மனநலமும் இந்தியாவில் LGBT நபரும்

பாலின மற்றும் பாலியல் வித்தியாசங்களால், பிறர் எப்போதும் சந்திக்காத கேள்விகள் எழுகின்றன: ஒருவர் தன்னைப்பற்றிப் பிறரிடம் எதை வெளிப்படுத்துகிறார்? எவ்வளவை வெளிப்படுத்தலாம்? யாரிடம் வெளிப்படுத்தலாம்? உறவுகளைத் தேடுவது எப்படி? தன்னைப்போன்றவர்களை எங்கே சந்திப்பது? ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவது எப்படி? கடமைப்பட்டிருப்பதாக உணராமல், ஆதரவை நாடுவது எப்படி?

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் கண்டறிவது சிரமம்தான், அவ்வப்போது நட்பற்றமுறையிலும், சில நேரங்களில் பாரபட்சமாகவும்கூட நடந்துகொள்கிற ஓர் உலகத்தில் வாழ்வது, வேலை செய்வது இன்னும் சிரமம். இதனால், இவர்கள் நிழல்களில் வாழவேண்டியிருக்கலாம். இந்திய LGBT (QIA+) சமூகத்துக்கு (பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் நாட்டம் கொண்டவர்கள், அப்பாற்பட்ட நாட்டம் கொண்டவர்கள், வித்தியாசமான நாட்டம் கொண்டவர்கள், பாலீர்ப்பு கொண்டவர்கள், பாலீர்ப்பு அற்றவர்கள் மற்றும் பிறர்), சமூக, குடும்ப முன்முடிவுகளுடன், சட்ட அமைப்பும் அடக்குமுறையாக உள்ளது, அவர்கள் எங்கும் பாதுகாப்பைக் காணமுடிவதில்லை, அவர்களே தங்களுக்கான சமூகங்களை உண்டாக்கிக்கொண்டால்தான் உண்டு.

ஒருவருடைய உள் எதார்த்தம் மற்றும் உலகம் இயங்கும் விதம் ஆகியவற்றுக்கு இடையில் முரண் ஏற்படும்போது, பெரிய துயரம் உண்டாகலாம். இந்தப் பிரச்னைகள் இளம் வயதிலேயே தொடங்கிவிடுகின்றன, அவர்களால் வித்தியாசத்தை உணர இயலுகிறது, அல்லது, அந்த வித்தியாசங்களைப் பிறர் கடுமையாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சத்யாவுக்கு வயது 14. அவர் மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார், தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தார். நாங்கள் சத்யாவுடன் பேசினோம். அப்போதுதான் அவருடைய பிரச்னை எங்களுக்குப் புரிந்தது: அவருடைய வயதிலிருக்கும் மற்ற பதின்பருவத்தினருக்குப் பாலினம், பாலியல் என்பது தெளிவாக இருந்தது, ஆனால் சத்யாவுக்கு அது குழப்பத்தையே தந்தது. இதனால் சத்யா பெரிய அதிர்ச்சியைச் சந்தித்தார். இதுபற்றித் தன் தாயிடம் பேச ஆரம்பித்தார், அவர் அதனை முரட்டுத்தனமாக எதிர்த்தார், நிராகரித்தார். இதனால், சத்யா தீவிர மனச்சோர்வுக்கு ஆளானார். நாங்கள் சத்யாவுடனும் அவருடைய குடும்பத்தினருடனும் இணைந்து பணியாற்றினோம், அவருக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்க உதவினோம், சத்யா தனது சொந்த அடையாளத்தை இயல்பாக உணர, புரிந்துகொள்ள வழிசெய்தோம், நல்லவேளையாக, சத்யாவும் அவருடைய குடும்பத்தினரும் இதனைப் புரிந்துகொண்டு பின்பற்றினார்கள், பலன் கண்டார்கள்ஆனால், இந்த வகைக் கதைகள் எல்லாம் இப்படி மகிழ்ச்சியாக முடிவதில்லை - பல LGBT இளைஞர்கள் எப்படியாவது சமூகத்தில் பொருந்திவிடவேண்டும், தேர்ச்சிபெற்றுவிடவேண்டும் என்று மிகவும் சிரமப்படுகிறார்கள், அதற்காகத் தங்கள் சொந்தச் சவுகர்யங்களைப் பறிகொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும், இயல்பாக இருக்க இயலுவதில்லை, வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுவிடுகின்றன, கிண்டலடிக்கப்படுகின்றன, இவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள், அதைவிட மோசமான நிலைமைகளும் வருவதுண்டு.

உதாரணமாக, அரவிந்தின் கதையைக் கேளுங்கள். இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறவன் அவன். ஆகவே, பிறர் அவனை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், உண்மையில் நடந்தது என்ன? பிறர் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள், ஆபாசமாகப் பேசினார்கள், கிண்டலடித்தார்கள். அவன் எப்படியோ அதையெல்லாம் தாங்கிக்கொண்டுவிட்டான். ஆனால் அதன் தழும்புகள் அவனுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தன. அதிலிருந்து வெளிவருவதற்கு மிகுந்த முயற்சியும் ஆதரவும் தேவைப்பட்டது.

ஒருவர் பாலின ஈர்ப்பின் மத்தியில் உள்ளபோது, அதாவது, மாறும் நிலையில் உள்ளபோது, இது இன்னும் சிரமமாகிவிடுகிறது. சுரேஷ் அந்த வகையைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு பெரிய MNCயில் வேலை கிடைத்தது. இதுபற்றிப் பிறரிடம் பேசத்தொடங்கினார். காரணம், அவருடைய நிறுவனத்தின் கொள்கைகளில் அவர்மீது எவ்விதத்திலும் பாரபட்சம் காட்டப்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, பிறர் தன்னை ஏற்பார்கள் என்று அவர் நம்பினார். ஆனால், அப்படி யாரும் அவரை வரவேற்கவில்லை. அதேசமயம், பெரிய பிரச்னைகளும் இல்லை. ஆகவே, சுரேஷின் வாழ்க்கை இயல்பாகச் சென்றுகொண்டிருந்தது. ஒருநாள், சுரேஷின் பிறந்தநாளன்று சக ஊழியர்கள் அவருக்கு ஒரு பரிசு தந்தார்கள்: ஒரு பெட்டி நிறைய வளையல்கள், பெண்களின் அழகு சாதனப் பொருள்கள். அந்த ஒரு செயலின் தாக்கம், மிகவும் கொடுமையானதாக இருந்தது. உணர்வுரீதியில் தழும்புகளை ஏற்படுத்தியது.

சிறுபான்மை அழுத்தம், அல்லது, முன்முடிவுகளை உணர்தல், அடக்குமுறை மற்றும் பாரபட்சம்... எல்லாமே நிஜம். LGBT வகையைச் சேர்ந்த ஒருவர் சமூகத்தில் பலவிதமான கட்டுப்பாடுகளை அனுபவிக்கிறார்:

  • நிராகரிப்பு, கிண்டலடித்தல்... இவை பொதுவாக வீட்டில், பள்ளியிலேயே தொடங்கிவிடுகின்றன
  • படிப்பு, வேலைவாய்ப்பு, சமூக இடங்கள் போன்றவை குறைவு, அல்லது, அவை பயமுறுத்தும்விதமாக அமைகின்றன
  • பணியிடப் பாரபட்சம், பல நேரங்களில் இது நுட்பமாகவும் மறைமுகமாகவும் இருக்கும், ஆனால், இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தாமல்போகலாம்
  • உரிமைகள் மறுக்கப்படுதல், அடிப்படை உரிமைகளான மருத்துவப் பராமரிப்பு போன்றவைகூட இவர்களுக்கு மறுக்கப்படலாம், இதனால் இவர்களுடைய வாழ்க்கைத்தரம் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது

இந்த அனுபவங்களால் ஒருவருடைய சுய மதிப்பு தொடர்ந்து குறையக்கூடும், தன்னையும் அறியாமல் அவர் இதனால் பாதிக்கப்படுவார். சிலருக்குப் பெரிய அதிர்ச்சிதரும் அனுபவங்கள் ஏற்படலாம், இதனால் அவர்கள் மனத்தில் தழும்புகள் ஏற்பட்டுவிடலாம், இவர்கள் தனிமையில் வாழத்தொடங்கலாம், ஆரோக்கியமற்ற, ஆபத்தான பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாம், சிலர் தற்கொலை முயற்சியில்கூட ஈடுபடலாம்.

மேற்கத்தியப் பின்னணியில் பார்க்கும்போது, LGBT வகையைச் சேர்ந்தோருக்குப் பெரிய மனச்சோர்வு அல்லது பொதுவான பதற்றக் குறைபாடு போன்ற ஒரு மன நலப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட மூன்றுமடங்கு அதிகம் என்கிறது ஓர் அறிக்கை. LGBT வகையைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் வருகிற, அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிற வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகம். LGBT வகையைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவு நபர்கள் போதைப்பொருள்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவது, பிற பிரச்னைகளால் பாதிக்கப்படுகிற வாய்ப்புகள் அதிகம். இந்தியப் பின்னணியில், LGBT வகையைச் சார்ந்தோருடைய மனநலம்பற்றிய தரவுகள் மிகக்குறைவு. காரணம், இதுபோன்றவர்கள் தன்னைப்பற்றி எந்தவிதத்திலும் வெளியே சொல்லிவிடாதபடி இங்குள்ள அரசியல்-சட்ட அமைப்பு செய்துவிடுகிறது. அதேசமயம், இந்த எண்கள் மிக அதிகமாகதான் இருக்கும் என்று நாம் ஊகிக்கலாம்.

இந்திய LGBT மக்கள் சந்திக்கும் சமூக-கலாசார அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் தற்கொலை எண்ணத்துக்குத் தூண்டப்படாவிட்டாலும், அவர்கள் பல முக்கியமான மனநலப் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்:

  • பயம் மற்றும் பதற்றம் தொடர்பான பிரச்னைகள்: தங்களுடைய சொந்த அடையாளம்பற்றி, 'வெளித்தள்ளப்படுவது'பற்றி, உறவுகளைப்பற்றி, ஏற்றுக்கொள்ளப்படுவதைப்பற்றி, பாதுகாப்பைப்பற்றி...
  • மனநிலை தொடர்பான பிரச்னைகள், மனச்சோர்வு உள்பட
  • தன்னைப்பற்றிய தாழ்வான உணர்வு, அதனால் பாதிக்கப்படும் சுய மதிப்பு, தன்னம்பிக்கை, செயல்திறன், சாதனைகள் மற்றும் வாழ்க்கைமீது திருப்தி
  • தரமான உதவி, வளங்கள் மற்றும் ஆதரவு இன்மை, அதனால் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுதல்

இங்கே நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான அம்சம், LGBT+ சமூகத்தில் மன நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுவதற்குக் காரணம், அவர்களுடைய பாலினமோ பாலியலோ அல்ல. பாலினம்/பாலியல் காரணங்களால் எந்தவிதமான மனநலப் பிரச்னைகளும் உருவாவதில்லை. இவர்களுக்கு வரும் மனநலப் பிரச்னைகளுக்கான காரணங்கள், உலகம் இவர்களுடைய வித்தியாசத்தன்மையை மறுக்கிறது, இவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கிறது, இவர்களுடைய வாழ்க்கையை மிகவும் சிரமமாக்குகிறது.

என்ன செய்யலாம்?

LGBT+ நபர்களின் மனநலனை மேம்படுத்த இரண்டு முக்கிய வழிகள்: உடன்பாட்டு ஆலோசனைகளை வழங்குதல், சமூகத்தை உருவாக்குதல்.

உடன்பாட்டு ஆலோசகர்கள் என்றமுறையில், ஒவ்வொரு வாழ்க்கையும் முக்கியம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களைத்தாங்களே கண்டறியவேண்டும், ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஊக்கப்படுத்துகிறோம், பிறரைப்போலவே அவர்களும் தாங்கள் கண்டறியும் பின்னணியில் தங்களுக்கென்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதை அவர்கள் உணரவேண்டும் என ஊக்குவிக்கிறோம், அவர்கள் ஆரோக்கியமான தெரிவுகளை எடுக்கவும், தங்களுடைய உள்ளார்ந்த சுய மதிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும், சமூக ஆதரவைக் கண்டறியவும் நாங்கள் உதவுகிறோம், தங்களுடைய வாழ்க்கையின் பொருள் என்ன என்பதைக் கண்டறியும் அவர்களுடைய தேடலில் கூட்டாளிகளாக இருக்கிறோம். வித்தியாசத்தால் மனநல அல்லது உணர்வுப் பிரச்னைகள் வருகின்றன என்ற கருத்தை நாங்கள் மறுக்கிறோம், அவர்கள் சந்திக்கும் பல சவால்கள் சமூகச் செயல்படாமையின் விளைவுகள் எனப் புரியவைக்கிறோம், சமூகம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துகிறது, பல நேரங்களில் பகைமையுடன் நடந்துகொள்கிறது, ஒரு குறிப்பிட்ட வகை வாழ்க்கையைதான் அவர்கள் வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறது, இதனிடையே வாழ்வது அழுத்தம் தரலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.  

சமூகம் உருவாக்குதலில் சமூக உறுப்பினர்களே ஈடுபடுவதும் உண்டு, சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்படுவதும் உண்டு, LGBT+ நபர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவை ஆதரவான, பாதுகாப்பான இடங்களாக, கற்றுத்தரும் மையங்களாக, நலப்பராமரிப்பை, ஆரோக்கிய வாழ்க்கைபற்றிய விவரங்களைப் பெறுகிற இடங்களாக, தேவைப்படும்போது வாதிடும் இடங்களாக அமைகின்றன. இதன்மூலம் மக்கள் ஒருவரோடொருவர் கலந்து பழக இயலுகிறது, ஆரோக்கியத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை உடைக்க இயலுகிறது, பிரச்னைகளிலிருந்து மீள இயலுகிறது, தங்களுடைய உள் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்த இயலுகிறது.

* அடையாளத்தைப் பாதுகாக்க, அனைத்துப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன

பார்வைக்கு:

மகேஷ் நடராஜன் இன்னர்சைட் ஆலோசனை மற்றும் பயிற்சி மையம் LLP(www.innersight.in)யில் ஓர் ஆலோசகர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org