ஆண்மைபற்றிய சமூகச் சிந்தனைகளால், ஆண்கள் அவர்களுடைய உணர்வு அனுபவத்திலிருந்து விலகியிருக்கலாம்

ஆண்மைபற்றிய சமூகச் சிந்தனைகளால், ஆண்கள் அவர்களுடைய உணர்வு அனுபவத்திலிருந்து விலகியிருக்கலாம்

மன நலனைப்பற்றிப் பேசும்போது, ஆபத்து அதிகமுள்ள மக்களின்மீதுதான் கவனம் குவிகிறது. குறிப்பாக, பெண்கள், மாறுபட்ட விழைவுகளை உடையவர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிந்த சமூகத்தினர் மற்றும் பிற சிறுபான்மை மக்களுக்கு மனநலப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள பல ஆய்வுகளின்படி, இவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் வருகின்ற வாய்ப்பானது, ஆண்களைவிட இரண்டு முதல் பத்து மடங்கு அதிகம்.

மனநலப் பிரச்னைகளுக்கான இயற்கையான காரணங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், பல மன நலக் கவலைகள் ஆணாதிக்கம் கொண்ட, ஆண்களுக்குச் சாதகமாகப் பாரபட்சம் காட்டுகிற ஒரு நசுக்கும் சமூகத்தைச் சமாளிக்கவேண்டியிருப்பதிலிருந்து முளைக்கின்றன. பொறுப்புகளும் ஆற்றலும் மிகக் குறிப்பானவை, இதில் ஆண் உச்சியில் இருக்கிறார், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின்மீது அவருக்கு மிக அதிகக் கட்டுப்பாடு இருக்கிறது, ஆகவே, அவர் குறிப்பிடத்தக்க அளவு அதிகப் பரிசுகளைப் பெறுகிறார். இப்படிப்பட்ட ஓர் அமைப்பில் பணியாற்றுவதும், பல நேரங்களில் அதனை எதிர்த்துச் செயல்படுவதும் கடினமானவை, ஆபத்து அதிகமுள்ள மக்களைக் களைப்பாக, அச்சமாக, பதற்றமாக, மனச்சோர்வாக உணரச்செய்கின்றன. இதிலிருந்துதான் மன நலப் பிரச்னைகள் முளைக்கின்றன.

'ஆண்' என்னும் சிந்தனை இந்த வாதங்களில் சொல்லப்படும் ஆண், அவருடைய உடல்சார்ந்த பாலின அடையாளத்துடன் பொருந்தும் பாலியல் அடையாளத்தைக் கொண்டவர், எதிர்ப்பாலினத்தின்மீது பாலியல் விழைவு கொண்டவர், வேலைகளைச் செய்ய இயலும் உடலைக் கொண்டவர், இயல்பான நரம்பியல் தன்மையைக் கொண்டவர், கல்வி கற்றவர், பெரும்பான்மைச் சமூகம் ஒன்றிலிருந்து வருபவர். இந்த அடையாளங்களில் சில இல்லாவிட்டாலும், ஆண் என்பவர் அடக்கி ஆள்பவர் என்கிற சிந்தனை ஒரு வலுவான கருத்தாகும்.

சமூக நெறிமுறைகள் ஆண்களுக்குச் சாதகமாக இருந்தாலும், அவர்களுக்கு மனநலப் பிரச்னைகளே வராது என்றில்லை. ஏனெனில், பல நேரங்களில் அவர்கள் ஆணாதிக்கத்தின் உயர்ந்த எதிர்பார்ப்புகளை எட்டத் தடுமாறுகிறார்கள், இந்தச் செயல்முறையில், அவர்களால் தங்களுடைய சொந்தத் தனித்துவத்துக்கு உண்மையாக இருக்க இயலுவதில்லை.    

சமீபத்திய ஆண்டுகளில், 'ஆல்ஃபா' ஆண், 'பீட்டா' ஆண்பற்றிய சிந்தனைகள் பரவலாகிவருகின்றன, குறிப்பாக, வன்முறையான தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளுக்குப்பிறகு. ஆல்ஃபா ஆணுக்குமட்டுமே பரிசுகளை அளிக்கும் அமைப்பால் தான் செல்லாதவராக ஆக்கப்படுவதாகவும், நசுக்கப்படுவதாகவும் பீட்டா ஆண் உணர்கிறார், பல விஷயங்களில் தாங்கள் அசாதாரணமான இழப்புக்கு ஆளாவதைக் காண்கிறார், குறிப்பாக, பாலியல் கூட்டாளிகள் மற்றும் வாய்ப்புகள் ஆகிய விஷயங்களில். இதுபற்றிய உரையாடல்கள் அதிகம் நிகழ்கின்றன. இந்த எரிச்சல், மோசமான சமாளிக்கும் திறன்கள், வன்முறைக்கான கருவிகளை அணுகுதல் போன்றவை சேர்ந்துகொண்டு, நிராகரிப்பின் தொடர் அனுபவங்கள், ஆற்றலின்மையின் தொடர் உணர்வுகள் ஒரு கொலை வெறியாக மாறக்கூடிய இடங்களை உருவாக்குகின்றன. ஆல்ஃபா ஆண் என்று அழைக்கப்படுகிறவர்கள்மத்தியில்கூட, தொடர்ந்த கச்சிதத்தன்மை, முழுமைப் பார்வை மற்றும் பாராட்டுக்கான தொடர்ந்த தேவை ஆகியவை அவர்களுக்கே உரிய வேறு மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

ஆணாதிக்கத்தால் யாரும் வெற்றியடைவதில்லை ஆணாதிக்கமானது பெண்களை, மாறுபட்ட விழைவு கொண்டவர்கள், மற்றவர்களை அதிகம் பாதித்தாலும், அது ஆண்களையும் விட்டுவைப்பதில்லை. ஆண் என்ற சிந்தனை மிகவும் இறுக்கமானது, கடுமையான, பேசப்படாத விதிமுறைகளோடு வருகிறது, குறிப்பாக, மனநலன் விஷயத்தில்.

எந்தவோர் ஆணாதிக்கச் சமூகத்திலும், மேலும் இருண்ட பல விதிமுறைகளுடன் இந்த விதிமுறைகளும் கண்டிப்பாக இருக்கும்:

  • ஆபத்துக்கு ஆளாகவேண்டாம்; 'உறுதியாக' இருப்பவர்தான் ஆண்

  • ஆண்கள் அழுவதில்லை: உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆணுக்கு அழகில்லை; ஆண்களுக்குக் கோபம்மட்டும்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது

  • செயலில் இறங்கவேண்டும்: செயல்தான் ஓர் ஆணுக்கு அடையாளம். ஆண்கள் தர்க்கரீதியில் சிந்திக்கவேண்டும், பதற்றமில்லாமல் இருக்கவேண்டும், பகுத்தறிவோடு சிந்திக்கவேண்டும்.

  • ஆண்கள் பகிர்ந்துகொள்வதில்லை: தன்னுடைய உணர்வுகளைப்பற்றிப் பேசுவது ஓர் ஆணுக்கு அழகில்லை.

  • அன்பைக் காட்டவேண்டாம்: அன்பை வெளிக்காட்டாமல் விலகியிருப்பதுதான் வலிமை.

பேசப்படாத இந்த விதிமுறைகள் அனைத்துக்கும் பொருந்துவதற்காக, ஆண்கள் தங்களுடைய சொந்த உணர்வுகளை மற்றும் விருப்பங்களை மறுப்பதற்கு, தங்களுடைய நேசம் மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளை அடக்கி, உணர்ச்சியில்லாத, தொடர்ந்த வேலை மற்றும் கடினமான பழக்கங்களின் வளர்க்கப்பட்ட பாணிகளைப் பின்பற்றுவதற்கு, உண்மையான உணர்வுகளை மறைக்கும் ஒரு வலிமை முகப்பை உருவாக்கிக்கொள்வதற்குப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இது ஓர் உள்ளீடற்ற மற்றும் தீவிரமான மிகு ஆண்மையை உண்டாக்குகிறது.

பல நேரங்களில் துன்புறுத்துதல் என்பது மிகு ஆண்மை தன்னுடைய நொறுங்கும்தன்மையைத் தற்காத்துக்கொள்வதாகவே இருக்கிறது

வளர்க்கப்பட்ட இந்த மிகு ஆண்மை, மோதல் சூழல்களில் சிறப்பாகச் செயல்படுவதில்லை. நொறுங்கக்கூடிய மற்றும் மேம்போக்கான அந்த மிகு ஆண்மைப் பாத்திரத்தை உடைத்து, ஆபத்துக்குள்ளாகக்கூடிய, விரும்புகிற, தேவையுள்ள ஆணின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக அச்சுறுத்தக்கூடிய எந்தவொரு சூழலும், வெடித்தெழும் வன்முறையான தற்காப்பை தூண்டுகிறது பெண்கள், திருநங்கையர் மற்றும் சுதந்தரமானவர்களைத் துன்புறுத்தும் நிகழ்வுகளையெல்லாம் இந்தப் பார்வையில் காணலாம்.

நளினமான ஆண்கள் அல்லது ஆணோடு உறவுகொள்ள விரும்பும் ஆண்கள் வெளிப்படுத்தும் ஆண்மையின் மற்ற பிரதிநிதித்துவங்களும் பல நேரங்களில் இப்படிப்பட்ட வன்முறையைச் சந்திக்கின்றன. எடுத்துக்காட்டாக, 'ஆணைப்போல் நடந்துகொள்' என்று சொல்லப்படும் குழந்தைகள் பிறரைத் துன்புறுத்துகிறவர்களாக வளர்வதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூரில் நடைபெற்ற ஓர் ஆய்வு கண்டறிந்தது. அவர்கள் இவ்வாறு செய்யக் காரணம், அவர்கள் தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால், ஒவ்வொரு படிநிலையிலும் துன்புறுத்துகிறவர்கள் அதிகரிக்கிறார்கள்.

சிறந்த, ஆண்மையுள்ள ஆண் செய்யும் துன்புறுத்தலானது, பல நேரங்களில் தன்னுடைய மிகு ஆண்மைக்கு விடப்பட்ட இதுபோன்ற ஒரு மிரட்டலின் பலனாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 'படிப்பில் அதிகக் கவனம் செலுத்துகிற' அல்லது 'அறிவாளியாக' இருக்கிற பையனைப் பள்ளி மைதானத்தில் இன்னொரு பையன் துன்புறுத்தக்கூடும், திருநங்கையர் மற்றும் தற்பாலின நாட்டம் கொண்டவர்கள்மீது மற்ற ஆண்கள் வன்முறையைக் காட்டக்கூடும்.

மக்கள் தங்களுடைய சொந்த நொறுங்கும்தன்மைகளை ஆராய்வதற்கான இடங்களும் வழிகளும் இருந்தால், ஒருவர் தன்னுடைய சொந்த ஆண்மையை ஆதரிப்பதற்காகப் பிறரைத் துன்புறுத்துவது இந்த அளவு அதிகம் நிகழுமா? துன்புறுத்தல் இந்த அளவு அதிகம் காணப்படுமா? மனநலப் பிரச்னைகள் என்னும் பலவீனம்

உறுதியான ஆணாதிக்கத்தை மதிப்பதால் உண்டாகும் ஒரு சோகம், ஆண்களுடைய மனநலப் பிரச்னைகள் என்னும் எதார்த்தம் மறுக்கப்படுதல். குறிப்பாக, தங்களுடைய ஆல்ஃபா தன்மைகளை வெளிக்காட்டுவதற்காகத் தங்களை மிகு ஆண்மையால் மூடிக்கொள்கிறவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார். ஆண்மைச் சிந்தனை என்பது, ஆண்களைத் தங்களுடைய உணர்வு அனுபவத்திலிருந்து விலகியிருக்கச்செய்கிறது. பிறர் தங்களுடைய பதற்றங்களை, மனநிலைகளை மற்றும் எண்ணங்களை இன்னும் அதிகச் சுதந்தரத்துடன் சந்திக்கும்போது, தங்களுடைய சிறந்த ஆண்மையை நாடும் ஆண் அதை ஒப்புக்கொள்வதை ஒரு பலவீனமாகக் கருதுவார், அதை மறைப்பதற்கு, மறுப்பதற்கு அல்லது தாண்டிவருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுப் பணியாற்றுவார்.

இதனால், பல ஆண்கள் வன்முறையானவர்களாக வளர்கிறார்கள், ஏனெனில், கோபம்மட்டும்தான் ஆண்மைக்குரிய குணமாகக் காணப்படுகிறது. தோல்வி என்பது ஆண்களுக்கான ஒரு வாய்ப்பாகவே தரப்படுவதில்லை என்பதாலும், தங்களுடைய தாக்க வட்டத்துக்குத் தாங்களே முழுப் பொறுப்பு என்று அவர்கள் நினைப்பதாலும், அதிக ஆண்கள் தங்களையே அழித்துக்கொள்கிறார்கள். பல ஆண்கள் தங்களுடைய சொந்த, தனியான மன நரகத்தில் வாழ்கிறார்கள், துன்பப்படுகிறார்கள், எப்போதும் இவர்கள் உதவியை நாடுவதில்லை.

பாலினத்தைச் சார்ந்திராத ஓர் உலகம் எப்படியிருக்கும்?

உலகெங்கும், ஆணாதிக்கத்தின் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கும் சுதந்தரமான சமூகங்கள் பாலினம் சார்ந்த ஒரேமாதிரி சிந்தனைகளை உடைப்பதற்காக, பாலினச் சமநிலை, ஒருவருடைய அடையாளத்தைக் கருதாமல் அவர்மீது பச்சாத்தாபம் காட்டுதல், இரக்கம் மற்றும் புரிந்துகொள்ளலின் மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கான சமூகக் கல்வியில் முதலீடு செய்வதற்காகப் பல பணிகளைச் செய்துவருகின்றன. ஐரோப்பா, கனடா, மற்ற இடங்களிலுள்ள பள்ளி அமைப்புகள் இந்தக் கோணத்தில் ஆரம்பநிலைக் கல்வியை அமைப்பதற்கு முதலீடு செய்துவருகின்றன; இதன்மூலம் தொடக்கக் கல்வியிலிருந்தே ஆணாதிக்கத்தை உடைத்துவிடலாம் என நம்பப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ள சட்ட அமைப்புகளும் சமநிலை மற்றும் பாரபட்சமின்மையை நோக்கி நகர்ந்துள்ளன; மேலும் மேலும் அதிகச் சட்டங்கள் அனைத்துப் பாலினத்தோருக்கும் பொதுவானவையாக மாறிவருகின்றன.

இந்த முயற்சிகளின் ஆரம்ப முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இளைஞர்கள்மத்தியில் பாலினங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான மனநலப் பிரச்னைகளின் அகன்ற இடைவெளி குறைவது தெரியவருகிறது; இதுபோன்ற தலையீடுகளைத் தாண்டி நெடுநாட்களுக்குத் தொடரும் துன்புறுத்தல் மற்றும் ஆவேசம் குறைவாகியிருப்பது தெரியவருகிறது.

இதில் இன்னும் தீவிரமான ஓர் அணுகுமுறை, சமூக வட்டங்கள் மற்றும் அடையாள உருவாக்கத்தில் பாலினத்தை முற்றிலும் உடைக்க முயல்வதாகும். ஒருவேளை, மக்கள் பாலினத்தைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படாவிட்டால் எப்படியிருக்கும்? சமூகத்தில் பாலினம் சார்ந்த குறியீடுகள் இல்லாவிட்டால் எப்படியிருக்கும்? இளஞ்சிவப்பு/நீல வண்ணப் பிரிப்புகள் இல்லாத, ஆடை/ஒப்பனை வேறுபாடுகள் இல்லாத, தலை அலங்காரம்/காலணி வேறுபாடுகள் இல்லாத ஒரு சமூகம் எப்படியிருக்கும்? உணர்வுகள் அல்லது எண்ணங்கள் அல்லது நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு எந்தத் தடைகளும் இல்லாவிட்டால் எப்படியிருக்கும்?

பாலினம் என்கிற சிந்தனையானது மிகவும் மாறக்கூடியதாக, அடையாள உருவாக்கத்தில் முக்கியத்துவமற்றதாக இருக்கிற ஒரு சமூகத்தில் மன நலப் பிரச்னைகள் மிகக் குறைவாக இருக்குமா? பாலியல் வன்முறை, குழு-தொடர்பான பிரச்னைகள் போன்ற சமூகப் பிரச்னைகள் அங்கு இன்னும் குறைவாக இருக்குமா?

சமீபத்தில், அடையாள உருவாக்கத்தில் பாலினம் என்பது ஒரு மைய அம்சமாக இருக்கிற கோட்பாட்டை முற்றிலுமாக நீக்கும் பரிசோதனைகளில் சில சமூகங்கள் ஈடுபட்டுவருகின்றன. சில ஸ்காண்டினேவிய நாடுகளில், பாலினங்களுக்குப் பொதுவான சொற்கள், பெயர்கள் மற்றும் பள்ளிகளைக் கோரும் ஓர் இயக்கம் உள்ளது. பாலின அலைவரிசையில் மக்கள் தங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்பதை இது உண்மையில் மாற்றுமா, பாலினச் சுவர்களை இது உண்மையில் உடைக்குமா, மனநலப் பிரச்னைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்ற அமைப்பு சார்ந்த பிரச்னைகளை நொறுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பார்வைகள்:

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org