பாலியல் செயல்பாட்டின்மை

Q

பாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன?

A

பாலியல் செயல்பாடுகள் சமூகத்தில் இயல்பாக நடக்கிற விஷயங்கள். வயது வந்த பலரும் இதில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் சில நேரங்களில் சில தனிநபர்கள் அல்லது ஜோடிகளுக்கு இதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது இந்தச் செயலில் அவர்கள் ஈடுபடாதபடி அல்லது இந்தச் செயல் மூலம் அவர்கள் இன்பம் அடையாதபடி ஏதேனும் தடுக்கலாம்.

பொதுவாக மனிதர்களின் பாலியல் எதிர்வினை ஒரு சுழல் வடிவில் நடைபெறுகிறது. முதலில் ஆர்வம் ஏற்படுகிறது, அதற்கான செயல்பாடுகளில் இறங்கவேண்டும் என அவர்கள் தூண்டப்படுகிறார்கள், பிறகு அவர்கள் அந்தச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், பிறகு உச்சகட்டம் எனப்படும் திருப்தி நிலையை எட்டுகிறார்கள். இந்த நிலைகளில் ஏதேனும் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் அது பாலியல் செயல்பாட்டின்மைக்கு வழிவகுக்கக்கூடும்.

பாலியல் செயல்பாட்டின்மை என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்னை, இது எல்லா வயதிலும் உள்ள ஆண்கள், பெண்களைப் பாதிக்கிறது. அதே சமயம் வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

பாலியல் செயல்பாட்டின்மை சார்ந்த பிரச்னைகளில் பெரும்பாலானவற்றைக் குணப்படுத்த இயலும், ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பேசத் தயங்குகிறார்கள், தாங்கள் பேசினால் பிறர் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணிவிடுகிறார்கள்.

ஒருவர் தன்னுடைய பாலியல் செயல்பாடுகளை அனுபவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர் தன்னுடைய பாலியல் கூட்டாளியிடம் அதைப் பற்றிப் பேசவேண்டும், உரிய நிபுணரிடம் உதவி பெற வேண்டும். சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர்கள் இருவருமே  மீண்டும் ஓர் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க இயலும்.

Q

பாலியல் செயல்பாட்டின்மையின் அறிகுறிகள் என்ன?

A

பாலியல் செயல்பாட்டின்மையின் அறிகுறிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடும். சில பொதுவான அறிகுறிகள் இவை:

ஆணுக்கு:

  • விறைப்புத் தன்மைக் குறைபாடு: ஆண்கள் விறைப்புத் தன்மை பெறுவதில் சிரமங்கள் இருக்கலாம் அல்லது பாலியல் செயல்பாட்டின்போது அந்த விறைப்புத் தன்மையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்வதில் அவர்களுக்குச் சிரமங்கள் இருக்கலாம்.

  • விந்து பீச்சப்படுவதில் பிரச்னைகள்: இந்தப் பிரச்னை கொண்ட ஆண்களால் தங்களுடைய விந்து பீச்சலைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. இது அவர்கள் பாலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக நடைபெறலாம் அல்லது பாலுறவில் ஈடுபடத் தொடங்கிய உடனே ஏற்படலாம் (விந்து முந்துதல்), சில நேரங்களில் அவர்கள் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் விந்து வெளிப்படாமல் இருக்கலாம், நெடுநேரம் கழித்து வெளிப்படலாம் (தாமதமான விந்து பாய்ச்சுதல்). சில ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அல்லது தாமதமான விந்து வெளிப்படுதலும் ஏற்படுகிறது, இவர்கள் உச்சகட்டத்தை எட்டும்போது இவர்களுடைய விந்து ஆணுறுப்பில் நுழைவதற்குப் பதிலாக சிறுநீர்ப் பையில் நுழைந்துவிடுகிறது. ஆகவே இவர்களுடைய விந்து வெளிப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.

  • பாலுணர்ச்சிக் குறைவு: இந்தப் பிரச்னை கொண்ட ஆண்களிடம்  டெஸ்ட்டோஸ்டெரோன் குறைவாக உள்ளது, ஆகவே அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட ஆர்வமின்றிக் காணப்படுவார்கள்.

பெண்களில்:

  • பாலுணர்ச்சிக் குறைபாடு: இந்தப் பிரச்னை கொண்ட பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அல்லது டெஸ்ட்டோஸ்டெரோன் குறைவாக இருப்பதால் பாலியல் செயல்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது.

  • உச்சகட்டத்தை எட்ட இயலாமல் போதல்: இந்தப் பெண்கள் போதுமான அளவு தூண்டப்பட்ட போதும் இவர்களுக்கு உச்சகட்டம் ஏற்படுவதில் சிரமங்கள் இருக்கும்.

  • பெண்ணுறுப்பு உலர்ந்து காணப்படுதல் மற்றும் அதில் வலி உண்டாதல்: இந்தப் பெண்களுக்குப் பாலுறவின் போது பெண்ணுறுப்பில் போதுமான அளவு உயவுப் பொருள் காணப்படுவதில்லை, ஆகவே இவர்களுக்குப் பாலுணர்வு மிகவும் வலி தருகிற ஒன்றாக அமைகிறது.

Q

பாலியல் செயல்பாட்டின்மை எதனால் ஏற்படுகிறது?

A

பாலியல் செயல்பாட்டின்மை பலவிதமான உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களால் ஏற்படலாம். சில பொதுவான அம்சங்கள்:

உடல் சார்ந்த அம்சங்கள்: ஆண்களைப் பொறுத்தவரை நரம்புச் சிதைவு, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள், நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை, நரம்பியல் குறைபாடுகள், இதய அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றால் பாலியல் செயல்பாட்டின்மை ஏற்படலாம். அளவுக்கதிகமாக மது அருந்துதல் அல்லது சில குறிப்பிட்ட வகை மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் பாலியல் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும்.

பெண்களைப் பொறுத்தவரை சிறுநீர் கழித்தல் அல்லது மலம் கழித்தலில் ஏற்படும் பிரச்னைகள், நரம்பியல் குறைபாடுகள், மூட்டு வலி, சில குறிப்பிட்ட மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் பாலியல் செயல்பாட்டின்மை ஏற்படக்கூடும்.

சில பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் அவர்களுடைய பெண்ணுறுப்பின் அகப்பூச்சு  மெலிந்து போகலாம், ஆகவே அவர்கள் உடலில் உயவுப்பொருள் குறைவாகக் காணப்படும், இதனால் அவர்களுக்குப் பாலுறவு மிகவும் வலி தருவதாக அமையும். இதன் மூலம் அவர்கள் பாலியல் செயல்பாட்டின்மையால் பாதிக்கப்படுவார்கள்.

உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள்: பாலியல் குறைபாடு குறைவதற்கு ஒரு மிகப் பொதுவான காரணம் பணியிடத்தில் இருக்கும் அழுத்தம். மற்ற சில காரணங்கள்: தங்களுடைய பாலியல் செயல்பாடு எப்படி இருக்குமோ என்கிற பதற்றம், மனச் சோர்வு அல்லது பொதுவான பதற்றம், தங்களுடைய பாலியல் கூட்டாளியுடன் இருக்கக் கூடிய உறவுப் பிரச்னைகள் மற்றும் முந்தைய பாலியல் அனுபவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சிகள் போன்றவை.

Q

பாலியல் செயல்பாட்டின்மைக்குச் சிகிச்சை பெறுதல்

A

பெரும்பாலான நேரங்களில் பாலியல் செயல்பாட்டின்மையைக் குணப்படுத்துவதற்கு, அதனை ஏற்படுத்திய மருத்துவப் பிரச்னையைக் குணப்படுத்தினாலே போதும்.

பாலியல் செயல்பாட்டின்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய பிரச்னைக்கு அடித்தளமாக அமைகிற காரணம் என்ன என்பதை மருத்துவர் கண்டறிவார், அதனைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளைத் தருவார். அந்த மருந்துகளை உட்கொள்வதன்மூலம் அவருடைய பாலியல் பிரச்னைக்கான அறிகுறிகள் தானே குறையத் தொடங்கும். விறைப்புத் தன்மைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு அவர்களுடைய ஆண்குறிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிற மருந்துகள் தரப்படலாம். சில நேரங்களில் அவர்கள் வேக்குவம் சாதனங்களைப் பயன்படுத்தி விறைப்புத் தன்மையைப் பெறலாம் அல்லது அதனைத் தக்கவைத்துக் கொள்ளலாம். பாலுறவின் போது பெண்ணுறுப்பில் பிடிப்புகள் ஏற்படுகின்ற பெண்கள் டைலேட்டர்கள் எனப்படும் விரிப்பிகளைப் பயன்படுத்தி அந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம்.

பாலியல் செயல்பாட்டின்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய பிரச்னைக்குக் காரணம் அவருடைய உடலில் இல்லை, மனத்தில் தான் இருக்கிறது என்று அவருடைய மருத்துவர் கருதினால், அவர் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்துச் சிகிச்சை பெற வேண்டும் என்று சிபாரிசு செய்யப்படும். இந்தச் சிகிச்சை அவர் அழுத்தம் மற்றும்  பதற்றத்தை நன்கு கையாள உதவும். பாலியல் தூண்டலுக்கு அவருடைய உடல் நிகழ்த்துகிற எதிர்வினையை எப்படிச் சிறப்பாக அமைத்துக் கொள்வது என்று மன நல நிபுணர் விளக்குவார், அவருக்கும் அவரது பாலியல் கூட்டாளிக்கும் ஜோடியாகச் சிகிச்சை நடத்தப்படலாம், இதன்மூலம் அவர்கள் தங்களுக்கிடையிலான நெருக்கம், தகவல் தொடர்பு போன்றவை மேம்படும், சில உறவு சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க இயலும்.

Q

பாலியல் கூட்டாளிக்கு உதவுதல்

A

ஒருவர் பாலியல் செயல்பாட்டின்மையின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவருடைய பாலியல் கூட்டாளி அவரது நிலைமையைப் புரிந்து கொள்வது அவசியம். பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன அழுத்தத்திலும் வருத்தத்திலும் இருப்பார், அதுபோன்ற நேரங்களில் அவருடைய பாலியல் கூட்டாளி அவரைப் புரிந்து கொண்டு நன்கு ஆதரவளித்துப் பொறுமையோடு இருந்தால் இந்தச் சிக்கலான, நுண்ணுணர்வு கொண்ட பிரச்னையை எளிதில் தீர்க்கலாம். அதுபோன்ற நேரங்களில் அவருடைய பாலியல் கூட்டாளி அவரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும், இதனைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய ஆதரவு உண்டு என்று விளக்கவேண்டும், அவர்கள் ஒரு மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்று ஊக்கம் தரவேண்டும், அப்படி அவர்கள் மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது தானும் உடன் வருவதாகச் சொல்லவேண்டும். பாலியல் கூட்டாளிகள் இருவருக்கிடையிலான உறவு சார்ந்த அழுத்தத்தால் தான் இந்தப் பிரச்னை வருகிறது என்று அவர்கள் நினைத்தால் அந்தப் பிரச்னையை முதலில் கவனிக்க வேண்டும், அதன்மூலம் பாலியல் செயல்பாட்டின்மை தானே சரியாகிவிடலாம். குறிப்பாக பாலியல் செயல்பாட்டின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர் அதற்குச் சிகிச்சை பெறும்போது அவருடைய பாலியல் கூட்டாளியும் அதில் பங்கு பெறவேண்டும், சம்பந்தப்பட்ட இருவரும் ஜோடியாகச் சிகிச்சை பெறுவது நல்லது என்று சிகிச்சை வழங்கும் நிபுணர் சிபாரிசு செய்தால் தயங்க வேண்டாம், மறுக்க வேண்டாம், ஒருவருக்குத் தானே பிரச்னை இருக்கிறது, இருவரும் ஏன் சிகிச்சை பெற வேண்டும் என்று நினைக்கவேண்டாம். மருத்துவர் வழங்கும் சிகிச்சைத் திட்டத்தை இருவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் அல்லது பாதிக்கப்பட்டவர் அதை முறையாகப் பின்பற்றுவதை மற்றவர் உறுதி செய்யவேண்டும்.

Q

பாலியல் செயல்பாட்டின்மையுடன் வாழுதல்

A

பாலியல் செயல்பாட்டின்மை பலருக்குச் சங்கடத்தை உண்டாக்குகிறது. அதே சமயம் அவர்கள் அதைச் சீக்கிரமாக ஏற்றுக்கொண்டு, நிபுணர்களின் உதவியைப் பெற்றால், அவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒருவேளை அவர்கள் இதைத் தாமதப்படுத்தினால் அதன் மூலம் அவர்களுடைய அழுத்தம் அதிகரிக்கும், பிரச்னை மேலும் பெரிதாகக்கூடும். சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் பாலியல் தூண்டலுக்கான உடலின் எதிர்வினையை மேம்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பாலியல் கூட்டாளியிடம் இதுபற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசவேண்டும், அதனாலேயே அவருடைய பதற்றம் பெருமளவு குறையும். அவர் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் அவருடைய உடல் உறுதியும் ரத்த ஓட்டமும் மேம்படும். மதுப்பழக்கம் மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை நிறுத்துவது நல்லது. மதுப்பழக்கம் பாலியல் தூண்டலுக்கு உங்களுடைய உடல் வழங்கும் எதிர்வினையைக் குறைக்கிறது, புகைப் பிடிக்கும் பழக்கம் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பாலியல் செயல்பாட்டின்மை சார்ந்த பல பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம்.

மனத்தைத் தளர்வாக வைத்துக் கொள்ளும் சில உத்திகளைக் கற்றுக் கொள்வதன்மூலம் தினசரி அழுத்தத்தைக் குறைக்கலாம். குறிப்பாக பாதிக்கப்பட்டவர் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம், அப்போதுதான் அவர் தன்னுடைய பிரச்னையை நன்கு புரிந்து கொள்ள இயலும், நிபுணர் வழங்கும் சிகிச்சைத் திட்டத்தைச் சரியாகப் பின்பற்றி பலனடைய இயலும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org