கல்வி

எந்நேரமும் வேலை

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இது சரிதானா? ஒருவர் தன்னுடைய வேலையில்மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தால் போதாது, அவ்வப்போது விளையாடவேண்டும். அதாவது, தொடர்ச்சியான உடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தால், அவருடைய மன நலன் மேம்படும். குறிப்பாக, தேர்வுகள் நெருங்கும்போது, இது மிகவும் முக்கியமாகிறது. பலரும் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டுப் புத்தகத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

“ஜிம்மா? ம்ஹூம், எனக்குச் சரிப்படாது!”

பொதுவாக ஜிம் என்று சொன்னதும், மக்கள் மிகக் கடினமான உடற்பயிற்சிகளை நினைத்துக்கொள்கிறார்கள். நன்கு உடற்பயிற்சி செய்து உடம்பெல்லாம் வியர்வை வழியக் களைத்துப்போய் நிற்கிற ஒருவரைக் கற்பனை செய்கிறார்கள். உடற்பயிற்சி சிலருக்குக் களைப்பை உண்டாக்கலாம், எல்லாருக்கும் அல்ல. ஒருவர் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவேண்டுமென்றால், நீச்சலடிக்கலாம், சைக்கிள் ஓட்டலாம், அல்லது, நடக்கலாம். இவையெல்லாம் போரடிக்கிறது என்றால், நடனம் போன்ற ஒரு புதிய செயலைக் கற்றுக்கொள்ளலாம், அல்லது, ஒரு விளையாட்டில் ஈடுபடலாம். ஒரு வழக்கமான நாளிலும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான சில வழிகள்:

  • சராசரித் தூரங்கள் செல்லும்போது நடந்துசெல்லலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம்

  • லிஃப்டைப் பயன்படுத்தாமல் படிகளில் ஏறி இறங்கலாம்

  • வார இறுதிகளில் சிறிது நேரம் ஒதுக்கி, ஒரு வெளிச்செயலில் ஈடுபடலாம்

“ஆனால் நான் படிக்கவேண்டுமே. எனக்கு நேரமில்லையே.”

தேர்வுகளின்போது யாருக்குமே எதற்கும் நேரமிருக்காதுதான். ஆனால், அத்தனைக்கும் நடுவே உடற்பயிற்சிக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், அது மாணவர்களுக்கு நல்லது. உடற்பயிற்சியானது மாணவர்களைப் புத்துணர்ச்சி பெறச்செய்கிறது, அவர்களுக்கு ஆற்றலைத் தருகிறது, அவர்கள் இன்னும் செயல்திறனோடு சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. உடற்பயிற்சியின்மூலம் அவர்கள் அமைதியான மனோபாவத்தைப் பெறுவார்கள், அழுத்தத்தை இன்னும் நன்றாகக் கையாள்வார்கள். காலையில் சிறிது உடற்பயிற்சி செய்தால், நாள்முழுக்கச் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

“என் பெற்றோர் என்னை வீட்டிலேயே இருந்து படிக்கச்சொல்கிறார்கள்.”

தேர்வு நேரத்தில் பெற்றோருக்கும் பதற்றம் ஏற்படலாம். சில பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் தேர்வு நேரத்தில் எல்லாக் கவனச்சிதறல்களையும் நிறுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதுபோன்ற நேரங்களில், மாணவர்கள் பெற்றோருடனே சிறிதுதூரம் நடக்கலாம், அல்லது, மெல்ல ஓடலாம். இதன்மூலம், மாணவர் தன்னுடைய நேரத்தைச் சும்மா வீணடிக்கவில்லை என்று பெற்றோருக்குப் புரியும். மாணவர்கள் தங்கள் தாயிடம் சென்று, 'உங்களுடைய மளிகை சாமான்களை நான் வாங்கிவருகிறேன்' என்று சொல்லலாம், சந்தைக்கு மெதுவாக ஓடிச்செல்லலாம். உடற்பயிற்சியின் நன்மைகளைப்பற்றியும் அது எப்படி மாணவர்களின் கவனக்கூர்மையை மேம்படுத்துகிறது என்பதைப்பற்றியும் பெற்றோரிடம் பேசலாம். ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும், அதற்கேற்பத் தங்கள் நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org