தேர்வுப் பதற்றத்தைச் சமாளித்தல்

எதார்த்தமான இலக்குகளை அமைத்துக்கொண்டு, பணிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு செயல்பட்டால் தேர்வுப் பதற்றத்தை வெல்லலாம்

எழுதியவர்: டாக்டர் கரிமா ஶ்ரீவஸ்தவா

தேர்வுகள் என்றாலே, நம்மில் பலருக்கு அழுத்தம் வந்துவிடும், பதற்றம் வந்துவிடும். அழுத்தம் என்பது தவறல்ல, சாதாரணமான அழுத்தம் ஒருவருடைய வேலைக்கு உதவும், அவரை வேகமாகச் சிந்திக்கச்செய்யும், சிறப்பாகச் செயல்படச்செய்யும், அவரது செயல்திறனை மேம்படுத்தும். இதுபற்றிய அனுபவ ஆய்வுகள், ஒரு குறிப்பிட்ட அளவு (சரியான அளவு) அழுத்தமானது ஒருவரை இன்னும் சிறப்பாகச் செயல்படச்செய்யலாம் என்கின்றன. ஆனால், சில நேரங்களில், பதற்றம் மிகவும் அதிகமாகிவிடுகிறது, ஒருவருடைய செயல்திறனைப் பாதிக்கத்தொடங்கிவிடுகிறது. நம்மில் பலருக்கு, தேர்வு தொடர்பான பதற்றம் இருக்கிறது. ஆகவே, அதன் அடையாளங்களைக் கண்டுகொண்டு, அதனைச் சிறப்பாகக் கையாளுவது மிகவும் அவசியம். பதற்றம் எதனால் உண்டாகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், பதற்றத்தைக் குறைப்பது சாத்தியம். அதன்பிறகு, பதற்றத்தைக் கட்டுப்படுத்தலாம், மற்ற வேலைகளைக் கவனிக்கலாம். பதற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்:

  • தூக்கமின்மை.
  • எரிச்சல், முன்கோபம்.
  • தலைவலி, உடல்வலி, வயிற்றில் சங்கடவுணர்வு போன்ற உடல்சார்ந்த அறிகுறிகள்
  • திடீரென்று அதிகம் பசியெடுத்தல்/ நிறைய சாப்பிடுதல், அல்லது, பசியே இல்லாமலிருத்தல்

தேர்வுக்குமுன்னால் உங்களிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனைத் தேர்வுக்குமுன், தேர்வின்போது என்று பிரித்துக்கொண்டு செயல்படலாம்.

தேர்வுக்குமுன்னால்:

  • ஒவ்வொரு வாரமும் எந்தெந்தப் பாடங்களை வாசிக்கவேண்டும்/ திரும்பப் பார்க்கவேண்டும் என்று ஒரு கால அட்டவணையை உருவாக்குதல், அதனைக் கவனமாகப் பின்பற்றுதல். இதனால், கடைசிநேரத்தில் வருகிற தேர்வுப் பதற்றத்தைத் தடுக்கலாம். வாசிக்கும்போது, நேரத்தை நன்கு கையாள்வதன்மூலம், படித்த விஷயங்கள் நன்றாக நினைவில் நிற்கும். உங்களுடைய கால அட்டவணை, எதார்த்தமானதாக இருக்கட்டும்: இதில் முழுக்கமுழுக்கப் பாடங்கள்மட்டும் இருக்கக்கூடாது, நண்பர்களுடன் பேசுவதற்கு, மனத்தைத் தளர்த்துவதற்கும் நேரம் ஒதுக்கவேண்டும்.
  • மற்றவர்கள் தயாரித்த குறிப்புகளைப் பயன்படுத்தாமல், நீங்களே ஒவ்வொரு பாடத்துக்கும் குறிப்புகளைத் தயாரியுங்கள். இதனால், நீங்கள் படிக்கிற பாடங்களை இன்னும் ஆர்வத்துடன் புரிந்துகொள்வீர்கள், ஒரே பாடத்தில் இருக்கும் வெவ்வேறு கொள்கைகளை உங்களால் இன்னும் நன்றாகத் தொடர்புபடுத்திப்பார்க்க இயலும்.
  • படிக்கும் விஷயங்களை மைண்ட்மேப்களாக, படங்களாக, ஃப்ளோசார்ட்களாகத் தொகுத்துவைத்துப் புரிந்துகொள்ளுங்கள். விவரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு, தொகுப்பு அட்டவணையும் ஒரு நல்ல கருவி ஆகும்.
  • உங்களுடைய குறிப்புகளைத் தலைப்புவாரியாக அடுக்குங்கள், எந்தத் தலைப்பைத் திரும்பப் பார்க்கவேண்டுமோ அதைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், எதைத் திரும்பப் படிக்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு, பழைய தேர்வுகளின் வினாத்தாள்களைக் காணுங்கள். முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களைப் பயன்படுத்தித் தொடர்ந்து பயிற்சியெடுத்தால், நீங்கள் எந்த அளவு நன்கு படித்திருக்கிறீர்கள், எங்கெங்கே இடைவெளி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
  • தேவைப்பட்டால், ஆசிரியர்களிடம் உதவி பெறலாம். சில குறிப்பிட்ட தலைப்புகளை, ஒரு நண்பருடன் சேர்ந்து படிக்கலாம். இதனால், நீங்கள் ஒருவருக்கொருவர் யோசனைகளையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.
  • படிப்பின்நடுவே அவ்வப்போது சிறு இடைவேளைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இடைவேளையிலிருந்து திரும்பியபிறகு, அடுத்த 10 முதல் 15 நிமிடங்களுக்கு, இடைவேளைக்குமுன் படித்த விஷயங்களைத் திரும்பப்பாருங்கள், 24 மணிநேரம் கழித்து அதனை இன்னொருமுறை பாருங்கள். உங்களால் எவ்வளவு நேரம் கவனம் செலுத்திப் படிக்க இயலும் என்று தெரிந்துவைத்திருங்கள்: அந்த நேரம் 40 நிமிடங்களைவிடக் குறைவாக இருக்கலாம்.
  • பாடங்களைத் திரும்பப் பார்க்கும்போது, தொந்தரவு இல்லாத, அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து படியுங்கள்.
  • ஆரோக்கியமாக உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், அப்போதுதான் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பல புலன்களைப் பயன்படுத்துங்கள்: எழுதுங்கள், சொல்லுங்கள், காணுங்கள், கேளுங்கள். உதாரணமாக, ஒருவர் காட்சிப்பூர்வமாகப் பார்த்துக் கற்றுக்கொள்கிறவராக இருக்கலாம், அவர் தன் பாடத்தில் உள்ள முக்கியமான அம்சங்களை ஒரு பக்கத்தில் தொகுத்துப் பார்க்கலாம், அதனை ஓர் 'ஆங்கர் சார்ட்' வரைபடமாக மாற்றி, சுவரில் ஒட்டிவைக்கலாம். முக்கியமான அம்சங்களை, யோசனைகளை இணைக்க, அல்லது, வெவ்வேறு விவாதங்களைப் பிரிக்க வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்தலாம். ஒருவர் குரல்மூலம் கேட்டுக் கற்றுக்கொள்கிறவராக இருந்தால், தன்னுடைய குறிப்புகளை ஒலிவடிவத்தில் பதிவுசெய்துவைக்கலாம். பிறகு, அவ்வப்போது அதைக் கேட்டுவரலாம், இதன்மூலம் அந்த விஷயம் அவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்.
  • பாடங்களைப் படிக்கும்போது, ஆராய்தல், கேள்விகேட்டல், வாசித்தல், நினைவுக்குக்கொண்டுவருதல், திரும்பப்பார்த்தல் என்ற வியூகத்தைப் பயன்படுத்தலாம்.

தேர்வின்போது:

பெரும்பாலான தேர்வுகளில், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக வினாத்தாளை வாசிக்க நேரம் தரப்படும். இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்:

  • வினாத்தாளில் உள்ள குறிப்புகளைக் கவனமாக வாசிக்கவேண்டும். இதன்மூலம், கண்டிப்பாக விடையளிக்கவேண்டிய கேள்விகள் எவை என்று அறியலாம், ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே என்று எண்ணிவிடக்கூடாது, மிக நன்றாகப் படித்த மாணவர்கூட, அழுத்தம் மற்றும் பதற்றத்தால் வினாத்தாளில் உள்ள குறிப்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாகப் பார்த்துவிடக்கூடும்.
  • வினாத்தாளில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் படிக்கவேண்டும், எந்தெந்தக் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்கப்போகிறீர்கள் என்று யோசித்து, அந்தக் கேள்விகளை டிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கேள்வியைப்படிக்கும்போதும், அதற்கு என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்று சிந்திக்கவேண்டும். முக்கியமான சொற்கள் மற்றும் வாசகங்களுக்கு அடிக்கோடிடவேண்டும்.
  • ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று கணக்கிடவேண்டும், நீங்கள் எந்த வரிசையில் அவற்றுக்குப் பதிலளிக்கப்போகிறீர்கள் என்று யோசிக்கவேண்டும்.

எழுத ஆரம்பித்தபிறகு, இந்தத் திட்டத்தை மாற்றக்கூடாது. உங்களுடைய பதில்கள் பொருத்தமாக, சரியாக இருக்கட்டும்.

வாழ்த்துகள்!

டாக்டர் கரிமா ஸ்ரீவஸ்தவா டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மன அறிவியல் கழகத்தில் PhD பெற்றவர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org