கல்வி

தேர்வு நேரத்தில் பதற்றம் ஏற்பட்டால் உதவித் தொலைபேசியை அழைக்கலாம்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

உதவித் தொலைபேசி என்பது என்ன?

உதவித் தொலைபேசி என்பது, அழுத்தத்தில் உள்ள எவருக்கும் உணர்வுரீதியிலான ஆதரவு, விவரங்களை வழங்கும் ஓர் இலவசச் சேவை ஆகும். அங்கே ஒருவர் தன்னுடைய பிரச்னையை விவாதிக்கலாம், தன்னைப்பற்றிப் பிறர் தவறாக எடைபோடுவார்களோ என்று எண்ணவேண்டியதில்லை. பல உதவி அமைப்புகள் தொலைபேசிவழியேதான் உதவி வழங்குகின்றன, சில அமைப்புகள் மின்னஞ்சல் வழியாகவும் இணைய வழிகாட்டுதலை வழங்குகின்றன.

எப்போது ஓர் உதவித் தொலைபேசியை அழைக்கவேண்டும்?

நெருக்கடி நேரத்தில்மட்டுமே உதவித் தொலைபேசியை அழைக்கவேண்டும் என்றில்லை. ஏதாவது பொது விவரம் தேவைப்பட்டாலோ, ஒரு குறிப்பிட்ட சூழலைப்பற்றிய தெளிவு தேவைப்பட்டாலோகூட உதவித் தொலைபேசியை அழைக்கலாம். ஒருவர் தன்னுடைய பிரச்னைக்காகவும் உதவித் தொலைபேசியை அழைக்கலாம், தான் அக்கறைகாட்டுகிற இன்னொருவருடைய பிரச்னைக்காகவும் அழைக்கலாம்.

உதவித் தொலைபேசியை அழைக்கும்போது, அங்கே என்ன எதிர்பார்க்கலாம்?

ஒருவர் உதவித் தொலைபேசியை அழைக்கும்போது, அவர் ஓர் ஆலோசகருடன் (அல்லது, ஒரு பயிற்சிபெற்ற நிபுணருடன்) பேசுவார். அந்த நிபுணர், இவர் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப்பற்றி (உதாரணமாக: தேர்வை எண்ணி அழுத்தம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவை) நன்கு புரிந்துவைத்திருப்பார். உதவித் தொலைபேசியின் முக்கிய நோக்கங்கள், பிரச்னையைக் கேட்பது, சரியான தீர்மானத்தை நோக்கி வழிகாட்டுவது. இதற்காக, ஆலோசகர் சில அடிப்படை விஷயங்களைக் கேட்கலாம். உதாரணமாக, ஒருவருடைய வயது, அவர் அனுபவிக்கும் பிரச்னைபற்றிய விவரங்கள் போன்றவை. அதன்பிறகு, அவர் சொல்வதையெல்லாம் ஆலோசகர் கேட்பார், குறுக்கிடமாட்டார், அவரை எடைபோடமாட்டார். இப்படி ஒருவர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில், அவர் ஒரு நல்ல தீர்வைக் கண்டறிய ஆலோசகர் உதவுவார் அல்லது, அவரை ஒரு நிபுணரிடம் அனுப்புவார்.

ஒருவர் வழங்கும் விவரங்கள் ரகசியமாக இருக்குமா?

உதவித் தொலைபேசி ஆலோசகர் ஒருவரிடம் பேசுவதென்பது, நண்பர் ஒருவரிடம் பேசுவதைப்போல்தான். ஒரே ஒரு வித்தியாசம், இங்கே அவர் தன்னுடைய பெயரைச் சொல்லவேண்டியதில்லை. எல்லா உதவித் தொலைபேசி உரையாடல்களும் பெயர் குறிப்பிடப்படாமல் நடைபெறுகின்றன, அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்கள் ரகசியமாக இருக்கின்றன. ஆனால், சில சூழ்நிலைகளில் (உதாரணமாக: அழைப்பவர் தனக்குத்தானே, அல்லது, பிறருக்கு ஏதோ ஊறு விளைவிக்கக்கூடிய சூழ்நிலைகளில்) இந்த ரகசியக்காப்பு மீறப்படலாம். ஆகவே, உதவித் தொலைபேசியை அழைப்பவர் தன்னுடைய பிரச்னையை விவாதிப்பதற்குமுன்னால், ரகசியத்தன்மைக் காப்பு ஒப்பந்தத்தைப்பற்றித் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

உதவித் தொலைபேசிகளைப்பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org