அடிமைநிலையிலிருந்து மீளுதல்

போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை வழங்கும்போது, ஊக்கமானது அதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது

Dr கரிமா ஶ்ரீவத்ஸவா

எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் சரி, ஒரு பழக்கத்தை மாற்றிக்கொள்வதென்றாலும் சரி, ஊக்கம் என்பது அதற்கு ஒரு முக்கியமான முதல் படிநிலை. ”ஒரு குதிரையைத் தண்ணீர்த்தொட்டிவரை அழைத்துவந்துவிடலாம், ஆனால், அதைக் குடிக்கவைக்க இயலாது” என்று ஒரு வாசகம் உண்டு. இதன் பொருள், ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தைச் செய்யவேண்டும் என்றால், மற்றவர்கள் அவரை எவ்வளவு வற்புறுத்தினாலும் வேலை நடக்காது, அவர் தன்னைத் தானே ஊக்கப்படுத்திக்கொண்டால்தான் அந்த விஷயத்தைச் செய்வார். குறிப்பாக, ஒருவர் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார், போதைப்பொருள்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறார் என்றால், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று அவரே எண்ணினாலன்றி, அவரை மற்றவர்களால் திருத்த இயலாது.

ஏதோ ஒரு போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், அதைச்சார்ந்தே வாழ்கிறவர், அத்தனை சீக்கிரத்தில் சிகிச்சையை நாடமாட்டார், பிறரிடம் உதவி கேட்கமாட்டார், சிகிச்சைக்கு ஒத்துழைக்கமாட்டார். ஒருவழியாக, அவர்கள் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுவிட்டாலும், அவர்களுடைய ஊக்கம் ஏறி இறங்கலாம், மாறவேண்டும் என்று உறுதியாக எண்ணாமல் அலைபாயலாம். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, அதில் ஊக்கத்தை மேம்படுத்தும் அணுகுமுறை என ஒன்று உண்டு. இந்த  அணுகுமுறை, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் பழக்கத்தைத் தொடர்வது, அல்லது மாற்றிக்கொள்வது என்கிற தெரிவுகள் உள்ளன என்ற அடிப்படையில் அமைகிறது. ஊக்கம் தரும் அணுகுமுறையானது, சிகிச்சையின்போது அவரைச் செயலற்று இருக்கவிடுவதில்லை, அவரைச் செயல்பட அனுமதிக்கிறது, தங்களுக்கான சிகிச்சையைத் தாங்களே தேர்ந்தெடுக்கவேண்டும், தங்களை மாற்றுவதற்கான பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்ன செய்வது எனத் தாங்களே தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க இயலும் என்றால், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஒரு சிகிச்சையாளர் சொல்கிறவற்றைத் தடுக்கவேண்டும் அல்லது மறுக்கவேண்டும் என்று அவர்கள் அவ்வளவாக உணர்வதில்லை. தன்னுடைய மாற்றச் செயல்முறைக்குத் தானே பொறுப்பு என்று ஒருவர் உணரும்போது, அந்த மாற்றத்தைக் கொண்டுவருகிற ஆற்றல் தனக்கு உள்ளதாக அவர் எண்ணுகிறார், தனது சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார், இதனால், சிகிச்சையின் பலன்கள் சிறப்பாக அமைகின்றன.

ஒருவர் தனது பழக்கமொன்றை மாற்றிக்கொள்ளும்போது எந்தெந்தக் கட்டங்களைக் கடந்துசெல்கிறார் என்று ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளார்கள். போதைப்பொருள்களுக்கு அடிமையானோர் அதற்குச் சிகிச்சை பெறும்போது, அவர்களும் இந்தக் கட்டங்களைக் கடந்துவருகிறார்கள்.

சிந்திப்பதற்குமுன்: இந்த நிலையில் உள்ள ஒருவர் தனது பழக்கவழக்கத்தின் எதிர்மறை விளைவுகளைப்பற்றிக் கொஞ்சம் அறிந்திருப்பார், ஆனால், அதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர் எண்ணுவதில்லை, அதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் உடனே எடுக்கப்போவதில்லை. ஆகவே, தொடக்க நிகழ்வுகளில், சிகிச்சை வழங்குபவர் சிகிச்சை பெறுபவருடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும், அவர் ஏன் சிகிச்சைக்கு வந்திருக்கிறார் என்று கண்டறியவேண்டும், அவர் சிகிச்சைக்கு வரத் தீர்மானித்ததைப் பாராட்டவேண்டும், அவருடைய சிகிச்சை எந்தத் திசையில் செல்லலாம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.

பொதுவாக இந்தக் காலகட்டத்தில் ஒரு சிறு குறுக்கீட்டு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது, சிகிச்சைக்கு வந்திருப்பவர் மாற்றத்துக்கு எந்த அளவு தயாராக இருக்கிறார் என்பது மதிப்பிடப்படுகிறது. போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதன் எதிர்மறை விளைவுகளைப்பற்றி அவர்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் மனச்சோர்வுடன் இருக்கிறார் என்றால், ஒருவர் அளவுக்கதிகமாக மது அருந்துவதால் அவருக்கு மனச்சோர்வு ஏற்படலாம், அல்லது ஏற்கெனவே உள்ள மனச்சோர்வு அதிகமாகலாம் என்று அவருக்குச் சொல்லப்படலாம். பாதிக்கப்பட்டவர் எந்தவிதமாகப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிவதற்கும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டுப் பிரச்னைகளைத் தெரிந்துகொள்வதற்கும், அவரது குடும்ப வரலாற்றை அறிவதற்கும், சிகிச்சையாளர் பாதிக்கப்பட்டவரிடம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் உதவி பெறலாம்.

சிந்தனை: இந்த நிலையில், தான் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை, தீமைகளைப் பாதிக்கப்பட்டவர் அறிந்திருக்கிறார், ஆனால் மாறத் தயங்குகிறார், இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார், இன்னும் அவர் மாற்றத்துக்கு முழுமையாகத் தயாராகவில்லை. சில மருத்துவ நிபுணர்கள், பாதிக்கப்பட்டவரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து, 'நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்தினால் என்ன நன்மை, என்ன தீமை என்று இதில் எழுதுங்கள்' என்று கேட்கிறார்கள். இது நல்ல பலன் தருவதாக அவர்கள் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் இதை ஒரு வீட்டுப்பாடமாகச் செய்யலாம், இதைப்பற்றி நன்றாகச் சிந்தித்து நன்மை, தீமைகளை எழுதிவரலாம், அடுத்தமுறை அவர்கள் சந்திக்கும்போது, அதை அவர்கள் விவாதிக்கலாம். அல்லது, அவர் சிகிச்சையின்போதே அதை எழுதவேண்டும் என்று மருத்துவ நிபுணர் சொல்லலாம். ஒருவருடைய புறவயமான ஊக்கத்தை அகவயமான ஊக்கமாக மாற்ற உதவினால், அவர் மாற்றத்தைப்பற்றிச் சிந்திக்கும் நிலையிலிருந்து முன்னேறி, தான் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றிய ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வருவார்.

இங்கே, பாதிக்கப்பட்டவர் ஊக்கம் பெறுவதற்கு மருத்துவ நிபுணர் உதவலாம். உதாரணமாக, பாதிக்கப்பட்டவர் விறுப்புவெறுப்பற்றநிலையில் தனது உணர்வுகளை ஆராய அவர்கள் உதவலாம், அவர் தன்னுடைய போதைப்பொருள் பழக்கத்துக்கும் தன்னுடைய தனிப்பட்ட மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள முரண்களை அலசச்செய்யலாம். இதனால், தான் தொடர்ந்து போதைப்பொருள்களைப் பயன்படுத்திவந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும், அந்தப் பழக்கத்தைக் குறைத்தால் அல்லது நிறுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அவர் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வார்.

தயாராதல்: ஒருவர் மாறத் தயாரானதும், குணமாதலை நோக்கித் திட்டமிடுகிறார், அதற்கான படிநிலைகளைத் தொடங்குகிறார். ஒருவர் சிகிச்சைக்கு வருகிறார் என்றால், அவருக்குச் சிகிச்சையளிப்பவரும் அவருடைய குடும்பமும் அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தவேண்டும், தான் திருந்தப்போகிறோம் என்ற விஷயத்தை அவர் தனக்குச் சிகிச்சையளிப்பவரிடம்மட்டும் சொன்னால் போதாது, குறைந்தபட்சம் இன்னும் ஒருவரிடமாவது அந்த விருப்பத்தை அவர் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தூண்டவேண்டும். இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் இப்படி இன்னொருவரிடம் சொல்வதன்மூலம் அவருக்குப் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும், அவருக்குள் ஏதாவது எதிர்ப்புணர்ச்சி தோன்றினாலும், அதைப் புரிந்துகொண்டு தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருப்பார். சிகிச்சை பெற வருகிறவருக்கு என்னென்ன சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன என்பதை அவருக்குச் சுருக்கமாகச் சொல்லவேண்டும். தனக்கு எந்தச் சிகிச்சை சிறப்பானது என்று அவர் தீர்மானிக்கலாம், அதற்கேற்பத் திட்டமிடலாம்.

இந்த நிலையில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள்: அவர் சிகிச்சை எடுக்கத் தீர்மானித்ததன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுதல், அவர் தானே பலன் பெறுவதற்கு ஆதரவு வழங்குதல், அவரால் வெற்றிகரமாகச் சிகிச்சையை முடித்துக் குணமாக இயலும் என்று அடிக்கடி சொல்லி நம்பிக்கை தருதல், அவர் தனக்குப் பொருத்தமான, தன்னால் எட்டக்கூடிய செயல்பாடுகளைத் தீர்மானிக்க உதவுதல், ஒருவேளை பழைய பழக்கம் அவருக்கு மீண்டும் வந்துவிட்டால், அதனால் அவர் சிகிச்சையாளருடன் கொண்டிருக்கிற உறவு பாதிக்கப்படக்கூடாது என்று விளக்குதல். சுருக்கமாகச் சொல்வதென்றால், தயாராதல் நிலையில் உள்ளவர்களுக்குச் சாத்தியமுள்ள மாற்ற வியூகங்களை அடையாளம் காணவும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு வியூகத்தைத் தேர்ந்தெடுக்கவும் உதவி தேவை.

செயல்: இந்த நிலையில்தான் மிகவும் முறையான சிகிச்சை தொடங்குகிறது. இங்கே, பாதிக்கப்பட்டுள்ளவர் சில புதிய பழக்கங்களை முயன்றுபார்க்கிறார். ஆனால், அவை இன்னும் திடமாகவில்லை. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்டவர் மாற்றத்தை நோக்கிய முதல் செயல்பாடுகளை நிகழ்த்தத் தொடங்குகிறார், மாற்ற வியூகங்களை அமல்படுத்தவும், அவற்றைத் தொடர்ந்து பின்பற்றவும் அவருக்கு உதவி தேவைப்படலாம். தன்னுடைய செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு உதவி தேவைப்படலாம், தொடர்ந்து நெடுநேரம் போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல் சமாளிப்பதற்கான திறன்களை அவர் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கலாம். இந்த நிலையில், அவருக்குச் சிகிச்சையளிப்பவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது உணர்வுகளை, அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும், ஒருவர் குணமாகிக்கொண்டிருக்கும்போது இதெல்லாம் சகஜம்தான் என்பதை உணரவேண்டும். சிகிச்சையைத் தொடரவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் தரவேண்டும்.

பராமரிப்பு: பாதிக்கப்பட்டவர் இதுவரை வந்துவிட்டார் என்றால், அவரால் தனது புதிய பழக்கங்களை நீண்டகாலத்துக்குத் தொடர இயன்றுள்ளது என்று பொருள். இந்த நிலையில் அவருக்கு உதவி தேவை, குறிப்பாக, அவர் பழைய பழக்கத்துக்குத் திரும்பச் சென்றுவிடாமலிருக்கப் பிறர் உதவவேண்டும். இந்த நிலையில் அவரது இப்போதைய செயல்பாடுகளை ஆராய்ந்து, அவை சரியானபடி உள்ளனவா என்பதை மதிப்பிட்டு உறுதிசெய்யலாம், தொலைநோக்கில் சிந்தித்து, அவர் தொடர்ந்து போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல் வாழ்வதற்கான திட்டங்களை வரையறுக்கலாம். போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமலிருக்க அவர் தொடர்ந்து முயற்சி செய்தாலும், அவரது ஊக்கம் ஏறி, இறங்குவது சகஜமே, அவர் பழையநிலைக்குச் சென்றுவிடவும் வாய்ப்புண்டு.

பழைய நிலைக்குத் திரும்புதல்: இந்த நிலையில், தனக்குப் பழைய அறிகுறிகள் திரும்பிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர் உணர்வார். அவர்கள் இப்போது விளைவுகளைச் சமாளிக்கவேண்டும், அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கவேண்டும். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்குக் குடும்பத்தினரின் ஆதரவு தேவை, அவர் நிலைமையைச் சமாளிப்பதற்கான மாற்று வியூகங்களைக் கண்டறிய அவர்கள் உதவவேண்டும். அதேநேரம் சிகிச்சையளிப்பவர் வேறு சில முக்கியமான பணிகளைச் செய்வார்: பாதிக்கப்பட்டவர் மாற்றச் சுழலில் மீண்டும் நுழைவதற்கு உதவுவார், அவர் நேர்விதமான மாற்றத்துக்கு மீண்டும் முயல விரும்புகிறார் என்றால், அதைப் பாராட்டுவார், பழைய நிலைமை திரும்ப வந்தது ஏன் என்கிற எதார்த்தத்தை ஆராய்ந்து, அதை ஒரு கற்றல் வாய்ப்பாக முன்வைப்பார்.

ஒருவர் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளிவர முயன்றுகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிடித்த ஒருவர், உதாரணமாக, அவரது துணைவர், கூட்டாளி அல்லது அவருக்கு நெருக்கமான ஒரு குடும்ப உறுப்பினரும் அதில் பங்கேற்றால், அந்தச் சிகிச்சைக்கு நல்ல பலன்கள் கிடைப்பதாக ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தாத ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள உதவுகிற செயல்முறைகளை உருவாக்கவும் அமல்படுத்தவும் தக்கவைத்துக்கொள்ளவும் அவருடைய மன உறுதியை இவர்கள் தூண்டுகிறார்கள். மாற்றத்துக்கான தீர்வுகளை அவர்களே உருவாக்குவதற்கு இவர்கள் உதவுகிறார்கள். அதேசமயம், மாற்றத்துக்கான முழுப்பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபருக்குள்தான் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

சிகிச்சை பெறுகிறவருடைய அன்புக்குரிய ஒருவர் அவருக்குப் பலவிதங்களில் உதவலாம் என்றாலும், அவர்கள் வெறுமனே ஆலோசனை நிகழ்வுகளில்மட்டும் பங்கேற்றால் போதாது. பாதிக்கப்பட்டவர் போதைப்பொருள் இல்லாமல் வாழ்வதை அவரது அன்புக்குரிய ஒருவர் ஆதரிக்கிறார், அவருடைய ஆதரவைப் பாதிக்கப்பட்டவர் மிகவும் மதிக்கிறார் என்றால், அவரைச் சிகிச்சையில் பங்கேற்கச்செய்யலாம்.

சான்றுகள்:

டாக்டர் கரிமா ஸ்ரீவத்ஸவா டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் PhD பெற்றவர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org