சமூகப் பதற்றக் குறைபாடு (SAD)

Q

சமூகப் பதற்றக் குறைபாடு (SAD) என்றால் என்ன?

A

ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்கிறோம், பல பேர் மத்தியில் நிற்கப் போகிறோம், முன்பின் தெரியாதவர்களெல்லாம் நம்மைக் கவனிக்கப் போகிறார்கள் என்றால் நம் எல்லாருக்குமே கொஞ்சம் கவலை உணர்வு ஏற்படும். உதாரணமாக நீங்கள் ஒரு மேடையில் பேசப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னால் உங்களுடைய மனம் எங்கெங்கோ ஓடும், வகுப்பில் எல்லாருக்கும் முன்னால் உங்களுடைய ஆசிரியர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் உங்கள் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும், இப்படி இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்தப் பதற்றங்களெல்லாம் மிகவும் இயல்பானவை, சில நாள்களில் இவை குறைந்து விடும்.

ஆனால் SAD அல்லது சமூக பயம் கொண்டவர்களுக்குப் பிறர் தங்களைக் கவனிக்கப் போகிறார்கள் என்று உணர்ந்தாலே தீவிரமான பயமும் பதற்றமும் வரும். அப்படிப்பட்டவர்கள் சாதாரணமான தினசரி வேலைகளான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வது அல்லது அலுவலகத்தில் ஒரு சந்திப்பில் பங்கேற்பது, மற்றவர்கள் முன்னால் எதைப்பற்றியாவது பேசுவது, ஒரு திருமண நிகழ்ச்சி அல்லது விருந்தில் கலந்துகொள்வது, நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது போன்றவை கூடத் தீவிரப் பதற்றத்தை உண்டாக்கலாம்.

Q

SADயின் அறிகுறிகள் என்ன?

A

SAD கொண்டவர்களிடம் உடல் சார்ந்த மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

உடல் சார்ந்த அறிகுறிகள்: நடுங்குதல், வியர்த்தல், குமட்டல் மற்றும் பேசும்போது வாய் திக்குதல். இதுபோன்ற அறிகுறிகள் சம்பந்தப்பட்ட நபரை மிகவும் பதற்றப்படுத்துகின்றன, சுற்றியிருக்கிறவர்கள் தங்களைக் கவனித்துவிட்டார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், மிகவும் அவமானமாகவும் சங்கடமாகவும் உணர்கிறார்கள். இதனால் அவர்களுடைய பழகும் விதம் பின்வரும் வகைகளில் மாறலாம்:

  • அவர்கள் பேசவேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள்.
  • அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட மற்றும் அலுவல் சார்ந்த உறவுகளிலிருந்து விலகத் தொடங்குகிறார்கள்.
  • பிறரிடம் பேசும்போது அவர்கள் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவதில்லை.

இந்த அறிகுறிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் சிரமத்தைத் தரக்கூடும், தினசரி வாழ்க்கையைச் சமாளிப்பதற்கே அவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருந்தால் அவர்களிடம் பேசுங்கள், ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என அவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

Q

SAD எதனால் உருவாகிறது?

A

SAD ஐ உண்டாக்கக் கூடிய சில காரணிகள்:

  • குடும்ப வரலாறு: குடும்பத்தில் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வரலாம் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் இது மரபு ரீதியில் வருகிறதா அல்லது ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகள், பழக்கவழக்கங்களைப் பார்த்துக் குழந்தைகள் அதைக் கற்றுக் கொள்கின்றனவா என்பது தெளிவாக இல்லை.
  • பழைய அனுபவங்கள்: ஒருவர் இளம் பருவத்தில், பள்ளியில் மற்றவர்களுடைய அதீதமா கேலியைச் சந்தித்திருக்கலாம், அல்லது வேறுவிதமான அவமானத்தைச் சந்தித்திருக்கலாம், இது பின்னர் SAD ஆக ஆகலாம்.
  • குழந்தைப்பருவப் பண்புகள்: குழந்தைப்பருவத்தில் மிகவும் கூச்சம் உள்ளவர்களாக அல்லது முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்கிறவர்களாக வளரும் குழந்தைகள் தங்களுடைய பதின்பருவத்தின் பிற்பகுதியில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கலாம்.

Q

SADக்குச் சிகிச்சை பெறுதல்

A

SAD மிகவும் சிரமம் தருகிற ஒரு நோய், ஆனால் அதைக் குணப்படுத்தலாம். முறையாகச் சிகிச்சை பெற்று,  சமாளிக்கும் திறன்களைக் கற்றுக் கொண்ட பிறகு பெரும்பாலானோர் சமூகச் சூழ்நிலைகளைச் சமாளிக்க இயலுகிறது. மற்றப் பதற்றக் குறைபாடுகளைப் போலவே SADயின் சிகிச்சையிலும் மருந்துகள், உளவியல் சிகிச்சை அல்லது இவை இரண்டின் கூட்டணி உதவுகிறது. SADஐக் குணப்படுத்துவதில் அறிவாற்றல் செயல்முறை சிகிச்சை (CBT) நன்கு பலன் தருகிறது. பதற்றத்தையும் அசௌகரியத்தையும் குறைப்பதற்கு மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. குணமாகும் நேரம் ஒருவருக்கொருவர் மாறுபடும், ஆனால், பாதிக்கப்பட்டவர் தனது சிகிச்சைத் திட்டத்தை கவனமாகப் பின்பற்றுவது முக்கியம்.

Q

SAD உள்ள ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்

A

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது நீங்கள் கவனித்தால் இந்தக் குறைபாட்டைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேசலாம், ஒரு நிபுணரின் உதவி பெற வேண்டும் என்று ஊக்கம் தரலாம். அவர்கள் மருத்துவரிடம் செல்லும்போது நீங்களும் உடன்வருவதாகச் சொல்லுங்கள். இந்தக் குறைபாட்டைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள், அப்போதுதான் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை நீங்கள் இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளஇயலும். பொறுமையாக இருங்கள், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளியுங்கள். இந்த சிகிச்சைக்கு அதிக நேரம் ஆகலாம், ஆகவே பொறுமையாக இருந்து அவர்களுக்கு ஆதரவளியுங்கள், சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஊக்கம் தாருங்கள்.

Q

SAD ஐச் சமாளித்தல்

A

சமூக பயத்திற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவி பெற வேண்டும். நிபுணரைச் சந்திக்கவேண்டுமே என்று அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தால் அவர்களுக்கு நம்பிக்கை உள்ள ஒருவரிடம் பேசலாம், தான் மனநல நிபுணரைச் சந்திக்கும்போது உடன் வருமாறு அவர்களைக் கேட்கலாம். வாழ்க்கை முறையில் நேர்விதமான மாற்றங்களை உண்டாக்குவது எப்போதும் ஒருவருடைய நலனை மேம்படுத்தும். தினசரி வாழ்க்கையில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும், போதுமான அளவு தூங்கவேண்டும், உடற்பயிற்சி செய்யவேண்டும். இதேபோன்ற பிரச்னைகொண்ட மக்களுடைய ஆதரவுக்குழு ஒன்றிலும் அவர்கள் இணையலாம், அது அவர்கள் விரைவில் குணமாக உதவும். இந்த நோய்க்கான  சிகிச்சை பெறும்போது ஒருவர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் தெரியாமல் இருக்கலாம், ஆனால், நம்பிக்கையை இழந்துவிடாமல் அவர் சிகிச்சையைத் தொடரவேண்டியது முக்கியம். அப்போதுதான் அவர் முழுமையாகக் குணம்பெற இயலும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org