பாலினம்

மனரீதியான தக்குதல்: இது உடல்ரீதியான தாக்குதலைவிட ஆழமாகவும் காயம் தரக்கூடியதாகவும் இருக்கும்போது...

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

நம்மில் பலருக்கு உடல்ரீதியான தாக்குதல் என்றால் என்ன என்று தெரியும். மேலும், உடல் தாக்குதலை வன்முறை என்று கருத இயலும். இருப்பினும், சம அளவில் சேதத்தை ஏற்படுத்தும் விளக்க இயலாத இன்னொரு தாக்குதலும் உள்ளது: மனரீதியான தாக்குதல். 

மனரீதியான தாக்குதல் என்றால் என்ன?

மனரீதியான தாக்குதல் என்பது பொதுவாக நெருங்கிய உறவுகளில் காணப்படும் ஒரு நிகழ்வாகும். இது மற்றொரு நபரை அவமதித்தல், இழிவுபடுத்தல், வெளிப்படையாக அவமானகரமானவழியில் நடத்துதலாகும். இத்தாக்குதலை அனுபவிக்கும் நபர், இதனால் குறைந்த சுயமதிப்பீட்டால் பாதிக்கப்படலாம், இது உறவில் அவர்களுடைய பங்கைப் பாதிக்கிறது. ஓர் உறவில் ஆண் பெண் இருவரும் மனரீதியில் தாக்குபவர்களாக இருக்கலாம்.

உடல்ரீதியான வன்முறைத் தாக்குதல் போன்றே, மனரீதியான தாக்குதலும் உறவில் மற்ற நபரை வலுவில்லாமல் அல்லது ஆற்றலில்லாமல் உணரச்செய்யவதை இலக்காகக் கொண்டுள்ளது. பல நேரங்களில், தாக்குதலுக்குள்ளாகும் நபர் இந்த நடத்தையை ஒரு தாக்குதலாகக் கருதமாட்டார். சிலநேரங்களில், தாக்குபவரும்கூட தங்கள் செயல் மற்றும் சொற்கள் மற்றொரு நபர்மீது ஏற்படுத்தும் தாக்கங்களைக்குறித்து அறியாமல் இருப்பார்.

மனரீதியான தாக்குதல் எவ்வாறு இருக்கும்?

மனரீதியிலான தாக்குதல் பின்வருவனவற்றில் ஒருவிதமாக அமையலாம்:

            தொடர்ச்சியான சந்தேகம் மற்றும் ஒருவரின் இணையரை எப்போதும் கண்காணித்தல், துரோகக் குற்றச் சாட்டுகள். ஒருவர் என்ன செய்கிறார், எங்கே செல்கிறார், யாருடன் நேரம் செலவழிக்கிறார் என்றெல்லாம் அடிக்கடி கேட்டல். அவர்கள் தங்களது இணையர்கள் தங்களுடன் நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டலாம், மேலும் தங்களுடைய துரோகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களைத் துன்புறுத்தலாம்.

            வழக்கமான விமர்சனக் கருத்துகள் அல்லது காயப்படுத்தும் கூர்சொற்கள். இவை அவர்களுடைய உணவு, தோற்றம் அல்லது உடுத்தும் பாணி, அவர்களுடைய திறன் அல்லது திறமை ஆகியவற்றிலிருந்து அவர்களுடைய பொறுப்புகளைக் கையாளும் திறமைவரை இருக்கலாம். அவர்கள் மற்றொரு நபர் இருக்கும் முறையில் அடிப்படையில் ஏதோ தவறு உள்ளதாகக் குறித்துக் காட்டலாம்.

            பிறர் முன்பு மற்றொரு நபரை அவமானப்படுத்தல், திருத்துதல் அல்லது கேலி செய்தல். இவற்றைத் தொடர்ந்து தனிமையில் வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்கலாம்.

            மற்றொரு நபரின் நடத்தையைத் தண்டனை அல்லது அன்பைக் காட்டுவதை நிறுத்துவதன்மூலம் கட்டுப்படுத்துதல். இந்தக் கட்டுப்பாடானது அவர்களின் உடுத்தும் முறையிலிருந்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் மற்றும் எப்படிச் செலவு செய்கிறார்கள் என்பதுவரை இருக்கலாம். இதன் காரணமாக, ஒருவர் தனது இணையருக்கு ‘அறிக்கை’ கொடுக்கிற அல்லது சிறிய செயல்கள், செலவுகளுக்குக்கூட அவர்களுடைய ‘அனுமதி’ பெறுகிற உணர்வுடன் உள்ளார்.

            தான் தன்னுடைய இணையரின் அன்புக்குத் தகுதியற்றவர் என்று ஒருவர் நம்பும்படியாக உணர்வுரீதியிலான அன்பைத் தடுத்துநிறுத்துதல். பல நேரங்களில், இது அந்நபரின் ‘தவறுகளுக்குத்’ தண்டனையாகப் பயன்படுத்தப்படுகிறது.

            மற்றொரு நபரை மறுத்தல் அல்லது தவிர்த்தல், அவர்கள் பேசும்போது, வேண்டுமென்றே அதில் கவனம் செலுத்தாமை, அல்லது முடிவெடுக்கும்போது அவர்களுடைய கருத்தைக் கவனத்தில் கொள்ளாமை. தாக்குபவர் மற்றவரின் கனவுகள் அல்லது ஆசைகளைத் தவிர்ப்பார், அல்லது அவற்றை அற்பமானவைபோல் பேசுவார்.

            தான் தன்னுடைய மனத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம், அல்லது, தான் நம்பகமானவராக இல்லை என்று ஒருவரை நம்பச்செய்யும் கருத்துகள். தாக்குபவர் எதுவும் நடக்காததுபோல் நடிப்பதுமூலம் இது நிகழலாம்; அல்லது சில நிகழ்வுகளின் நினைவுகள் வித்தியாசமானவை என்று அவர் குறிப்பிடலாம், அதற்குக் காரணம், மற்றவர் ‘அதற்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் தருகிறார்’ அல்லது அவர் ‘மிகவும் உணர்ச்சிவயப்படுகிறார்’ என்று சொல்லலாம். மேலும்  தாக்குபவர்கள் விஷயங்களை வித்தியாசமாக நினைவில் கொள்கிறார்.

            சில நிகழ்வுகளில், தாக்குபவர் அந்த நபரின் இயக்கம் அல்லது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், அவர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தலாம்.

தாக்குபவர், இந்த வடிவங்களில் ஒன்றையோ பலவற்றையோ பயன்படுத்தலாம், ஓர் அமைப்புரீதியிலான சொல் மற்றும் உளவியல் தாக்குதல் பாணியை உருவாக்கி, தாக்கப்படுபவரை விளிம்புக்குத் தள்ளலாம். தாக்குபவர் அருகே இருக்கும்போது, தாக்கப்படுபவர் முள்ளின்மீது நடப்பதுபோல் உணரலாம்; எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கலாம், தான் என்ன செய்தால்/சொன்னால் அவர் தாக்கத் தொடங்குவார் என்று புரியாமல் திகைக்கலாம். தாக்குபவர் கூறுவதை அவர்கள் நம்பத் தொடங்கலாம் – அதாவது தான் ஒரு முட்டாள், திறனற்றவர் அல்லது மதிப்பற்றவர், தாக்குபவரின் நடத்தைக்குத் தானே காரணம் என்றெல்லாம் அவர்கள் நம்பத் தொடங்கலாம்.

உணர்வுரீதியான தாக்குதல் மிகவும் நுட்பமானது – இது பல நேரங்களில் வழக்கமான கருத்துகள் அல்லது குறிப்புகள் வழியாக இருக்கும் – பின்னர் இது வேகப்படுத்தப்படும். இதன் காரணமாக, தாக்கப்படுபவர் அந்தக் குறிப்பிட்ட உறவில் இது ஓர் 'இயல்பு' நிலை என்று கருதலாம். தாக்குபவரின் நடத்தை இயல்பானதல்ல, அதனால் தங்களுடைய சுய மதிப்பு தாக்கப்படுகிறது என்பதை அவர்களால் உணர இயலுவதில்லை. தங்கள் இணையின் நடத்தையால் தங்கள்மீது ஏற்படும் தாக்கத்தை அவர்கள் உணரமாட்டார்கள்.

படிப்படியாக, தாக்குதல் தீவிரமடைகிறது, இதனால், தாக்கப்பட்டவர் தன்னை மதிப்பில்லாதவராகக் கருதத் தொடங்கலாம், தனக்கு யாரும் உதவ முடியாது என நம்பத்தொடங்கலாம். தனக்கு ஏதொவொரு வகையில் ‘பித்து’ப் பிடித்திருக்கிறது, எந்தக் காதல், அன்பு அல்லது கவனிப்புக்கும் தான் தகுதியற்றவர் என்று அவர்கள் நம்பத் தொடங்கலாம், இதனால் அவர்கள் யாரிடமும் தங்களுடைய பிரச்னையைச் சொல்லி உதவி கேட்காமலிருக்கலாம்.

சில நேரங்களில், தாக்குபவருக்குத் தான் உளவியல்ரீதியில் பிறரைத் தாக்குகிறோம் என்பதே தெரியாமலிருக்கலாம். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் வீட்டில் இதுபோன்ற தாக்குதல்களைப் பார்த்து இது நெருங்கிய உறவுகளில் ‘இயல்பான’ நடத்தை என நம்புகிறார்கள்.

மனரீதியான தாக்குதலின் தாக்கம்

மனரீதியிலான தாக்குதலும், உடல்ரீதியிலான தாக்குதலைப்போன்றதுதான். தாக்கப்படுகிறவரிடம் அது ஓர் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. அவர்களைத் தனிமையாக, மதிப்பற்றவர்களாக, ஆற்றலற்றவர்களாக உணரச்செய்கிறது. அந்த நபர்கள்:

            மிகவும் குறைந்த சுய மதிப்பு கொண்டுள்ளார்கள். ஏனெனில் தாக்கப்பட்டவர்கள், தங்களது இணையர்கள் தங்கள்மீது வைக்கும் விமர்சனம், அவர்கள் தங்களை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை, தங்களைப்பற்றிய மிகச் சரியான பின்னூட்டம் என்று நம்புகிறார்கள். பிற சுற்றங்களை  (நண்பர்கள், குடும்பம் அல்லது உடன்பணியாற்றுவோர்) அருகில் கொண்டிராத நபர்களைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மையாகும். மற்றவர்கள் தங்களை வேறுவிதமாகப் பார்க்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேறு வழியில்லை.

            தாங்கள் திறனற்றவர்கள் மற்றும் மதிப்பற்றவர்கள், தங்களால் வேறு யாருடனும் ஒத்துப் போக இயலாது, அல்லது மற்றொரு நபருடன் நல்ல உறவில் இருக்க இயலாது என்று நம்புவார்கள். இணையர்கள் தங்களிடம் நடந்துகொள்ளும் விதத்துக்குத் தாங்கள் 'தகுதியானவர்கள்' என்று அவர்கள் நம்பக்கூடும்.

            தாக்குபவர்களைத் தூண்டிவிட்டுவிடுவோமோ என்று தொடர்ந்து அஞ்சுவார்கள், அவர்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தங்களுடைய எந்த நடத்தை தங்கள் இணையர்களின் விமர்சனத்தைத் தூண்டும் என்று அவர்கள் தொடர்ந்து பதற்றப்படலாம், இணையர் அருகே இருக்கும்போது முள்ளின்மேல் நடப்பதுபோல் உணரலாம்.

தொடர்ச்சியான உணர்வுரீதியான தாக்குதல்கள், உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள் ஆகியவை மனச்சோர்வு அல்லது பதற்றத்தின் அறிகுறிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், தாக்குதல் நின்றால், அறிகுறிகளும் காணாமல் போகும். நீண்ட கால அழுத்தத்தால், உயர் ரத்த அழுத்தம், உடல் வலி, ஒற்றைத் தலைவலி, வளர்சிதைமாற்றப் பிரச்னைகள் போன்ற தீவிர உடல்நலப் பிரச்னைகள் வரக்கூடும். அழுத்தத்துடன், தன்னிடம் ஏதோ ஓர் 'இரகசியம்' உள்ளது என்கிற கலாசார அழுத்தமும் சேர்ந்துகொள்ளும்போது, உளப்பிணி நோய்கள் ஏற்படலாம். மனரீதியான தாக்குதலுக்கு ஆளாகும் நபர் மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.

மனரீதியான தாக்குதலுக்கு உதவியை நாடுதல்

உடல்ரீதியான தாக்குதல் போன்று மனரீதியான தாக்குதல் வெளிப்படையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது சம அளவில் சேதம் மற்றும் காயத்தை ஏற்படுத்தக்கூடியது. மனரீதியான தாக்குதல் தனிமைப்படுத்துவதாக இருக்கலாம், அது தன்னுடைய தவறு இல்லை என்பதை ஒருவர் நினைவில் கொள்வது முக்கியமானது, மேலும் மற்றவர்களின் ஆதரவுடன் அவர்கள் அதிக வலிமையாக உணரலாம்.

ஒருவர் மனரீதியான தாக்குதலை அனுபவிப்பதாக உணர்ந்தால், உடனடியாக உதவியை நாடவேண்டும். அவர்கள் ஓர் உதவி இணைப்பை அழைக்கலாம் அல்லது அவர்களுக்கு மனரீதியில் உதவும் ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம். தாக்குபவரின் சூழ்ச்சிகளால் அமைக்கப்பட்ட எதிர்மறைச் சிந்தனைச் சுழற்சியை உடைக்க ஆலோசகர் உதவுவார், மேலும் அவர்கள் தங்களுடைய சுய மதிப்பைத் திரும்பப் பெற உதவுவார்.

அத்துடன், அவர்கள் தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்திடமிருந்தும் மனரீதியான உதவியை நாடலாம். ஒருவர் வேலைக்குச் செல்லாவிட்டால், ஒரு வேலைக்குச் செல்வதுபற்றி யோசிக்கலாம், அல்லது, தன்னார்வலராகப் பணியாற்றலாம். இதன்மூலம் அவர்களுடைய சமூக வட்டம் பெருகும், ஒரு மாற்றமாகவும் இருக்கும்.

எங்கே உதவி பெறுவது

ஆலோசனைக்கான உதவி இணைப்புகள் அல்லது அருகிலுள்ள மனநல நிபுணர்களுக்கான பரிந்துரைகள்:

பரிவர்த்தன்: (080) 65333323 திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை 4.00 மணி முதல் 10.00 மணிவரை

iCall உதவி இணைப்பு:  022-25521111 (திங்கள் முதல் சனிவரை, காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை)

சினேகா: http://www.snehamumbai.org/our-work/domestic-violence.aspx (சட்ட அறிவுரைகளும் கிடைக்கின்றன)

AKS அறக்கட்டளை ஆபத்துக்கால இணைப்பு:  (+91) 8793 0888 14/15/16 (http://aksfoundation.org/how-we-can-help/)

பொது மற்றும் சட்ட ஆதரவு:

பெண்கள் உரிமைக்கான விமோச்சனா மன்றம்: +91-80-25492781 / 25494266 (ஆபத்துக்கால உதவி இணைப்பு)

தேசியப் பெண்கள் ஆணையம்: http://ncw.nic.in/frmhelpline.aspx

இந்தக் கட்டுரை பரிவர்த்தன் ஆலோசனைகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் சபரி பட்டாச்சார்யா வழங்கிய விவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org