கல்வி

தேர்வுப் பதற்றத்துக்கு எப்போது சிகிச்சை தேவை?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஒரு கெடு நெருங்கும்போது எல்லாருக்கும் கவலை வரும், ஒரு பெரிய நிகழ்ச்சி என்றால் பதற்றம் வரும். இந்தப் பதற்றங்கள், இயல்பான எதிர்வினையாகும். இவை நல்லவை, காரணம், இவற்றால் மனிதர்கள் அதிகம் எச்சரிக்கையோடு வாழ்கிறார்கள். ஆனால், ஒருவேளை இந்தக் கவலைகள் ஒருவருடைய தினசரி வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கிவிட்டால்? சிலர் காரணமில்லாமல் கவலைப்படுகிறார்கள், அதனால் அவர்களால் தங்களுடைய தினசரி வேலைகளிலேயே கவனம் செலுத்த இயலுவதில்லை. இது ஏன்? ஒருவர் பதற்றத்தால் தன்னுடைய தினசரி வேலைகளைச் செய்ய இயலாமல் சிரமப்பட்டால், அவருக்குப் பதற்றக் குறைபாடு வந்திருக்கலாம். அவர் ஒரு மனநல நிபுணரிடம் உதவி பெறவேண்டும்.

இங்கே நினைவில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், இந்தப் பிரச்னை நெடுநாள் நீடித்தால், எந்தக் காரணமும் இல்லாமல் கவலை ஏற்பட்டால்மட்டுமே அது ஒரு மனநலப் பிரச்னை ஆகிறது.

அறிகுறிகள்

கவலை என்பது ஓர் இயற்கையான உணர்வு. ஆகவே, ஒருவர் கவலைப்படுகிறார் என்றாலே அவருக்கு மனநலப் பிரச்னை இருப்பதாக எண்ணிவிடக்கூடாது. அந்தப் பதற்றம் அவரைப் பலவீனமாக்கினால், நெடுநாள் தொடர்ந்தால்தான் அதுபற்றிக் கவலைப்படவேண்டும். பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் பதற்றக் குறைபாட்டுக்கான அறிகுறிகளைக் காணலாம். அவை:

  • வேகமான இதயத்துடிப்பு, ஆழமாக மூச்சுவிடுதல்

  • மார்பில் இறுக்கம்

  • படபடப்பு, நடுக்கம்

  • காரணமில்லாத, அதீதக் கவலை

இந்தக் குறைபாடுகள் யாரிடமாவது காணப்பட்டால், அவர்களிடம் பதற்றக் குறைபாடுகளைப்பற்றிப் பேசலாம், அவர்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும் என்று சொல்லலாம்.

தேர்வின்போது பதற்றம்

தேர்வுகள் என்பவை, ஒரு மாணவரின் வாழ்க்கையில் மிகவும் அழுத்தம் தரும் நிகழ்வுகள் ஆகும். இதற்குக் காரணம், அவர்கள்மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகளும், தீவிரப் போட்டியும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 

பலவிதமான பதற்றக் குறைபாடுகளைப்பற்றியும் அவற்றுக்கான காரணங்கள், அவற்றுக்கு எப்படிச் சிகிச்சையளிப்பது என்பதைப்பற்றியும் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள, மேலும் இந்த தளத்தை வாசிக்கவும் 

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org