கல்வி

தேர்வுப் பதற்றத்தைப் பெற்றோர் சமாளித்தல்

தேர்வின்போது, குழந்தைகள் பதற்றமில்லாமலிருக்கவேண்டுமென்றால், அதற்குப் பெற்றோரும் தங்களைத் தயார்செய்துகொள்ளவேண்டும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

இதோ, தேர்வுகள் வந்துவிட்டன. மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் எல்லோரும் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்கள். போட்டி மனப்பான்மை என்பது, ஒரு குறிப்பிட்ட கட்டம்வரை ஆரோக்கியமானதுதான், ஆனால், அதைத் தாண்டிவிட்டால், அது பெற்றோரையும் குழந்தைகளையும் பதற்றத்தில், அழுத்தத்தில் தள்ளிவிடுகிறது. தேர்வு, கல்விச் செயல்திறன்பற்றிப் பதற்றப்படும் மாணவர்களைக் கவனித்துப்பார்த்த உளவியலாளர்கள், பல நேரங்களில் இவை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து வருபவைதான் என்கிறார்கள். அதாவது, பெற்றோர் தெரிந்தோ தெரியாமலோ தேர்வுசார்ந்த பதற்றத்தை அடைகிறார்கள், அதைத் தங்கள் குழந்தைமீது திணிக்கிறார்கள், பின்னர், அது குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கத்தொடங்குகிறது.

தேர்வுகளின்போது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம், பதற்றத்தை அதிகரிக்காமல், அவர்களது தன்னம்பிக்கையை எப்படி வளர்க்கலாம் என்பதுபற்றி, மருத்துவ உளவியல்துறை உதவிப் பேராசிரியரான டாக்டர் எம் மஞ்சுளாவிடம் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச்சேர்ந்த பிரியங்கா மந்த்ரிப்ரகடா பேசினார்.

தேர்வுகளின்போது ஒரு தாய் அல்லது தந்தை தன் குழந்தைக்கு எப்படி உதவலாம்?

ஒரு குழந்தை தேர்வைச் சந்திக்கவும் சமாளிக்கவும் பெற்றோர் வழிகாட்டலாம். நினைவிருக்கட்டும், தேர்வு என்று வந்தாலே, அதில் தனக்கு என்ன மதிப்பெண்வருமோ என்று எண்ணி அந்தக் குழந்தை ஏற்கெனவே பதற்றமாக உணர்கிறது, அழுத்தத்துடன் இருக்கிறது. இந்த நேரத்தில், பெற்றோர் இவற்றைச் செய்யலாம்:

  • தேர்வுக்குப் படிப்பதற்காக ஒரு கால அட்டவணையை உருவாக்கக் குழந்தைக்கு உதவலாம், அதன்மூலம் எல்லாப் பாடங்களையும் படிப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கும்
  • பாடங்களைப் படிக்க, திருப்பிப்பார்க்கக் குழந்தைக்கு உதவலாம்
  • அவர்களுக்குப் போதுமான, ஊட்டச்சத்து மிகுந்த உணவைத் தரலாம், அதன்மூலம் அவர்களை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளலாம்
  • குழந்தை தூங்கும் நேரங்களைக் கவனிக்கலாம், அதற்குப் போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யலாம்
  • அவர்களுக்கு ஏதேனும் பயங்கள் இருந்தால், தன்னுடைய திறமைமீது சந்தேகங்கள் இருந்தால், அவற்றை வெல்வதற்கு உதவலாம், 'உன்னால் முடியும்' என்று உறுதிசொல்லி, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கலாம்

ஒரு குழந்தைக்குத் தேர்வுப் பதற்றம் வந்திருக்கிறது என்று பெற்றோர் தெரிந்துகொள்வது எப்படி?

ஒரு குழந்தை பயப்படும்போது, அழுத்தத்தில் இருக்கும்போது, பதற்றப்படும்போது எப்படி நடந்துகொள்ளும் என்று பெற்றோருக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக, படிப்புசம்பந்தமாகத் தங்களுக்கு வரும் பதற்றங்களை, எரிச்சல்களை, சிரமங்களைக் குழந்தைகள் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வார்கள். இப்படிக் குழந்தைகள் சொல்லும் சில பதற்றமான எண்ணங்கள்: நான் போதுமான அளவு படிக்கவில்லை என்று அச்சமாக உள்ளது, ஒருவேளை நான் விரும்பும் கல்லூரி/ படிப்பு எனக்குக் கிடைக்காவிட்டால் என்ன ஆகும்?, என்னால் கவனம் செலுத்திப் படிக்க இயலவில்லை, எனக்கு எல்லாமே மறந்துபோகிறது, எனக்குப் பாடங்கள் புரியவில்லை... அதேபோல், சில குழந்தைகள் தேர்வு நேரத்தில் அளவுக்கதிகமாக உறங்குவார்கள், அல்லது, மிகக்குறைவாக உறங்குவார்கள், வேறு சிலருக்கு, சரியாக தேர்வுக்குமுன்னால் வயிற்றுவலி வரும், தேர்வு முடிவுகளை எண்ணி நம்பிக்கையிழந்தநிலையில் காணப்படுவார்கள், அல்லது, பதறிக்கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில், தீவிரப் பதற்றம் காரணமாகச் சில மாணவர்கள் தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொள்வதும் உண்டு. இவை அனைத்தும், தேர்வுகளால் வரும் அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அடையாளங்கள். இதுபோன்ற நேரங்களில், பெற்றோர் குழந்தைகளுடன் அதிகநேரம் செலவிடவேண்டும், அவர்களைக் கண்காணிக்கவேண்டும், அவர்களுடைய நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகின்றனவா எனக் கவனிக்கவேண்டும். குழந்தையிடம், 'மதிப்பெண்ணைவிட, கற்றுக்கொள்வதுதான் முக்கியம்' என்று சொல்லலாம், இதன்மூலம் அவர்கள் அமைதியடைவார்கள். முக்கியமாக, பெற்றோர் பதற்றப்படக்கூடாது. அவர்கள் அமைதியாக இருந்தால்தான், குழந்தைகள் பயமின்றி இருப்பார்கள்.

குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்கலாமா? அதை அனுமதிக்கலாமா?

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருமாதிரியானது, அவர்களுடைய படிக்கும் பழக்கமும் மாறுபடும். சிலர் சீக்கிரம் உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து படிப்பார்கள், வேறுசிலர் இரவு நேரத்தில்தான் நன்கு படிப்பார்கள். ஆகவே, ஒரு குழந்தை இரவில் படித்துவிட்டுக் காலையில் தூங்குகிறது என்றால், அதை அனுமதிக்கலாம். இன்னொரு விஷயம், வளர் இளம்பருவத்தில் உள்ள குழந்தைகள் வழக்கத்தைவிட அதிகம் தூங்குவார்கள். அவர்களுடைய தூக்கம் பாதிக்கப்பட்டால், பகல்நேரத்தில் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற இயலாமல் போகலாம்.

குழந்தை தேர்வுக்குப் படிப்பதற்காகக் கால அட்டவணை தயாரிக்கும்போது, அதற்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?

குழந்தையின் தேவையைப்பொறுத்து, பெற்றோர் உதவலாம். உதாரணமாக, சில வழிகள்:

  • ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு படிக்கவேண்டும் என்று ஆராயலாம்
  • அதனைக் கால அட்டவணைப்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கலாம், அவர்கள் அதனைப் பின்பற்ற உதவலாம்
  • அவர்களுக்கு ஏதேனும் பாடங்கள் புரியாவிட்டால், அவற்றைச் சொல்லித்தரலாம்
  • அவர்கள் அவ்வப்போது ஓய்வெடுக்கவேண்டும், மனத்தைத் தளர்த்திக்கொள்ளவேண்டும் என்று ஊக்கப்படுத்தலாம்
  • ஒருவேளை அவர்களுடைய எழுத்துவேகம் குறைவு, அல்லது, அவர்களுக்குப் பதில்களை ஒழுங்காக அமைத்து எழுதத்தெரியவில்லை என்றால், வீட்டில் மாதிரித் தேர்வுகளை வைக்கலாம். 

பெற்றோர் எதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது?

உயர்நிலைப்பள்ளியில் உள்ள பல குழந்தைகள், தேர்வு நேரத்தில் பொறுப்பாகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே, பெற்றோர் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டியதில்லை, அவர்களே படிக்க அனுமதிக்கலாம். அவர்களுக்குத் தங்களுடைய படிப்பைப்பற்றிய பொறுப்புணர்ச்சி வரவேண்டும், பெற்றோர் அதற்கு உதவினால் போதும். மாறாக, அவர்களை அதீதமாகக் கண்காணித்தல், வழிகாட்டுதல் போன்றவற்றால் அவர்கள் இன்னும் சிறப்பாகப் படிக்க வாய்ப்பில்லை.

சில பெற்றோர், நாள்முழுக்கத் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் சொல்லித்தருவார்கள், அவர்களைப் படிக்கவைப்பார்கள், இத்தனைக்கும் அந்தக் குழந்தைகள் ஏற்கெனவே மேல்நிலைக்கல்விக்கு வந்திருப்பார்கள், இந்த நிலையில் பெற்றோரின் குறுக்கீடு ஒரு தொல்லையாகவே அமையும், குழந்தைகளுக்கு உதவாது. அதற்குப்பதிலாக, 'உனக்கு எதாவது புரியலைன்னா என்கிட்ட கேளு' என்று சொல்லிவிட்டு விலகிக்கொள்ளலாம், 'தேர்வுகளை நினைத்துக் கவலைப்படாதே, பதற்றப்படாதே' என்று சொல்லலாம்.

தேர்வு நேரத்தில் குழந்தைகள் இணையம் பார்க்கலாமா? தொலைக்காட்சி பார்க்கலாமா? வெளியே சென்று விளையாடலாமா?

எந்நேரமும் படித்துக்கொண்டே இருக்கிற குழந்தை, அவ்வப்போது சிறு இடைவேளை விடலாம், தொலைபேசியில் ஒரு செய்தியைப் பார்த்துப் பதில் எழுதலாம், சிறிதுநேரம் இணையம் பார்க்கலாம். ஆனால், இதில் சுய கட்டுப்பாடு அவசியம். படிப்புக்கு நடுவே எவ்வளவு நேரம் இணையத்தைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் தொலைபேசியைப் பயன்படுத்தலாம் என்று அந்தக் குழந்தை தீர்மானித்துக்கொள்ளவேண்டும், அதன்படி நடக்கவேண்டும். தொலைபேசி, இணையத்தைப் பார்ப்பதற்குப்பதிலாக, சிறிதுதூரம் நடந்து திரும்பலாம், அல்லது, நல்ல இசையைக் கேட்கலாம். இதனால், குழந்தை புத்துணர்ச்சியாக உணரும். அவர்கள் என்ன செய்தாலும் சரி, அதற்கு அவர்களே பொறுப்பு என்று குழந்தைகளை உணரச்செய்யவேண்டும், இதுதான் பெற்றோரின் வேலை.

தேர்வுநேரத்தில் பெற்றோருக்கு வரும் அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, அதன் பலங்கள், திறமைகள் வெவ்வேறுவிதமானவை, இதைப் பெற்றோர் முதலில் உணரவேண்டும். ஒரு குழந்தை தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினாலும் சரி, வாங்காவிட்டாலும் சரி, அவர்களால் தங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு குழந்தை வாங்குகிற மதிப்பெண்களின் அடிப்படையில்மட்டுமே அதை மதிப்பது சரியல்ல. பெற்றோர் இந்தத் தவறான நம்பிக்கையை, மனத்தடையைத் தாண்டி வரவேண்டும். கல்வி என்பது, வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டுமே. அதுவே வாழ்க்கை அல்ல. பெற்றோர் தங்கள் குழந்தையின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்த வரம்புகளுக்குட்பட்டு, அதனால் என்னவெல்லாம் செய்ய இயலும் என்று சிந்திக்கவேண்டும். இதுவே சிறப்பான அணுகுமுறை.

வெற்றி, தோல்விபற்றிப் பெற்றோர் குழந்தைகளிடம் எப்படிப் பேசவேண்டும்?

முதலில், கல்வியில் வெற்றி, தோல்வி என்பது என்ன என்பதைப் பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். உதாரணமாக, 90%க்குக் குறைவாக மதிப்பெண் எடுப்பது தோல்வி என்று பெற்றோர் நினைத்தால், அவர்களுடைய குழந்தை தன்னையும் அறியாமல் அதே நம்பிக்கையுடன் வளரும். ஒரு தேர்வில் அவர்கள் 85% மதிப்பெண் எடுத்தால், மற்றவர்கள் அதை நல்ல மதிப்பெண் என்று சொன்னாலும், குழந்தை ஏற்றுக்கொள்ளாது, ஏமாற்றமடையும், காரணம், அதன் பெற்றோர் அதை நல்ல மதிப்பெண்ணாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே, தங்கள் குழந்தை சமூகத்தில் ஒரு நியாயமான, கருணையுணர்வுள்ள பிள்ளையாக வளரவேண்டும் என்பதற்குப் பெற்றோர் அதிக முக்கியத்துவம் தருவது நல்லது.

குழந்தையை வளர்க்க மிகவும் முக்கியமான, சரியான வழிகள், அவர்கள் தங்களுடைய பலங்கள், ஆர்வங்களை அடையாளம் காண உதவுதல், அவர்களுடைய சுய மதிப்பை வலுப்படுத்துதல், அவர்களது தன்னம்பிக்கையை வளர்த்தல் ஆகியவை. பெற்றோர் தினந்தோறும் தங்கள் குழந்தைகளிடம் பேசும்போது, இந்த எண்ணம் வெளிப்படவேண்டும். தன் பெற்றோர் வெற்றியைமட்டும்தான் மதிப்பார்கள் என்று குழந்தை கருதும்படி அவர்கள் பேசக்கூடாது, வெற்றி, தோல்வி இரண்டையும் சமநிலையில் எடுத்துக்கொள்கிற மனோநிலையுடன் அவர்களிடம் பேசவேண்டும், இரண்டும் சம அளவு முக்கியம் என வலியுறுத்தவேண்டும். பெற்றோர் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒரு கேள்வி: அவர்கள் தங்கள் குழந்தையிடம் பேசும்போது, பெரும்பாலும் அதில் இடம்பெறுகிற விஷயம் என்ன? அந்த விஷயம் குழந்தையை மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையாகவும் உணரச்செய்கிறதா? இல்லை எனில், பெற்றோர் குழந்தையிடம் அதிகம் பேசுகிற விஷயத்தை மாற்றவேண்டும், அதன்மூலம் குழந்தையை ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தனிநபராக வளர்க்கவேண்டும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org