கல்வி

மாணவர் தேர்வு அழுத்தத்தைக் கையாளுதல்

சில ஆசிரியர்கள், தங்களையும் அறியாமல் தங்கள் மாணவர்கள் மத்தியில் தேர்வுகளைப்பற்றிய அழுத்தத்தை உண்டாக்கிவிடக்கூடும்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஒரு பையன் நன்றாகப் படித்தாலும் சரி, சுமாராகப் படித்தாலும் சரி, அவனுக்கு நிச்சயம் தேர்வைப்பற்றிய அழுத்தம் இருக்கும். பல நேரங்களில், இந்த அழுத்தத்தை உண்டாக்குவதே அவர்களுடைய ஆசிரியர்கள்தான். பள்ளி நிர்வாகிகளுக்கு ‘நல்ல முடிவுகள்’ தேவை (அதாவது, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்) ஆகவே, அவர்கள் ஆசிரியர்களுக்கு அழுத்தம் தந்து, மாணவர்களைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டுமாறு சொல்கிறார்கள். இதனால், ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும்போதெல்லாம், நன்கு படிப்ப்து, 'நல்ல மதிப்பெண்கள்' எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள், (இங்குள்ள ஆய்வை வாசிக்கவும்). இதனால், ஆசிரியர்களே பெரும் அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள்:

  • நன்கு படிக்கும் மாணவர்களால்தான் பள்ளிக்குப் பெருமை, அந்த மாணவர்கள்மீது ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள்
  • சுமாராகப் படிக்கும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகள் என்ன ஆகுமோ என்கிற பதற்றம். காரணம், இவர்களுடைய செயல்திறனுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்கவேண்டியிருக்கும்

NIMHANS மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியரான டாக்டர் எம் மஞ்சுளா அவர்களுடைய கருத்துகளின் உதவியுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை, ஆசிரியர்கள் தங்களையும் அறியாமல் மாணவர்கள் மத்தியில் தேர்வு அழுத்தத்தை உண்டாக்குவது எப்படி என்று விளக்குகிறது. 'ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் கவனித்து, அவர்களுடைய கல்வி முன்னேற்றத்தைக் கண்காணிப்பது சிரமம், என்றாலும், படிப்புபற்றி மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தைக் கையாள அவர்கள் உதவலாம்' என்கிறார் டாக்டர் மஞ்சுளா. மாணவர்களின் தேர்வு அழுத்தத்தைக் கையாளும்போது, ஓர் ஆசிரியர் சந்திக்கக்கூடிய சில பொதுவான கேள்விகள் இவை. 

ஒரு மாணவர் அழுத்தத்தில் உள்ளார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

எந்த மாணவர் சராசரியாகப் படிக்கிறார், எந்த மாணவர் நன்கு படிக்கிறார் என்பது ஓர் ஆசிரியருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதைக்கொண்டு, அவர்கள் ஒவ்வொரு மாணவர்மீதும் விசேஷக் கவனம் செலுத்தலாம். அவர்கள் நன்றாகப் படித்தாலும் சரி, சுமாராகப் படித்தாலும் சரி. பல நேரங்களில், ஆசிரியர்கள் நன்கு படிக்கும் மாணவர்கள்மீது கவனம் செலுத்துகிறார்கள், சுமாராகப் படிக்கிறவர்களை அதிகம் கவனிப்பதில்லை. இதனால், மற்ற மாணவர்கள் மிக நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணிப் பதற்றம் கொள்கிறார்கள். அப்போதுதான் ஆசிரியர் தங்களைக் கவனிப்பார் என நினைக்கிறார்கள்.

ஓர் ஆசிரியர், மாணவர் இடையிலான உரையாடல் எப்படி அமையவேண்டும்?

  • ஒரு மாணவர் எப்படிப் படிக்கிறார் என்பதைவைத்து ஆசிரியர் அவருடன் பழகக்கூடாது. எல்லா மாணவர்களும் நன்கு கற்றுக்கொள்கிறார்களா என்பதை வலியுறுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும். 
  • சரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கவனிப்பதில்லை. இதனால், அவர்களுடைய சுயமதிப்பு பாதிக்கப்படுகிறது. சரியாகப் படிக்காத மாணவர்களின் மன உணர்வுகளை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டும், அவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட்டு, அவர்களுடைய அடிப்படைப் புரிந்துகொள்ளல் வலுவாக உதவவேண்டும், அவர்கள் படிப்பதற்கான திட்டங்களை உருவாக்க உதவவேண்டும், அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய பிற ஆதரவுகளை வழங்கவேண்டும். ஊக்கம்தருகிற, ஆதரவளிக்கிற இந்த உரையாடல் ஒவ்வொரு மாணவருடன் தொடர்ந்து நடைபெறவேண்டும்.   

தேர்வு நேரத்தில் மாணவர்களுடைய பெற்றோருடன் பேசவேண்டுமா?

சில நேரங்களில் பேசவேண்டியிருக்கலாம், எப்போதும் அவசியமில்லை. அதேசமயம், ஆசிரியர்கள் பெற்றோருடன் பேசும்போது 'தவறான தகவல் தொடர்பை' வழங்கிவிடக்கூடாது. உதாரணமாக, பெற்றோரிடம் "உங்கள் மகன் நன்றாகப் படிப்பதை உறுதிசெய்யுங்கள்" என்றோ "இது முக்கியமான தேர்வு, ஆகவே, உங்கள் மகள் வெளியே செல்லவோ தொலைக்காட்சி பார்க்கவோ அனுமதிக்காதீர்கள்" என்றோ சொன்னால், அதனால் பலன் இருக்காது, தீமைதான் விளையும். இப்படிப் பேசுவதன்மூலம், ஆசிரியர்கள் தங்களுடைய பதற்றங்களைப் பெற்றோரிடம் கடத்திவிடுகிறார்கள், இதனால் மாணவர்கள் தேர்வுகளை எண்ணி மேலும் பதற்றமடையக்கூடும். 

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுவது எப்படி?

ஓர் ஆசிரியர் நன்றாகப் படிக்கும் மாணவர்களிடம் ஒருமாதிரியும் சுமாராகப் படிக்கும் மாணவர்களிடம் இன்னொருமாதிரியும் நடந்துகொண்டால், அதனால் சுமாராகப் படிக்கும் மாணவர்களின் சுய மதிப்பு பாதிக்கப்படும். ஒரு மாணவரைப்பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார், அவரது திறன்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப்பொறுத்து, அந்த மாணவரின் தன்னம்பிக்கை பாதிக்கப்படும். 

ஆசிரியர் இந்த விதங்களில் மாணவர்களுக்கு உதவலாம்:

  • மாணவர்கள் கால அட்டவணையைத் திட்டமிட உதவலாம்
  • மாணவர்களின் செயல்திறனைக் கவனித்து, அதற்கேற்ப அவர்களுக்கு உதவலாம்
  • தங்களுடைய எதிர்பார்ப்பை மாணவர்மீது திணிக்காமல், அதேசமயம் அவர்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் நடந்துகொள்ளலாம்  
  • மாணவர்களின் இலக்குகள் மற்றும் சாதனைகளைப்பற்றி வெளிப்படையாகப் பேசலாம்
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org