பேச்சுக் குறைபாடு

Q

பேச்சுக் குறைபாடு என்றால் என்ன?

A

வழக்கமாகக் குழந்தைகள் வளர வளர பேச்சு மற்றும் மொழித்திறன்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளச் சிரமப்படக்கூடும்.

பேச்சுக் குறைபாடு என்பது ஒரு குழந்தையால் தான் விரும்புவதைச் சரியாகச் சொல்ல இயலாமல் போதல், குரல்,  சரளத்தன்மை ஆகியவற்றில் அதற்குச் சிரமம் ஏற்படுதல் அல்லது தகவல் தொடர்புக்குத் தேவையான பேச்சு ஒலிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குச் சிரமம் ஏற்படுதல். இந்தக் குழந்தைகளால் சொற்களை நன்கு புரிந்து கொள்ள இயலும், இவர்களுக்கு நல்ல மொழித் திறன்கள் இருக்கும், ஆனாலும் இவர்கள் பேசுவதற்குச் சிரமப்படக்கூடும்.

குறிப்பு: பேச்சுக் குறைபாடு என்பதும் மொழிக் குறைபாடு என்பதும் வெவ்வேறு பிரச்னைகள். பேச்சுக் குறைபாடு கொண்ட குழந்தைகள் சொற்களின் ஒலிகளை உச்சரிக்கச் சிரமப்படுவார்கள், மொழிக் குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறருடன் பேசுவதற்குச் சிரமப்படுவார்கள் (வெளிப்பாட்டு மொழிக் குறைபாடு) அல்லது பிறர் என்ன சொல்கிறார்கள் அல்லது என்ன தெரிவிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள் (பெறுதல் மொழிக் குறைபாடு).

Q

பேச்சுக் குறைபாட்டின் வகைகள்

A

 • அப்ராக்ஸியா: இது ஓர் இயக்கவியல் சார்ந்த பேச்சுக் குறைபாடு. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைக்கு நாக்கு, உதடுகள் அல்லது தாடைகள் போன்றவை தானே அசைத்துப் பேச்சுக்கான ஒலிகளை உண்டாக்குவதில் சிரமம் இருக்கும். இந்தக் குழந்தைகளுக்குத் தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் எனத் தெரியும், அதே சமயம் அவர்களுடைய மூளை தசைகளை அசைத்துச் சொற்களை உருவாக்க இயலாமல் இருக்கிறது.
 • டிஸ்ஆர்த்ரியா: இந்தப் பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய வாயில் இருக்கும் தசைகள் பக்கவாதத்துக்கு உட்பட்டிருக்கின்றன அல்லது பலவீனமாக இருக்கின்றன அல்லது பொதுவாக மோசமான நிலையில் இருக்கின்றன. இதனால் அவர்களுடைய பேச்சு மெதுவாகவோ, துல்லியமின்றியோ, தெளிவின்றியோ அல்லது மூக்கால் பேசுவது போலவோ (வாயைவிட மூக்கிலிருந்து அதிக ஒலி வெளிப்படுதல்) இருக்கலாம்.

Q

எது பேச்சுக்குறைபாடு அல்ல?

A

குழந்தைகள் பேசக் கற்கும் போது அவர்கள் புதிய சொற்களைக் கற்றுக் கொண்டு தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு நேரமாகும். இந்தக் காலக்கட்டத்தில் அவர்களுடைய பேச்சு உடைந்த பேச்சாகக் காணப்படலாம். இது மிகவும் இயல்பானது, இது பேச்சுக் குறைபாடு அல்ல. இந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் பேச்சில் நாம் மிகவும் கவனம் செலுத்தினால் அந்தக் குழந்தைக்குத் திக்குவாய்ப் பிரச்னை வரக்கூடும்.

Q

பேச்சுக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?

A

பேச்சுக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும், அதன் தீவிரத்தன்மையும் குழந்தைக்குக் குழந்தை மாறுபடும். சில நேரங்களில் இந்த அறிகுறிகள் மிகவும் மிதமானவையாக இருக்கலாம், அவற்றை யாரும் கவனிக்காமலே இருந்துவிடலாம். அப்படிப்பட்ட மிதமான பேச்சுக் குறைபாடுகள் பெரும்பாலும் தானே சரியாகிவிடும்.

சில குழந்தைகளுக்குப் பேச்சுக் குறைபாட்டுடன் வேறு விதமான பிரச்னைகளும் இருக்கலாம். உதாரணமாக சொல்வளம் குறைவாக இருத்தல், வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது கணிதம் ஆகியவற்றில் பிரச்னைகள்; ஒருங்கிணைப்பு அல்லது இயக்கத் திறன் பிரச்னைகள்; மெல்லுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம்.

ஒரு மிக இளைய குழந்தை (0 – 5 ஆண்டுகள்):

 • இந்தக் குழந்தை மழலைமொழியில் பேசுவதில்லை
 • சொற்களையும் ஒலிக் குறிப்புகளையும் சரியான வரிசையில் அல்லது சரியான ஒழுங்குடன் அமைப்பதில் சிரமப்படுகிறது
 • ஒரு சொல்லை உச்சரிக்கும்போது சில அசைகளையோ ஒலிகளையோ விட்டுவிடலாம்
 • அந்தக் குழந்தைக்கு ஒலிகளைத் தொகுத்துப் பேசுவதில் சிரமங்கள் இருக்கின்றன; இதனால் ஓர் ஒலிக்கும் இன்னோர் ஒலிக்கும் இடையே அந்தக் குழந்தை நீண்ட இடைவெளி விடலாம். சிரமமான ஒலிகளைத் தவிர்த்து எளிய ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இந்தக் குழந்தை பேசலாம் அல்லது சிரமமான ஒலிகளைச் சொல்லாமலே விட்டுவிடலாம்
 • சாப்பிடுவதில் பிரச்னைகள் இருக்கலாம்

வயதான ஒரு குழந்தை (5 - 10 ஆண்டுகள்):

 • சீரற்றவகையில் ஒலிப் பிழைகளைச் செய்கிறது, இவை முதிர்ச்சியின்மையால் ஏற்பட்ட பிழைகளாக அமைவதில்லை
 • இந்தக் குழந்தையால் நன்றாகப் புரிந்துகொள்ள இயலும், ஆனால் அந்த அளவிற்குச் சிறப்பாகப் பேச இயலாது
 • சிறிய சொற்களை அல்லது வாக்கியங்களை இந்தக் குழந்தை எளிதில் சொல்லிவிடும், பெரிய சொற்கள், வாக்கியங்களைச் சொல்வதற்கு அது சிரமப்படுவதை நாம் தெளிவாகக் காணலாம்
 • சில சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்குச் சிரமப்படும், அதனைத் திரும்பச் சொல்லும்போது ஏதாவது பிழை செய்யும்
 • பேசும்போது உடைந்த மொழியில் பேசுகிறது அல்லது ஒரே மாதிரிப் பேசுகிறது அல்லது தவறான ஒலிக்குறிப்பை அல்லது சொற்களை அழுத்திப் பேசுகிறது
 • பேசும்போது தொடர்ந்து பிழைகளைச் செய்து கொண்டே இருக்கிறது

Q

பேச்சுக் குறைபாடுகள் எதனால் ஏற்படுகின்றன?

A

பெரும்பாலான குழந்தைகளில் பேச்சுக் குறைபாடு ஏன் வருகிறது என்பது தெளிவாகத் தெரிவதில்லை. இதுபற்றி நடைபெற்ற ஆராய்ச்சிகளைத் தொகுத்துப் பார்க்கும்போது சில குழந்தைகளில் பேச்சுக்குத் தேவையான தசைகளை மூளையால் இயக்க இயலாமல் போவதும் அதனால் இந்தப் பிரச்னை வந்திருக்கக்கூடும்என்று தெரிகிறது. பேச்சுக் குறைபாட்டை உண்டாக்கக் கூடிய வேறு சில நிலைகள்: பிளவுபட்ட அண்ணம், கேட்டல் குறைபாடு அல்லது செரிபரல் பால்சி.

Q

பேச்சுக் குறைபாடு எப்படிக் கண்டறியப்படுகிறது?

A

ஒரு குழந்தைக்கு இந்த வயதில் தான் பேச்சுக் குறைபாடு வரும் எனத் தெளிவாக வரையறுக்க இயலாது. மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் பேச்சுக் குறைபாடு வந்திருந்தால் அதனை நிபுணர்களால் கண்டறிய இயலாமலே போகலாம், காரணம் அந்தக் குழந்தை பேச்சுக் குறைபாட்டைக் கண்டறியும் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகளை ஒழுங்காகச் செய்யாது, நிபுணர்களுக்கோ ஒத்துழைக்காது. ஆகவே ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு வந்திருப்பது கண்டறியப்படுகிறதா இல்லையா என்பது அந்தக் குழந்தை இதற்கான பரிசோதனைகளுக்கு எந்த அளவு முழுமையாக ஒத்துழைக்கிறது என்பதைப்பொறுத்து அமைகிறது.

பேச்சுக் குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் சில தேர்வுகள்:

 • டென்வர்தெளிவான உச்சரிப்பு வடிகட்டல் தேர்வு
 • ஆரம்பகால மொழி மைல்கல் அளவுகோல்
 • டென்வர் II
 • Peabody பட சொல்வளத் தேர்வு, மேம்பட்ட வடிவம்
 • கேட்டல் பரிசோதனை

பேச்சுத் தேர்வு: பேச்சு-மொழி மருத்துவ நிபுணர் ஒருவர் குழந்தையின் வளர்ச்சி வரலாற்றைப் பதிவு செய்கிறார், அந்தக் குழந்தைக்கு வேறு மருத்துவப் பிரச்னைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கிறார். இந்த நிபுணர் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் குழந்தை வழக்கமான முறையில் பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறதா அல்லது மெதுவாகக் கற்றுக் கொள்கிறதா என்பதையும் பரிசோதிக்கிறார்.  

ஒரு வேளை அந்தக் குழந்தையிடம் காணப்படும் பண்புகள் வழக்கமான பேச்சு/மொழி முன்னேற்றத்திற்குப் பொருந்தவில்லை என்று நிபுணர் கருதினால் அந்தக் குழந்தைக்குப் பேச்சுக் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வேறு சில பரிசோதனைகளும் மதிப்பீடுகளும் நடத்தப்படும்.

மேம்பாடு மற்றும் மாற்று தகவல் தொடர்பு (AAC): இந்த அணுகுமுறையில் கணினிகள், ஐபேட்கள் மற்றும் ஒலி-ஒளி மூலம் மேம்படுத்தப்பட்டத் தொகுப்புப் பாடங்கள் போன்ற உதவித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் குழந்தையின் பேச்சு மேம்படுத்தப்படுகிறது.

ஆடியோமெட்ரி பரிசோதனை: புத்திசாலித்தனக் குறைபாடு மற்றும் கேட்டல் குறைபாடு போன்றவற்றால் பேச்சுக் குறைபாடுகள் வரலாம். சில குழந்தைகளுக்குப் பேச்சுக் குறைபாடு வரக்கூடும் என்கிற ஆபத்து தெரிந்தால் அவர்களை உடனே ஓர் ஒலியியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று ஓர் ஒலியியல் பரிசோதனையை நடத்த வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் ஒலியியல் மற்றும் பேச்சுச் சிகிச்சையைத் தொடங்கலாம்.

Q

பேச்சுக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை எடுத்தல்

A

பேச்சுக் குறைபாட்டைச் சரிப்படுத்துவதற்கு இது ஒன்றுதான் சரியான அணுகுமுறை என்று எதுவும் கிடையாது. குழந்தைகளுடைய பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்கு நிபுணர்கள் பலவிதமான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சிகிச்சைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விதமாகப் பலன் தருகின்றன, சில குழந்தைகள் மற்றவர்களைவிட விரைவாகக் கற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். மற்ற குழந்தைகள் சற்றே மெதுவாகக் குணமாவார்கள்.

நிபுணர் அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் பேசி அந்தக் குழந்தைக்குப் பொருந்துகிற ஆதரவையும் அரவணைப்பையும் வழங்குமாறு ஆலோசனை கூறலாம். இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் தான் பலன் கிடைக்கும் என்பதால் பெற்றோரும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கலாம், அவற்றை அவர்கள் வீட்டில் தொடர்ந்து செய்யலாம். இதன் மூலம் குழந்தை விரைவில் குணமாகும். ஒரு குழந்தை இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையாகக் குணமாவதற்கு ஓர் ஆதரவான, அன்பான வீட்டுச் சூழல் மிகவும் முக்கியம்.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருந்தால்தான் அது பேச்சுக் குறைபாட்டுக்கானச் சிகிச்சைகளை ஏற்றுக் கொண்டு விரைவில் குணமாகும். காது மற்றும் சைனஸ் தொற்று, டான்சில்ஸ், ஒவ்வாமைகள் அல்லது ஆஸ்துமா போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளைக் கொண்ட குழந்தைகள் இந்தச் சிகிச்சையால் விரைவில் பலன் பெற இயலாமல் இருக்கலாம், காரணம் உடல் சார்ந்த நோய்களுக்குத் தரப்படும் சிகிச்சைகளும் மருந்துகளும் பேச்சுச் சிகிச்சையைப் பாதிக்கலாம். ஆகவே பெற்றோர் தங்களுடைய குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், அப்போது தான் அவர்கள் பேச்சுக் குறைபாட்டுக்கான சிகிச்சையை விரைவில் ஏற்றுக் கொண்டு குணமாவார்கள்.

Q

பேச்சுக் குறைபாட்டுக்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டால் என்ன ஆகும்?

A

ஒரு குழந்தைக்குப் பேச்சுக் குறைபாடு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தராவிட்டால் அவர்களுக்கு வேறு சில பிரச்னைகள் வரக்கூடும். உதாரணமாக:

 • மொழி வளர்ச்சியில் தாமதம்
 • ஒரு சொல்லை நினைவுக்குக் கொண்டு வருவது அல்லது ஒரு வாக்கியத்தில் இருக்கும் சொற்களின் வரிசையை நினைவுக்குக் கொண்டு வருவதில் குழப்பங்கள் ஏற்படுதல்
 • நுணுக்கமான இயக்கவியல் அசைவுகள்/ஒருங்கிணைப்பில் சிரமங்கள் ஏற்படுதல்
 • அவர்களுடைய வாயில் கூச்ச உணர்வு மிக அதிகமாகயிருத்தல் (hypersensitive) அல்லது மிகக் குறைவாகயிருத்தல் (hyposensitive), இதனால் இவர்கள் பல்துலக்க மறுக்கலாம் அல்லது மொறுமொறுப்பான உணவுகளைச் சாப்பிட மறுக்கலாம்
 • வாசித்தல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது எழுதுதலில் சிரமங்கள் ஏற்படலாம், இது அவர்களுடைய கல்வி சார்ந்த முன்னேற்றத்தைப் பாதிக்கலாம்.

Q

பேச்சுக் குறைபாடுள்ள குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல்

A

நிபுணர்கள் சிபாரிசு செய்யும் சிகிச்சையைத் தொடர்ந்து செய்வதுடன் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்திப் பெற்றோர் தங்களுடைய குழந்தையின் தகவல் தொடர்பு மேம்படுவதற்கு உதவலாம்:

 • சில சிகிச்சைச் செயல்பாடுகளை அவர்கள் வீட்டிலும் செய்து தங்கள் குழந்தைக்குப் பயிற்சி தரலாம், இதன் மூலம் அவர்களுடைய குழந்தை சொற்களின் சரியான ஒலிகளை அடையாளம் கண்டுகொள்ளும்.
 • எளிய கேள்விகளைக் கேட்டுத் தங்கள் குழந்தையிடமிருந்து பதில் பெறலாம், இதன் மூலம் அவர்களுடைய குழந்தை சொற்களைப் பயன்படுத்திப் பேசப் பழகிக் கொள்கிறது.
 • தங்கள் குழந்தையை மெதுவாகப் பேசும்படி ஊக்கப்படுத்தலாம், அவர்கள் மெதுவாகப் பேசும்போது பொறுமையாகக் கேட்கலாம், அவர்கள் சொற்களைத் துல்லியமாக உச்சரிக்கும்போது பாராட்டலாம்.
 • தங்கள் குழந்தை பாதுகாப்பாக உணரச்செய்யலாம், அதற்குப் பெற்றோர் அவர்களிடம் 'நீ எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் சரி நான் பொறுமையாகக் கேட்பேன், எனக்கு எந்த அவசரமும் இல்லை, நீ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கு நான் உதவுவேன்' எனச் சொல்லவேண்டும், அதனை அவர்கள் முழுமையாக உணரச் செய்யவேண்டும்.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org