ஸ்கிஜோஃப்ரெனியா கொண்டவருடன் பேசுதல்

Q

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவருடன் பேசுவது சிரமமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது அத்தனை சிரமம் அல்ல

A

மன நலப் பிரச்னை கொண்ட ஒருவருடன் பேசுதல் மிகவும் சவாலான ஒரு விஷயமாகத் தோன்றலாம். அவர்களுடன் பேசுகிறவர்கள் பல காரணங்களால் கஷ்டமாக, தயக்கமாக உணரலாம், உதாரணமாக: 'எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை'; 'நான் நல்லது நினைத்துதான் பேசுகிறேன், ஆனால், அதன்மூலம் நான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடுவதாக அவர் நினைத்துவிடுவாரோ?'; 'மனநலப் பிரச்னை கொண்டவர்களைச் சமூகம் மிகவும் இழிவாக நினைக்கிறதே, அவருடைய பிரச்னையைப்பற்றி எனக்குத் தெரியும் என்று தெரிந்தால் அவர் என்ன நினைப்பாரோ! ஒருவேளை, அவர் தவறாக நினைத்துவிட்டால்? அவர் மனத்தைப் புண்படுத்தாமல் நான் என்ன பேசுவது? நான் அவரை வருந்தச்செய்ய விரும்பவில்லை... ஒருவேளை அவர்கள் சொல்லும் பதிலை என்னால் கையாள இயலாவிட்டால்?' இதுபோன்ற பயங்களால், மன நலப் பிரச்னை கொண்டவர்களிடம் நாம் அதிக எச்சரிக்கையோடும் மிகுந்த நுண்ணுணர்வோடும்தான் பழகுகிறோம்.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர், அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர், அல்லது நண்பர், அல்லது சக ஊழியர் என்றமுறையில், நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம், இதற்கு நீங்கள் அவர்களுடன் சாதாரணமாகப் பேசினாலே போதும்.

Q

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவருடன் பேசுவது ஏன் முக்கியமாகிறது?

A

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் குணமாவதற்கு, ஆதரவான ஒரு சூழல் தேவை. பாதிக்கப்பட்டவருடைய நண்பர்களும் உறவினர்களும் இந்த ஆதரவான சூழலை உருவாக்கலாம், அதற்கு அவர்கள் இந்தப் பிரச்னையைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ளவேண்டும், தேவைப்படும்போது, பாதிக்கப்பட்டவருக்கு உதவவேண்டும்.

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர், அந்தக் குறைபாட்டினால் பிறரிடமிருந்து விலகி, தனியாகவே இருக்கிறார். ஆகவே, ஒரு பிரச்னையை அடையாளம் கண்டு உதவி கேட்பது அவர்களுக்கு மிகவும் சிரமம். இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்கள் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பித் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்கு ஒரு வெளித்தூண்டுதல் தேவை. அதனால்தான், அவர் குணமாவதற்கு மற்றவர்கள் அவருடன் பேசுவது முக்கியம் என்கிறார்கள். மற்றவர்கள் அவரிடம் சகஜமான விஷயங்களைப் பேசலாம், அல்லது, சும்மா, எப்படி இருக்கிறீர்கள் என்பதுபோல் விசாரித்தால்கூடப் போதும்.

பிறருடன் தொடர்பில் இருத்தல், ஆரோக்கியமான சமூக உரையாடல்கள், மற்றவர்களுடன் பழகுதல் போன்றவை ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவருக்கு மிகவும் உதவும், அவர்களுடைய தனிமைப்பிரச்னையைத் தீர்க்கும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், பல காரணங்களால் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசாமலிருக்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில், யாராவது ஒருவர் வலிய முன்வந்து அவர்களிடம் பேசினால், அது மிகவும் நல்ல பலன் தரக்கூடும்.

பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே தனக்குள் விரக்தி, யாரும் தனக்கும் உதவுவதில்லை என்கிற எண்ணங்களில் மூழ்கியிருப்பார், யாரை அணுகி இதுபற்றிப் பேசுவது என்று அவருக்குத் தெரிந்திருக்காது. ஆகவே, அப்படி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அதைச் செய்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்பது தெரிந்தால், அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

Q

நான் எப்படி அவருடன் பேசுவது?

A

பாதிக்கப்பட்டவரிடம், 'உங்களுடைய பிரச்னையை எண்ணி நான் வருந்துகிறேன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லலாம். இதை நேரடியாகச் சொல்வதற்குப்பதிலாக, இப்படி எளிமையாகச் சொல்லலாம்: "உங்களுக்குள் நிறைய குழப்பம் இருப்பது எனக்குப் புரிகிறது, உங்கள்மீது எனக்கு நிறைய அக்கறை இருக்கிறது, நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன், அதைத் தெரிந்துகொள்ளுங்கள்..."

Q

இப்படிப் பேசினால், என்னவிதமான பதில் வரும்?

A

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர், மற்றவர்களைப்போல் 'சாதாரணமாக'ப் பேசுவார், பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கக்கூடாது. நீங்கள் என்ன பேசினாலும், அவர்கள் பதில் சொல்லாமல் இருக்கலாம், அல்லது, ஒரே வார்த்தையில் பதில் சொல்லலாம். சில நேரங்களில், பாதிக்கப்பட்டவர் 'நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அதைப்பற்றிப் பேச நான் விரும்புகிறேன்' என்று சொல்லக்கூடும், ஆனால், அவருடைய முகபாவமும், குரலின் தொனியும் வேறுவிதமாக இருக்கும், அவர் இதைப்பற்றிப் பேச விரும்பவில்லை என்பதைக் காட்டும்.

இதனால், நீங்கள் குழப்பமடையலாம், நீங்கள் பேசுகிற விஷயத்தில் அவர்களுக்கு நிஜமாகவே ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்று திகைக்கலாம், இவர் ஏன் இப்படிக் குழப்புவதுபோல் நடந்துகொள்கிறார் என்றூ ஆச்சர்யப்படலாம். அவர் இப்படி நடந்துகொள்வது, அவருடைய மனப்பிரச்னையால்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் காத்திருக்கவேண்டும், அவரிடம் தொடர்ந்து பேசவேண்டும், ஒரு திருப்திகரமான பதிலுக்காகக் காத்திருக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவரிடம் பேசும்போது, உங்களுக்குள் சில சங்கடங்கள், தயக்கங்கள், பதற்றங்கள் இருக்கலாம், என்ன செய்வது, என்ன பேசுவது என்று நீங்கள் குழம்பலாம், அதையெல்லாம் வெளிக்காட்டாதீர்கள், அப்படிச்செய்தால், பாதிக்கப்பட்டவர் உங்களுடன் உரையாட மேலும் சிரமப்படுவார்.

ஞாபகமிருக்கட்டும், ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைகொண்ட ஒருவர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமலிருக்கலாம்; அதற்காக, அவர்களுக்குத் தீவிர உணர்வுகளே இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. அதேபோல், அவர்கள் சத்தம்போட்டுப் பேசாமலிருக்கலாம்; அதற்காக, அவர்களுக்கு எதுபற்றியும் கருத்தே இல்லை என்று எண்ணிவிடக்கூடாது.

Q

மனத்தடையை உடைத்தல்

A

வழக்கமாக ஒருவரிடம் நீங்கள் எப்படிப் பேசுவீர்களோ அதேபோல் அவரிடமும் பேசுங்கள். மனப்பிரச்னை காரணமாக, அவர்களுடைய சில நடவடிக்கைகள் மாறியிருக்கலாம். அவர்களுடன் இயல்பாகப் பழகுங்கள்.

ஒரு பொதுவான தலைப்பை எடுத்துக்கொண்டு பேச்சைத் தொடங்குங்கள். பாதிக்கப்பட்டவருடைய நண்பர் அல்லது சக ஊழியர் என்றமுறையில், அவருடைய ஆரோக்கியம்/ உணர்வுப் பிரச்னைகளைப்பற்றி நீங்கள் பேசவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே, பொதுவான விஷயங்களைப்பற்றிப் பேசுங்கள், உதாரணமாக, வேலையைப்பற்றி, மற்ற சில பிரச்னைகளைப்பற்றிப் பேசலாம், அல்லது, எளிய தலைப்புகளைப் பேசலாம், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர் அனுபவித்துவரும் சிரமங்களுடன் தொடர்புடைய எதையும் பேசக்கூடாது.

அவர்களுக்கு உதவிசெய்ய நீங்கள் இருக்கிறீர்கள் என்று உறுதிதருவதுபோல் பேசுங்கள். அதேசமயம், உங்கள் உதவியை அவர்கள்மீது திணிக்கவேண்டாம், அளவுக்கதிகமாக உணர்ச்சிவயப்படவேண்டாம்; அவர்கள் இயல்பாக இருப்பதற்கு இடம் கொடுங்கள். உங்களுடைய எண்ணத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தியபிறகு, அவர்களே உங்களிடம் பேசுவார்கள், அதற்காகக் காத்திருங்கள். ஞாபகமிருக்கட்டும், அவருடைய மிகப்பெரிய பிரச்னைகளைத் தீர்க்கும் தகுதி உங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான், அதற்கு முயற்சிசெய்யவேண்டிய அவசியம் இல்லை.

அவருடைய குறைபாடு, அது எப்படிக் கண்டறியப்பட்டது, அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதுபற்றிய விவரங்களைத் தோண்டித் துருவாதீர்கள். 'நீங்கள் உங்களுக்குள் குரல்களைக் கேட்கும்போது என்ன நடக்கிறது?' அல்லது 'அந்தக் குரல்கள் உங்களிடம் என்ன சொல்கின்றன?' என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மிகவும் தீவிரமாக விசாரிக்கவேண்டாம்.

Q

உங்களுடைய ஆலோசனைகள், அறிவுரைகளைச் சொல்லுங்கள்

A

பல நேரங்களில், பாதிக்கப்பட்டவருடைய பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை நாம் வழங்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்டவர் தன்னுடைய தீர்மானத்தின் விளைவுகளை எடைபோடுகிற நிலையில் இருக்கலாம், அப்படி இல்லாமலும் இருக்கலாம், நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அல்லது அறிவுரையை அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளலாம் அல்லது தவறான பின்னணியுடன் புரிந்துகொள்ளலாம் என்பதை நினைவில் வைக்கவும். அவருடைய குடும்பத்தினரும் மருத்துவர்களும் அவரைக் குணப்படுத்தப் பல முயற்சிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அவையெல்லாம் முக்கியமில்லை என்று அவர் நினைக்கும்படி எதையாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லிவிடாதீர்கள்.

நீங்கள் ஆலோசனை அல்லது அறிவுரையைத் தந்தே தீரவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினால், கவனமாகச் சிந்தித்துப் பேசுங்கள். நீங்கள் சொல்லும் அறிவுரையை, குறிப்பாக, சிகிச்சையைப்பற்றிய உங்களுடைய கருத்துகளை அவர்கள் எந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளக்கூடும் என்பதைச் சிந்தித்துப் பேசுங்கள். உதாரணமாக, அவருக்கு மருந்துகளைச் சாப்பிடப்பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் நீங்கள், 'எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படிதான், நிறைய மருந்துகளைச் சாப்பிட்டு எப்போதும் தூக்கக்கலக்கத்துடன் இருந்தார்' என்றோ, வேறு பக்கவிளைவுகளைப்பற்றியோ பேசினால், அவர்கள் மருந்து சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிடக்கூடும்.

அவர்கள் குணமாக உதவக்கூடிய ஒரு நல்ல சிகிச்சை உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதைப்பற்றி அவர் தன்னுடைய மருத்துவர், ஆலோசகர், அல்லது அவரைக் கவனித்துக்கொள்பவரிடம் பேசலாம் என்று ஆலோசனை சொல்லுங்கள். ஒருவர் ஸ்கிஜோஃப்ரெனியாவுக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு சிகிச்சைமுறையை நீங்கள் சிபாரிசு செய்ய விரும்பினால், அதுபற்றிச் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் பேசவேண்டும், வழக்கமான சிகிச்சையுடன் இந்தத் துணைச் சிகிச்சைகளைப் பயன்படுத்தலாமேயன்றி, வழக்கமான சிகிச்சையை நிறுத்திவிட்டு இவற்றைத் தொடங்கக்கூடாது.

பாதிக்கப்பட்டவர் தங்களுக்குச் சிரமம் தருகிற சில உறவுப்பிரச்னைகளைப்பற்றி உங்களிடம் பேசலாம். உதாரணமாக, தன்னைக் கவனித்துக்கொள்கிறவர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுடன் தனக்கு இருக்கும் சண்டையை அவர் விவரிக்கலாம். உண்மையில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அவசரப்பட்டு எதையும் சொல்லாதீர்கள், அதுபற்றி அவர் தன்னுடைய மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பேசலாம் என்று ஆலோசனை சொல்லுங்கள்.

Q

நம்பிக்கையை உடைத்தல்

A

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவர் உங்களிடம் ஏதோ சில ரகசிய விவரங்களைச் சொல்கிறார். அவருடைய மருத்துவர் அல்லது அவரைப் பார்த்துக்கொள்கிறவரிடம் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்?

பாதிக்கப்பட்டவர் சொல்லும் விஷயம் ஒரு வெளிப்படையான மிரட்டலாக இருக்கிறது, அல்லது, அவர்கள் தன்னையோ பிறரையோ காயப்படுத்துவதைப்பற்றியதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, அவர்கள் தற்கொலையைப்பற்றிப் பேசுகிறார்கள், பிறரைக் கொல்வதுபற்றிப் பேசுகிறார்கள், பிறரைக் காயப்படுத்துவதுபற்றிப் பேசுகிறார்கள் என்றால், அதை அவர்களுடைய குடும்பத்தினர் அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களிடம் சொல்லவேண்டுமா என்று சிந்தியுங்கள்.

அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அப்படிச்சொன்னால், அவர்கள் பயப்படக்கூடும், அல்லது, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பக்கூடும். அதற்குப்பதிலாக, உங்களுடைய கவலைகளைமட்டும் அவர்களிடம் சொல்லுங்கள், பாதிக்கப்பட்டவர் எதைச்சொன்னதால் உங்களுக்கு அந்தக் கவலைகள் ஏற்பட்டன என்று சொல்லுங்கள்.

பாதிக்கப்பட்டவரிடம், அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதாகச் சொல்வது, அல்லது, பிறரைக் காயப்படுத்தப்போவதாகச் சொல்வதை அலட்சியப்படுத்தக்கூடாது என்று சொல்லுங்கள். இந்த எண்ணங்களைப்பற்றி அவர்களுடைய குடும்பத்தினருக்குச் சொல்வது நல்லது என்று மென்மையாகச் சொல்லுங்கள். நீங்கள் ஏன் இதைச் சொல்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள். உதாரணமாக: "எனக்கு உங்கள்மீது அக்கறை உள்ளது, அதனால், இந்த விவரத்தை நான் உங்களுடைய குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், காரணம், அவர்கள் உங்களுடைய பிரச்னையைப் புரிந்துகொள்வார்கள், அதைச் சமாளிக்க உதவுவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று நீங்கள் சொல்லலாம். இப்படிச் சொல்வதன்மூலம், பாதிக்கப்பட்டவர் உங்கள்மீது வருத்தமோ கோபமோ கொள்ளமாட்டார். நீங்கள் அவருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவோ, அவருடைய முதுகுக்குப்பின்னால் வேலை செய்வதாகவோ எண்ணமாட்டார்.

ஸ்கிஜோஃப்ரெனியாவைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள், அதேசமயம், இந்தக் குறைபாடு கொண்ட எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் வராது என்பதை உணருங்கள். ஸ்கிஜோஃப்ரெனியா வந்த உங்களுடைய நண்பர் அல்லது சக ஊழியரை வேறுவிதமாக நினைக்காதீர்கள், எல்லாரையும்போல் அவரை நடத்துங்கள். அவரிடம் பேசும்போது உங்களைத் தயார்செய்துகொண்டு செல்லுதல், பொறுமையாக இருத்தல், திறந்த மனத்துடன் பேசுதல் ஆகியவற்றின்மூலம், பாதிக்கப்பட்டவருடன் நீங்கள் ஓர் 'இயல்பான' உறவைக் கொள்ளலாம், அவர்கள் குணமடைய உதவலாம்.

Q

ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்ட ஒருவருடன் பழகுவதற்கான உத்திகள்

A

மற்றவர்களுடன் பேசுவதுபோலவே அவர்களிடமும் பேசுங்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்களுடைய பதில் இயல்பாகவே இருக்கும். சிலநேரங்களில், நீங்கள் எதிர்பாராதவிதத்தில், உங்களால் ஜீரணித்துக்கொள்ள இயலாதவிதத்தில் அவர்கள் நடந்துகொள்ளக்கூடும். ஸ்கிஜோஃப்ரெனியாவின் அறிகுறிகள் வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறுவிதமாகத் தோன்றுகின்றன, ஒரு காலகட்டத்தில் உள்ள அறிகுறிகள் இன்னொரு காலகட்டத்தில் மாறுவதும் சாத்தியமே. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நீங்கள் பேசும்போது, அவர்களிடம் இந்தவிதமான எதிர்வினைகளை எதிர்பார்க்கலாம்:

  • அவர் உங்களிடம் பேசாமலே இருந்துவிடலாம், உங்கள்மீது எந்த அக்கறையும் இல்லாததுபோல் நடந்துகொள்ளலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், எதுவுமே நடக்காததுபோல் தொடர்ந்து பேசுங்கள், அவர்கள் தங்களுடைய விருப்பமின்மையைக் காட்டும்வரை பேசிக்கொண்டே இருங்கள். (ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமலிருக்கலாம், தங்களைச் சுற்றியுள்ளவர்களையெண்ணிச் "சலிப்படைந்ததுபோல்" அல்லது, அவர்கள்மீது "ஆர்வமில்லாததுபோல்" நடந்துகொள்ளலாம்.)
  • அவர்கள் சில விநோதமான முறைகளில் பேசலாம் அல்லது நடந்துகொள்ளலாம். அதைப்பற்றி அக்கறை காட்டாதீர்கள், அவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்காதீர்கள். இயல்பாகத் தொடர்ந்து பேசுங்கள்.
  • பாதிக்கப்பட்டவர் பொருந்தாத உணர்வுகளைக் காட்டலாம். இதனால் உங்களுக்கு அசௌகர்யமோ சங்கடமோ உண்டானால், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுங்கள். அவர்கள் அமைதியாகி, நீங்கள் மீண்டும் பேசுகிற அளவுக்குச் சவுகர்யமானபிறகு, மறுபடி பேசத் தொடங்குங்கள்.
  • பாதிக்கப்பட்டவர் உங்களுடைய நோக்கங்களை எண்ணிச் சந்தேகப்படலாம், உங்கள்மீது கோபப்படலாம். அவர்களை எது வருத்தப்படுத்துகிறதோ, அதைப்பற்றிப் பேசாதீர்கள். உங்களுக்கு அவர்கள்மீது உள்ள அக்கறையை வலியுறுத்துங்கள், அவர்கள் விரும்பும்போது நீங்கள் பேச்சைத் தொடரத் தயாராக இருப்பதாகச் சொல்லுங்கள்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org