இளைஞர்களுடைய ஆண்மைபற்றிய கருத்துகளைச் செதுக்குவதில் தந்தைமார்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறார்கள்

Published on

இன்றைய #MeToo உலகத்தில், பாலினம் மற்றும் பச்சாத்தாபம்பற்றிய உணர்வுக் கல்வி மற்றும் சமநிலையான பார்வைகள் இளம் பையன்களுக்கு அவசியமான முக்கியக் கருவிகளாகும்.   பையன்கள் மற்றும் இளம் ஆண்கள் உணர்வு வெளிப்படுத்தலை வளர்த்துக்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவது, சிரமமான சூழ்நிலைகளில் தங்களுடைய உணர்வுகளை எப்படிக் கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வது, அழுத்தத்தைச் சமாளிப்பது, எதிர்மறையான அல்லது கடினமான உணர்வுகளை இயல்பாக அனுபவிப்பது, அவற்றைப் பலவீனமாகக் கருதாமலிருப்பது போன்றவற்றில் தந்தை-மகன் உறவு மற்றும் பிணைப்பு ஒரு முக்கியப் பங்கை ஆற்றக்கூடும்.       

என்னுடைய மருத்துவ அனுபவத்தில் பல தாய்மார்கள் என்னிடம் ஆலோசனை பெற வந்திருக்கிறார்கள், இவர்கள் குழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய  வாழ்க்கைக்குத் தங்களைச் சரிபடுத்திக்கொள்வதற்கான உதவிகளை நாடுகிறார்கள், தங்களுடைய குழந்தைகளுடன் சிரமமான உறவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதுபற்றி கேட்கிறார்கள், சில சமயங்களில், தற்கொலை அல்லது நோய்களுக்கு ஒரு குழந்தையை இழந்துவிட்டவர்கள்கூட இங்கு வருகிறார்கள்.      இந்த மருத்துவப் போக்கானது, குழந்தை வளர்ப்புபற்றிய ஆராய்ச்சியுடன் ஒத்துப்போகிறது, இது பெரும்பாலும் தாய்மார்கள் மற்றும் தாய்-குழந்தைப் பிணைப்பில் கவனம் செலுத்துகிறது.     ஆனால், தந்தைமார்கள் என் அலுவலகத்துக்கு வருகிறார்களா?    அவர்கள் அதிகம் வருவதில்லை.  இதில் தந்தைமைக்கும் சம அளவு கவனம் வழங்கப்படுவது முக்கியம், ஏனெனில் இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, இளம் பையன்களிடம் நடத்தை சார்ந்த பிரச்னைகள் சீக்கிரத்தில் தோன்றுகின்றன என்றால் அதற்கு காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளவை: அவர்களுக்குத் தந்தைமார்கள் இல்லாமல் இருத்தல், தந்தையின் வன்முறைப் பழக்கங்கள், எதிர்மறையான மற்றும் தீவிரமான தண்டனை, ‘ஆஜானுபாகுவான’ பாலின லட்சிய பிம்பங்கள் அல்லது தோற்றங்களை கொண்டிருத்தல்1 போன்றவை.     ஊட்டமளிக்கிற மற்றும் அக்கறையான தந்தைமார்கள் தங்களுடைய குழந்தைகளின் உணர்வு மற்றும் சமூக முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நேர்விதமான தாக்கத்தைக் கொண்டிருக்கலாம் எனச் சமீபத்திய ஆராய்ச்சிகள்2. தெரிவிக்கின்றன, இதுபற்றி இன்னும் பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.    

மகன்களுடைய ஆரோக்கியமான ஆண்மையை வடிவமைப்பதில் தந்தைமார்களுடைய பங்கை ஒதுக்கித்தள்ளிவிடவோ அலட்சியப்படுத்திவிடவோ இயலாது.   இத்துடன் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும், இந்தத் தந்தைமார்கள் தங்களுடைய அனுபவங்கள், குடும்பக் கட்டமைப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அமைந்த தங்களுடைய சொந்த ஆண்மையை மற்றும் சுய அடையாளத்தை எப்படிக் காண்கிறார்கள்?       பாலினப் பொறுப்புகள், பாலின லட்சிய பிம்பங்கள் மற்றும் பாலின அடையாளம் போன்றவை பெரும்பாலும் குடும்ப அமைப்புக்குள் கற்றுத்தரப்படுகின்றன ஒருவருக்கொருவர் வழங்கப்படுகின்றன, கவனித்தல், மாற்றிக்கொள்ளுதல் மற்றும் பெற்றோர்-குழந்தை ஊடாடலின்மூலம் கற்றுத்தரப்படுகின்றன.   இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் வரும் மாமியார்-மருமகள்களைக் கவனித்தாலே இது புரிந்துவிடும், இந்தத் தொடர்களில் பாலினப் பொறுப்புகள் மற்றும் பாலினம் சார்ந்த சலுகை போன்றவை அப்பட்டமாக விரித்துரைக்கப்படுகின்றன.    

இளம் பையன்களிடம் நீ இப்படிப்பட்ட ஆணாகதான் வளரவேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படக்கூடும், அவர்கள் தங்களுடைய தந்தையைக் கவனித்துத் தங்களுடைய சொந்தப் பாலின வெளிப்பாட்டைப்பற்றி நிறையக் கற்றுக்கொள்ளக்கூடும், எடுத்துக்காட்டாக தங்களுடைய தந்தை அலுவலகத்துக்குச் செல்வது, வீட்டு வேலைகளில் பங்கேற்பது (அல்லது பங்கேற்காமல் இருப்பது), குடும்பத் தீர்மானங்களை எடுப்பது போன்றவை.   குழந்தைகளுக்குச் சிரமமான சூழ்நிலைகளைச் சமாளிக்க கற்றுத்தரும்போது (எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டால் அதைச் சமாளிப்பதற்கு அதற்குச் சொல்லித்தரும்போது) அல்லது “அவர்களை வலுவானவர்களாக ஆக்கும்போது”, நடத்தை சார்ந்த  மற்றும் கலாசாரம் சார்ந்த சில லட்சிய பிம்பங்கள் உள்ளன என்பதைப் பெற்றோர் அவர்களுக்குச் சொல்லித்தந்துவிடக்கூடும், எடுத்துக்காட்டாக “பெண் பிள்ளையைப்போல அழாதே” என்று சொல்லுவது, அல்லது விதிவிலக்குகளைக் கற்றுத்தந்துவிடக்கூடும், எடுத்துக்காட்டாக “ஆம்பளைப் பையன் குறும்புக்காரனாகதான் இருப்பான்!”  கொடுமைப்படுத்துதல், ஒருவருடைய பாலியல் மற்றும் பாலின அடையாளத்தை வளர்த்துக்கொள்ளுதல் அல்லது நண்பர்கள் அல்லது சமமான ஒரு குழுவுடன் பொருந்த முயலுதல் போன்ற பின்னணியிலும் இது நிகழலாம்.     ஒரு குழந்தையின் வளர்ச்சியின் பல முக்கியமான புள்ளிகளில் இப்படிப்பட்ட காட்சிப்படுத்தல்கள் நிகழ்ந்தால், உறுதியாக இருப்பதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மதிக்கப்படுகிறது அல்லது ஏற்கப்படுகிறது, உணரப்பட்ட ‘பெண்போன்ற அல்லது சிறுமியைப்போன்ற’ நடவடிக்கைகள் ஏற்கப்படாதவை என்று அது சுட்டிக்காட்டக்கூடும்   

அதேசமயம், தங்களுடைய மகன்களின் இளம் வயதிலும், அவர்கள் வளர்ந்தபிறகும்கூட அவர்களுக்குப் பச்சாத்தாபத்தைக் கற்றுத்தருவதில் தந்தைமார்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றலாம்.   தங்களுடைய சொந்தக் குடும்ப ஊடாடல்களில் பச்சாத்தாபத்தையும் இரக்கத்தையும் தொடர்ந்து பின்பற்றும் தந்தைமார்கள் ஆண்மைபற்றிய லட்சிய பிம்பங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டலாம், தங்களுடைய சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளலாம், அவற்றை வெளிப்படுத்தலாம்.   எடுத்துக்காட்டாக, ஒரு தந்தைக்கு வலி (உடல் சார்ந்தது அல்லது உணர்வு சார்ந்தது) வருகிறது என்றால் அதை அவர் வெளிப்படுத்துவதன்மூலம் தன்னுடைய மகனுக்கும் "வலியை வெளிப்படுத்துவது சரிதான்” என்று கற்றுத்தரலாம், ஒரு செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதனால் உண்டாகும் வருத்தத்தைச் சுதந்தரமாக வெளிப்படுத்தலாம், பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்களுக்கும் உணர்வுகள் இருக்கலாம் என்று கற்றுத்தரலாம், இவையெல்லாம் உணர்வு வலிமை மற்றும் ஆபத்துக்கு உட்படுபவராக இருத்தல் ஆகியவற்றின் லட்சிய பிம்பங்களுக்கிடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு உதவும்.     

பொதுவாக ஆபத்துக்கு உட்படுபவராக இருப்பது ஒரு மதிக்கப்படும் ஆண்மை லட்சிய பிம்பம் இல்லை.   அதேசமயம், ஆபத்துக்கு உட்படுபவராக இருப்பது தவறு என்று இளம் பையன்களுக்கு கற்றுத்தருவதன் விளைவுகள், அவர்களுடைய உறவுகள் மற்றும் சுய அடையாளங்களில் அவர்களுடைய உணர்வு அலைவரிசையைக் கட்டுப்படுத்தலாம்.    அன்பு மற்றும் கதகதப்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவது, பெற்றோர் என்ற முறையில் உண்மையான பெருமையை வெளிப்படுத்துவது, ஒன்றாக நேரம் செலவிடுவது, தந்தை-மகன் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மகன்களால் நேர்விதமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மற்றும் மதிக்கப்படுகின்றன, அவர்களுக்கிடையிலான பிணைப்பை ஆழப்படுத்துகின்றன.     இந்த நடவடிக்கைகள் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான ஒரு சுறுசுறுப்பான மற்றும் பங்கேற்பையுடைய தகவல் தொடர்பு நிலையை விவரிக்கின்றன.  உணர்வுகளைப்பற்றிச் சொற்களாலும் சொற்கள் இல்லாமலும் உரையாடலைப் பகிர்ந்து கொள்ள இயலுவது குழந்தைகளுக்கு ஒரு நேர்விதமான அனுபவமாக இருக்கலாம்.  இந்த வகைகளில் ‘உணர்வுகளை வெளிப்படுத்துவது’ பாலினச் சமநிலை மற்றும் மதிப்பைத் தெரிவிப்பதிலும் நன்கு பயன்படுகிறது, பாரம்பரியமுறையில் இல்லாத குடும்பங்களில் ஒரு நேர்விதமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது, எடுத்துக்காட்டாக இரண்டு பெற்றோரும் பணி வாழ்க்கையில் ஈடுபடும் குடும்பங்கள், பல்வேறு பாலியல் மற்றும் பாலின அடையாளங்களைக் கொண்ட குடும்பங்கள்.  

பாரம்பரியமான அல்லது உறுதியான ஆண்மை லட்சிய பிம்பங்களை மறுகட்டமைக்கப் பரிந்துரைத்தல் மற்றும் ஆண்மை Vs தந்தைமைபற்றிய கருத்துகளைப் பிரித்தல் ஆகியவை, தந்தை-மகன் உறவை மற்றும் பொறுப்புகளை இன்னும் இலகுவான, சமநிலையான மற்றும் பாலினத்தை அறிந்த அடையாளத்தை நோக்கிச் செலுத்தத்தொடங்குவதற்கான ஒரு வழியாகும்.  

நாஷ்வில்லே, USAவில் உள்ள வான்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர் திவ்யா கண்ணன், PhD, அங்கு அவர், வன்முறையிலிருந்து தப்பிப்பிழைத்த வயதுவந்தோருடன் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். தற்போது அவர் பெங்களூரில் மருத்துவ சேவை புரிந்துவருகிறார்.

பார்வை:  

1. (ரெமோ, 2009; யோக்மேன் & கார்ஃபீல்டு, 2016)

2. (லிண்ட்சே, கால்டெரா, & ரிவெரா, 2013; கேஸ்ட்ரோ மற்றும் பிறர், 2015)

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org