மாறுபட்ட பாலினத்தன்மை கொண்டவர்கள் ஆலோசனை பெறக்கூடிய ஒரு நம்பகமான சிகிச்சையாளர் யார்?

நான் J என்ற சிகிச்சையாளரிடம் ஓராண்டாகச் சிகிச்சை பெற்று வந்தேன், அதன்பிறகுதான் நான் அவரிடம் என்னுடைய இருபாலின நாட்டத்தைப்பற்றித் தெரிவித்தேன். அதற்கு முன் நான் மனச்சோர்வுக்காக சிகிச்சை பெற்று வந்தேன், பல பிரச்னைகள் மற்றும் கவலைகளுக்காக எனக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது, அப்போது என்னுடைய இருபாலின நாட்டத்தைப்பற்றிப் பேசுவதற்கான துணிவு என்னிடம் இல்லை. J என்ன சொல்வார்? என்னுடைய நாட்டத்தைத் திறந்த மனத்துடன் அவர் எடுத்துக்கொள்வாரா, அதைத் தீர்க்கவேண்டிய ஒரு ‘பிரச்னை’யாக ஆக்காமல் இருப்பாரா? வெளிப்படையாக இருப்பதில் எனக்கு இருக்கும் அச்சங்களைக் கையாள்வதற்கு அவர் எனக்கு உதவுவாரா? நான் Jயை நம்பினேன், இந்த நேரத்தில் அவர் என்னைக் கைவிட்டுவிட்டால் அது என்னை மிகவும் காயப்படுத்தும். அதன் பொருள், எனக்கு இன்னும் மிக மோசமாகத் தேவைப்பட்டுக்கொண்டிருந்த உதவியைப் பெறுவதற்காக நான் ஒரு புதிய தேடலைத் தொடங்கவேண்டும்.

தொடக்கத்தில் Jயை யாரும் எனக்குப் பரிந்துரைக்கவில்லை . நன்கு புகழ்பெற்ற ஒரு மருத்துவ உளவியலாளரைதான் அவர்கள் எனக்குப் பரிந்துரைத்தார்கள், எழுத்தருடைய அல்லது கால அட்டவணைப்படுத்துதலில் நடந்த ஏதோ ஒரு குழப்பத்தால்தான் நான் Jயிடம் சென்றேன் என்று நான் இன்றுவரை நினைக்கிறேன். இந்த மூத்த சிகிச்சையாளர் பல விஷயங்களில் புகழ் பெற்றவர், குறிப்பாக மனநலச் சமூகங்களில் LGBT நபர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான போராளியும்கூட. ஆனால் அவர் எப்போதும் ஒரு LGBT போராளியாக இருக்கவில்லை. 80களிலும் 90களின் தொடக்கத்திலும் அவருக்கு இதுபற்றிய முழுமையான தகவல்கள் தெரிவதற்குமுன்னால், ஆண்கள்மீது நாட்டம் கொள்ளும் ஆண்கள், பெண்கள்மீது நாட்டம் கொள்ளும் பெண்களுடைய ஒருபாலினத் தன்மையைக் ‘குணப்படுத்துவதற்காக’ அவர் சிகிச்சையைப் பரிந்துரைத்துள்ளார். இப்போது அவர் செய்துவரும் மிகச்சிறந்த பணியை நான் சிறுமைப்படுத்தவோ குறைந்து மதிப்பிடவோ விரும்பவில்லை, ஆனால் அவருக்குப் பதிலாக நான் Jயைச் சந்தித்ததை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். என்னுடைய சொந்த, நொறுங்கக்கூடிய சுய உணர்வானது இந்தப் பிரச்னை கொண்ட வரலாற்றைக் கையாண்டிருக்குமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

'LGBT யை புரிந்துகொண்டு ஆதரிப்பவராக இருக்கவேண்டும்'

அதன்பிறகு ஏழு ஆண்டுகள் சென்றுவிட்டன; இப்போது நான் ’வெளிப்படையாக’வும் திறந்த தன்மையுடனும் இருக்கிறேன். எனக்கு LGBT நிறமாலை முழுவதும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள், நான் நம்பக்கூடிய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெண்களை விரும்பும் எல்லாப் பெண்களுக்கும் ஆண்களை விரும்பும் எல்லா ஆண்களுக்கும், இருபாலின நாட்டம் கொண்ட எல்லாருக்கும் இந்த வரம் கிடைத்து விடுவதில்லை. ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாதவர்களைப் பொறுத்தவரை இன்னும் குறைவானவர்களே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள், அது சமூகத்திலானாலும் சரி, சமூக அமைப்புகளிலானாலும் சரி. (எடுத்துக்காட்டாக, ஒருவர் தன்னுடைய புதிய பாலின அடையாளத்தைக் காட்டுவதற்காக PAN அட்டை மற்றும் ஆதார் அட்டையைப் பெறுவதற்கு முயன்று பார்க்கட்டும், அது எளிதில்லை.)

இந்தியாமுழுவதும் பல மூடப்பட்ட ஃபேஸ்புக் குழுமங்களில் மாறுபட்ட பாலினத்தன்மைகளைக்கொண்ட ஆண்களும் பெண்களும் இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள்: நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவர்/சிகிச்சையாளர்/ஆலோசகரைப் பரிந்துரைக்க இயலுமா? அவர் LGBTயைப் புரிந்துகொண்டு ஆதரிப்பவராக இருக்கவேண்டும்.  

'LGBTயை ஆதரிப்பவர்' என்கிற குணம் எல்லாருக்கும் இருக்கும் என்று நாம் நம்புவதில்லை, ஒரு பாலின நாட்டம் கொண்டவர்களைக் ‘குணப்படுத்துவதற்காக’ அவர்களுக்கு மின் அதிர்வுச் சிகிச்சை வழங்கப்பட்ட நாட்களிலிருந்து நாம் அதிகத் தொலைவு வந்துவிடவில்லை. ஒருவர் ’இயல்பாக’ நடந்துகொள்வதற்கு ’வழிநடத்துவதற்காக’ மதம் சார்ந்த ஆளுமைகளைக் குடும்பத்தினர் கொண்டுவரக்கூடும்.

கடந்த பல ஆண்டுகளாக, மாறுபட்ட பாலினத்தன்மை கொண்ட இந்தியர்கள் தங்களைக் கண்டிக்காத மற்றும் LGBT பிரச்னைகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய நம்பகமான தொழில்முறை நிபுணர்களுடைய பட்டியலைத் தாங்களே முனைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பட்டியல்கள் ஒவ்வொரு பெயராக உருவாக்கப்பட்டவை, தங்களுக்குப் பொருந்துகிற ஒரு சிகிச்சையாளர் கிடைக்கும்வரை பல சிகிச்சையாளர்களை முயன்றுபார்த்த மனிதர்கள் உருவாக்கியவை.

இந்தியாவில் மாறுபட்ட பாலியல்தன்மை அல்லது பாலின அடையாளத்தைக் கொண்ட பலரைப்பற்றிய ஒரு தெளிவான பார்வை நம்மிடம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்த விஷயம், வெளிப்படையாகத் தெரிகிறவர்களில் ஆபத்து எச்சரிக்கை அடிக்கும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மனச்சோர்வு அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்துகொள்ளக்கூடிய ஆபத்தில் இருக்கிறார்கள். இந்தத் தரவுகளில் சில தரவுகளில்லை, அனுபவங்கள். இறந்துபோனவர்களைப்பற்றி இவர்கள் கேள்விப்படுகிறார்கள், ஃபேஸ்புக்கில் RIPக்களைக் காண்கிறார்கள், ஒருவரை ஒருவர் சமூக ஊடகங்களின்மூலம் பின்பற்றுகிறார்கள், துக்கம் தெரிவிக்கிறார்கள்.

உண்மை வாழ்க்கையில் என்னுடைய முதல் மாறுபட்ட பாலினத்தன்மை கொண்டவர்களுக்கான நிகழ்ச்சி, பெங்களூரில் ஒரு திருநங்கைப் பெண்னின் நினைவுக்கூட்டமாக இருந்தது, அவரை அவருடைய சமூகத்தினர் மிகவும் நேசித்திருந்தார்கள். அவர் அழகானவர், நேசிக்கப்பட்டவர், ஆற்றல் மிகுந்தவர். ஆனால், அழகாகவும் நேசிக்கப்பட்டவராகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் உள்ள  ஒருவருக்குக்கூட, கடினமான ஒரு வாழ்க்கை இருக்கலாம், அவர் அதை முடித்துக்கொள்ள விரும்பலாம். இதை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன், இதெல்லாம் இப்படிதான் நடக்கும் என்று நினைக்கத்தொடங்கிவிட்டேன்.  

பாலினப் பாத்திரங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பாத்திரங்களுக்கு இயையாத குழந்தைகள் கேலி செய்யப்படுகிறார்கள். பெரியவர்கள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்கிற இயல்புகளைப் பின்பற்றாவிட்டால் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர், சமூகத்தினர் அவர்களுக்கு அழுத்தம் தருகிறார்கள். திருநங்கைகளாக இருக்கிறவர்கள் இந்தப் பாலினக் காவலின் சுமையை மிகவும் தீவிரமானவகையில் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒருவருடைய பாலியல்தன்மை வெளிப்படும்போது என்ன ஆகிறது? அவர் பணியிடத்திலும் சமூகத்திலும் நுட்பமான முறையில் தண்டிக்கப்படுவாரா? அவருடைய வீட்டு உரிமையாளர்கள் அவரை அமைதியாக வாழ அனுமதிப்பார்களா? நண்பர்களும் குடும்பத்தினரும் இந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வார்கள்? அவர்களுக்கு மாறுபட்ட பாலியல்தன்மைகள் புரியுமா? ஓர் எதிர்மறையான சூழலில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை ஒதுக்கிவிடுவார்கள், அவர்களுடைய அலுவலகம் அவர்களைப் பதவி இறக்கம் செய்வதற்கும் அல்லது அவர்களுடைய பங்களிப்பைப் புறக்கணிப்பதற்கும் வழிகளைக் கண்டறியும். மிக மோசமான ஒரு சூழ்நிலையில் அவர்கள் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்தும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை இதில் மிகச் சோகமான கதை என்னவென்றால் இந்தமாதிரி சித்திரங்களை அவர்களே நம்பத்தொடங்கிவிடுவதுதான், அதாவது தங்களுடைய பாலியல்தன்மைகளுக்காகத் தங்களைத் தாங்களே இகழ்ந்துகொள்வது, தங்களுடைய பாலியல் அடையாளத்தைத் தாங்களே இகழ்ந்துகொள்வது. நன்னெறிகள், ஒழுக்கங்கள், இயல்புகள்… இவை அனைத்தையும் மக்கள் தங்களுடைய பெற்றோரிடமிருந்து, தொலைக்காட்சியிடமிருந்து, தங்களுடைய மதத் தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர், மத தலைவர்கள் மற்றும் அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாறுபட்ட பாலியல்தன்மையைப்பற்றிய ஓர் எதிர்மறையான பார்வையைக் கொண்டிருந்தால் தாங்கள் இயல்பானவர்கள்தான் என்பதை அவர்கள் எங்கு கற்றுக்கொள்வது?

“எனக்கு உதவி தேவை” என்று ஒருவரால் சொல்ல இயலும்போது, ஒரு நம்பகமான சிகிச்சையாளரைக் கண்டறியவேண்டிய நேரம் அது. சில எதார்த்தக் காரணங்களுக்காக நான் இப்போது Jயிடம் செல்வதில்லை; என்னுடைய புதிய சிகிச்சையாளரிடம் நான் ஒரே ஒரு முறைதான்  சென்றிருக்கிறேன், அவர் இனிமையானவராகத் தோன்றுகிறார், LGBTயை ஆதரிப்பவராக இருக்கிறார். ஆனால் இதைப்பற்றி நான் அவரிடம் பேசும்வரை இது எனக்குத் தெரியாது, நான் அந்த ஆபத்தைச் சந்திக்கவேண்டியிருந்தது, அது ஒரு  மிகப்பெரிய ஆபத்து, இப்போது நான் முன்பைவிட மேம்பட்டிருந்தாலும், என்னுடைய சுயத்தைப்பற்றிய, என்னுடைய  ஆசைகள் மற்றும் என்னுடைய தேவைகளைப்பற்றிய இன்னும் மேம்பட்ட உணர்வைக் கொண்டிருந்தாலும், அது ஒரு பெரிய ஆபத்துதான் .

நிலைமை முன்னேறும்.

நான் குணமடையலாம், அல்லது, என்னுடைய வாழ்க்கையின் மீதமிருக்கும் நாட்களிலெல்லாம் எனக்கு மனச்சோர்வு தொடரலாம். சிகிச்சைக்குச் செல்வது, என்னுடைய மருந்துகளை எடுத்துக்கொள்வது, மன நலனைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்குமான தொடர்ச்சியான முன்னோக்கிய போராட்டம் ஆகிய எண்ணங்களே என்னைக் களைப்படையச்செய்கின்றன. அநேகமாக ஒரு கூட்டாளியுடன் நான் வாழவேண்டியிருக்கலாம், என்னைப் பிறர் தொடர்ந்து கண்காணிக்கலாம், குறைவான உரிமைகள் மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான குறைந்த பாதுகாப்புடன் நான் வாழவேண்டியிருக்கலாம், இதனை வீட்டு உரிமையாளர்கள், வேலை வழங்குவோர், கடை மேலாளர்கள் போன்றோர் நிகழ்த்தலாம், இதுவும் களைப்பு தருவதாக இருக்கிறது.

நான் அதிர்ஷ்டசாலிகளின் பக்கத்தில் இருக்கிறேன். என்னுடைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. நான் கல்வி கற்றிருக்கிறேன். நான் பெரும்பாலும் ”இயல்பாக”த் தோன்றுகிறேன். நான் விரும்பினால் எதிர்பாலின விழைவு கொண்டவராகத் தோற்றமளிக்க முடியும். ஆனாலும் நான் களைத்திருக்கிறேன். எல்லாரும் என்னைப்போல் அதிர்ஷ்டத்துடன் இருப்பதில்லை, என்னுடைய களைப்பை ஒப்பிட இயலாது.

மாறுபட்ட பாலினத்தன்மையோடு இருப்பதால் என்னுடைய வாழ்க்கையே மோசமாகிவிட்டது என்கிற தோற்றத்தைத் தர நான் விரும்பவில்லை. நிலைமை மேம்படுகிறது. நான் பதின்பருவத்தில் இருந்தபோது, மாறுபட்ட பாலினத்தன்மையுடன் இருப்பது பெரும் இழிவான, தனிமையான ஓர் அனுபவமாக இருந்தது, இப்போது அது அவ்வாறு இல்லை. பெங்களூரின் வலிமையான LGBT சமூகமானது எனக்கு நண்பர்களையும் செயல்பாடுகளையும் வழங்குகிறது. அடுத்த தலைமுறையில் என்னுடைய மருமகள்களும் மருமகன்களும் என்னுடைய இதயக் குழந்தைகளும் அச்சம் அல்லது தீர்ப்பு வழங்குதல் இல்லாமல் பெண்மீது நாட்டம் கொண்ட பெண்களாக, இருபாலின விழைவு கொண்டவர்களாக, ஆண்மீது நாட்டம் கொண்ட ஆண்களாக, திருநங்கைகளாக, இருமைத்தன்மை அல்லாதவர்களாக இருக்கும் நாள் வரும் என்று நான் நம்புகிறேன்.

ஆனால், வாதிடுவதன்மூலம், எங்களுடைய வாழ்க்கைகளை எல்லாருக்கும் தெரியும்வகையில் வாழ்வதன்மூலம் நாங்கள் பாதிக்கும் இந்த மாற்றம் மெதுவாக நடக்கிறது. தற்போது நாங்கள் உண்மையான மற்றும் அச்சப்படக்கூடிய பாரபட்சத்தைச் சந்திக்கிறோம், சில நேரங்களில் நாங்கள் எங்கள்மீதே பாரபட்சம் காட்டுகிறோம், நாங்கள் வெளிப்படையாக நடந்துகொண்டால் நாங்கள் காயத்திலிருந்து அல்லது களங்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்போமா என்று எங்களுக்கே தெரியவில்லை. நாங்கள் உண்மையை மறைக்கிறோம் என்றால் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப்படவேண்டும், எதேச்சையாக  எதையும் வெளிப்படுத்திவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட எங்களுக்கு அழுத்தம் அளிப்பவை அதிக இயல்பானவை - வாழ்க்கைக்குத் தேவையான சம்பளத்தைச் சம்பாதித்தல், பாதுகாப்பான இல்லத்தைப் பெறுதல் போன்றவை.

ஆகவே நாங்கள் அழுத்தத்துடன் இருக்கிறோம். எங்களில் சிலர் மற்றவர்களைவிட அதிக அழுத்தத்துடன் இருக்கிறோம்! ஆகவே எங்களில் பலர் தங்களுடைய நண்பர்களை வன்முறைக்குப் பலி கொடுத்திருக்கிறோம். (குறிப்பாக, திருநங்கைச் சமூகங்களில் இது அடிக்கடி நிகழ்கிறது, காரணம், அவர்கள் பலநேரங்களில் தங்களுடைய இயல்பான இடங்களிலிருந்து விரட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள், வன்முறையான குற்றச்செயல்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தை அதிகம் கொண்டிருக்கிறார்கள்). ஆகவே எங்களில் பலர், இறந்துபோன மாறுபட்ட  பாலினத்தன்மை கொண்டவர்களின் வளர்ந்துவரும் புள்ளி விவரங்களில் இன்னோர் எண்ணிக்கையைச் சேர்த்துவிடாமலிருக்கத் தடுமாறுகிறோம். அதற்கு பதிலாக, வாழுகிற , வாழ அனுமதிக்கப்படுகிற மாறுபட்ட பாலினத்தன்மை கொண்ட மக்களின் புதிய புள்ளி விவரங்களை நாங்கள் விரும்புகிறோம்.

ஒவ்வொரு நாளும், நான் என்னுடைய மாறுபட்ட பாலினத்தன்மை கொண்ட சுயத்தைக் காட்சிப்படுத்தியபடி வெளியே நடக்கிறேன். நான் இங்குதான் வாழ்கிறேன், நான் நன்றாகவே இருக்கிறேன். நாளைக்கும் நான் இங்கு வாழ இயலும், நன்றாக இருக்க இயலும் என்று நம்புகிறேன்.

ரோகினி மாலூர் பெங்களூரை சேர்ந்த ஒரு LGBTQIA+ கவிஞர் மற்றும் எழுத்தாளர்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org