கல்வி அமைப்பில் சமநிலையிலுள்ளோர் ஆலோசனை

ஒரு மாணவருக்கு ஏதாவது பிரச்னை வருகிறது, அல்லது எதைப்பற்றியேனும் அவர் கவலைகொள்கிறார் என்றால், அவர் முதலில் யாரை அணுகுவார்?  ஒரு நண்பரையா அல்லது நம்பப்படும் ஒரு வயதுவந்தவரையா?  அநேகமாக அவர் ஒரு நண்பரைதான் அணுகுவாராக இருக்கும், ஏனெனில், தன்னுடைய பெற்றோர் அல்லது ஓர் ஆசிரியரைவிடத் தன்னுடைய நண்பரால் தன்னுடைய பிரச்னையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள இயலும் என்று அவர் நம்புவார்.

வளர் இளம் பருவத்தில் உள்ள ஒருவர் அல்லது ஓர் இளைஞர் என்ற முறையில், தன்னுடைய பிரச்னைகளைப்பற்றித் தன்னுடைய வயதில் இருக்கிற அல்லது தன்னைப்போலவே மனப்போக்கை உடைய ஒருவரிடம் பேசுவது, வயதுவந்த ஒருவரிடம் பேசுவதைவிட அவருக்கு எளிதாக இருக்கும்.    அதனால் சமநிலையிலுள்ள ஒருவர் வழங்கும் ஆலோசனையானது மிகவும் செயல்திறன் வாய்ந்ததாகிறது, வளர் இளம் பருவத்தில் இருக்கிற ஒருவர் தன்னுடைய பிரச்னையைச் சரிசெய்வதற்கான முதல்படியை எடுத்துவைப்பதற்கான வசதி உணர்வை உண்டாக்க அது உதவுகிறது. 

சமநிலையிலுள்ளோர் ஆலோசனை என்றால் என்ன?

சமநிலையிலுள்ளோர் ஆலோசனை என்பது ஓர் உதவிச் செயல்முறை ஆகும், இதில் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்ற ஓரு குழுவின் உறுப்பினர்கள் அல்லது இரண்டு பேர் உரையாடுகிறார்கள்.     கல்விச்சூழலில் பொதுவாக மாணவர்கள் தங்களுடைய சக மாணவர்களுக்கு உதவுவதை இது குறிப்பிடுகிறது.   இது பிறருடன் தன்னைத் தொடர்புபடுத்திக் காண்கிற, அவர்களுக்குப் பதில்சொல்கிற, மற்றும் உதவுகிற ஒரு வழியாகும், இதன் நோக்கங்கள், ஒரு தெளிவான புரிந்துகொள்ளலுக்கு வந்து தகவலறிந்த தீர்மானங்களை எடுக்கும் நம்பிக்கையுடன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்னைகளை மற்றும் கவலைகளை ஆராய்தல்.

சமநிலையிலுள்ளோர் ஆலோசனை மாணவர்களுக்கு எப்படி உதவுகிறது

மாணவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான அழுத்தங்கள் இருக்கலாம்.   எடுத்துக்காட்டாக: கல்வி சார்ந்த அழுத்தம், தன்னுடைய பணி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அழுத்தம், சக மாணவர்கள் வழங்கும் அழுத்தம், உணவுப் பிரச்னைகள், உடல் தோற்றம் சார்ந்த பிரச்னைகள், போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அடிமையாதல், இன்னும் பல.       இவர்களில் எல்லாராலும் ஒரு தொழில்முறை ஆலோசகரை எளிதில் அணுகிவிட இயலாமலிருக்கலாம், இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்: அப்படிப்பட்ட நிபுணர்கள் அருகில் இல்லாமலிருக்கலாம், உதவி கேட்பதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள களங்கமும் இதற்குக் காரணமாக அமையலாம்.      இதுபோன்ற சூழ்நிலைகளில் தனக்குச் சமமாக இருக்கிற ஒருவரிடம் ஆலோசனை பெறுவது அவர்களுக்கோ, அவர்களுடைய நண்பர்களுக்கோ பல பிரச்னைகளைத் தீர்க்க உதவலாம்:   

  • முரண்களைச் சரிசெய்தல்
  • தன்னம்பிக்கையை மற்றும் சுய மதிப்பை வளர்த்துக்கொள்ளுதல்,
  • கல்வி சார்ந்த சிரமங்கள், தேர்வுபற்றிய அழுத்தம்
  • ஆசிரியர்கள், பிற மாணவர்களுடன் தன்னைச் சரியாகப் பொருத்திக்கொள்வதில் இருக்கும் பிரச்னைகள் 
  • விடுதி வாழ்க்கைக்குத் தன்னைப் பொருத்திக்கொள்வதில் இருக்கும் பிரச்னைகள்
  • ராக்கிங், துன்புறுத்துதல் மற்றும் பல 

பல சூழ்நிலைகளில், சமநிலையிலிருந்து ஆலோசனை வழங்கும் ஒருவரை அணுகுவது செயல்திறன் மிக்கதாகப் பயன் தருகிறது, ஏனெனில் அந்த இன்னொரு நபரால் இவருடைய பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றுடன் தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இயலுகிறது.    சமநிலை ஆலோசகர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதால், அவர்கள் மாணவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவையும் மாற்றுகளையும் வழங்குகிறார்கள், அறிவுரை சொல்வதில்லை. 

சமநிலை ஆலோசகர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது

சமநிலை ஆலோசகர்களுக்குத் தகவல் தொடர்பு, கவனிக்கும் திறன்கள், உறுதிநிலை, சமநிலையிலுள்ளோர் ஆலோசனையின் நெறிமுறைகள், ரகசியக் காப்பு மற்றும் அதை மீறுதில் இருக்கும் பிரச்னைகள், பிறருக்கு உதவுவது தொடர்பான எல்லைகள் மற்றும் அடிப்படையான ஆலோசனைத் திறன்கள் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது.   தேவையுள்ள மாணவர்களை ஒரு தொழில்முறை ஆலோசகரிடம் அனுப்புவதுபற்றியும் சமநிலை ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டாலும், அவர்கள் சான்று பெற்ற ஆலோசகர்கள் இல்லை. சில கல்வி வளாகங்களில் ஏற்கனவே ஓர் ஆலோசகர் இருக்கலாம், அதுபோன்ற வளாகங்களில் சமநிலை ஆலோசகர் அந்த ஆலோசகருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக ஆகிறார்.  ஒருவேளை அந்தப் பள்ளியில்/கல்லூரியில் ஆலோசகர் யாரும் இல்லையென்றால், சமநிலை ஆலோசகர்கள் தங்களுடைய சக மாணவர்கள் தங்கள் உணர்வு மற்றும் பழக்க வழக்கத் தொந்தரவுகளைப் புரிந்துகொள்ளவும், தீர்வுகளை நோக்கிப் பணியாற்றவும் உதவுகிறார்கள்.   சில சூழ்நிலைகளில் அவர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள ஒரு தொழில்முறை ஆலோசகர்களிடமும் இந்த மாணவர்களை அனுப்பிவைக்கலாம். 

பயிற்சி பெற்ற பிறகும், ஒரு மாணவர் சமநிலை ஆலோசகராக ஆகவேண்டுமென்றால் அவருக்குச் சில குறிப்பிட்ட குணங்கள் இருக்கவேண்டும். 

  • பிறரை ஊடுருவிப் பார்க்காமல் சுறுசுறுப்பாகக் கவனிக்கும் திறன்கள்
  • பச்சாத்தாபம் மற்றும் நுண்ணுணர்வு
  • மாணவர்கள் சொல்லும் தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும், அவற்றைப்பற்றிக் கிசுகிசுக்கக்கூடாது
  • நல்ல தகவல் தொடர்புத் திறன்கள் இருக்கவேண்டும், மாணவருடைய ஆன்மாவுக்குள் ஆழமாகச் சென்று பார்க்கக்கூடிய திறன் இருக்கவேண்டும்
  • இயல்பில் எல்லாருக்கும் பிடித்தவர்களாக இருக்கவேண்டும்

இவற்றையெல்லாம்விட முக்கியமாக, பிற மாணவர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவி புரிவதில் அவர்களுக்கு உள்ளார்ந்த ஆர்வம் இருக்கவேண்டும். 

சமநிலை ஆலோசகர்கள் தங்களுடைய பள்ளிகள்/கல்லூரிகளில் மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் நடத்துகிறார்கள், களங்க உணர்வை மற்றும் பாரபட்சம் காட்டுதலைக் கையாள்கிறார்கள், மனநலப் பிரச்சனைகளைப்பற்றிய தவறான நம்பிக்கைகளைத் தீர்த்துவைக்கிறார்கள், இப்படி இன்னும் பல செயல்களைச் செய்கிறார்கள்      

இதனால் சமநிலை ஆலோசகர்களுக்கும் நன்மை உண்டு

சமநிலை ஆலோசகர்களால் சக மாணவர்கள் பயன் பெறுவதுடன், தங்களுடைய பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் பணியின்மூலம் அந்தச் சமநிலை ஆலோசகர்களுக்கும் நேர்விதமான நன்மைகள் கிடைக்கின்றன.

  • சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் NGO/தன்னார்வலர் அனுபவத்தைக் கோருகின்றன.  அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பம் போடும்போது மாணவர்கள் தங்களுடைய சமநிலை ஆலோசனை வழங்குதல் அனுபவத்தைப் பட்டியலிடலாம்.
  • இது அவர்களுடைய சுயமதிப்பை மற்றும் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது. 
  • இது அவர்களுக்குத் தலைமைக் குணங்களைக் கற்றுத்தருகிறது. 
  • இது அவர்கள் பச்சாத்தாபத்தை, மதிப்பை மற்றும் பிற வாழ்க்கைத்திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

சமநிலை ஆலோசகர் குழுக்களைக் கொண்ட கல்லூரிகள்

சன்ஷைன் – IIT, ஹைதராபாதில் உள்ள சமநிலை ஆலோசனைக் குழு

IIT காந்திநகர் ஆலோசனை மையத்தில் மாணவர் வழிகாட்டிகள் மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளார்கள்

’உங்கள் நண்பர்:  ஓர் உணர்வு ஆதரவு அமைப்பு’, இது IIT குவஹாத்தியின் ஆலோசனை மையமாகும்.  மாணவர் வழிகாட்டிகளைச் 'சாத்தி’ என்று அழைக்கிறார்கள். 

விஷ்வாஸ் ஆலோசனை மையம், ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூர்.  (பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களும் இந்த மையத்தை அணுகிச் சமநிலை ஆலோசனை வழங்குவதில் பயிற்சி பெறலாம்)

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org