கல்வி

தேர்வுகளின்போது சரியாகச் சாப்பிடுதல்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தேர்வு நேரத்தில் மாணவர்களின் மூளை செல்கள் களைத்துப்போவது இயல்புதான். அவற்றைப் புத்துணர்வு பெறச்செய்ய, ஓர் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் தொடர்ச்சியான உடற்பயிற்சியும் தேவை. தேர்வு நேரத்தில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பதுபற்றி மாணவர்களும் பெற்றோரும் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். இதுபற்றி, டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர், ஆரோக்கிய எழுத்தாளர் கவிதா தேவ்கனிடம் பேசுகிறார் வொய்ட்ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த அழகம்மை மெய்யப்பன்.  

நான் கொஞ்சமாகதான் சாப்பிடுகிறேன். நான் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் என்னுடைய ஊட்டச்சத்துத் தேவைகள் பூர்த்தியடைந்துவிடுமா?

இயன்றவரை, இயற்கை உணவுகளை உண்பது நல்லது. தீவிரமான ஒரு குறைபாடு இருந்தாலன்றி, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

ஏதேனும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூளைத்திறனை அல்லது நினைவுத்திறனை மேம்படுத்துமா?

ஆம், பல ஆரோக்கிய உணவுகள் மூளைத்திறனை, நினைவுத்திறனை மேம்படுத்தும். இவற்றை மாணவர்கள் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாதாம்  பருப்பில் நிறைய துத்தநாகம் உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் ஒரு தாதுப்பொருள் ஆகும். வேர்க்கடலை, முந்திரி, சூரியகாந்தி விதைகள், மற்றும் பரங்கி விதைகள் ஆகியவை மிகவும் நல்லவை. தினமும் ஒரு க்ளாஸ் பால் குடிக்கலாம், நெய் அளவாக எடுத்துக்கொண்டால் நல்லது. மற்ற சில நல்ல உணவுகள்: ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமுள்ள  பெர்ரிகள், நோய் எதிர்ப்புச்சத்தை மேம்படுத்தும் வைட்டமின் சி உள்ள மாதுளம்பழம். மஞ்சள் மற்றும் லவங்கம் ஆகியவையும் மூளையின் திறனை மேம்படுத்தும்.  மாமிசம் உண்ணுகிறவர்கள் வாரத்துக்கு இருமுறை மீன் சாப்பிடலாம். மீனில் கோலின் உள்ளது. மூளை இதைப் பயன்படுத்தி அசிடைல்கோலினைத் தயாரிக்கிறது. இந்த நரம்புக்கடத்தி நினைவுத்திறன், அறிவாற்றல் புரிந்துகொள்ளுதலை மேம்படுத்த உதவுகிறது.

தேர்வின்போது தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன?

கஃபைன்  அதிகமுள்ள டீ, காஃபி, ஆற்றல் பானங்கள் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. இவற்றை அதிகமாக உட்கொண்டால் பதற்றம், நரம்புத்தளர்ச்சி, வயிற்றுப்பிரச்னை, தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் வரக்கூடும். பொரித்த உணவுகள், குப்பை உணவுகளைத் தவிர்க்கலாம். இவை வெறும் கலோரிகளைமட்டுமே கொண்டுள்ளன, இவற்றில் ஊட்டச்சத்துகள் எவையும் இல்லை: லேசான, ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே உண்ணவேண்டும், இதனால், ஜீரண அமைப்பில் கூடுதல் சுமை சேராது, அந்த ஆற்றலைப் படிப்புக்குப் பயன்படுத்தலாம். சர்க்கரையை அதிகம் உண்பது நல்லதல்ல. அப்படி உண்டால் சர்க்கரையை உடல் நாடத்தொடங்குகிறது, இதனால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது, பிறகு அது சரிகிறது, இதனால் களைப்பு, தளர்ந்த உணர்வு ஏற்படுகிறது. சர்க்கரையானது உடலில் அமிலச் சூழலையும் உருவாக்குகிறது. இதனால், களைப்பு வருகிறது, எதிர்வினைகள் தாமதமாகின்றன, தீர்மானமெடுக்கும் திறன் குறைகிறது, கவனக்கூர்மை குறைகிறது, நோய் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. அதிகக் கொழுப்புள்ள உணவுகளை நிறைய உண்ணவேண்டாம். இதனால் ரத்தமானது மூளையிலிருந்து ஜீரண அமைப்புக்கு மாற்றப்படுகிறது, அதனால் மந்தவுணர்வும் களைப்பும் வருகிறது. இதனால், நாள்முழுக்க நான்கு முதல் ஆறு வேளை கொஞ்சம்கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

தேர்வுக்குப் படிக்கும்போது நான் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்டுவிடுகிறேன். இந்த நேரத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் என்ன?

கொட்டைவகைகள், பழங்கள், முளைகட்டிய பயிர், வேகவைத்த மக்காச்சோளம் போன்றவை நல்ல நொறுக்குத்தீனிகள். இளநீர் மற்றும் கருப்புக் கொண்டைக்கடலை சூப்பும் (கருப்புக் கொண்டைக்கடலையோடு நிறைய நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, கொஞ்சம் கருப்பு உப்பு, எலுமிச்சை ரசம் சேர்த்துக் குடிக்கலாம்) உட்கொள்ளலாம்.

தேர்வுநேரத்தில் சரியாகச் சாப்பிடுவதற்கு வேறு ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா?

தண்ணீர்: பொதுவாகத் தேர்வு நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். ஆனால், அப்போதுதான் அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும், தாகமே எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பது அவசியம். இதற்கு ஒரு நல்ல வழி, படிக்கும்போது பக்கத்திலேயே ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலொன்றை வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்கலாம். தினமும் குறைந்தபட்சம் இப்படி இரண்டு பாட்டில் தண்ணீராவது குடிக்கவேண்டும். மனித மூளையில் பெரும்பகுதி (சுமார் 90 சதவிகிதம்) தண்ணீர்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்!

பட்டினி கிடக்கவேண்டாம், காலை உணவைத் தவிர்க்கவேண்டாம்: சிறுவர்கள், இளைஞர்கள் மிகக் குறைந்த கலோரி உணவுப்பழக்கங்களைப் பின்பற்றுவது நல்லதல்ல. ஒருவர் குறைந்த கலோரிகளையே சாப்பிடுகிறார் என்றால், அவர் விவரங்களை மெதுவாகவே செயல்முறைப்படுத்தக்கூடும், தாமதமாக எதிர்வினை செய்யக்கூடும், வரிசைகளை நினைவில் வைத்துக்கொள்வதில் அவருக்குச் சிரமம் ஏற்படக்கூடும். அத்துடன், ஒருவர் தூங்கும்போது மூளை எரிபொருளை எரிக்கிறது. ஆகவே, காலை உணவானது அந்த எரிபொருளை மீட்டுத்தருகிறது. காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்குப் பின்னர் மனக்குழப்பம் ஏற்படலாம். ஆகவே, ஒவ்வொரு நாளையும் போதுமான அளவு காலை உணவுடன் தொடங்குவது நல்லது!

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org