பாலியல் தொடர்பான தவறான நம்பிக்கைகள் துயரத்தை உண்டாக்குமா?

சமீபத்தில் (2017)  சுப் மங்கள் சாவ்தான் என்ற ஹிந்தி நகைச்சுவை-நாடகத் திரைப்படம் வெளியானது, இதில் ஆயுஷ்மன் குரானா (முதித் சர்மாவாக) மற்றும் பூமி பெட்நேகர் (சுகந்தாவாக) நடித்திருந்தார்கள், ஓர் இளம் தம்பதியின் நெருக்கமான வாழ்க்கையைப்பற்றி இந்தப் படம் பேசியது.   இந்தப் படத்தில் வரும் முதித், தன்னுடைய விறைப்புத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள இயலாதவராக இருக்கிறார், அதனால் அவரால் தன்னுடைய மனைவியுடன் வழக்கமான பாலுறவைக் கொள்ள இயலுவதில்லை.    வேடிக்கையான விஷயம், இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்கிறவர் ஒரு கால்நடை மருத்துவர், அவர் முதித்திடம் ‘நீங்கள் அழுத்தத்தில் இருக்கிறீர்கள், அந்த அழுத்தத்தினால் உங்களுக்குச் செயல்திறன் பதற்றம் ஏற்படுகிறது’ என்று சொல்லிப் புரியவைக்கிறார்.

இந்தியாவைப்போன்ற ஒரு பழமை வாய்ந்த சமுகத்தில் இப்படிப்பட்ட பேசப்படாத பிரச்னைகளைப் புகழ்பெற்ற ஊடகங்களில் எழுப்புவதே ஒரு நல்ல முன்னேற்றமாகும்.  இந்தியப் பள்ளிகளில் பாலியல் மற்றும் உறவுப் பிரச்னைகள் தொடர்பான பாடத்திட்டங்கள் இல்லை. பாலியல் சார்ந்த நலப் பராமரிப்பு என்பது வளர்ந்துவரும் ஒரு துறையாக இருக்கிறது, இதில் தகுதிபெற்ற நிபுணர்கள் மிகவும் குறைவாக உள்ளார்கள்.     இந்தியாவில் இந்தப் பிரச்னைகள் எந்த அளவு பொதுவானவை?

இந்தியாவில் இதுபற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் எவையும் இல்லை, அதேசமயம் UK போன்ற ஒரு வளர்ந்த நாட்டில்கூட ஆறு பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு பாலியல் பிரச்னையைக் கொண்டுள்ளதாகப் புகார் செய்துள்ளார் (பிரிட்டிஷ் தேசியப் பாலியல் மனப்போக்குகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் கணக்கெடுப்புகள், 2012).    பெங்களூரைச் சேர்ந்த, பாலியல் மற்றும் உறவு சார்ந்த பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் குழு ஒன்று (ஐயப்பா மற்றும்.    மகிழ்ச்சி உறவுகள் குழு, 2017) இணையத்தின்மூலம் தங்களுக்குக் கிடைத்த 500 கேள்விகளை ஆராய்ந்தது.   இந்தக் கேள்விகளில் 97 சதவிகிதம் ஆண்களிடமிருந்து வந்திருந்தாகவும், அவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதானவர்கள் என்றும் அவர்கள் கண்டார்கள். பெரும்பாலான கேள்விகள் ஆண் பாலியல் உறுப்புகளின் அளவு (’சிறிய பாலுறுப்பு’ இருப்பதைப்பற்றிய கவலைகள்), விந்து முந்துதல் (உண்மையில் பெரும்பாலோனோர் விந்து வெளிவருதல் நேரத்தில் சராசரி நிலையில்தான் இருந்தார்கள்) மற்றும் விறைப்புத்தன்மைபற்றிய கவலைகள்பற்றியவையாகவே இருந்தன. 

இளம் இந்தியர்களுக்குப் பாலியல் பிரச்னைகள் வருவது ஏன்? நான் சந்திக்கும் பல ஆண்கள் தங்களுடைய பாலியல் தன்மையைப்பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்.   சகில் ஒரு பொறியாளர், ஓராண்டுக்கு முன் அவருக்குத் திருமணம் ஆனது.    இந்த ஓராண்டில்  அவர் ஆறு முறைதான் பாலியல் உறவு கொண்டுள்ளார், காரணம் ஒவ்வொரு முறை விந்து வெளியானபிறகும் இரண்டு நாட்களுக்குத் தனக்குத் ‘தீவிரமான களைப்பு’ ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.  அநேகமாக, இந்தியத் துணைக்கண்டத்தில் அதிகம் காணப்படுகிற பதற்றம் தொடர்பான ஒரு நிலை சகிலுக்கு இருக்கலாம். அதன் பெயர் ‘தட் நோய்க்குறி’.   இந்த நோய்க்குறி கொண்ட ஆண்கள், விந்து வெளியேறுவதன்மூலம் உடல்சார்ந்த களைப்பு ஏற்படுவதாகத் தவறாக நம்புகிறார்கள்.

ராஜத்-க்கு வயது 35, இவர் ஒரு கணக்காளர், திருமணமானவர், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவர் ‘ஆண்குறியைப் பெரிதாக்குகிற’ அறுவைச் சிகிச்சைக்காக ஒரு பிளாஸ்டிக் சர்ஜனிடம் சென்றிருக்கிறார், அந்தப் பிளாஸ்டிக் சர்ஜன் மனநல, பாலியல் சார்ந்த உரையாடல் சிகிச்சைக்காக இவரை என்னிடம் அனுப்பினார்.   அவருக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள்  ஆகின்றன, இந்த 9 ஆண்டுகளில் அவர் தன் மனைவியுடன் ஒரு திருப்திகரமான பாலியல் உறவைக் கொண்டிருந்திருக்கிறார்.   ஆனால், சில வாரங்களுக்கு முன் அவர் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் எங்கோ சுற்றுலா சென்றிருந்தபோது எல்லாரும் ஒரு நீச்சல் குளத்தில் ஒன்றாகக் குளித்திருக்கிறார்கள், அவருடைய நண்பர்கள் அவருடைய ஆண்குறியின் அளவைக் கேலி செய்திருக்கிறார்கள்.  அப்போதிலிருந்து அவருக்குத் தன்னுடைய ஆண்குறியின் அளவைப்பற்றிக் கவலை ஏற்பட்டுவிட்டது, தன் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிட்டார், எப்போதும் இதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ராஜத்போன்ற இளம் ஆண்களுக்குப் பாலியல் சார்ந்த படங்கள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன, இதனால் பாலியல் செயல்பாடுகள் என்பவை பாலியல் உறவை மையமாகக் கொண்டவை, ஆண்குறியை மையமாகக் கொண்டவை என்கிற தவறான நம்பிக்கையை இவர்கள் உண்டாக்கிக்கொண்டுவிடுகிறார்கள்.    பாலியல் நலக் கல்வித் துறையில் பணியாற்றிவரும் மகிழ்ச்சி உறவுகள் என்ற சமூக அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் ஓர் இளைஞர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்: “மருத்துவர் ஐயா, என்னுடைய ஆண் குறி சிறியதாக உள்ளது, அது வெறும் ஆறு இன்ச் நீளம்தான் உள்ளது.   அதன் அளவைப் பெரிதாக்குவதற்கு மருந்து கொடுங்கள்.” துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற நம்பிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு கள்ளச்சந்தை உள்ளது, குறிப்பாக இது இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்தச் சந்தையில் உள்ளவர்கள் ஆண்குறியின் நீளத்தை அதிகப்படுத்த இயலும் என்கிற தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காகப் போலியான மற்றும் செயல்படாத மருந்துகள், மற்றும் லோஷன்கள், திரவங்கள் மற்றும் எண்ணெய்களை விற்கிறார்கள்.     

இரண்டு பேர் நடனமாடுகிறார்கள் என்றால் அவர்கள் இருவரும் ஒத்திசைந்தால்தான் நடனம் நன்றாக இருக்கும், தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கமும் அப்படித்தான், இதை இளம் இந்திய ஆண்கள் புரிந்துகொள்வதில்லை.   அதற்குப் பதிலாக, பெரும்பாலான ஆண்கள் பாலியல் செயல்பாடுகளைத் தொடங்குவதும், ‘ஒரு பெரிய விறைப்பை’ பெறுவதும், அதனை உள்ளே நுழைத்து இயன்றவரை அதிகநேரம் செயல்படுவதும் தன்னுடைய தனிப்பொறுப்பு என்று நினைக்கிறார்கள். இவை அனைத்திலும் தங்களுடைய பெண் கூட்டாளியின் பங்கை இவர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள்.    இப்படிச் செய்வதன்மூலம், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஆண்கள் பல நேரங்களில் தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்கிறார்கள், இது தங்களுடைய பிழை என்று உறுதியாக நம்பிவிடுகிறார்கள்.  சில நேரங்களில் இதனால் வரும் அழுத்தத்தால் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், நோய்கள் உண்டாகலாம்.   இன்னும் ஆழமாகப் பார்த்தால் ‘தாங்கள் போதுமான அளவு ஆண்மையுடன்’ இருக்கிறோமா என்பதுபற்றி ஆண்களுக்கு ஐயங்கள் வரலாம், சில தீவிரமான சூழல்களில் இதற்காக அவர்கள் தற்கொலையைப்பற்றிக்கூட யோசிக்கலாம்.  

எடுத்துக்காட்டாக கீதா மற்றும் சரத் ஆகியோரின் கதையை கேட்போம். இவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டுகூட ஆகவில்லை, இவர்களுடைய குடும்பத்தினர் ‘எப்போது நல்ல செய்தி சொல்லப்போகிறீர்கள்’ என்று இவர்களைத் தொடர்ந்து அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.   இதற்காக கீதா தன்னுடைய செல்பேசியில் ஓர் அப்ளிகேஷனை நிறுவியிருக்கிறார், அந்த அப்ளிகேஷன் அவர் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு எந்தெந்த நாளில் அதிகமாக உள்ளது என்று கணக்கிடும், அவரும் அவருடைய கணவரும் எப்போதெல்லாம் பாலுறவு கொள்ளவேண்டும் என்று கட்டளையிடும். அதன்படி செயல்பட்டால் தங்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சரத் ‘கண்டிப்பாகப் பாலுறவு கொண்டாகவேண்டும்’, சில நேரங்களில் கீதா தன்னுடைய பொறுமையை இழந்து ‘சீக்கிரம் விந்தை வெளியேற்று’ என்றுகூட அவரிடம் கேட்பதுண்டு.   செயல்பட்டே தீரவேண்டும் என்கிற இந்த அழுத்தத்தால் சரத்-க்கு விறைப்புத்தன்மை சார்ந்த பிரச்னை வந்துவிட்டது, இதனால் இருவரும் ஏமாற்றமடைந்தார்கள்,   இதனால் அவர்களுக்கிடையிலான உறவில் சிரமங்கள் உண்டாகின. இந்தச் சூழலை நான் ‘கோரிக்கைக்கேற்பப் பாலுறவு’ என்று அழைக்கிறேன், இங்கு பாலியல் செயல்பாடு என்பது இனப்பெருக்கத்தில்மட்டுமே முழுக் கவனம் செலுத்துகிறது.

பாலியல் தொடர்பான பிரச்னைகளும் மனநலமும் நெருக்கமான தொடர்பைக் கொண்டவை, பாலியல் செயல்பாடு மற்றும் அதன் உடல், உணர்வு சார்ந்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அவசரத்தேவையை இது சுட்டிக்காட்டுகிறது.   ஒரு பாலியல் நிபுணர் என்ற முறையில் பின்வரும் வாசகங்களை நான் அடிக்கடி என்னுடைய மருத்துவமனையில் சொல்லவேண்டியிருக்கிறது:

  • ஒருவருடன் உறவில் இருப்பது அல்லது திருமண உறவில் இருப்பது என்பது வெறுமனே பாலியல் சார்ந்த நெருக்கத்தைப்பற்றியது இல்லை.  இன்னும் பல விதமான நெருக்கங்கள் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக, உணர்வுசார்ந்த, பொழுதுபோக்கான மற்றும் தம்பதியருக்கான நேரம், இவற்றிலும் மக்கள் கவனம் செலுத்தவேண்டும்.
  • பாலியல் உறவு என்பது வெறுமனே பாலுறுப்புகளைக்கொண்டு செய்யப்படுவதில்லை.  நெருக்கத்தில் பல வகைகள் உண்டு, அவற்றில் ஒருவகைதான் ஆண்குறியைப் பெண்குறிக்குள் நுழைத்துச் செயல்படுவது.  
  • ஆண்குறியின் விறைப்புத்தன்மை என்பது ஒரு கருவியைப்போல் செயல்படுவதில்லை, ஒரு பொத்தானைத் தட்டியவுடன் விறைப்புத்தன்மை வருவதும், இன்னொரு பொத்தானைத் தட்டியவுடன் விறைப்புத்தன்மை சென்றுவிடுவதும் சாத்தியமில்லை.    பாலியல் எழுச்சி (ஆண்களில் விறைப்புத்தன்மை மற்றும் பெண்களில் உயவுத்தன்மை) என்பது மனத்தில் தொடங்கி உடலால் செயல்படுத்தப்படும் ஒரு செயல்முறை ஆகும். பாலியல் உறவில் ஈடுபட விரும்புகிறவர்கள் பதற்றமில்லாமல் இருக்கவேண்டும், ஒருவேளை எழுச்சி ஏற்படாவிட்டால் அந்தத் தோல்வியை எண்ணிப் பதற்றப்படக்கூடாது, குறிப்பாக, அவர்கள் தங்களுடைய பாலியல் உறவைத் தொடங்கும் ஆரம்பக்கட்டத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.   செயல்பட்டே தீரவேண்டும் என்கிற பதற்றம் பல தனிநபர்கள் மற்றும் தம்பதியருடைய மனங்களைப் பாதித்துள்ளது, அவர்களுடைய உறவில் பெரிய பிரச்னைகளைக் கொண்டுவந்துள்ளது.
  • ஒருவர் தன்னுடைய பாலியல் கூட்டாளிக்கு இன்பத்தை தருவதிலும் பெறுவதிலும் ஒரு நுட்பமான சமநிலை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  பாலுறவு என்பதை ஒரு பகிர்ந்துகொள்ளப்படும் செயல்பாடாக அணுகவேண்டும், ஒருவர் மட்டும் செய்கிற செயலாக அதனை எண்ணக்கூடாது. 
  • இதுபற்றி மக்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால், அவர்கள் தகுதிமிக்க ஒரு பாலியல் நிபுணரிடம் தம்பதியராகச் செல்வது நல்லது.   ஓர் உறவின் எந்த நிலையிலும் அவர்கள் இதனை செய்யலாம், திருமணத்துக்கு முந்தைய உரையாடலாககூட இது இருக்கலாம்.     

இந்தப் பிரச்னையைப்பற்றி எல்லாரும் பேசவேண்டிய ஓர் அவசரத்தேவை இருக்கிறது: பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு இதைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும், ஆசிரியர்கள் சரியான விவரங்களை மாணவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும், சமூகமானது பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பான பேசக்கூடாத விஷயங்கள், தவறான நம்பிக்கைகள், மற்றும் தவறான எண்ணங்களை நீக்கவேண்டும்.       *தனிப்பட்ட அடையாளங்கள் (பெயர்கள் மற்றும் பிற அடையாளம் காணக்கூடிய தகவல்கள்) மாற்றப்பட்டுள்ளன, தகவல்கள் பொருத்தமான வகையில் அடையாளம் நீக்கப்பட்டுள்ளன.   

டாக்டர் சந்தீப் தேஷ்பாண்டே பெங்களூரைச்சேர்ந்த உளவியாளர், பாலியல் நலன் மற்றும் உறவுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org