தேர்வின்போது தற்கொலை அடையாளங்களை எப்படி அடையாளம் காணலாம்?

உங்களுக்குத் தெரிந்த பள்ளி மாணவர் யாராவது, தேர்வு நேரங்களில் எரிச்சலாகத் தோன்றுகிறாரா? அவருடைய நடவடிக்கைகள் விபரீதமாகத் தெரிகின்றனவா? அல்லது, அவர் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகத் தோன்றுகிறதா? அவர்களைப் பார்த்து, 'இந்தப் பையனால் அழுத்தத்தைத் தாங்க இயலுமா?' என்று யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை.... இப்படியும் ஆகிவிடுமோ என்று நினைத்ததுண்டா?

தேர்வுக்கு முந்தைய காலகட்டம், தேர்வு நடைபெறும் காலகட்டம், தேர்வு முடிவுகள் வருவதற்கு முந்தைய காலகட்டம் ஆகியவை ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமானவை. இந்த நேரத்தில்தான் அவர்கள் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்கள், பலருடைய எதிர்பார்ப்புகளைக் (தங்களுடைய சொந்த எதிர்பார்ப்புகள், பெற்றோர், ஆசிரியருடைய எதிர்பார்ப்புகள்) கையாள முயற்சிசெய்கிறார்கள்.

இப்படி ஒரு மாணவர் மனத்துயரில் இருப்பதாகத் தோன்றினால், அவருடைய பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது நண்பர் அவைக் கவனித்துக்கொள்ளலாம், அவருக்கு உதவலாம்.

பெரியவர்கள் நினைத்தால் தங்களுடைய உணர்வு நிலையை வெளிப்படையாகச் சொல்லலாம், தேவைப்படும்போது உதவி கேட்கலாம். ஆனால், மாணவர்களுக்கு அது சிரமம். அவர்களுடைய மனத்துயரம், அவர்களது நடத்தையில் மாற்றங்களாக வெளிப்படலாம்.

குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்தால், அல்லது, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக யோசித்தால், அவர்களுடைய நடத்தையில் இயல்புக்கு மாறான சில மாற்றங்கள் தோன்றலாம். உதாரணமாக:

  • மரணத்தைப்பற்றிப் பேசுவது, சாக விரும்புவது

  • இயல்புக்கு மாறாக அமைதியாக இருப்பது, அல்லது, நெடுநேரம் தங்கள் அறையிலேயே இருப்பது

  • பசியெடுப்பதில் மாற்றங்கள்: நிறைய சாப்பிடுவது அல்லது குறைவாகச் சாப்பிடுவது; அதீதமாகக் குப்பை உணவுகளை உட்கொள்வது, நிறைய உப்பு இருக்கிற உணவுகள் அல்லது, கஃபைன் உள்ள ஆரோக்கிய பானங்களை உட்கொள்வது;

  • இயல்புக்குமாறான மனோநிலையோடு இருத்தல்; சிறிய காரணங்களுக்கெல்லாம் கோபப்படுதல் அல்லது வருத்தப்படுதல்

  • அதீதமாக்ப் பிடிவாதம் பிடித்தல் அல்லது, தங்களுடைய கோபத்தைப் பெற்றோர், உடன்பிறந்தோரிடம் காட்டுதல்

  • இயல்புக்கு மாறாகப் பதற்றத்துடன் இருத்தல் (இயல்பாக அவர்கள் பதற்றத்துடன் இல்லாவிட்டாலும்)

  • முன்பு அவர்கள் அனுபவித்துச் செய்த வேலைகளில் இப்போது ஆர்வமின்றி இருத்தல்

  • சில நண்பர்கள், உறவினர்களைக் கண்டிப்பாகச் சந்தித்தாகவேண்டும் என்று வலியுறுத்துதல். தான் அவர்களை இதற்குமேல் சந்திக்கப்போவதே இல்லை என்பதுபோல் நடந்துகொள்ளுதல்

  • தாங்கள் பத்திரமாகப் பாதுகாத்த விஷயங்களை மற்றவர்களுக்குத் தருதல்

  • திடீரென்று மது அல்லது சிகரெட்கள் அல்லது இணைய ஷாப்பிங் தளங்களைச் சார்ந்திருக்கத் தொடங்குதல்

குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் உள்ள மாணவர்கள், தங்கள் பேச்சில் அதனை வெளிப்படுத்தக்கூடும். (உதாரணமாக:

"நான் இறந்துபோய்விட்டால், தேர்வுகளை எழுதவேண்டியதில்லை" அல்லது "என்னால்தானே உங்களுக்கு இவ்வளவு கவலை!").

இந்த பாதிப்பு யாருக்கு அதிகம் வரலாம்?

தற்கொலை எண்ணங்கள் அல்லது யோசனை யாருக்குவேண்டுமானாலும் வரலாம். அவர்கள் எவ்வளவு நன்றாகப் படித்தாலும் சரி, இப்படியோர் எண்ணம் அவர்களுக்கு வருகிற வாய்ப்புள்ளது. சமீபத்தில் அதிர்ச்சிதரும் அனுபவங்களைச் சந்தித்த மாணவர்கள், உயர்ந்த எதிர்பார்ப்புகளைச் (உதாரணமாக, பெற்றோரின் எதிர்பார்ப்புகள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள், அல்லது, அவர்களுடைய சொந்த எதிர்பார்ப்புகள்) சந்திக்கவேண்டியுள்ள மாணவர்கள் ஆகியோருக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு அதிகம்.

பிறர் அவர்களுக்கு எப்படி உதவலாம்?

யாராவது ஒரு மாணவரிடம் மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும், அவர்களிடம் உடனடியாகப் பேசலாம், 'என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேட்கலாம்' என்று சொல்லலாம்.

முதலில், தாங்கள் கவனித்த நடத்தை மாற்றங்களைக் குறிப்பிட்டுப் பேசலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிற அறிகுறிகளில் எவற்றையேனும் அவர்கள் அனுபவிக்கிறார்களா என்று கேட்கலாம். அவர்கள் தற்கொலையைப்பற்றி எண்ணுவதுண்டா என்று மெதுவாக விசாரிக்கலாம். அவர்கள் 'ஆமாம்' என்று சொன்னால், எப்போதெல்லாம் இந்தச் சிந்தனை வருகிறது என்று கேட்கலாம். இப்படிதான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று அவர்கள் எண்ணியதுண்டா என்று விசாரிக்கலாம், ஆனால், அதற்கான முறைகளைக் குறிப்பிடவேண்டாம். அந்த எண்ணங்கள் வரும்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்கலாம். இதனால், அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய ஆபத்து எந்த அளவு அதிகம் என்று மதிப்பிடலாம், அவருக்கு எப்படிப்பட்ட ஆதரவு தேவை என்று தீர்மானிக்கலாம்.

ஒருவரிடம் சென்று 'நீங்கள் தற்கொலை செய்ய எண்ணியுள்ளீர்களா?' என்று கேட்டால், அவர்கள் உடனே நிஜமாகவே தற்கொலை செய்துகொண்டுவிடுவார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். இது உண்மையல்ல. இதுகுறித்து நிபுணர்கள் சொல்லும் கருத்து: ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் இருந்தால், அவர்களிடம் யாரேனும் அதைப்பற்றிப் பேசினால், அவர்களுக்கு ஒருவிதமான நிம்மதி வருகிறது, யாரோ தாங்கள் பேசுவதைக் கேட்க முன்வருகிறார்கள், அவர்கள் தங்களைப் புரிந்துகொள்வார்கள் என்றெண்ணி மகிழ்கிறார்கள்.

அதேசமயம், இப்படி விசாரிப்பவர் தீர்ப்பேதும் சொல்லாமல் அவர் சொல்வதை அப்படியே கேட்பது முக்கியம். சில நேரங்களில் ஒருவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தைத் தன் பெற்றோர், ஆசிரியர் அல்லது நெருங்கிய நண்பரிடம் சொல்கிறார். அப்போது, அவர்கள் அதை அலட்சியப்படுத்திவிடக்கூடும், அல்லது 'அதைப்பத்தி நினைக்காதே' என்று சொல்லக்கூடும். இவர்கள் மனத்தில் நல்லதை நினைத்துதான் அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், அதனால் அவர்கள் விரும்பிய பலன் கிடைக்காது, அவர் குணமாகமாட்டார். அதற்குப்பதிலாக, 'உன் மனத்தில் இருப்பதைச் சொல், நான் கேட்கத் தயார்' என்று சொல்லலாம்.

ஒருவேளை, அவர் ஆபத்து குறைவான வகையில் (எப்போதாவது தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறவர்) இருந்தால், அவர் சொல்வதைக் கேட்கலாம், அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கலாம். தேவைப்பட்டால், அவர்கள் பேசுவதைக் கேட்கத் தான் தயார் என்பதை அவர்களுக்குச் சொல்லலாம்.

ஒருவேளை அவர் மிதமானது முதல் அதிக ஆபத்துள்ள வகையில் இருந்தால் (தற்கொலையைப்பற்றி யோசிக்கிறார், எப்படித் தற்கொலை செய்வது என்று எண்ணியுள்ளார்), அவர் தன்னுடைய சவால்களைத் தைரியமாக வெளியே சொல்ல முன்வந்ததற்காக அவரைப் பாராட்டலாம். ஒருவேளை, அவர் தற்கொலைக்கான சாதனங்களை ஏற்கெனவே வாங்கிவைத்திருந்தால், அவரிடம் பேசுகிறவர், 'அந்தப் பொருள்களை நீங்கள் என்னிடம் தந்துவிட விரும்புகிறீர்களா? என்று கேட்கலாம். அடுத்தமுறை அவர்களுக்கு இந்த அழுத்தம்தரும் எண்ணங்கள் வரும்போது என்ன செய்யலாம் என்று அவரிடமே கேட்கலாம், அதிலிருந்து வியூகங்களை உருவாக்கலாம். உதாரணமாக, பதற்றம் வரும்போது ஒருவரை அழைப்பது, அல்லது, சிறிதுதூரம் ஓடிவிட்டுத் திரும்புவது போன்றவை.

இதுபற்றி அவருடைய பெற்றோரிடம் பேசலாம், அவர்கள் உடனே ஒரு மனநல நிபுணரிடம் செல்லவேண்டும் என்று சொல்லலாம்; உதாரணமாக, ஒரு பள்ளி ஆலோசகர், உளவியலாளர் அல்லது மனநல மருத்துவரிடம் அவர்கள் பேசலாம். ஒருவேளை அந்தப் பெற்றோர் மனநல மருத்துவரிடம் செல்லத் தயங்கினால், அவர்கள் தங்களுடைய பொது மருத்துவரை அணுகலாம் என்று ஊக்குவிக்கலாம். அந்தப் பொது மருத்துவர் அவர்களுக்கு ஓரளவு ஆதரவளிப்பார், அல்லது, ஒரு நல்ல நிபுணரிடம் அவர்களை அனுப்பிவைப்பார். நினைவிருக்கட்டும், உங்கள் தலையீடு, ஓர் உயிரைக் காப்பாற்றலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org