ஆண்கள் உடல் தோற்றப் பிரச்னைகளை அனுபவிக்கிறார்களா?

உடல் தோற்றம் என்பது கவலையை அதிகரித்துவரும் ஒரு பிரச்னை, குறிப்பாக,  பதின்பருவத்தினரும் வளர் இளம்பருவத்தினரும் இதனை அதிகம் உணர்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாதல், தங்களுடைய சொந்த அடையாளத்தை அமைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கி நகரும்போது, அவர்கள் நிறைய குழப்பத்தைச் சந்திக்கிறார்கள்: அவர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள், அதேசமயம் ஏற்றுக்கொள்ளப்பட விரும்புகிறார்கள். உடல் தோற்றமானது பதின்பருவ ஆண்டுகளில் சுய மதிப்பின் மிக முக்கியமான ஒரு பகுதியாகிறது.

ஆர்வமூட்டும் விஷயம், தாங்கள் ஒரு குறிப்பிட்ட உடல் வகையைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற அழுத்தமானது, பெண்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறவர்களானது, தோற்றத்தில் கவனம் செலுத்தும் சமூக ஊடகப் போக்குகள் மற்றும் டேட்டிங் செயலிகள் உருவானதால்தான் தோன்றியிருப்பதாக ஆண்கள் நம்புகிறார்கள். ஆனால், ஆண்களின் தோற்றத்தை மதிப்பிடுதல்பற்றிய ஆண்கள் மற்றும் பெண்களுடைய பார்வைகளை அடையாளம் காண்பதுபற்றிய ஒரு கணக்கெடுப்பு, ஆண்களுடைய தோற்றம் பெண்களுக்கு அதிகம் முக்கியம் என்று பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் நம்புவதாகத் தெரிவிக்கிறது. 

இத்துடன், முந்தைய 10 ஆண்டுகளில் ஆண்களுக்கான அழகுசாதனத் தொழில்துறை வளர்ந்துவந்துள்ளது. ASSOCHAM (இந்திய வணிக & தொழில்துறை இணை அமைப்பு) நடத்திய ஓர் ஆய்வு, முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஆண்களை அழகுபடுத்தும் தொழில்துறையானது 42% அதிகரித்திருப்பதாகக் கண்டறிந்துள்ளது. பிராண்ட்பாய்ஸ் விளம்பர நிறுவனத்தின் முன்னாள் சந்தைப்படுத்தல் நிபுணரான ஆதித்யா கௌர், “அழகுசாதன நிறுவனங்கள் (ஆண்களுக்கான தயாரிப்புகளை) ஒரு பெரிய வாய்ப்பாகக் கண்டார்கள். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களை ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தை ஏற்கெனவே இருந்தது, அதற்கான தேவையும் பெரிதாக இருந்தது. ஆகவே, ஆண்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு தயாரிப்புகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கின” என்கிறார். இப்போது, முகம் கழுவும் தயாரிப்புகள் மற்றும் முகத்தில் பூசிக்கொள்ளும் க்ரீம்களில் தொடங்கி, மீசைக்கான மெழுகு மற்றும் தாடிக்கான ஜெல்கள்வரை பெரும் எண்ணிக்கையிலான தயாரிப்புகள் ஆண்களுக்காகக் கிடைக்கின்றன, ஆண்கள் எப்படித் தோன்றுகிறார்கள், பிறர் அவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் அதிக அழுத்தம் காட்டப்படுகிறது.

உடல் தோற்றப் பிரச்னைகள் மற்றும் உண்ணுதல் குறைபாடுகள் பெரும்பாலும் பெண்களைப் பாதிக்கும் ஒரு குறைபாடாகக் கருதப்படுகின்றன. ஆனால், இதுபற்றி நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஆண்களுடைய உடல் தோற்றப் பிரச்னைகள் மற்றும் உண்ணல் குறைபாடுகள் கண்டறியப்படாமலிருக்கும் வாய்ப்பு பெண்களைவிட நான்கு மடங்கு அதிகம் என்று தெரியவந்தது, இதன்மூலம், இந்தப் பிரச்னை இருபாலரையும் சம அளவு பாதிப்பது நிரூபிக்கப்பட்டது.

“முன்பெல்லாம், ஆண்கள் ஒரு குறிப்பிட்ட உடல் வகையைப் பராமரிக்கவேண்டும் என்ற சமூக அழுத்தம் அதிகம் இல்லை; மாறாக, பெண்கள் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டது. இதனால், உண்ணல் குறைபாடுகள் மற்றும் உடல் தோற்றம் ஆகிய பிரிவுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் பெண்களின்மீது கவனம் செலுத்தின. அளவைகளும் கருவிகளும்கூட, பெண்களை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டன. இன்றைக்கு, ஊடகம் மற்றும் உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ளும் தொழில்துறையின் வளர்ச்சியால், பெண்களைப்போன்ற அழுத்தத்தை ஆண்களும் உணர்கிறார்கள். இந்தக் கோணத்தில், ஒன்றுக்கொன்று முரணான சிந்தனைகள் அவர்கள்மீது வீசப்படுகின்றன. ஆண்மை கொண்ட அவர்கள், தங்களுடைய உடலைப்பற்றிக் கவலைப்படாததுபோன்ற ஒரு தோற்றத்தைப் பராமரிக்கவேண்டும், அதேசமயம் ஊடகங்கள் உயர்த்திச்சொல்லும் ஒரு தோற்றத்தைப் பராமரிக்கவேண்டிய தேவையும் அவர்களைப் பாதிக்கிறது” என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த உளவியலாளர் பரஸ் ஷர்மா.

அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை, ஒல்லியாக இருப்பது என்ற லட்சியமானது கிட்டத்தட்ட உலகம்முழுவதும் உள்ளது. அனைத்துப் பெண்களும் ஒல்லியாக இருக்க விரும்புகிறார்கள், எடையைக் குறைக்க விரும்புகிறார்கள், ஆண்களைப் பொறுத்தவரை அதி அதிகச் சிக்கலானது. அவர்களுடைய கவனம் எடையைக் குறைப்பதில் இல்லை, தடகள வீரரைப்போன்ற, கச்சிதமான மற்றும் தசை நிறைந்த உடலையும், நீண்ட, விரைவான கால்களையும், குறுகலான இடுப்பையும் கொண்டிருப்பதில் உள்ளது.

NIMHANSஐச் சேர்ந்த டாக்டர் பிரபா சந்திரா நடத்திய ஓர் ஆய்வில், ஓர் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 75 உண்ணல் குறைபாட்டு நிகழ்வுகளில் இரண்டுமட்டுமே ஆண்கள் தொடர்பானவை என்று தெரியவந்தது. ஆர்வமூட்டும் விஷயம், அவை “வேறுவழிகளில் குறிப்பிடப்படாத உண்ணல் குறைபாடுகள்” (EDNOS) என்ற வகையிலும் அமைந்திருந்தன. ஆகவே, ஆண்களும் உடல் தோற்றப் பிரச்னைகள், உண்ணல் குறைபாடுகளால் துன்பப்படுகிறார்கள், ஆனால், பெண்கள் அளவுக்கு அவர்கள் அதை வெளியே சொல்லிப் பதிவுசெய்வதில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த லாபநோக்கற்ற நிறுவனமான “உண்ணல் குறைபாட்டு விழிப்புணர்வுக் கூட்டமைப்பு”, சுமார் 2.4 முதல் 3.5 மில்லியன் ஆண்கள் பல்வேறு வகை உண்ணல் குறைபாடுகளால் துன்பப்படுகிறார்கள், அனோரெக்ஸியா கொண்ட மக்களில் சுமார் 20% பேர் இந்தக் குறைபாட்டால் இறக்கிறார்கள் என்கிறது. ஆகவே, இது மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான பிரச்னை, இதற்கு அதிகக் கவனம் தேவை.

மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வெளிப்படையாகத் தங்களுடைய மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைப்பற்றிப் பேசும் இந்த நேரத்தில், தாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கக்கூடிய உடல் தோற்றப் பிரச்னைகள் மற்றும் உண்ணல் குறைபாடுகளைப்பற்றியும் அவர்கள் பேசவேண்டும், அப்போதுதான் அவர்கள் ஓர் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உறுதிப்படுத்த இயலும்.

சான்றுகள்:

ஸ்ட்ரோதெர் E, லெம்பெர்க் R, ஸ்டான்ஃபோர்ட் SC மற்றும் டர்பர்வில்லெ D. “ஆண்களில் உண்ணல் குறைபாடுகள்: அதிகம் கண்டறியப்படாதவை, அதிகம் சிகிச்சை பெறாதவை, தவறாகப் புரிந்துகொள்ளப்படுபவை." உண்ணல் குறைபாடுகள். அக்டோபர் 2012; 20(5);346-355.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org