கல்வி

ஆசிரியர் உண்டாக்கும் மாற்றங்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஓர் ஆசிரியர் பலவிதமான பொறுப்புகளை வகிக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் வகுப்புக்குச் சென்று பாடம் நடத்துவதோடு, பாடங்களைத் திட்டமிடுதல், வீட்டுப்பாடங்களுக்கு மதிப்பெண் போடுதல், கூட்டங்கள், பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொள்ளுதல் போன்றவற்றிலும் பங்கேற்கிறார்கள். இத்தனை பரபரப்புக்கு நடுவே, அவர்கள் மாணவர்களின் உணர்வு நலனுக்காகவும் நேரம் செலவிடவேண்டுமா?

இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. முதலில், ஆசிரியர்கள் மாணவர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு நேரம் செலவிடுகிறார்கள். ஆகவே, அவர்களிடம் ஏதேனும் மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், அல்லது, அசாதாரணமான நடைமுறைகள் தென்பட்டால், அவை சராசரியைவிட அதிக நேரம் நீடித்தால், அதனை ஆசிரியர்கள் எளிதில் கவனிக்கலாம். சில சூழ்நிலைகளில், இந்த மாற்றங்கள் ஓர் ஆழமான பிரச்னையை அல்லது ஒரு மனநலப் பிரச்னையைச் சுட்டிக்காட்டக்கூடும். கண்ணுக்குப்புலப்படாத இந்த மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளலாம், சிகிச்சையை விரைவாகத் தொடங்க உதவலாம். இரண்டாவதாக, உணர்வுநலன் கற்றலைப் பாதிக்கிறது. மனத்தளவில் ஆரோக்கியமாக உள்ள மாணவர்கள் அதிக ஊக்கத்துடன் உள்ளார்கள். ஊக்கத்துடன் உள்ள மாணவர்கள் தங்களுக்குச் சொல்லித்தரப்படும் விஷயங்களில் ஆர்வத்துடன் ஊடாடுகிறார்கள், இதனால், அவர்களுடைய கல்விச் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

ஆசிரியராகும் ஒருவர்முன்னே இரண்டு தெரிவுகள் உள்ளன: பரிமாற்ற ஆசிரியர் அல்லது மாற்றத்தைக் கொண்டுவரும் ஆசிரியர்.

  • பரிமாற்ற ஆசிரியர் என்பவர் பாடங்களை மாணவர்களுக்குக் கடத்துகிறார். அவர்கள் பாடங்களைத் திட்டமிடுகிறார்கள், அவற்றைச் சிறப்பாக நடத்துகிறார்கள், வீட்டுப்பாடங்களுக்கு மதிப்பெண் போடுகிறார்கள், அதற்குச் சம்பளம் பெறுகிறார்கள்.  

  • மாற்றத்தைக் கொண்டுவரும் ஆசிரியர் என்பவர் அதைத்தாண்டிப் பணியாற்றுகிறார். அவர்கள் மாணவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்கள், வழிகாட்டுகிறார்கள், ஊக்குவிக்கிறார்கள், உதவுகிறார்கள். அவர்கள் தங்களுடைய மாணவர்களைத் தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்குகிறார்கள். அவர்களைச் சிந்திக்கச்சொல்கிறார்கள், சுதந்தரமான சிந்தனையாளர்களாகவேண்டும் என்று அவர்களை ஊக்குவிக்கிறார்கள். மாற்றத்தைக் கொண்டுவரும் ஆசிரியர்களுடைய இந்தச் செயல்பாடுகளுக்காக அவர்களுக்குக் கூடுதல் பணம் கிடைப்பதில்லை, ஆனால், அவர்களுக்கு இன்னொரு விலைமதிப்பில்லா வருவாய் கிடைக்கிறது: மன நிறைவு! ஒரு கல்லூரியில் படித்த மாணவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது, மாற்றத்தைக் கொண்டுவரும் ஆசிரியர்களைதான் மகிழ்ச்சியோடு எண்ணிப்பார்க்கிறார்கள், அவர்களைப்பற்றிதான் பேசுகிறார்கள்.

ஆகவே, ஓர் ஆசிரியர் மாற்றத்தைக் கொண்டுவருகிற ஆசிரியராக மாறுவதன்மூலம், மாணவர்கள்மீது அக்கறை காட்டும் ஆசிரியராக மாறுவதன்மூலம், அவர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org