ஒரு மகிழ்ச்சியான வகுப்பறைக்கான ஏழு வியூகங்கள்

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தங்களுடைய நாளின் பெரும் பகுதியை வகுப்பறைகளில் செலவிடுகிறார்கள், அவர்களுக்குக் கற்றுத்தருதலும் அவர்கள்  கற்றுக்கொள்ளுதலும் உண்மையாகச் செயல்திறனுடன் இருக்கவேண்டுமென்றால் வகுப்பறைகள் பாதுகாப்பானவையாக, மகிழ்ச்சியானவையாக மற்றும் வரவேற்கும் இடங்களாக அமைவது முக்கியம்.   நேர்விதமான ஒரு வகுப்பறை அனுபவத்தை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய ஏழு வியூகங்கள் இதோ.

1. ’Whale Done’ எதிர்வினை:

பெரும்பாலான நேரங்களில், ஒரு குழந்தை மிகச் சிறப்பான ஒரு பணியைச் செய்யவேண்டும் அல்லது மிகச் சிறப்பாக நடந்துகொள்ளவேண்டும், அப்போதுதான் தாங்கள் அந்தக் குழந்தையை பாராட்டவேண்டும் என்று ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.   சில நேரங்களில், மிகச் சிறப்பானது எது என்பதற்கு ஆசிரியர் நிர்ணயித்திருக்கும் தரத்தின்படி இது எப்போதும் நிகழாமல் இருக்கலாம், அதாவது, ஆசிரியருடைய அளவுகோலில் அந்தக் குழந்தை எப்போதும் மிகச் சிறப்பாக நடந்துகொள்ளாமலே இருக்கலாம். ஆகவே, அதற்கு எந்தப் பாராட்டும் கிடைக்காமலே போய்விடலாம். ஆகவே, மிகச் சிறப்பான வேலைக்காக அல்லது பழகுமுறைக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, இலக்கை எட்டுவதை நோக்கி அந்தக் குழந்தை எடுத்துவைக்கிற சிறு காலடிகளை, முன்னேற்றங்களைப் பாராட்டினால் என்ன?

கென் ப்ளன்சார்ட் எழுதிய Whale Done என்ற புத்தகத்திலிருந்துதான் ‘Whale Done’ என்ற எதிர்வினை எடுக்கப்பட்டுள்ளது, இது ஒருவர் நேர்விதமான உறவுகளை உருவாக்குவதற்கான ஆற்றலை வழங்குகிறது-ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையே அல்லது உண்மையில் எந்த உறவிலும் இதன்மூலம் நேர்விதமான உறவுகளை உண்டாக்க இயலும்.     இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் ஓர் அழகிய வரி, ‘முன்னேற்றத்தைப் பாராட்டுங்கள், அது எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் ஓர் இலக்காகும்’.   ‘Whale Done’ எதிர்வினை என்பது இதுதான்:

 • மாணவர்களை உடனடியாகப் பாராட்டவேண்டும், அதாவது அந்தப் பழகுமுறை நிகழ்ந்தவுடன் பாராட்டவேண்டும். 
 • அவர்கள் எதைச் சரியாக செய்தார்கள்  அல்லது பெருமளவு சரியாகச் செய்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 
 • அவர்கள் செய்ததை எண்ணித் தனக்கு உண்டான நேர்விதமான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
 • இந்த நல்ல பணியை அவர்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

2.  ’திருப்பிவிடுதல்எதிர்வினை:

இந்த எதிர்வினை ஓர் ஆசிரியருடைய பழக்க வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்குமுன்னால் அவர் இதனை உணர்ந்து பயிற்சி எடுக்கவேண்டும்.

 • இயன்றவரை உடனடியாகத் தவற்றை அல்லது பிரச்னையைத் தெளிவாக, குற்றம் சாட்டாமல் விவரிக்கவேண்டும்.  
 • அதன் எதிர்மறைத் தாக்கத்தை விளக்கவேண்டும்.
 • பொருந்தினால், அந்த வேலையைத் தெளிவாக்காமல் விட்டுவிட்டதற்கான பொறுப்பைத் தான் எடுத்துக்கொள்ளவேண்டும் (எடுத்துக்காட்டாக, ‘என்னை மன்னித்துவிடு, இந்த வேலையைச் செய்வதற்கான வழிமுறையை நான் தெளிவாக உனக்குத் தெரிவிக்கவில்லை’). 
 • அந்த வேலையைப்பற்றி விரிவாகப் பேசவேண்டும், இப்போது அது தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
 • அந்த மாணவர்மீது தான் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதை  வெளிப்படுத்தவேண்டும்.

3.  தன்னைத்தானே கேட்டுகொள்ளுதல்:

ஆசிரியர்கள் ஓர் ஆசிரியப் பணி வாழ்க்கையில் ஈடுபடும்போது, தாங்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களாக ஆக விரும்புகிறார்களோ அப்படிப்பட்ட ஆசிரியராக இருப்பதற்கு அவர்கள் தங்களைத் தாங்களே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.  எடுத்துக்காட்டாக, இதுபோன்ற கேள்விகளை அவர்கள் கேட்டுக்கொள்ளலாம்:

 • என்னுடைய மாணவர்களிடம் சரியான வகை மதிப்பீடுகள் மற்றும் மனப்போக்குகளை வளர்க்கவேண்டுமென்றால் எனக்கு எந்த வகையான மதிப்பீடுகள் மற்றும் மனப்போக்குகள் தேவை?
 • என்னுடைய மாணவர்களிடம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பிரச்னைகளைத் தீர்ப்பதுபோன்ற முக்கிய வாழ்க்கைத் திறன்களை வளர்க்கவேண்டுமென்றால் எனக்கு எப்படிப்பட்ட திறன்கள் தேவை? 
 • என்னுடைய மாணவர்களுடைய கல்விச் செயல்திறன் மற்றும் உணர்வு நலனிடையே ஒரு சமநிலையை நான் எப்படிப் பராமரிப்பேன்?
 • இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கழித்து என்னுடைய மாணவர்கள் என்னை எப்படி நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்புவேன்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது, ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பணியில் எப்படிச் சிறந்து விளங்கலாம் என்பதுபற்றிய மேம்பட்ட அறிவைப் பெறுவதற்கு உதவும்.   

4. ஆரோக்கியமான எல்லைகளை அமைத்தல்:

குழந்தைகள் எப்படியெல்லாம் இயங்கலாம் என்பதற்கான எல்லைக் கோடுகள் தேவை, இது பள்ளி மற்றும் இல்ல அமைப்புகள் இரண்டுக்கும் பொருந்தும்.    இதைப்பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு குழந்தையின் நினைவு வருகிறது, அந்தக் குழந்தை வீட்டை விட்டு ஓடிவிட்டது, அந்தக் குழந்தையைக் காவல்துறையினர் கண்டுபிடித்தபோது, தான் வீட்டை விட்டு ஓடியதற்கான காரணத்தை அந்தக் குழந்தை இப்படி விளக்கியது: ”நான் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை, என்னுடைய வீட்டில் ஒழுக்கம் இல்லை.”    அந்தக் குழந்தை உண்மையில் என்ன சொல்ல விரும்பியது என்றால், வீட்டில் யாரும் அந்தக் குழந்தையின்மீது அக்கறை காட்டவில்லை, அதற்கு எல்லைக்கோடுகளை-வரம்புகளை வழங்கவில்லை.     குழந்தைகள் பாதுகாப்பாகவும் தங்கள்மீது பிறர் அக்கறை காட்டுகிறார்கள் என்றும் உணரவேண்டும் இதைச் சாத்தியமாக்குவதற்கு எல்லைக்கோடுகள் உதவுகின்றன.  

வகுப்பறையில் எல்லைக்கோடுகளை வெவ்வேறு விதங்களில் அமைக்கலாம்.  எடுத்துக்காட்டாக, தொடக்கநிலை வகுப்புகளில் ஆசிரியர் மாணவர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்று, வகுப்புக்கான ஒரு ‘போக்குவரத்து விளக்கை’ உருவாக்கலாம்.  சிவப்பு விளக்கு விதிமுறைகள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக இருக்கும்.    எடுத்துக்காட்டாக, “நாம் நம்முடைய கைகளைப் பயன்படுத்தி யாரையும் அடிக்கமாட்டோம்.” மஞ்சள் விளக்கு விதிமுறைகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும்.  எடுத்துக்காட்டாக, “நீ ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பில் அங்கும் இங்கும் நடந்து பிறரைத் தொல்லை செய்யக்கூடாது.” பச்சை விளக்கு விதிமுறைகளில் குழந்தைகளுக்கு சுதந்தரம் இருக்கும்.,  எடுத்துக்காட்டாக ஒரு கதையை அல்லது ஓர் கலைப்படைப்பை உருவாக்க அல்லது கேள்விகளைக் கேட்க மற்றும் யோசனைகள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆசிரியர் அவர்களுக்கு சுதந்தரம் வழங்கலாம்.  

நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் வகுப்பு ஒப்பந்தங்களை உருவாக்குதல் மற்றும் விளைவுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம் (எடுத்துக்காட்டாக ”நாங்கள் எப்போதும் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வர ஒப்புக்கொள்கிறோம்.”) 
 

5. செயல்முறையில் கவனம் செலுத்துதல்:

ஆசிரியர்கள் பொதுவாக முடிவுகள் அல்லது பலன்களில் கவனம் செலுத்துகிறார்கள், இது முக்கியம்தான், ஆனால் முறை அல்லது செயல்முறையும் அதே அளவு முக்கியம்.     ஒருமுறை, ஏழு வயது கொண்ட ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோரிடம் இப்படிச் சொன்னது, “பள்ளிக்கு செல்வது என்பது, காயப்படாத சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையைக் காயப்படுத்துவதுபோன்றது.”  அந்தக் குழந்தை என்ன சொல்ல விரும்பியது என்றால், கற்றுக்கொள்ளுவது என்பது அதற்கு மகிழ்ச்சியான அனுபவமாக இல்லை, எதையும் அந்தக் குழந்தை ஆசிரியர் சொல்லும் வழியிலேயே செய்யவேண்டியிருந்தது, தன்னுடைய வழியில் எதையும் செய்வதற்கான இடமே அங்கு இல்லை.

குழந்தைகள் பல விஷயங்களை அனுபவிக்க இயலும்போது, ஆராய இயலும்போது, கவனிக்க இயலும்போது, அதைப்பற்றிப் பேச இயலும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதாவது, கற்றுக்கொள்ளும் செயல்முறையில் தாங்கள் முழுமையாகப் பங்குபெறும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.  வெவ்வேறு குழந்தைகள் வெவ்வேறு விதமாகக் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுவது முக்கியம்.  ஹோவார்டு கார்ட்னர் சொன்ன ஒரு பொன்மொழியை நினைவில் வைத்துக்கொள்ளுவது இங்கு நல்ல நன்மை தரும், “எல்லாக் குழந்தைகளையும் ஒரே ஊசித் துளைக்குள் நுழைந்துசெல்ல வைக்காதீர்கள், குழந்தைகளைப்பற்றி எவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள இயலுமோ, அவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.”
 

6. பலியாடு ஆக்குதலை தவிர்த்தல்:

ஒவ்வொரு பள்ளியிலும், அநேகமாக ஒவ்வொரு வகுப்பறையிலும் பலியாடுகள் இருக்கிறார்கள்.   பலியாட்டு மாணவரை இந்தப் பண்புகளின்மூலம் அடையாளம் காணலாம்:
 

 • வகுப்பில்/பள்ளியில் தவறான நடத்தைகள் அனைத்துக்கும் இவர் பிடிபடுகிறார், குற்றம் சாட்டப்படுகிறார்.
 • பிறர் அவரைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், தான் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுவதையே அவர் அறியாமல் இருக்கிறார்.
 • பொதுவாக, ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை மூடி மறைப்பதில் இவர் மெதுவாக இருக்கிறார், ஆகவே இவருடைய தவறான நடத்தை மிகவும் அதிகமாக வெளியே தெரிகிறது.   இவரைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
 • தன்னுடைய நடவடிக்கைக்கு நம்பத்தகுந்த எந்தவிதமான காரணத்தையும் இவர் சொல்வதில்லை, வேறு ஒருவர் இதைத் தொடங்கினார் என்றுமட்டும்தான் அவர் சொல்கிறார் (இந்தக் காரணத்தை ஆசிரியர் நம்புவதில்லை).

இதுபோன்ற சூழ்நிலைகளில்,  ஆசிரியர்கள் நடப்பவற்றை க்கூர்ந்து கவனிக்கவேண்டும், தங்களுடைய உணரியை வெளியே இருக்கச்செய்து நடக்கிற அனைத்தையும் கவனிக்கவேண்டும்.  சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுடனும் பேசிப் பிரச்னையைப் புரிந்துகொள்ளவேண்டும்.   ஒரு நடுவரைப்போல் அவர் நடந்துகொள்ளக்கூடாது-அதற்குப் பதிலாக, அனைவரையும் பங்கேற்புள்ள கேள்விகளைக் கேட்கவேண்டும், பிரச்னையைச் சரியான கோணத்தில் வைக்க இது உதவும்.     முன்தீர்மானங்களோடு இருப்பதை அவர் தவிர்க்கவேண்டும்.

7.  சிந்தித்தல்:

டாக்டர் தாமஸ் கார்டன் எழுதியுள்ள ஆசிரியர் செயல்திறன் பயிற்சி என்ற புத்தகத்தில் அவர் ‘ஆசிரியருக்கு உரிமையான’ பிரச்னைகள் மற்றும் ‘மாணவருக்கு உரிமையான’ பிரச்னைகள் என்கிற கொள்கையைப்பற்றிப் பேசுகிறார்.  ஆசிரியர்கள் தாங்கள் ‘உரிமைகொண்டுள்ள’ பிரச்னைகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளவேண்டும். குழந்தையின் பழக்க வழக்கமானது தன்னுடைய உணர்வுகளைப் பாதிக்கிறதா, தன்னுடைய தேவைகளில் குறுக்கிடுகிறதா என்று அவர் யோசிக்கவேண்டும்.   எடுத்துக்காட்டாக, ஆசிரியருடைய சொந்த வெற்றியானது மாணவருடைய பழக்க வழக்கம் மற்றும் செயல்திறனுடன் இணைக்கப்படிருக்கிறதா?   ஆம் எனில், ஆசிரியர் என்ற முறையில் அவர்தான் இந்தப் பிரச்னைக்கு உரிமைகொள்ளவேண்டும்.  இப்போது அவருக்கு முன்னால் மூன்று தெரிவுகள் உள்ளன:

 1. மாணவரை மாற்றுதல்:  மாணவருடைய நடவடிக்கை ஒரு பிரச்னையாக இருக்கிறது என்றால் பெற்றோரை அழைத்து, அவர்கள் தங்களுடைய குழந்தையைப் பள்ளியிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டுவிடவேண்டும் என்று ஆலோசனை சொல்வது நிச்சயமாகத் தீர்வாகாது.   இதைவிடச் சிறந்த வழி, குழந்தையின் நடவடிக்கைகள் தன்னை எப்படி உணரச்செய்கிறது என்பதைக் குழந்தைக்கு தெரிவிப்பதாகும், அப்படிச் செய்யும்போது அவர் குழந்தையை மிரட்டக்கூடாது, அல்லது கேலி செய்யக்கூடாது.    இந்தச் செய்தியில் அவர் ‘நான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும், எடுத்துக்காட்டாக, “நீ வகுப்பில் கோமாளியைப்போல் நடந்துகொண்டு என்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொந்தரவு செய்யும்போது நான் கோபமாக உணர்கிறேன்.” இது ஆசிரியர்-மாணவர் உறவில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும்.  தொலைநோக்கில் அது ஒரு நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை வளர்க்கும்.  குழந்தையிடம் சற்று அன்பும் நேசமும் காட்டினால், குழந்தையின் நடவடிக்கைகளில் வியக்கத்தக்க மாற்றம் வரக்கூடும்.   பிரச்னை ‘மாணவருக்கு உரிமையானது’ என்றால், பிரச்னைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதற்கு, சீர்குலைக்கும் பழக்க வழக்கத்தின் விளைவுகளைச் சந்திப்பதற்குக் குழந்தைக்கு உதவவேண்டும்.   அனைத்துக்கும் மேலாக, ஆசிரியர்கள் பெற்றோருடன் ஒரு கூட்டணியை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  நாட்குறிப்பை ஒரு “புகார் புத்தகமாக”மட்டும் பயன்படுத்தாமல், குழந்தையைப்பற்றிய நேர்விதமான செய்திகளைப் பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கும் அதைப் பயன்படுத்தலாம்.  
 2. சூழலை மாற்றுதல்:  இயன்றபோதெல்லாம், சூழலைப் படைப்புணர்வுடன் மாற்றுவதுபற்றிச் சிந்திக்கலாம்.  பொதுவாகக் கல்வி அமைப்பானது எல்லாரையும், எல்லாரையும்போல் ஆக்க முனைகிறது  தவறான நடத்தைக்கு இது ஒரு காரணமாகலாம், ஏனெனில் ஒரே விஷயம் எல்லாருக்கும் பொருந்திவிடுவதில்லை.  ஒவ்வோர் ஆசிரியரும், ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்கள், ஆகவே கல்வி அமைப்பானது மாறுபட்டதாக இருக்கவேண்டும், தொடர்ந்து வளரவேண்டும், மாறவேண்டும்.
 3. தன்னை மாற்றிக்கொள்ளுதல்:  லியோ F புஸ்காக்லியா, PhD எழுதிய வாழ்தல், அன்பு செலுத்துதல் மற்றும் கற்றுக்கொள்ளுதல் என்ற புத்தகத்தில் நான் வாசித்த ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொள்கிறேன்.   அவர் கேட்கிறார் “நீங்கள் ஓர் அன்பு செலுத்தும் ஆசிரியராக இருக்கவேண்டுமா அல்லது ஓர் அன்பு செலுத்தும் மனிதராக இருக்கவேண்டுமா?” குழந்தைகள் மக்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், மனிதர்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்கிறார் அவர்.  அவர்கள் ஓர் ஆசிரியருடன் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள், ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் ஆசிரியர் ஒரு பங்கை ஆற்றுகிறார்.  ஆசிரியர்கள் அன்பான ஆசிரியர்கள் என்பதற்கு மேல் இருக்கவேண்டும். 

இந்தச் சிந்தனையின் நிறைவாக, இளம் தலைமுறையினரிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.   இந்த விஷயத்தில் அவர்கள்தான் ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆசிரியர்கள், தங்களுடைய பழக்க வழக்கங்களின்மூலம் தாங்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறோம் என்பதைப்பற்றிய செய்திகளை அவர்கள் ஆசிரியர்களுக்குத் தந்துகொண்டிருக்கிறார்கள்.   ஆசிரியர் என்ற முறையில், தான் ஓர் ஆர்வமான கற்றுக்கொள்பவரின் மாதிரியாக இருக்கிறோமா என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும்.   அவர் தன்னுடைய கற்றுத்தருதலின் தரத்தைப் பார்க்கவேண்டும், தன்னுடைய கற்றுத்தருதலுக்காகத் தான் செய்யும் முன்தயாரிப்புகளைப் பார்க்கவேண்டும்.  அறிவாளிகளான ஆசிரியர்கள், சரியான மனப்போக்குகளைக் கொண்ட ஆசிரியர்கள் எல்லாவற்றையும் ஒழுங்காகக் கையாள்பவர்கள், நம்பிக்கையோடு நடந்துகொள்கிறவர்கள், விஷயங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறவர்கள், ஆக்கிரமிப்பு அல்லது இடையூறுகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.      பிறரைப்பற்றி மிகச் சிறந்த மனத்திறப்பை உடைய ஆசிரியர் பொதுவாக எந்த ஓர் ஊடாடலின் விளைவையும் கட்டுப்படுத்துவார்.   மாணவர்கள் ஆசிரியர்களுடைய முயற்சிகளை உணர்கிறார்கள். இடையூறான நடத்தைக்கு மிகச் சிறந்த மாற்று மருந்து, மாணவர்களிடம் சம்பாதித்துக்கொண்ட மற்றும் அவர்களிடமிருந்து பெற்ற மதிப்பு.

ஃபிலிஸ் ஃபராய்ஸ் பெங்களூரைச் சேர்ந்த கல்வி மேலாண்மை ஆலோசகர்.  கடந்த பல ஆண்டுகளாக அவர் எல்லா நிலைகளிலும் ஆசிரியப்பணியாற்றியிருக்கிறார்-தொடக்கப்பள்ளியில் தொடங்கிக் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பயிற்சிவரை.   இத்துடன், அவர் நாடுமுழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை அமைப்புகளில் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org