கல்வி

மாணவரை எப்போது ஆலோசகரிடம் அனுப்பவேண்டும்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது சவாலான விஷயம்தான். காரணம், கல்லூரிக்கு வருகிற இளைஞர்கள் வயதுவந்த பருவத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள், தங்களுடைய புதிய, சுதந்தரமான பொறுப்புகளுக்குத் தாவுவதில் அவர்கள் மகிழ்ச்சிகொள்கிறார்கள். இந்த நிலையில், நிறைய குழப்பங்களும் வருகின்றன. இவை வகுப்பறையில் அல்லது வளாகச் சூழலில் பிரச்னை தரும் நடவடிக்கைகளாக மாறலாம்.

ஒரு மாணவருக்குக் கையில், காலில் அடிபட்டால், ஆசிரியர் உடனே முதலுதவி செய்கிறார், அந்தக் காயத்தில் நோய்த்தொற்று ஏற்படாதபடி தடுக்கிறார். அதுபோல, தோல்வி, தேர்வு பயம், சக மாணவர்களின் நிராகரிப்பு, இலக்குகளைத் தங்களால் எட்ட இயலவில்லையே என்கிற குற்றவுணர்ச்சி, குறைந்த சுய மதிப்பு போன்ற உணர்வுக் காயங்களையும் உணர்வு முதலுதவியைப் பயன்படுத்திக் கையாளலாம். அதன்மூலம் மாணவர்களின் உணர்வு நலனை உறுதிப்படுத்தலாம்.

மாணவரின் பிரச்னை சிறியதாக இருந்தால், ஆசிரியரே அந்த உணர்வுக் காயங்களைச் சரிசெய்யலாம். உதாரணமாக, தேர்வில் தோல்வியடைந்ததை எண்ணி வருந்துதல், ஒரு குறிப்பிட்ட பாடம் புரியவில்லை என்று கவலைப்படுதல், கல்விசார்ந்த அழுத்தம், வேலைசார்ந்த குழப்பம், வகுப்பறையில் சக மாணவர்களின் கிண்டல், கேலி போன்றவை. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஓர் ஆசிரியர் என்ன செய்யலாம்:

  • சில மாணவர்களுக்கு நேரத்தை மேலாண்மைசெய்ய, ஒரு வாசிப்புக் கால அட்டவணையை உருவாக்க உதவி தேவைப்படலாம், அவர்களுக்கு ஆசிரியர் ஆதரவாக இருக்கலாம், தேவைப்படும் உதவிகளைச் செய்யலாம்

  • மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் திட்டமிட உதவலாம்

  • கல்விரீதியிலான முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிப் பாராட்டலாம்

  • பணிவாழ்க்கை இலக்குகளைத் தீர்மானிக்க அவர்களுக்கு வழிகாட்டலாம்

  • மாணவர்களைக் குழுவாகச் சேர்த்து, ஒருவர் மற்றவரைச் சார்ந்து வெற்றியடையும்படியான செயல்பாடுகளை அவர்களுக்குத் தரலாம், இதன்மூலம் மாணவர்களிடையே உரையாடலை மேம்படுத்தலாம்

  • மாணவர்களிடையே மரியாதையான உரையாடலை வளர்க்கும்வகையில் வாய்ப்புகளை உருவாக்கலாம்

அதேசமயம், சில பிரச்னைகளை ஆசிரியரே தீர்க்க இயலாது, அதற்கு ஒரு பயிற்சிபெற்ற ஆலோசகர் தேவைப்படலாம். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் மாணவர்களிடம் இதைப்பற்றிக் கொஞ்சம்கொஞ்சமாகப் பேசலாம். உதாரணமாக, சக மாணவர்கள் கொடுமைப்படுத்துதல், போதைப்பொருள்களைச் சார்ந்திருத்தல், பாலியல் துன்புறுத்தல், தற்கொலை எண்ணங்கள் போன்றவை. இதுபோன்ற நேரங்களில், ஆசிரியர் முதலில் உணர்வு முதலுதவியை வழங்கலாம், அதன்பிறகு, அவர்களை ஆலோசகரிடம் அனுப்பலாம்:

  • அவர்கள் சொல்லும் பிரச்னையைக் கவனித்துக் கேட்கலாம், அவர்களுடைய பார்வையைப் புரிந்துகொண்டு பரிவோடு பேசலாம்

  • "எனக்குப் புரிகிறது", "இது உனக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்" என்பதுபோன்ற வாசகங்களைப் பயன்படுத்திப் பச்சாதாபம் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தலாம்.

  • ரகசியம் காக்கலாம்; மாணவரின் கவலைகளைச் சக ஊழியர்களிடம் அல்லது மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது

  • மாணவர் சொல்லும் விஷயங்களுக்கு எதிர்வினையாற்றக்கூடாது, அவர்கள்மீது தீர்ப்புச்சொல்லக்கூடாது, அவர்களைத் தண்டிக்கக்கூடாது.

சில மாணவர்கள் கல்லூரி ஆலோசகரிடம் பேச விரும்பாமலிருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், ஆசிரியர் தன்னுடைய கவலைகளை ஆலோசகரிடம் பகிர்ந்துகொள்ளலாம். அந்த ஆலோசகர் மாணவருடன் அதிகாரப்பூர்வமற்றமுறையில் பேசி, அவருடைய நம்பிக்கையைப் பெற இயலுமா என்று சிந்திக்கலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org