ஆளுமைக் குறைபாடு வகைகள்

Q

ஆளுமைக் குறைபாடுகளின் வகைகள்

A

ஆளுமைக் குறைபாடுகள் என்பவை ஒருவருடைய ஆளுமைப் பண்புகளில் சில குறிப்பிட்ட தன்மைகள் அதிகமாக அல்லது குறைவாகக் காணப்படுவதைக் குறிக்கின்றன, இதன்மூலம், அவர் தனது வீட்டில் அல்லது பணியிடத்தில் தினசரி வேலைகளைச் சரியாகச் செய்ய இயலாமல் சிரமப்படக்கூடும். இந்தக் குறைபாடுகளுடன் தொடர்புடைய ஆளுமைப் பண்புகள் ஒவ்வொருவரிடமும் சிறுவயதுமுதல் வெவ்வேறு அளவுகளில் உள்ளன, ஆனால், அவர்கள் வயதுவந்தோராகும்போதுதான் இவை உறுதிபெறுகின்றன.

ஒரு தனிநபரிடம் எந்த ஆளுமைப் பண்பு அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்து, ஆளுமைக் குறைபாடுகளை வெவ்வேறு வகையாகப் பிரிப்பார்கள்.

இந்த வகைகள் மூன்று பெரிய குழுக்களாகத் தொகுக்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் பல குறிப்பிட்ட ஆளுமைக் குறைபாடுகள் உள்ளன. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஆளுமைக் குறைபாடுகளின் பண்புகள், அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஆளுமைப் பண்புகளும் ஒரேமாதிரியாக அமையும்.

  • தொகுப்பு A: வழக்கத்துக்குமாறான அல்லது விநோதமான பழக்கங்களைக் கொண்ட குறைபாடுகள்
  • தொகுப்பு B: நாடகத்தனமான, பிழையான அல்லது உணர்ச்சிவயப்படும் பழக்கங்களைக் கொண்ட குறைபாடுகள்
  • தொகுப்பு C: பதற்றம் மற்றும் பயம்சார்ந்த பழக்கங்களைக் கொண்ட குறைபாடுகள்

ஒருவருடைய பழக்கவழக்கங்கள் கவனிக்கத்தக்கமுறையில் மாறுபடுகின்றன, அதனால் அவருக்குத் தனிப்பட்டமுறையிலோ, அவர் பிறருடன் பழகும்போதோ அல்லது அவர் பணிசெய்கிற இடத்திலோ பிரச்னைகள் உண்டாகின்றன என்றால், அவருக்கு இந்தக் குறைபாடுகளில் ஒன்று வந்திருப்பதாக எண்ணலாம்.

குறிப்பு: இந்த வகைபாடுகளில் விவரிக்கப்பட்டுள்ள பண்புகள் நம் அனைவருக்கும் உள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள், அறிகுறிகள் உங்களுக்கோ, உங்களைச் சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கோ இருக்கலாம். அவை ஆளுமைக் குறைபாடுகள் ஆகிவிடாது. ஒரு பண்பு, பின்வரும் சூழ்நிலைகளில்மட்டுமே ஓர் ஆளுமைக் குறைபாடாக மாறுகிறது:
a) அந்தப் பண்புகள் மிகவும் அதீதமாகக் காணப்படுகின்றன, ஒருவர் தன்னைப்பற்றி, பிறரைப்பற்றி, சுற்றியிருப்பவற்றைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பாதிக்கின்றன. அந்த நபரிடம் இந்தப் பண்புகள் நெடுங்காலத்துக்குக் காணப்படுகின்றன, அவை வெவ்வேறு சூழ்நிலைகளில் தெளிவாகத் தெரிகின்றன.
b) இந்தப் பண்புகளால் அந்தத் தனிநபரோ அவரைச் சுற்றியிருப்பவர்களோ குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்படுகிறார்கள்

இந்த விவரிப்புகள் பிரச்னையைக் கண்டறிவதற்கான வழிகாட்டிகள்மட்டுமே, இவற்றைவைத்து ஒருவருக்கு இந்தக் குறைபாடு இருப்பதாகத் தீர்மானித்துவிடக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை ஒரு மன நல நிபுணர் பரிசோதிக்கவேண்டும், ஒருவேளை அவருக்கு ஏதேனும் ஆளுமைக் குறைபாடு இருந்தால், அதை அந்த நிபுணர்தான் உறுதிப்படுத்தவேண்டும்.

Q

தொகுப்பு A: வழக்கத்துக்குமாறான அல்லது விநோதமான பழக்கங்கள்

A

இந்தத் தொகுப்பில் உள்ள குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடைய சிந்திக்கும் பாணி, அவர்கள் நடந்துகொள்ளும் விதம் குழம்பியிருக்கும், பிறரால் அவர்களைப் புரிந்துகொள்ள இயலாது. பாதிக்கப்பட்ட நபர் பிறர்மீது மிகவும் சந்தேகப்படுவார், தனியாக இருக்கவேண்டும் என்று விரும்புவார், பிறரை அலட்சியப்படுத்துவார், இதனால் இவர்களுடைய உறவுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன, அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.

சந்தேக ஆளுமைக் குறைபாடு

சந்தேக ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் பிறரை நம்புவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். அதேசமயம், தன்னுடைய சந்தேகத்தை அவர் தனக்குள் வைத்துக்கொள்வதில்லை, அவருடைய நடவடிக்கைகளின்மூலம் அது வெளிப்பட்டுவிடுகிறது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என எல்லார்மீதும் அவருக்குப் பொதுவான அவநம்பிக்கை காணப்படுகிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவார்களோ, தங்களைக் காயப்படுத்திவிடுவார்களோ, தங்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுவார்களோ என்று இவர்கள் தொடர்ந்து அஞ்சுகிறார்கள். இதனால், இவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களிடமிருந்தே உணர்வளவில் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் யாரையும் முழுமையாக நம்பிப் பேசமாட்டார்கள், செயல்படமாட்டார்கள், சொந்தக் கணவன்/மனைவியைக்கூட சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். யாராவது ஒரு சிறிய தவறு செய்துவிட்டால்கூட, அதை மனத்தில் வைத்துக்கொண்டு அவர்கள்மீது கோபமாகவே இருப்பார்கள். பலநாள் ஆனாலும் அந்தக் கோபத்தை மறக்கமாட்டார்கள். இவர்களால் பிறருடன் இணைந்து செயல்பட இயலாது, பிறருடன் ஒரு குழுவாகச் சேர்ந்து வேலைசெய்ய இயலாது. தங்கள் மனத்தில் உள்ள சந்தேகத்தை இவர்கள் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். 'உன் மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்?' என்று சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகவே சொல்லிவிடுவார்கள்.

சந்தேக ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய கணினியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள மறுக்கலாம், சொந்த நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்குக்கூட அதனைத் தர மறுக்கலாம், காரணம், அதில் உள்ள விவரங்களை யாராவது தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். இப்படி முரட்டுத்தனமாக மறுப்பதன்மூலம் இவர்களுடைய உறவுகள் கெட்டுப்போகலாம், வேலை பறிபோய்விடலாம், இதெல்லாம் தெரிந்தாலும், இவர்களுடைய சந்தேக குணம் மாறுவதில்லை.

ஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடு

ஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் எப்போதும் உணர்ச்சியற்றவர்களாக, யாருடன் ஒட்டாதவர்களாகக் காணப்படலாம். அவர்களுக்குத் தனியே இருப்பதுதான் சந்தோஷம். அவர்களுக்குச் சமூகத்தில் பிறருடன் உரையாவது பிடிப்பதில்லை, பிறர் அனுபவித்துச் செய்யும் செயல்பாடுகளில் கலந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அவர்களை யாராவது புகழ்ந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை, யாராவது விமர்சித்தால், அவர்களுக்கு வருத்தம் ஏற்படுவதில்லை, எதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள், இதனால் அவர்களுக்கோ அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கோ பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவர்கள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் உணர்ச்சியற்று இருப்பதைப் பிறர் தவறாகப் பார்க்கலாம், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இவர்களுடன் சரியானபடி பேசாமலிருக்கலாம்.

இந்தக் குறைபாடு கொண்ட ஒருவரை ஒரு பொது இடத்தில் விட்டால், அவர்கள் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல் திகைக்கக்கூடும். பிறருடன் உரையாடவேண்டிய சூழ்நிலைகளை இவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கக்கூடும்.

ஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு

ஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு என்பது ஸ்கிஜாய்ட் மற்றும் சந்தேக ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களிடம் காணப்படும் சில பண்புகளுடைய தொகுப்பு ஆகும். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் பொதுவாகப் பிறரை நம்பமாட்டார்கள், யாருடனும் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் விலகியிருப்பார்கள். இந்த அறிகுறிகளுடன், மற்றவர்கள் விநோதமாகக் கருதக்கூடிய சில பழக்கங்களும் இவர்களுக்கு இருக்கலாம். சில வித்தியாசமான பழக்கங்களை இவர்கள் திரும்பத்திரும்பச் செய்யலாம்: சில வேலைகளைத் திரும்பத் திரும்பப் பரிசோதிப்பது, எல்லாம் சமச்சீராக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது, தங்களுடைய தட்டில் உள்ள அரிசிகள் எத்தனை என்று எண்ணிப்பார்ப்பது போன்றவை.

ஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு கொண்ட நபர்களிடம் இப்படிச் சில பழக்கங்கள் திரும்பத்திரும்ப காணப்படுவதால், இவர்களுக்குத் தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு உள்ளதோ என்ற குழப்பம் வரக்கூடும். உண்மையில் இந்த இரண்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு: தீவிர எண்ண ஆளுமைக் குறைபாட்டுப் பிரச்னை கொண்ட ஒருவருக்கு, தன்னுடைய செயல்பாடு அபத்தமானது, விநோதமானது அல்லது தர்க்கரீதியில் பொருந்தாதது என்பது தெரியும். ஆனால், அவரால் அதை மாற்றிக்கொள்ள இயலுவதில்லை. ஆனால், ஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருக்குத் தான் செய்வது எதார்த்தத்துக்குப் பொருந்தாதது, அசாதாரணமானது என்று தெரிவதில்லை.

இந்தக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிற சிந்தனையும் இருக்கக்கூடும். அதாவது, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை இணைத்து, இதனால்தான் இது நடந்தது என்று சொல்லும் பழக்கம். மூடநம்பிக்கைகள் அல்லது, வழக்கத்துக்குமாறான விஷயங்களில் இவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அத்துடன், இவர்கள் எது நிஜமான நிகழ்வு, எது கற்பனை என்று தெரியாமல் குழம்புவார்கள்.

Q

தொகுப்பு B: நாடகத்தனமான, பிழையான அல்லது உணர்ச்சிவயப்படும் பழக்கங்கள்

A

இந்தத் தொகுப்பில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் நாடகத்தனமான, அல்லது மிகையுணர்ச்சிமயமான செயல்பாடுகளால் ஏற்படுகிறவை. இந்தப் பிரச்னை கொண்டவர்கள், தங்களுடைய தேவைகள் மற்றவர்களுடைய தேவைகளைவிட அதிகம் முக்கியமானவை என்று கருதுவார்கள், பிறர் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தங்களுடைய நடவடிக்கைகளைத் தொடர்வார்கள். இந்தக் குறைபாடுகளிடையே காணப்படும் இன்னொரு பொதுத்தன்மை, பாதிக்கப்பட்ட நபரால் தன்னுடைய செயல்பாடுகளின் உடனடிப் பலனைத் தாண்டிச் சிந்திக்க இயலாது, இதன் விளைவாக, இவர்களால் அனிச்சை செயலைக் கட்டுப்படுத்த இயலாது, உணர்ச்சிகளைக் கையாள இயலாது.

சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு

சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரை அடையாளம் காண்பதற்கான முக்கியப் பண்பு, பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி இவர்கள் சிறிதும் அக்கறைப்படமாட்டார்கள், தங்களுடைய தேவை நிறைவேறினால் போதும் என்றுதான் எண்ணிச் செயல்படுவார்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிறிதும் யோசிக்கமாட்டார்கள். தான் செய்யப்போகும் இந்த விஷயத்தால் நன்மை அல்ல, தீமைதான் விளையும் என்பதோ, அதனால் வருங்காலத்தில் தனக்கு அல்லது பிறருக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதோ இவர்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் மற்றவர்களைவிடத் தங்களைப் பெரியவர்களாகக் கருதுவார்கள். எல்லா நன்மைகளையும் பெறுவதற்கான உரிமை தங்களுக்கு அதிகம் இருப்பதாக எண்ணுவார்கள்.

சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் அழிவுநடவடிக்கைகளில் ஈடுபடுவார்: உணர்ச்சிகரமாகப் பேசுவது, அடிப்பது, விதிமுறைகளை மீறுவது, பிறருடைய சொத்துகளை அலட்சியமாகக் கையாள்வது, போட்டு உடைப்பது போன்றவை. இந்த நபர்களுக்குச் சிறுவயதிலிருந்தே இதுபோன்ற பழகுமுறைப் பிரச்னைகள் இருந்திருக்கும். இவர்கள் பிறரைத் துன்புறுத்துவது, மிரட்டுவது, அடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள், பயந்த குழந்தைகள், சிறு மிருகங்கள் போன்றவற்றைத் துன்புறுத்தியிருப்பார்கள். இப்படிப் பலவிதங்களில் இவர்களுடைய ஆளுமைப் பிரச்னைகள் வெளிப்பட்டிருக்கும். பெரும்பாலான நேரங்களில், இப்படி நடந்துகொள்வதில் என்ன தவறு என்பதே இவர்களுக்குப் புரியாது, இதனால் தங்களுக்கும் பிறருக்கும் ஏற்படுகிற சிரமங்களை இவர்கள் உணர்வதில்லை. அந்தச் சூழ்நிலையில் வன்முறை தேவைப்பட்டது என்று சொல்லி இவர்கள் தங்களுடைய செயலை நியாயப்படுத்தலாம், பிறரைச் சமாதானப்படுத்தலாம். இவர்கள் மிகவும் தீவிரமாக நடந்துகொள்வதும் உண்டு, பிறரைத் தங்கள்வழியில் இழுக்க முயற்சி செய்வதும் உண்டு. உதாரணமாக, பொய் சொல்வது, பிறரைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய வேலைகளைச் செய்துகொள்வது, தான் செய்ததை எண்ணி வருந்துவதாக நடித்து, அதன்மூலம் பிறருடைய நம்பிக்கையைப் பெறுவது, தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்வது, அதன்பிறகு, மீண்டும் சமூகத்துக்கெதிரான நடவடிக்கைகளைத் தொடர்வது.

சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் கண்மண் தெரியாமல் நடந்துகொள்வதும் உண்டு. இவர்கள் பெரிய ஆபத்துகளில் துணிந்து இறங்கலாம், போதைப்பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தலாம். இவர்கள் தங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பேற்க மறுக்கலாம், பிறருடைய சூழ்நிலைகள் அல்லது அவர்களுடைய பார்வையைக் கருத்தில் கொள்ள மறுக்கலாம்.

விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு

விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு (BPD) என்பது, ஒருவர் எப்படித் தனது உணர்ச்சிகளைக் கையாள்கிறார், சூழ்நிலைகளுக்கேற்ப எப்படி எதிர்வினையாற்றுகிறார் போன்றவற்றைப் பாதிக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்தப் பிரச்னை கொண்ட ஒருவருக்கு, தன்னுடைய அடையாளம் தெளிவாகத் தெரியாமலிருக்கலாம், 'பொருந்திப்போவதற்கான' முயற்சிகளில் அவர்கள் தொடர்ந்து சிரமப்படலாம். இவர்கள் எந்தக் குழுவுடன் இருக்கிறார்களோ அதைப்பொறுத்து இவர்களுடைய பண்புகள் மாறுகின்றன. இதனால் இவர்கள் எப்போதும் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பவர்கள், பிறர் தங்களைக் கவனிக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் என்று பிறர் எண்ணக்கூடும். BPD பிரச்னை கொண்டவர்கள் தங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுகிறார்கள். இதனால், இவர்களால் தினசரி வாழ்க்கையையே சமாளிக்க இயலாதபடி பெரும் சிரமங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

நார்சிசிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு (NPD)

'நார்சிசிஸ்ட்' என்ற சொல்லின் பொருள், தன்னைப்பற்றியே எப்போதும் எண்ணுகிற ஒருவர், தன்னுடைய தோற்றம், குணங்கள், பண்புகள் போன்றவற்றைத் தானே புகழ்ந்துகொள்கிறவர், அவற்றை எண்ணி மிகுந்த பெருமை கொள்கிறவர்.

நார்சிசிஸ்ட் ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் எப்போதும் தீவிரமாகத் தன்னைப்பற்றியே எண்ணுகிறார். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய அழகைப்பற்றியும் முக்கியத்துவத்தைப்பற்றியும் சிறப்பைப்பற்றியும் தொடர்ந்த கற்பனைகளிலேயே இருப்பார்கள். சில விசேஷ மரியாதைகள், அதிகாரங்கள், செல்வங்கள் மற்றும் வெற்றிகளைப் பெறுவதற்கான உரிமை தனக்கு இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர் எண்ணக்கூடும். இவர்கள் எப்போதும் அதிகாரம் மற்றும் வெற்றியைப்பற்றிய கற்பனைகளில் மிதப்பதால், அதை நிகழச்செய்வதற்கான வேலைகளை இவர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் ஏதாவது குறைகள் காணப்பட்டால், இவர்கள் அதைப் பயன்படுத்தித் தங்களை மேம்படுத்திக்காட்டிக்கொள்வார்கள், தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டுவதற்காகப் பிறரை வீழ்த்த விரும்புவார்கள்.

NPD பிரச்னை கொண்டவர்களை மற்றவர்கள் 'திமிர் பிடித்தவர்கள்', 'போலிப்பெருமைக்காரர்கள்' அல்லது 'முரட்டுப்பேர்வழிகள்' என்று சொல்லக்கூடும். இவர்கள் யாருடனும் கலந்துகொள்ளாமல் திமிரோடு இருப்பதாகத் தோன்றினாலும், இவர்களால் சிறிய விமர்சனங்களைக்கூடத் தாங்க இயலாது. இவர்கள் அனிச்சையாக நினைத்ததைச் செய்யக்கூடும், எல்லாரும் தங்களைக் கவனிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஏங்கக்கூடும். தங்களுக்குத் தகுதியுள்ளவையாகத் தாங்கள் நினைக்கிற இலக்குகளை எட்டுவதற்காக, இவர்கள் மற்றவர்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

இவர்கள் தங்களை விசேஷமாக நினைப்பதாலும், தங்களைச்சுற்றியே எல்லாம் இயங்குகிறது என்று கருதுவதாலும், இந்தக் குறைபாடு கொண்டவர்களால் பிறருடன் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இயலாது.

சில நேரங்களில், இந்தக் குறைபாட்டைக் குறிப்பிடுவதற்காக, மேகலோமேனியா (அதாவது, எப்போதும் மிகச்சிறந்த நிலையை எண்ணுதல்) என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

ஹிஸ்ட்ரியோனிக் ஆளுமைக் குறைபாடு

ஹிஸ்ட்ரியோனிக் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை அதீதமாக வெளிப்படுத்துவார்கள், பிறருடைய கவனத்தை ஈர்க்கும்வகையில் நடந்துகொள்வார்கள். எங்கே சென்றாலும் மற்றவர்களுடைய பார்வைக்கு மத்தியில் தான் இருக்கவேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். அந்தக் கவனத்தைப் பெறுவதற்காக, இவர்கள் எதுவும் செய்வார்கள். 'தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டுகிறவர்கள்கூட உண்டு. இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, அது ஒரு மிகையான உணர்ச்சியாகதான் வெளிப்படும். இவர்கள் எப்போதும் மற்றவர்களுடைய கவனம், ஒப்புதலுக்காக ஏங்குவார்கள், உதாரணமாக இவர்கள் உடுத்தும் பாணி, நடந்துகொள்ளும் விதம் (உணர்ச்சிகளை நாடகத்தனமாக வெளிப்படுத்துதல், புகழ்தல், அல்லது கொஞ்சிக்குலாவுதலின்மூலம் கவனத்தை ஈர்த்தல்) போன்றவை பிறரைக் கவரும் நோக்கத்துடன் அமையும். வரக்கூடிய ஆபத்துகளைப்பற்றிச் சிந்திக்காமல் இவர்கள் அனிச்சையாகத் தீர்மானங்களை எடுக்கக்கூடும். உதாரணமாக, தற்கொலைக்கு முயற்சி செய்தல்.

இவர்கள் பிறருடன் பழகும்போது, உண்மையான நெருக்கத்தைவிட அதிக நெருக்கம் இருப்பதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். உதாரணமாக, எப்போதாவது சந்திக்கிற ஒரு நண்பரை இவர்கள் மிக நெருங்கிய நண்பராகக் கருதிக்கொண்டிருக்கக்கூடும். இப்படி உறவுகளை மிகைப்படுத்திப் பழகுவதால், இவர்கள் என்ன செய்தாலும் மிகையாகவோ போலியாகவோ தோன்றும். இவர்கள் நிலையற்றவர்களாக, பிறரால் எளிதில் மாறிவிடுகிறவர்களாகக் காணப்படுவார்கள். இவர்கள் எதிலும் அதிக நேரம் செலவிடமாட்டார்கள், இதிலிருந்து அதற்கு என்று மாறிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சி பிடிக்கும், பிறர் தங்களைக் கவனிப்பது பிடிக்கும், தாங்கள் ஒளிவட்டத்தில் இல்லை என்றால், இவர்கள் அசௌகர்யப்படுவார்கள்.

Q

தொகுதி C: பதற்றம் மற்றும் பயம்சார்ந்த பழக்கங்கள்

A

இந்தத் தொகுதியில் உள்ள குறைபாடுகளின் பண்புகள், பதற்றம், ஒன்றைச் செய்தே தீரவேண்டும் என்கிற எண்ணம், தீவிர எண்ணச் செயல்பாடு மற்றும் தனித்திருத்தல் ஆகியவை. இந்தத் தொகுப்பின் முக்கிய அம்சம், மக்கள் தங்களைப்பற்றியே கொள்ளுகின்ற அதீத பதற்றம்தான். இதற்குக் காரணம், அவர்கள் தங்களுடைய திறன்கள்மீது சந்தேகப்படுகிறார்கள், ஆகவே, அவர்கள் தங்களது வேலைகளை வழக்கம்போல் செய்ய இயலாமல் சிரமப்படுகிறார்கள்.

தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு

தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள், பிறர் தங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எண்ணி எப்போதும் மிகுந்த கவலை கொண்டிருப்பார்கள். பிறர் தங்களை எதிர்மறையாக எண்ணிவிடுவார்களோ, தங்களுடைய குறைகளை அடையாளம் கண்டுவிடுவார்களோ, அல்லது, தங்களைப் பயனற்றவர்கள் அல்லது மதிப்பற்றவர்கள் என்று கருதிவிடுவார்களோ என்று இவர்கள் மிகவும் அஞ்சுகிறார்கள். இது இவர்களைப் பதற்றத்தில் தள்ளுகிறது. ஆகவே, இவர்களால் பிறர் மத்தியில் இயல்பாக இருக்க இயலுவதில்லை.

தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுடைய சுய மதிப்பு குறைவாக உள்ளது. தங்களுடைய புத்திசாலித்தனம் போதாது, திறமை போதாது, செல்வம் போதாது, மதிப்பு போதாது என்கிற எண்ணங்கள் இவர்களைத் துன்புறுத்துகின்றன. இவர்கள் யாரையாவது பார்த்துத் தங்களைவிடச் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று எண்ணிவிட்டால் (அது உண்மையாகவே இல்லாவிட்டாலும்), அவர்களுடன் உரையாட இயலாமல் பயப்படுகிறார்கள். இவர்களுடைய மனம் இருவிதமான எண்ணங்களில் தடுமாறுகிறது: ஒருபக்கம் இவர்கள் பிறருடன் உரையாட,  பழக விரும்புகிறார்கள், ஏங்குகிறார்கள். அதேசமயம், இன்னொருபக்கம் இவர்கள் விமர்சனம், நிராகரிப்பை எண்ணிப் பயப்படுகிறார்கள். தங்களைப் பிறர் எடைபோடுவார்களோ என்ற பயத்தில், இவர்கள் பிறருடன் பழகுகிற சமூகச் சூழல்களையே தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் விமர்சனத்தை எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், இவர்களுடைய ஏதாவது ஒரு செயலை யாராவது விமர்சித்தால், அவர்கள் தங்களை மொத்தமாக நிராகரிப்பதுபோல் உணர்வார்கள். பிறர் இவர்களைப் பார்த்து, கூச்ச உணர்வுள்ளவர்கள், விறைப்பானவர்கள், உணர்வுரீதியில் தொலைவில் நிற்கிறவர்கள் என்று எண்ணக்கூடும்.

சார்ந்திருக்கும் ஆளுமைக் குறைபாடு

சார்ந்திருக்கும் ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள், தங்களைச் சுற்றியிருக்கும் பிறரைச் சார்ந்து வாழ்கிறார். தங்களுக்குச் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் திறமை இல்லை என்று இவர்கள் எண்ணுகிறார்கள், தங்களுடைய சொந்தப் பராமரிப்பில் ஆரம்பித்து, தங்களுடைய பணிகள்வரை எதற்கும் பொறுப்பேற்க அஞ்சுகிறார்கள். பிறருடைய ஆதரவைப் பெறுவதற்காக இவர்கள் மிகவும் பணிந்துபோகவும் கீழ்ப்படியவும் தயாராக இருப்பார்கள். அதற்காகத் தாங்கள் விரும்பாதவற்றையும்கூடச் செய்வார்கள். தாங்களே எதையாவது செய்யவேண்டும் என்றால், இவர்கள் திகைத்துப்போய்விடுவார்கள். எப்போதும் தங்களை யாராவது 'கவனித்துக்கொள்ளவேண்டும்' என்று இவர்கள் எண்ணுவார்கள். இவர்களைப் பிறர், எப்போதும் எதையாவது எதிர்பார்க்கிறவர்கள், ஒட்டிவாழ்கிறவர்கள் என்று எண்ணலாம். இந்தக் குறைபாடு கொண்டவர்கள், ஓர் உறவை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் எதையும் செய்வார்கள், இதனால் துன்புறுத்தல்கள், தவறாக நடத்தப்படுதல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்கத் தயாராவார்கள். இவர்களுக்குப் பதற்றக் குறைபாடுகள் அல்லது மனச்சோர்வுப் பிரச்னையும் வர வாய்ப்புள்ளது.

தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு/
அனன்காஸ்டிக் ஆளுமைக் குறைபாடு

தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர், ஒவ்வொரு விஷயமும் இப்படிதான் செய்யப்படவேண்டும் என்ற உறுதியான கருத்தைக் கொண்டிருப்பார். அவர் எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்ய விரும்புவார், அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பார். இந்தப் பிரச்னை கொண்டவர்களுடைய அணுகுமுறையும் உறுதியாக இருக்கும்: ஒரு வேலையைச் சும்மா செய்தால் போதாது, அதற்கான எதிர்பார்ப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றவேண்டும், அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் கொஞ்சம் குறைந்தாலும் அவர்களுக்கு மிகுந்த பதற்றம் உண்டாகலாம். தாங்கள் விரும்பும்வகையில் ஒன்றைச் செய்யவேண்டும் என்பதற்காக, இவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலனைக்கூடப் புறக்கணித்துவிடுவார்கள், பொழுதுபோக்குகளை மறந்து, ஓய்வில்லாமல் வேலை செய்வார்கள். இதனால், இவர்கள் வேலைகளைப் பிறருக்குப் பகிர்ந்து வழங்க விரும்பமாட்டார்கள். தங்களால் இயன்ற அளவைவிட அதிகமான வேலைகளை ஒப்புக்கொண்டு சிரமப்படுவார்கள். இவர்கள் தீவிரமான உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள், வேலைகளை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்பதற்காக, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் புறக்கணித்துவிடுவார்கள்.

தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வலுவாகப் பின்பற்றலாம். ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துவதற்காக, இவர்கள் விதிமுறைகளைப் போடலாம், பட்டியல்களை உருவாக்கலாம், கால அட்டவணைகளை உருவாக்கலாம், அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றலாம். பிறர் அவர்களைக் கஞ்சர்கள் என்று நினைக்கலாம். காரணம், இவர்கள் தங்களுடைய செலவுகளை மிகவும் கவனமாகக் கட்டுப்படுத்த விரும்புவார்கள், பணத்தை இழந்துவிடுவோமோ என்று பயப்படுவார்கள். தான் நடந்துகொள்ளும் விதம் எதார்த்தத்துக்குப் பொருந்தவில்லை, அது அர்த்தமற்ற ஒன்றாக இருக்கிறது என்று இவர்களுக்குப் புரியக்கூடும், ஆனால், இவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாது.
 

OCD மற்றும் OCPD வித்தியாசங்கள்

சில நேரங்களில், தீவிர எண்ணக் குறைபாடு கொண்டவர்கள் சிலருக்கு, தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறதோ என்று குழப்பம் ஏற்படலாம். காரணம், இந்த இரு பிரச்னைகளுக்கான அறிகுறிகள், பழகுமுறைகளில் ஒற்றுமைகள் உண்டு.

தீவிர எண்ணக் குறைபாடு கொண்ட ஒருவருக்குள் தீவிர வற்புறுத்தல்கள் எழுகின்றன, அவற்றால் அவருக்கு அழுத்தம் ஏற்படுகிறது, அதைத் தவிர்ப்பதற்காக, அவர் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்கிறார். ஆனால், OCPD பிரச்னை கொண்ட ஒருவருக்கு இதுபோல் தீவிர வற்புறுத்தல்கள் எவையும் ஏற்படுவதில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்டவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம், அவர்கள் கட்டுப்பாட்டை இழக்க அஞ்சுகிறார்கள், அல்லது, பிறர் தங்களைக் குறைபட்டவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வேலையின் பலனைத் தங்களால் கட்டுப்படுத்த இயலாது என்கிற சூழ்நிலை  ஏற்பட்டால், அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துவிடக்கூடும். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், இவர்களுடைய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பது, பதற்றம்தான். OCD பிரச்னை கொண்ட நபருடைய பதற்றம், சில வேலைகளைச் செய்யவேண்டும் என்கிற தீவிர வற்புறுத்தலால் ஏற்படுகிறது. OPCD கொண்ட ஒருவருடைய பதற்றம், அவருடைய ஆளுமைப் பண்புகளால் ஏற்படுகிறது. (பெரும்பாலான நேரங்களில், எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்கிற பண்பினால், அல்லது, இதை இப்படிதான் செய்யவேண்டும் என்று உறுதியாக நினைப்பதால், பதற்றம் ஏற்படுகிறது).

OCD பிரச்னை கொண்ட ஒருவர் தன்னுடைய செயல்பாடு எதார்த்தத்துக்குப் பொருந்தவில்லை, அது விநோதமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார். ஆனால், OCPD கொண்ட ஒருவருக்கு, தன்னுடைய செயல்பாடுகள் அசாதாரணமானவை என்பதே தெரிவதில்லை.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org