக் கையாள்வதற்கான ஆதரவு (பயன்பாட்டை எப்படிக் குறைப்பது, ஏக்கங்களை எப்படிக் கையாள்வது, திரும்பப் பெறுதல் அறிகுறிகளை எப்படிக் கையாள்வது மற்றும் சக மனிதர்களின் அழுத்தம் அல்லது பிற சமூகக் காரணிகளை எப்படிக் கையாள்வது).        திரும்பப்பெறுதல் அறிகுறிகளுக்கான சிகிச்சையும் முக்கியம்.  இதற்கு அந்தப் பொது மருத்துவர் தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்பற்றி, அதை எப்படி அடையாளம் காண்பது என்பதுபற்றி, அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதுபற்றி விழிப்புணர்வு கொண்டிருக்கவேண்டும்.   

நான்காவது தடை: இந்தியாவில் தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் சில அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளன.  அத்துடன் பல புனர்வாழ்வு மையங்களும் உள்ளன, இவற்றில் சில உண்மையானவை, வேறு சில உண்மையற்றவை, சிலவற்றில் மனித உரிமை மீறல்கள்கூட நடக்கின்றன.
நமக்கு என்ன தேவை:  புனர்வாழ்வும் நீண்டகாலப் பராமரிப்பும் மூன்றாம் நிலைப் பராமரிப்பு மையங்களால் வழங்கப்படும் சேவைகளாக இருப்பினும், இதுமட்டுமே தலையீட்டுக்கான ஒரே முறையாக இருக்க இயலாது.       இதில் செயல்திறனைக் கொண்டுவரவேண்டுமென்றால் தொடக்க நலப் பராமரிப்பு மையங்களில், மது மற்றும் பிற தீய பொருட்களுக்கு அடிமையாகிறவர்களை அடையாளம் காணுதலுக்கான ஏற்பாடுகள் இருக்கவேண்டும்

இந்த இடைவெளியை நிரப்புவது எப்படி?

NIMHANS நிபுணர்கள் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குச் சொல்லும் சில ஆலோசனைகள்:

1. பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும், தீய பழக்கங்களுக்கு அடிமையாவது நாள்பட்ட மூளை நோய், அது ஓர் அறநெறிப் பிரச்னை இல்லை என்கிற விழிப்புணர்வை அவர்களிடையில் உண்டாக்கவேண்டும்.   மது அல்லது புகையிலை அல்லது போதைப் பொருட்களை எந்த அளவு பயன்படுத்துவது பரவாயில்லை, எப்போது அது ஒரு பிரச்னையாக மாறுகிறது என்பதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்கவேண்டும்.  

2.  பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்தவேண்டும், இதற்குத் தொடக்க நலப் பராமரிப்பு மையங்களில் உள்ள பொது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையான நோயாளிகளை வடிகட்டுவதையும், அவர்களுக்குச் செயல்திறன் மிக்க சிகிச்சையை வழங்குவதையும் உறுதிப்படுத்தவேண்டும்.     அவர்களுக்கு இந்த விஷயங்களில் பயிற்சி அளிக்கவேண்டும்:

  • மக்கள் எந்தச் சிகிச்சையை நாடி வந்தாலும் சரி, அவர்கள் புகையிலை/ மதுவைப் பயன்படுத்துகிறார்களா என்பது பற்றி எப்போதும் விசாரிக்கலாம்.
  • இந்தத் தகவலை அவர்களுடைய நலப் பிரச்னைகளுடன் இணைத்துப் பார்க்கலாம், அவர்களுடைய நல மற்றும் பழக்க வழக்கப் பிரச்னைகளுக்கு அவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருப்பது காரணமாக இருக்கக்கூடுமா என்று புரிந்துகொள்ளலாம்.
  • இயன்றால் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கலாம், அல்லது, தேவைப்பட்டால் அவர்களைச் சிறப்புச் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பலாம். 

இதற்கு, மருத்துவர்கள், செவிலியர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புப் பாடத்திட்டங்களில் தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் பிரச்னையைப்பற்றிய பயிற்சி சேர்க்கப்படவேண்டும்.    

3.  உண்மையாக நடந்துகொள்கிற, மனநல ஆதரவு உள்ளிட்ட அறிவியல் சார்ந்த சிகிச்சையை வழங்ககிற சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை அடையாளம் காண ஓர் அங்கீகார அமைப்பை உருவாக்குதல்.   பாதிக்கப்பட்டவர்கள் உதவி எங்கே கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும், தொலைநோக்கில், உதவியை நாடுவது சரிதான், பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு உறுதியளிப்பதற்கு இது பயன்படும்.  அவர்கள் ஒரு நெருக்கடியை எட்டுவதற்குமுன்னால் உதவியை நாடக்கூடும்.

ஆனால், இது ஏன் முக்கியம்?

மது அல்லது புகையிலையைப் பயன்படுத்துகிறவர்களை மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:  

பிரிவு 1: ஒரு தீய பொருளை எப்போதாவது அல்லது அபூர்வமாகப் பயன்படுத்துகிறவர்கள்.

பிரிவு 2: ஒரு தீய பொருளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறவர்கள், ஆனால் அதன்மூலம் மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்கள் எவையும் இல்லாதவர்கள். 

வகை 3: தீவிர அறிகுறிகளைக் கொண்டவர்கள்.

வகை 3ல் (தீவிர அறிகுறிகளுடன்) உள்ளவர்கள் தீய பழக்கங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு மற்ற அறிகுறிகளுக்கு உதவியை நாடக்கூடும்: இரைப்பை அழுத்தம், வன்முறை அல்லது விபத்துகளில் பங்கேற்றல், மற்றும் கல்லீரல் சேதம்.  இந்த நிலையில் சிகிச்சையானது அணுகக்கூடியதாக இருப்பதில்லை, நேரம் மற்றும் பணம் ஆகிய இரண்டிலும் மிகுந்த முதலீட்டைக் கோருகிறது. 

வகை 2ஐச் சேர்ந்தவர்கள்தான் தீய பொருட்களைப் பயன்படுத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள்.   இந்த மக்களுக்கு எந்தவிதமான மருத்துவ அல்லது உளவியல் சிக்கல்களும் இல்லாததால் அவர்கள் உதவியை நாடாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் குழுதான் சரியான நேரத்தில் வழங்கப்படும் தலையீட்டினால் மிக அதிகப் பலன்களைப் பெறக்கூடும்; பெரும்பாலான சூழ்நிலைகளில் இவர்கள் அந்தப் பழக்கத்தை விடுவதற்கு ஆலோசனைகள்மட்டுமே போதுமானதாக இருக்கலாம்.

ஒரு தீய பழக்கத்தைத் தொடங்குகிறவர் அதற்கு அடிமையாக மாறுவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம்.  தீவிர நிலை ஏற்படுவதற்குமுன்பாக ஒரு தலையீடு நிகழ்த்தப்பட்டால் சிறந்த சிகிச்சைப் பலன்கள் கிடைக்கலாம், அதற்கான செலவு குறைவாக இருக்கலாம், சம்பந்தப்பட்டவருடைய உடல் மற்றும் மனநலத்துக்குக் குறைவான சேதம் உண்டாகலாம்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org