குறைபாடுகள்

தூக்கக் குறைபாடுகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

தூக்கக் குறைபாடுகள் என்றால் என்ன?

A

உலகில் எல்லாருக்குமே அவ்வப்போது தூக்கப் பிரச்னைகள் வருவதுண்டு. என்றைக்காவது ஓர் இரவு அவர்களுக்குத் தூக்கம் சரியாக வராது, திடீரென்று விழித்துக் கொள்வார்கள் அல்லது கனவு கண்டு தூக்கம் கலைந்துவிடும். இவையெல்லாம் மிகவும் இயல்பான விஷயங்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் ஒரிரு நாள்களில் சரியாகிவிடும்.

ஆனால் சிலருக்கு தூக்கப் பிரச்னைகள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் கூட நீடிக்கக்கூடும். அப்போது அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும். ஒருவருக்கு நீண்டநாள் தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்தால் அவருடைய சுறுசுறுப்புக் குறையக்கூடும், அடிக்கடி அவருடைய மனோநிலை மாறக்கூடும், அவருடைய கவனக்கூர்மை குறையக்கூடும். இதனால் அவர்கள் படிப்பது, வேலை செய்வது, வண்டி ஓட்டுவது, மற்ற தினசரி வேலைகளைச் செய்வது போன்றவை பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னையால் அவர்களுடைய உறவுகளும் சமூக வாழ்க்கையும் கூட பாதிப்புக்குள்ளாகும்.

Q

தூக்கக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

தூக்கக் குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள்:

 • பகல் நேரத்தில் தூக்கக் கலக்கமாகவும் எரிச்சலாகவும் உணர்தல்
 • தினசரி வேலைகளில் கவனம் செலுத்த இயலாமல் இருத்தல்
 • வண்டி ஓட்டும்போதோ ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும்போதோ தூக்கம் வருதல், அதைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறுதல்
 • பகல் முழுவதும் களைப்பாகவும் சோர்வாகவும் உணர்தல்
 • பகல் நேரத்தில் நிறைய கஃபைன் கொண்ட பானங்களை உட்கொண்டால்தான் விழிப்போடு இருக்கமுடியும் என்கிற நிலைக்குச் சென்றுவிடுதல்

உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், அவர்களுடைய தூக்கப் பழக்கங்களைப்பற்றி அவர்களிடம் விசாரியுங்கள், இந்தப் பிரச்னைகளைப்பற்றி அவர்கள் ஒரு மருத்துவரிடம் விவாதிக்கவேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள்.

Q

தூக்கக் குறைபாடுகள் எதனால் ஏற்படுகின்றன?

A

தூக்கக் குறைபாட்டில் பலவகைகள் உள்ளன, ஆகவே இவற்றை உண்டாக்கக் கூடிய காரணிகளும் பலவகைப்படும்.

பொதுவாக தூக்கக் குறைபாடு கொண்டவர்களிடம் காணப்படும் சில காரணிகள்:

 • தூக்க வழக்கம்: ஒருவர் தினமும் சரியான நேரத்தில் தூங்கப்பழகவேண்டும், மிகவும் சீக்கிரமாகத் தூங்கச் செல்வது அல்லது மிகவும் தாமதமாகத் தூங்கச் செல்வது போன்ற பழக்கங்களை மேற்கொண்டால் அதன்மூலம் அவருடைய தூக்கச்சூழல் பாதிக்கப்படக்கூடும்.
 • மருத்துவப் பிரச்னைகள்: ஆஸ்துமா, இதய நோய், நாள்பட்ட வலிகள், சுவாசத் தொற்று போன்ற பல நோய்களால் ஒருவருடைய தூக்கம் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்படக்கூடும்.
 • பதற்றம் மற்றும் மனச்சோர்வு: பதற்றம் மற்றும் மனச்சோர்வுப் பிரச்னை கொண்டவர்களுக்குத் தூக்கக் குறைபாடுகள் வருவது சகஜம். மன அழுத்தம் மற்றும் எதைப்பற்றியாவது அதீதமாகக் கவலைப்படுவது போன்றவற்றாலும் ஒருவருடைய தூக்கம் பாதிக்கப்படலாம்.
 • போதைப் பொருள்கள் மற்றும் மது போன்றவற்றை உட்கொள்கிறவர்களுடைய தூக்கம் பாதிக்கப்படும்.
 • சுற்றுச்சுழல் மாற்றங்கள்: ஒருவர் இரவு நேர ஷிஃப்ட்டில் வேலை செய்வது, வேறோரு நாட்டிற்குக் குடிபெயர்ந்து இன்னொரு நேர மண்டலத்தில் வாழ்வது போன்றவை அவருடைய தூக்கச் சுழலைக் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கக்கூடும்.
 • பொதுவான தூங்கும் சூழல்: ஒருவர் எங்கே தூங்குகிறார் என்பதைப் பொறுத்தும் அவருடைய தூக்கத்தின் தரம் மாறுபடும். உதாரணமாக சத்தம் நிறைய வருகிற, அசுத்தமான ஓர் அறையில் தூங்குதல், அசௌகரியமான ஒரு படுக்கையில் தூங்குதல் போன்றவை ஒருவருடைய தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.
 • குறட்டை விடுதல் மற்றும் பற்களை நறநறத்தல் போன்றவையும் ஒருவருடைய தூக்கத்தைப் பாதிக்கக்கூடும்.

Q

தூக்கக் குறைபாட்டின் பல்வேறு வகைகள் என்னென்ன?

A

தூக்கக் குறைபாட்டில் பலவகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:

இன்சோம்னியா: சிலர் நீண்டநாள்களாகத் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள், அப்படியே தூக்கம் வந்தாலும் அவர்களுடைய தூக்கம் விரைவில் கலைந்துவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு இன்சோம்னியா பிரச்னை இருக்கலாம். உண்மையில் இன்சோம்னியா என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது வேறு மருத்துவப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவர் உட்கொள்ளும் மருந்துகள், கஃபைன் கலந்த பானங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவற்றாலும் இன்சோம்னியா வரக்கூடும்.

தூக்க அப்னியா (தூக்கத்தில் மூச்சு நின்று, நின்று வருதல் / விட்டு விட்டு வருதல்): தூக்க அப்னியா என்பது ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய சுவாச அமைப்பின் மேல்பகுதியில் ஏற்படும் அடைப்புகளால் உண்டாகிறது. இதனால் அவருடைய தூக்கம் பாதிப்புக்குள்ளாகிறது, சில நேரங்களில் அவர் குறட்டைவிடவும் கூடும். தூங்கிக் கொண்டிருக்கும்போது நிகழும் இந்தப் பிரச்னைகளை ஒருவர் உணராமலே போகலாம், ஆனால் மறுநாள் அவர்கள் மிகவும் களைப்பாகக் காணப்படுவார்கள், வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலாமல் சிரமப்படுவார்கள்.

நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு (RLS): RLS பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய கால் பகுதியில் ஓர் அசௌகரியமான கூச்சவுணர்வு அல்லது வலி உணர்வை அனுபவிக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய காலை நீட்டினால் அல்லது எதையாவது எட்டி உதைப்பதுபோல் செய்தால்தான் இந்த உணர்வு மறையும்.

நார்க்கோலெப்சி: நார்க்கோலெப்சி பிரச்னை கொண்டவர்கள் பகல் நேரத்தில் திடீரென்று தூங்கிவிடக்கூடும். இவர்கள் தூங்குவது, விழித்தெழுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, அதனால்தான் இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, வேலை செய்துகொண்டிருக்கும்போதே அல்லது வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தங்களையும் அறியாமல் தூங்கிவிடக்கூடும், இது மிகுந்த ஆபத்தாக வாய்ப்புண்டு.

பிற தூக்கத் தொந்தரவுகள்: இவை தவிர இன்னும் பல தூக்கக் குறைபாடுகளும் உள்ளன, உதாரணமாக தூக்கத்தில் நடத்தல், இரவு நேரத்தில் பயப்பட்டுக்கொண்டு அல்லது கெட்ட கனவு கண்டு விழித்தெழுதல், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் மற்றும் ஜெட்லேக் போன்றவை.

Q

தூக்கக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெறுதல்

A

தூக்கக் குறைபாடுகள் ஒருவருடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு மிகுந்த பிரச்னையைக் கொண்டுவரக்கூடும், குறிப்பாக வண்டிகளை ஓட்டுகிறவர்கள், ஆபத்தான சூழ்நிலைகளில் அல்லது ஆபத்தான பொருள்களைப் பயன்படுத்தி வேலை செய்கிறவர்கள் போன்றோருக்குத் தூக்கக் குறைபாடுகள் வந்தால் அது பெரும்பிரச்னைகளை உண்டாக்கலாம்.

சில நேரங்களில் தூக்கக் குறைபாடுகள் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே நீடிக்கின்றன, அதன் பிறகு உடல் தன்னைச் சரிசெய்துகொண்டு முறைப்படி தூங்கத் தொடங்கிவிடுகிறது. அதேசமயம், ஒருவரிடம் தூக்கக் குறைபாட்டின் அறிகுறிகள் நீண்டநாள் நீடித்தால் அவர் உடனடியாக ஒரு நிபுணரைச் சந்தித்து உதவிபெறவேண்டும். அவர்களுக்கு வந்திருக்கக்கூடிய தூக்கக் குறைபாடு எப்படிப்பட்டது, எந்த அளவு தீவிரமானது என்பதை நிபுணர் ஆராய்ந்து அதற்கேற்ப ஒரு சிகிச்சைத் திட்டத்தை வழங்குவார்.

தூக்கக் குறைபாட்டிற்குச் சிகிச்சை பெறுகிறவர்கள் சில மருந்துகளை உட்கொள்ளவேண்டியிருக்கலாம், சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கலாம், இவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படலாம். சிகிச்சைத் திட்டம் எதுவானாலும் அதை முறைப்படிப் பின்பற்றுவதும், சரியான அளவுகளில் மருந்துகளை உட்கொள்வதும் அவசியம்.

ஒருவர் இந்தப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது அவருடைய உடலில், பழக்கவழக்கங்களில் வேறுவிதமான மாற்றங்கள் ஏற்பட்டால் அல்லது பக்கவிளைவுகள் தோன்றினால், அவர்கள் உடனடியாகத் தங்களுடைய மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும்.

Q

தூக்கக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

தூக்கக் குறைபாடு கொண்டவர்கள் எப்போதும் எரிச்சலுடன் காணப்படலாம் அல்லது விட்டேத்தியான மனோபாவத்துடன் இருக்கலாம், அதுபோன்ற நேரங்களில்தான் அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு தேவை.

உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது தூக்கக் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் பின்வரும் வகைகளில் உதவலாம்:

 • தூக்கக் குறைபாடு கொண்ட ஒருவர் எரிச்சலுடன் நடந்துகொண்டால் நீங்கள் அதைப் புரிந்துகொண்டு பொறுமையோடு இருக்கவேண்டும்.
 • அவர்கள் தூங்குவதற்கு ஒரு சௌகரியமான சூழ்நிலையை நீங்கள் உண்டாக்கித் தரவேண்டும், அவர்கள் தூங்கும் இடத்தில் அனாவசியமான சத்தங்கள் இல்லாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.
 • தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவரும் நீங்களும் ஒரே அறையில் தூங்குகிறீர்கள் என்றால், உங்களுடைய தூங்கும் பழக்கம் அவர்களுடைய தூக்கத்தைப் பாதிக்கிறதா என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக நீங்கள் குறட்டை விடுகிறவராக இருந்தால் அல்லது அவர்கள் தூங்கி நெடுநேரம் கழித்து நீங்கள் தூங்கச் சென்றால், அதன்மூலம் அவர்களுடைய தூக்கம் பாதிக்கப்படக்கூடும். அதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்து அவர்கள் சௌகரியமாகத் தூங்குவதற்கான சூழலை உண்டாக்கித் தாருங்கள்.
 • தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தூக்கப் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வதற்கு நீங்கள் உதவுங்கள், அவர்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, தூங்குவதற்கு முன்னால் மனத்தைத் தளர்வாக்கும் சில பயிற்சிகளைச் செய்வது போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள், அதன்மூலம் அவர்களுடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுங்கள்.

ஒருவேளை இந்தப் பிரச்னை நீண்டநாள்களுக்குத் தொடர்ந்தால் அவர்கள் உரிய நிபுணர்களைச் சந்தித்து சிகிச்சை பெறவேண்டும் என்று சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org