ஆண்கள் நிபுணருடைய உதவியைப் பெறுவது குறைவு

UK மனநல அறக்கட்டளை நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 19% பெண்கள் முந்தைய மாதத்தில் தாங்கள் சந்தித்த எந்த ஒரு மனநலப் பிரச்னைக்கும் உதவி கோருவதில்லை, அதேபோல் 28% ஆண்கள் எந்த மனநலப் பிரச்னைக்கும் உதவி கோருவதில்லை.    இதுபற்றிச் சில பத்தாண்டுகளாக நிகழ்ந்து வந்துள்ள ஆராய்ச்சிகள், உதவி நாடலைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தியுள்ளன, இந்த ஆராய்ச்சிகளின்படி, பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் நிபுணர் உதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது தெரியவந்துள்ளது.     இந்தியாவில் பாலினம் மற்றும் உதவி நாடல் தொடர்பான ஆராய்ச்சிகள் குறைவாக இருப்பதால், இந்தப் போக்கைப்பற்றிப் பல நிபுணர்களிடம் நாங்கள் பேசினோம்

மனநலன் தொடர்பான பிரச்னைகள் பாலினத்தைப்பொறுத்து மாறுமா?

2015 ல் மனநலன் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசியக் கல்விக் கழகம் (NIMHANS) நடத்திய ஒரு தேசிய மனநலக் கணக்கெடுப்பிலிருந்து சில புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன: 

  • ஆண்களில் சுமார் 16.75% பேர் தங்களுடைய வாழ்நாளில் ஏதோ ஒருவிதமான மனநலப் பிரச்னையை சந்திப்பார்கள், பெண்களில் இந்தச் சதவிகிதம் 10.80% ஆக உள்ளது 
  • தற்போது ஆண்களில் மனநலப் பிரச்னைகள் 13.9% ஆக உள்ளது, பெண்களில் இது 7.47% ஆக உள்ளது
  • ஆண்களில் சுமார் 2.15% பேர் இருதுருவ உணர்ச்சிக்கரமான குறைபாடு மற்றும் உளப்பிணிக் குறைபாடுகள் போன்ற தீவிர மனநலப் பிரச்னைகளைத் தங்களுடைய வாழ்நாளில் சந்திப்பார்கள், பெண்களில் இந்தச் சதவிகிதம் 1.73% ஆக உள்ளது 
  • ஆண்களில் 35.67% பேருக்குத் தவறான பொருட்களைப் பயன்படுத்தும் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, பெண்களில் இந்த எண்ணிக்கை 10.05% ஆக உள்ளது.

இந்த எண்களை வைத்துப் பார்க்கும்பொழுது ஆண்களுடைய மனநலனில் கவனம் செலுத்துவது, அவர்கள் உதவியை நாடும் போக்குகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றுக்கு ஒரு பெரிய தேவை இருப்பது தெளிவாகத் தெரிகிறது.  

உதவியை நாடுவது குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

ஆண்கள் மத்தியில் மனநலப் பிரச்னைகள் அதிகமாக இருந்தபோதிலும் அவர்கள் உதவியை நாடுவது மிகவும் குறைவு என்று தெரிகிறது.  ஆண்கள் பிறரிடம் சென்று உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.  இதற்கு நிபுணர்கள் கண்டறிந்துள்ள சில காரணங்கள்:

பாரம்பரியமான பாலினப் பொறுப்புகளுக்கு இசைதல்:    மிக இளம் வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட பாலினத்தை சேர்ந்தவர் எப்படி நடந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்று சமூகம் கற்றுத்தந்துவிடுகிறது.   ”பாரம்பரியமாக ஆண் என்பவன் பாதுகாப்பவன்/தன்னுடைய குடும்பத்துக்கு வேண்டியதை வழங்குபவன் என்று காணப்படுவதால், ஆண்கள் தங்களுடைய ஆபத்துகளை வெளிக்காட்டக்கூடாது என்கிற பொதுவான அழுத்தத்தில் இருக்கிறார்கள்.   ஆண்களுடைய செயல்திறன் பாதிக்கும்போது அவர்கள் பொதுவாக உதவியை நாடுகிறார்கள், அந்த அழுத்தம் சரியானதும் உதவியை நாடுவதை நிறுத்திவிடுவார்கள்” என்கிறார் மனநல ஆலோசகர் பரஸ் சர்மா. ஆண்கள் தங்களுடைய உணர்வு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கும் கற்றுத்தரப்படுகிறது, அவர்கள் வெற்றிகரமானவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் எனச் சொல்லித்தரப்படுகிறது.   ஆகவே பெரும்பாலானோர் உதவியை நாடுவதை ஒரு பலவீனத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள்.

கட்டுப்பாட்டை இழப்பதான உணர்வு:  பிரச்னையானது தங்களுக்குள் இருப்பதாக ஆண்கள் நம்புகிறார்கள், தங்களால் அதைக் கட்டுப்படுத்த இயலும் என்றும் நம்புகிறார்கள், இதனால் அவர்கள் தாங்களே அந்தப் பிரச்னையை சரிசெய்ய முயற்சி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.    பிறரிடம் உதவி கேட்டால் அதன்மூலம் அவர்கள் தங்களுடைய தன்னாட்சியை அல்லது கட்டுப்பாட்டை இழப்பதாக நினைக்கிறார்கள்.

கைம்மாறு:  ஆண்கள் உதவி கோருவார்களா மாட்டார்களா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று, அவர்களால் பதிலுக்கு எதையாவது தர இயலுமா என்பது.   அதாவது, ஓர் ஆண் ஒரு பிரச்னையைச் சந்தித்துகொண்டிருக்கும்போது இன்னொருவரிடம் அவர் உதவி கேட்கவேண்டுமென்றால், அந்த உதவிக்குக் கைம்மாறாக வருங்காலத்தில் எப்போதாவது அந்த இன்னொருவருக்குத் தன்னால் எதையாவது செய்ய இயலும் என்ற உணர்வு அவருக்கு ஏற்படவேண்டும், அப்போதுதான் அவர் உதவியை நாடுவார்.    இதுபற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளின்படி பார்த்தால், ‘தன்னுடைய நிலையைப் பராமரித்துக்கொள்வது’ மற்றும் ‘தான் வலுவானவர், திறனுள்ளவர் என்கிற பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வது’ ஆகியவை இதற்குக் காரணமாக அமைவது தெரியவந்துள்ளது 

சமூக ஆதரவு:  ஒருவர் உதவியை நாடுவாரா, மாட்டாரா என்பதைக் கண்டறிவதில் சமூக ஆதரவானது ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றலாம்.  ஆண்களின் பெரும்பாலான சமூக வட்டங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றன, உணர்வு ஆதரவில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை, இதனால் ஆண்கள் உதவியை நாடுவதை சிரமமாகக் கருதக்கூடும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.  ஆகவே பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய துயர உணர்வுகளைத் தாங்களே சரிசெய்துகொள்ள முயலக்கூடும்.  

ஆண்களும் பெண்களும் பிரச்னைகளை வெவ்வேறு விதமாகச் சமாளிக்கிறார்கள்.

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஆண்களும் பெண்களும் அழுத்தத்தை வெவ்வேறு விதமாகக் கையாளக்கூடும்.  ஸ்பந்தனா ஹெல்த்கேர் இயக்குநர், மனநல நிபுணரான டாக்டர் மகேஷ் கவுடா இதுபற்றிப் பேசுகையில், “இரு பாலினங்களையும் கவனிக்கும்போது, அவர்களுடைய சமாளிக்கும் அளவில் ஒரு மாறுபாடு இருப்பதை நான் கவனிக்கிறேன்; பெண்கள் சிறுபிரச்னைகளுக்குக்கூட உதவியை நாடுவதற்கு மனத்தைத் திறந்துவைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பிரச்னை கைமீறிப் போகும்போதுதான் உதவியை நாடுவார்கள்.”

இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஓர் ஆராய்ச்சியின்படி, ஆண்கள் பிரச்னையைச் செயல்பாட்டின்மூலம் நேரடியாகச் சந்திக்கக்கூடிய, பிரச்னையில் கவனம் செலுத்தும் வியூகங்களை அதிகம் பயன்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது.  ஆனால் பெண்கள் அப்படிச் செய்வதில்லை, அவர்கள் பிரச்னைகளைக் கையாளுவதற்கு உணர்வில் கவனம் செலுத்தும் வியூகங்களை அதிகமாகக் கையாள விரும்புகிறார்கள், பிரச்னையுடன் சேர்ந்துவருகிற எதிர்மறை எண்ணங்களைக் கையாள்வதை அவர்கள் விரும்புகிறார்கள்    ”பெரும்பாலான ஆண்கள் தீர்வை வழங்குகிறார்கள் அல்லது தீர்வை நாடுகிறார்கள், தங்களுடைய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தும் சொற்கள் அவர்களிடம் அதிகம் கிடைப்பதில்லை” என்கிறார் இந்தியத் தற்கொலைத் தடுப்பு அறக்கட்டளையின் நிறுவனர் நெல்சன் வினோத் மோஸஸ்.   ஆகவே, ஆண்களுடன் ஒப்பிடும்பொழுது பெண்கள் தங்களுடைய பிரச்னையைப்பற்றி எளிதில் பேசுகிறார்கள், அவற்றுடன் தொடர்புடைய எதிர்மறை உணர்வுகளை (பதற்றம் மற்றும் சோகம் போன்றவை) எளிதில் சரிசெய்துகொள்கிறார்கள். 

உதவிநாடுதலை முன்னிறுத்துதல்

கிளாஸ்கௌ இளைஞர் நீதித்துறை வழங்கியுள்ள ஓர் அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளபடி, ஆண்கள் உதவியை நாடுவதைச் சாத்தியமாக்க அவர்களுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் சில விஷயங்களைச் செய்யலாம்:   

  • பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்கிறவருடைய பேச்சைக் கேட்கும்போது இரக்க உணர்வை பயன்படுத்தலாம்
  • அவர்கள் நலக் கல்வி மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களில் அதிகம் பங்கேற்க உதவலாம்
  • உதவியை நாடுதலை நேர்விதமாக உறுதிப்படுத்தக்கூடிய நம்பகமான ஒரு பேச்சுச் சிகிச்சையாளரைப் பரிந்துரைக்கலாம்
  • தங்களுடைய சிகிச்சை அல்லது இடையீடுகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு உணர்வை வழங்கலாம்
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org