எப்போது பெற்றோரிடம் பேசவேண்டும்?

Published on

பொதுவாக, ஆசிரியர்களும் பெற்றோரும் பேசும் நேரம், வருடத்துக்கு இருமுறை ந்டைபெறும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம்தான். இதற்கு வரும் பெற்றோர் தங்கள் குழந்தையின் கல்வி முன்னேற்றத்தைப்பற்றி விவாதிக்கும் விருப்பத்துடன் வருகிறார்கள்.

ஆனால், சில நேரங்களில், ஆசிரியரும் மாணவரும் பேசியும்கூட, கல்லூரி ஆலோசகர் மாணவருடன் பேசியபிறகும்கூட, ஒரு பழக்கமுறைப் பிரச்னை தீராமலிருக்கலாம். ஒருவேளை அந்த மாணவர் ஓர் ஆசிரியரிடம் தன்னுடைய பிரச்னையை ரகசியமாகச் சொல்லியிருந்தால், ரகசியத்தன்மைபற்றிய கேள்வி எழும். இந்த விஷயத்தை எப்போது ஒரு பெற்றோரிடம் சொல்வது? அதை ஓர் ஆசிரியர் எப்படித் தீர்மானிப்பது?

பெரும்பாலான ஆலோசகர்கள் மாணவர்களிடம் ஓர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுமாறு கேட்கிறார்கள். இதில், அவர்களுடைய பெற்றோர், சில சூழ்நிலைகளில் சட்ட அமைப்புக்கு இந்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தச் சூழ்நிலைகள்:

  • தன்னைக் காயப்படுத்திக்கொள்ளுதல்

  • பிறரைக் காயப்படுத்துதல்

  • போதை மருந்துகள், ஆயுதங்களை வைத்திருப்பது போன்ற சட்டவிரோதச் செயல்பாடுகள்

சில நேரங்களில், மாணவரைக் கவனிப்பதற்குப் பெற்றோரின் உதவி தேவைப்படலாம், அப்போது ஆசிரியர்களும் ஆலோசகர்களும் பெற்றோரிடம் பேசலாம். மாணவருடைய தன்னம்பிக்கை குறைவதாகத் தோன்றும்போது, அல்லது, அவர் அடிக்கடி வகுப்புக்கு வராதபோது இதற்கான தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், அவருக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, அதைச் சரிசெய்யவேண்டுமா என்று கல்லூரியினர் அறிவதற்குப் பெற்றோர் உதவலாம்.

பெற்றோரிடம் எப்படிப் பேசுவது?

ஓர் ஆலோசகர் இல்லாத வளாகச் சூழல்களில், ஆசிரியரே பெற்றோரிடம் பேசலாம். அழுத்தம், கோபம், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், பிற பிரச்னைகளைப்பற்றி, அவற்றின் அறிகுறிகளைப்பற்றிப் பெற்றோருக்குச் சொல்லலாம். அதைவிட முக்கியம், மாணவரின் பழக்கவழக்கத்தை எண்ணி ஆசிரியர் கவலைகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும்போது, அவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது, அவர்மீது முத்திரைகுத்தக்கூடாது.

ஒரு மாணவர் சவாலானமுறையில் நடந்துகொள்கிறார் என்றால், அதனை அவருடைய பெற்றோருக்குத் தெரிவிக்கும்போது நடுநிலையான வாசகங்களைப் பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக, "மாணவர் இப்படிச் செய்கிறார் என்று நான் கவனித்தேன்" அல்லது "இந்தக் குறிப்பிட்ட பழக்கமுறையை எண்ணி எனக்குக் கவலையாக உள்ளது" என்பதுபோல. ஆசிரியர்கள் இதற்குமுன் இதேபோன்ற பிரச்னையைச் சந்தித்து, அதிலிருந்து மீண்ட மாணவர்களின் கதையையும் பெற்றோருக்குச் சொல்லலாம். இதன்மூலம், பிறர் இதே பிரச்னையைச் சந்தித்துள்ளார்கள், அதற்குத் தீர்வு கண்டுள்ளார்கள் என்பது பெற்றோருக்குப் புரியும். உதாரணமாக, "முன்பு என்னிடம் படித்த ஒரு பையனுக்கு இதேபோன்ற பிரச்னை இருந்தது. அவன் ஓர் ஆலோசகரைச் சந்தித்ததும், இந்தப் பிரச்னை சரியாகிவிட்டது" என்று சொல்லலாம்.

மாணவரின் ஒப்புதல்

போதைப்பொருளுக்கு அடிமையாதல், பாலியல் துன்புறுத்தல் அல்லது தற்கொலை எண்ணங்கள் போன்ற விவரங்களை ஒரு மாணவர் ஓர் ஆசிரியரிடம் ரகசியமாகச் சொன்னால், ஆசிரியர் முதலில் அவருக்கு உணர்வுரீதியிலான முதலுதவியைச் செய்யவேண்டும், அதன்பிறகு, இதை ஆலோசகர் அல்லது பெற்றோரிடம் தெரிவிப்பதற்கு அவரிடம் அனுமதி பெறவேண்டும். ஓர் ஆசிரியர் இப்படி நடந்துகொண்டால், மாணவர்கள் அதனை மிகவும் விரும்புவார்கள், அந்த ஆசிரியரை அதிகம் நம்புவார்கள். மாணவர், ஆசிரியர் இடையிலான நல்லுறவு தொடர்கிறது. ஒருவேளை இதற்கு அந்த மாணவர் அனுமதி தர மறுத்தால், அதனால் அவருக்கு ஆபத்து வரும் என்று ஆசிரியர் கருதினால், அவர் அந்த விவரங்களைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளலாம்.

ஒரு மாணவரின் பிரச்னையைப்பற்றி அவருடைய பெற்றோர் அல்லது ஓர் ஆலோசகர் நன்கு புரிந்துகொள்கிறார் என்றால், அந்தக் கவலை அல்லது பிரச்னையைச் சரியாகத் தீர்த்து, அந்த மாணவரிடம் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குவதற்காக அவர்கள் முயற்சிசெய்யலாம்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org