கல்வி

தேர்வுகளின்போது இலக்கு நிர்ணயித்தல்

படிப்பதற்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவே, இதை நான் எப்படிப் பூர்த்திசெய்வது?' 'அடடா, இந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்தாலே எனக்குத் தூக்கிவாரிப்போடுகிறதே.'

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

தேர்வு நேரத்தில், பாடத்திட்டத்தைப் பார்க்கும் பல மாணவர்கள் பதற்றமடைகிறார்கள், அல்லது, படிப்பதைத் தள்ளிப்போட எண்ணுகிறார்கள். தேர்வுப் பதற்றத்தைக் குறைக்கச் சில நல்ல வழிகள், தேர்வுப் பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட இலக்குகளாக மாற்றுவது, பாடங்களை எட்டக்கூடிய இலக்குகளாகப் பிரிப்பது.

தேர்வுகளுக்கு ஏன் இலக்குகளை அமைக்கவேண்டும்?

ஒருவர் மலையேறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மலையைப் பார்த்தவுடன், அவர் திகைத்துப்போவார். 'இந்த மலையில் நம்மால் ஏற இயலாது' என்று நினைப்பார். ஆனால், அவர் அந்த மலையில் கண்டிப்பாக ஏறத்தான் வேண்டும். அப்போது, முதலில் அவர் அதற்கான திட்டத்தை உருவாக்கவேண்டும், அல்லது, இலக்குகளை அமைக்கவேண்டும், மலையேற்றத்துக்குத் தேவையான சாதனங்களைத் திரட்டவேண்டும், அதன்பிறகு, ஏறத்தொடங்கவேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு மலையேறும் ஒருவர், அந்த மலையின் உச்சியை எட்டியதும் எப்படி மகிழ்ச்சியாக, திருப்தியாக உணர்வார் என்று கற்பனை செய்யலாம். தேர்வுகளுக்கு இலக்குகளைத் தீர்மானிப்பதும் இதேமாதிரிதான். அது சிரமமாகத் தோன்றலாம், ஆனால், ஒவ்வொருபடியாக எடுத்துவைத்தால் இலக்கை எளிதில் எட்டிவிடலாம்.

இலக்குகளின் வகைகள்

தேர்வுகளுக்குத் தயார்செய்தல், தேர்வு எழுதுதல் ஆகியவற்றைப் பல இலக்குகளாகப் பிரிக்கலாம். ஒருவர் என்ன சாதிக்க விரும்புகிறார் என்பதைப்பொறுத்து அவருடைய இலக்குகள் மாறும்.

நீண்டகால இலக்குகள்: நீண்டகால இலக்குகளுக்குச் சில உதாரணங்கள்:

 • ஒரு குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர விரும்புதல்

 • அடுத்த ஆண்டின் நிறைவில் தன்னுடைய பாடத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தல்

 • ஒரு தேர்வை நன்றாக எழுதுதல்

குறுகியகால இலக்குகள்: குறுகியகால இலக்குகள் என்பவை, நீண்டகால இலக்குகளை எட்டுவதற்கான சிறு படிக்கட்டுகள். உதாரணமாக:

 • தான் விரும்பும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையத் தேவையான கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெறுதல்

 • பாடத்தைப் பூர்த்தி செய்வதற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தல்

 • ஒரு தேர்வுக்கு நன்கு தயார்செய்தல் அல்லது ஒட்டுமொத்தப் பாடத்திட்டத்தையும் படித்தல்

சிறு இலக்குகள்: இவை ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யவேண்டிய இலக்குகள் ஆகும். சிறு இலக்குகளைப் பூர்த்தி செய்வதன்மூலம், ஒரு மாணவர் குறுகியகால இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்வேகத்தைப் பெறுகிறார். பெரிய வேலைகள் அல்லது இலக்குகளைச் சிறியவையாக உடைத்துக்கொண்டால், மாணவருக்குச் சாதித்த உணர்வு கிடைக்கும். சிறு இலக்குகளுக்கான சில உதாரணங்கள்:

 • பல நாள் படிக்கவேண்டிய பாடங்களைப் பிரித்தல்

 • ஒவ்வொரு பாடத்துக்கும் வாசிப்புச் செயல்களைத் தீர்மானித்தல். உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் பாடத்திட்டத்திலிருந்து சில அத்தியாயங்களைப் படித்தல்

 • தனது தினசரி வாசிப்புப் பணிகளைத் தீர்மானித்தல்

இலக்குகளை எப்படி அமைக்கலாம்?

ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாகப் படிக்கிறார்கள். படிக்கச் சிரமமாகத் தோன்றும் பாடத்திட்டத்தைச் சிறிய செயல்களாகப் பிரிக்கலாம். ஒரு தேர்வுக்குத் தயாராகும்போது இலக்குகளை அமைப்பதும் எட்டுவதும் இவற்றைச் சார்ந்து அமையும்:

 • தயார்செய்யத் தேவையான நேரம்

 • இருக்கும் நேரத்தின் அடிப்படையில் கல்வி இலக்குகளைத் தீர்மானித்தல், திட்டமிடுதல்

 • இலக்குகளைக் குறிப்பிட்ட, அளக்கக்கூடிய, எதார்த்தமான மற்றும் நேர அடிப்படையிலான பணிகளாகப் பிரித்தல்

 • அமைக்கப்பட்ட வேலைகள் மற்றும் இலக்குகளை எட்டுவதற்கான ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை

இலக்குகளை அமைக்கும்போது, அவ்வப்போது இடைவெளிகளையும் திட்டமிடவேண்டும், இதன்மூலம் மனம் தளர்வாக இருக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசி நேரம் செலவிடலாம். இலக்குகளை நெகிழ்வாக வைத்துக்கொள்வது நல்லது. என்றைக்காவது படிக்கமுடியாவிட்டால், அடுத்தநாள் அதைச் சரிசெய்துகொள்ளலாம்.

காண்க:

காட்ரெல், எஸ். (1999), கல்வித் திறன்கள் கையேடு, பால்க்ரேவ் மெக்மில்லன்.

ஸ்சங்க், D. H. (2000). கற்றல் கொள்கைகள்: ஒரு கல்விக்கோணம். அப்பர் சாடில் ரிவர், NJ: ப்ரென்டிஸ்-ஹால்.

ஜிம்மெர்மன், B. J. (1998). கல்வி வாசிப்பு மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துதல்: ஒரு சுய கட்டுப்பாட்டுப் பார்வை. எஜுகேஷனல் சைக்காலஜிஸ்ட், 33, 73-86.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org